தமிழறிஞர் வரிசை 21: கா.சு. பிள்ளை

கா.சு. பிள்ளையின் நூல்கள் 2007-இல் நாட்டுடமை ஆக்கப்பட்டன. பிள்ளையின் பெயரை முன்னால் கேள்விப்பட்டிருந்தாலும் அப்போதுதான் அவரைப் பற்றி கொஞ்சம் தெரியவந்தது.

இருபதாம் நூற்றாண்டின் முதற்பகுதி தமிழில் ஆர்வம் ஈடுபாடு கொண்ட, அதே நேரத்தில் பிராமண ஆதிக்கம் கூடாது, ஹிந்தி திணிப்பை எதிர்க்க வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு கொஞ்சம் கஷ்டமான காலம். அதுவும் சைவப் பிள்ளைமார் ஜாதியில் பிறந்து, தெய்வ பக்தி உள்ள, சைவத்தில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு அதிகமான கஷ்டம். ஹிந்தியை ஆட்சி மொழி ஆக்க வேண்டும் என்பதுதான் காங்கிரசின் அதிகாரபூர்வமான கொள்கை. தமிழக காங்கிரஸ் ராஜாஜி கையில் இருந்தது. அவரை விட்டால் சத்தியமூர்த்தி. எல்லாரும் பிராமணர்கள். ஈ.வெ.ரா. பக்கம் போகலாம் என்றால் அவருக்கு தமிழ் காட்டுமிராண்டி பாஷை, கம்பன் ஒரு அயோக்கியன். இவர்களுக்கு தமிழ் மீது பெருமிதம். சைவத்தின் மீது ஆர்வம். தமிழே முதல் மொழி, தமிழனே முதல் மனிதன், தமிழ் இலக்கியமே உயர்ந்தது, பிராமணர்கள் வந்தேறி ஆரியர்கள், ஆரிய ஆதிக்கம் – ஹிந்தியாகட்டும், சமஸ்கிருதமாகட்டும் – வெல்லப்பட வேண்டும் என்ற கொள்கைகளை உடைய ஒரு இயக்கம் இல்லை. பலரும் சுயமரியாதை இயக்கத்தோடு சமரசம் செய்து கொண்டு அதன் பக்கம் சாய்ந்தனர். பூரணலிங்கம் பிள்ளை, கி.ஆ.பெ. விஸ்வநாதம், மறைமலை அடிகள், வேங்கடசாமி நாட்டார் என்று பலரிடமும் இந்த முரண்பாட்டின் விளைவுகளைக் காணலாம்.

கா.சு. பிள்ளையும் இந்தப் பாரம்பரியத்தை சேர்ந்தவர்தான். தமிழறிஞர். தீவிர சைவர். அவரைப் பூஜைப் பிள்ளை என்றே அழைப்பார்களாம். (எம்.எல். பிள்ளை என்றும் அழைப்பார்களாம், எம்.எல். பரீட்சையில் தேறின முதல் சிலரில் ஒருவர் என்பதால்). திருக்குறளே அவருக்கு சைவ நூல்தான். சைவ சித்தாந்த நூற்கழகத்தை நிறுவியவர்களில் ஒருவர் என்று நினைக்கிறேன். புகைப்படத்தில் கூட நெற்றி நிறைய விபூதியுடன் காட்சி அளிக்கிறார்.

ஆனால் நான் பரிந்துரைப்பது இலக்கிய வரலாறு புத்தகம் ஒன்றைத்தான். அது இன்றும் நல்ல reference-தான்.நான் புரட்டிப் பார்த்த மற்ற புத்தகங்களை – திருஞான சம்பந்த சுவாமிகள் சரித்திரம் (1927), மணிவாசகப் பெருமான் வரலாறு (1928) சேக்கிழார் சுவாமிகள் சரித்திரம் (1928), சிவஞான சுவாமிகள் சரித்திரம் (1932), தமிழர் சமயம் போன்றவற்றை இன்று படிப்பது கஷ்டம். காலாவதி ஆகிவிட்டன. ஆனால் இவை அனைத்தும் சேர்ந்து தமிழகத்தில் சமயம் – குறிப்பாக சைவம் – எப்படி வளர்ந்தது என்ற குறுக்குவெட்டுப் பார்வையைத் தரக் கூடும். மொழி நூல் கொள்கையும் தமிழ் மொழி அமைப்பும் போன்றவற்றைப் படிக்கும் அளவுக்கு எனக்கு அறிவு பத்தாது, எனக்கு இன்னும் எளிமையாக இருக்க வேண்டும்.

பிள்ளை சட்டக் கல்லூரியில் பேராசிரியராக பணி புரிந்திருக்கிறார். பின்னாளில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழ் பேராசிரியராகவும். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எப்போதுமே அரசியல் இரண்டாம் இடத்தில் இருந்த நெடுஞ்செழியனும் அன்பழகனும் அவரது மாணவர்களாம். ஆனால் கடைசி நாட்களில் உடல்நிலை பாதிக்கப்பட்டும், பணப் பற்றாக்குறையாலும் அவதிப்பட்டிருக்கிறார். அவரை தமிழ் பணக்காரர்கள் கொஞ்சம் கவனித்திருக்கக் கூடாதா என்று ஒரு ஆதங்கம் எழுகிறது.

தொடர்புடைய பதிவுகள்:
விக்கி குறிப்பு
பசுபதி தளத்தில் கா.சு. பிள்ளை பற்றி ஒரு பதிவு, இன்னொரு பதிவு