அண்ணாவின் “ஓரிரவு”

(மீள்பதிவு) இந்த முறை மின்புத்தகத்தை இணைத்திருக்கிறேன்.

அண்ணாவின் நாடகங்கள் கல்கியை மிகவும் impress செய்திருக்கின்றன. ஓரிரவு நாடகத்தைப் பார்த்துவிட்டு அண்ணாவுக்கு அவர் தமிழ்நாட்டு பெர்னார்ட் ஷா என்றெல்லாம் பட்டம் கொடுத்திருக்கிறார். ஆனால் இதை திரைப்படமாக பார்த்தபோது ஒன்றும் பிரமாதமாக இல்லை. இதை விட வேலைக்காரி திரைப்படம் சிறப்பாக இருந்தது. அனல் பறக்கும் வசனங்கள்! என்னடா போயும் போயும் இவ்வளவு சுமாரான ஒரு நாடகத்தைப் பார்த்து கல்கி இப்படி பூரித்துப் போய்விட்டாரே என்று நினைத்திருந்தேன்.

நான் நாடகத்தை அப்படியே எடுத்து பாட்டுகளை மட்டும் சேர்த்து படமாக்கி இருக்கிறார்கள் என்று தப்புக் கணக்கு போட்டுவிட்டேன். படிக்கும்போதுதான் ஓரிரவின் சிறப்பு புரிந்தது. திரைப்படத்தில் கதையின் மெயின் கதைக்கு தேவை இல்லாத பகுதி என்று கட் செய்துவிட்ட பகுதிகள்தான் நாடகத்தை உயர்த்துகின்றன. அண்ணா இதை ஓர் இரவில் நடக்கும் காட்சிகளாக கற்பனை செய்திருக்கிறார். மெயின் கதை வழக்கமான பாய்ஸ் கம்பெனி நாடகக் கதைதான். ஆனால் இரவில் நடக்கும், கதைக்கு நேரடியாக தொடர்பில்லாத காட்சிகள்தான் இதை குறிப்பிடப்பட வேண்டிய நாடகமாக மாற்றுகின்றன. எனக்குத் தெரிந்து இப்படிப்பட்ட ஒரு முயற்சி இதற்கு முன்னால் தமிழில் நடந்ததில்லை, இதற்கு அப்புறமும் வெகு நாள் நடந்ததில்லை. (சோ ராமசாமி மெட்ராஸ் பை நைட் என்று ஒரு நாடகத்தை தன் வழக்கமான பாணியில் எழுதி இருக்கிறார், அதுவும் சென்னையில் ஒரு இரவுக் காட்சிகள்தான்.)

ஓரிரவின் கதை ஒன்றும் பிரமாதமில்லை. சில பல ஸ்டீரியோடைப் பாத்திரங்கள், நம்பக் கஷ்டமான தற்செயல் நிகழ்ச்சிகள், செயற்கையான மெலோட்ராமா காட்சிகள் நிறைந்ததுதான். நாயகி வீட்டில் இரவு திருட வருபவன் யார்? அவளுடைய மாற்றாந்தாய் சகோதரன். திருடனைக் கண்டதும் நாயகி என்ன செய்கிறாள்? வில்லன் என்னை வற்புறுத்தி திருமணம் செய்ய முயற்சிக்கிறான், அப்பாவால் தடுக்க முடியவில்லை, நீ என் கள்ளக் காதலனாக நடி என்கிறாள். கள்ளக் காதலனாக நடிக்கும்போது யார் வரவேண்டும்? கரெக்ட், நாயகன், அவளுடைய உண்மையான காதலன் வருகிறான். என்னாகும்? சந்தேகப்படுகிறான். கதை முடியும்போது என்னாகும்? நல்லவர்கள் எல்லாம் ஒன்று சேர்கிறார்கள். அப்புறம்? சரியாகச் சொல்லிவிட்டீர்கள், வில்லனை முறியடிக்கிறார்கள். சுபம்!

அண்ணா ஒரு பாய்ஸ் நாடகக் கதையை தன் பாணி வசனங்களை மாட்டும் ஒரு சட்டமாக (framework) எப்போதுமே பயன்படுத்துவார். இந்தக் கதையில் சமுதாய இழிவுகளை – விபசாரிகள், மைனர்கள், திருடர்கள், கீழ்மட்டத்து மக்கள் இத்யாதி – காட்டுகிறார். வழக்கம் போல பிரசார நோக்கத்துக்குத்தான். ஆனால் அந்தக் காட்சிகளில் ஓரளவு உண்மை, ரியலிசம் தெரிகிறது. இது அந்தக் காலத்துக்கு பெரிய புரட்சியாக இருந்திருக்க வேண்டும். நிச்சயமாக ஒரு முன்னோடி நாடகம். கல்கிக்கு அந்த வித்தியாசம் புரிந்திருக்கிறது, அதனால்தான் பாராட்டி இருக்கிறார்.

கல்கி எழுதியது:

தற்கால நாடகக் கலையை பற்றி பேசும்போதெல்லாம் ஆங்கிலம் படித்த மேதாவிகள் பெர்னார்ட் ஷாவுடன் இப்சனையும் நினைத்து ஒரு குரல் அழுவது வழக்கம். நாடகம் கீடகம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கலாம். ஆனால் ஒரு பெர்னார்ட் ஷாவுக்கு ஒரு இப்சனுக்கு எங்கே போவது? திருடப் போக வேண்டியதுதான்! என்று சொல்லுவார்கள். அப்படியெல்லாம் திருடவும் கிருடவும் போக வேண்டாம், தமிழ் நாடு நாடகாசிரியர் இல்லாமல் பாழ்த்துப் போகவில்லை என்று சமீபத்தில் தெரிந்து கொண்டேன்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு திருச்சிராப்பள்ளியில் ‘ஓரிரவு’ என்னும் நாடகத்தைப் பார்க்க நேர்ந்தது. பார்த்ததன் பயனாக “இதோ ஒரு பெர்னார்ட் ஷா தமிழ் நாட்டில் இருக்கிறார்! இப்சனும் இருக்கிறார்! இன்னும் கால்ஸ்வொர்த்தி கூட இருக்கிறார்!” என்று தோன்றியது.

ஓரிரவு என்னும் நாடகத்தின் ஆசிரியர் திரு சி.என். அண்ணாதுரை.
   – (கல்கி இதழ் 07-12-47)

எனக்கு மிகவும் பிடித்த பாட்டுகளில் ஒன்றான “துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ” பாட்டு கீழே. காதலர்கள் நெருங்குவதை காட்ட தமிழில் பூக்கள் ஒன்றை ஒன்று நெருங்குவதாக காட்டும் cliche அனேகமாக இந்த பாட்டில்தான் ஆரம்பம் ஆகி இருக்க வேண்டும். அந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த cliche-க்காகவாவது இந்த வீடியோவை கட்டாயம் பாருங்கள்.

தொடர்புடைய சுட்டிகள்:
ஓரிரவு திரைப்படம் பற்றி ஆர்வி
ஓரிரவு திரைப்படம் பற்றி ராண்டார்கை

12 thoughts on “அண்ணாவின் “ஓரிரவு”

  1. //“இதோ ஒரு பெர்னார்ட் ஷா தமிழ் நாட்டில் இருக்கிறார்! //
    அதை அவர் அண்ணாவை நோக்கி ஒரு நக்கல் தொனியில் கூறினார் என்று தானே கேள்விப்பட்டு இருக்கிறேன்.
    “…..அவரை அறிஞர் என்று மூடர்களே அழைக்கலாயினர். அவரைப் பேரறிஞர் என்றூ பெருமூடர்களே அழைக்கலாயினர். நகைச்சுவை எழுத்தாளர் என்று பெயரெடுத்திருந்த கல்கி அவர்கள் பத்திரிகையில் எழுதிய ஒரு நாடக விமர்சனத்தில் அண்ணாதுரையை பெர்னாட்ஷா என்று வஞ்சகப் புகழ்ச்சி செய்திருக்கிறார். தமிழர்களே! உங்களுடைய தற்காலத் தகுதிக்கு இவர்தான் பெர்னாட்ஷா என்பதாகவே அதை நான் புரிந்து கொண்டேன்…”

    Ref:
    http://idlyvadai.blogspot.in/2009/09/blog-post_2410.html

    Like

    1. நல்லூரான், கல்கியின் விமர்சனத்தை நான் முழுமையாகப் படித்திருக்கிறேன், அது நக்கலாக எழுதப்பட்டது இல்லை.

      Like

  2. RV,
    அந்த விமர்சனத்தை அளிக்க இயலுமா?
    ஏனெனில் ஜெயகாந்தன் கூறியதைத் தான் நான் நம்பிக்கொண்டிருக்கிறேன்.

    Like

    1. நல்லூரான், தேட வேண்டும். சுந்தா எழுதிய “பொன்னியின் புதல்வர்” அல்லது சாண்டில்யன் எழுதிய “போராட்டங்கள்” புத்தகத்தில் இருந்தது என்று நினைவு.

      Like

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.