சுப்ரபாரதிமணியனின் ‘கூண்டும் வெளியும்’

சுப்ரபாரதிமணியன் என் மனம் கவர்ந்த எழுத்தாளர்களில் ஒருவர். ஆனால் அவரது படைப்புகளைப் படிக்க நான் எப்போதுமே கொஞ்சம் கஷ்டப்படுவேன். அவரது dry ஆன எதார்த்தவாத எழுத்தைப் படிக்க வழக்கத்தை விட அதிக கவனமும் உழைப்பும் தேவைப்படுகிறது.

அவரது அப்பா சிறுகதைத் தொகுப்பு நல்ல உதாரணம். அதை வாங்கி பத்து வருஷத்துக்குப் பிறகுதான் அதை படிக்கும், புரிந்து கொள்ளும், ரசிக்கும், maturity எனக்கு உருவானது. மிக அருமையான சிறுகதைகள், ஆனால் முதல் முறை படிக்கும்போது இந்த அழுமூஞ்சிக் கதைகளை எவன் படிப்பான் என்று புத்தகத்தை பரணில் தூக்கிப் போட்டுவிட்டேன்.

இதனால் அவரது படைப்புகளைப் படிப்பதை தள்ளிப் போட்டுக்கொண்டே போகும் நிலை. கடைசியில் ஒரு வழியாக கூண்டும் வெளியும் தொகுதியைப் படித்தேன். இந்த முறையும் ஒரு முறைக்கு இரண்டு முறையாகப் படிக்க வேண்டி இருந்தது.

இவற்றில் எனக்கு மிகவும் பிடித்திருந்த சிறுகதை வழித்துணை. தொன்மச் சாயலுடன் ஒரு எதார்த்தவாதக் கதை! இறந்துபோன தாத்தாவுடன் தன் ரசனையைப் பகிர்ந்து கொள்ளும் பேரனுக்கு திருமணம் ஆகிறது.

நிலை, வதை, சுழல் எல்லாவற்றிலும் அவரது டச் சிறப்பாக வெளிப்படுகிறது. நிலையில் ஒரு ஏழை இளைஞனின் தவிப்பு; வதையில் பணம் பற்றாத நிலையில் அப்பாவுக்கு சிகிச்சை பார்க்க முடியாமல் அப்பாவின் இறப்பு; சுழலில் மகனுக்கு வேலை போக அப்பா ஐந்துக்கும் பத்துக்கும் வேலைக்குப் போக வேண்டிய நிலை.

மற்றவற்றில் கூண்டும் வெளியும் ஊகிக்கக் கூடிய சிறுகதைதான். ஆனால் நடைமுறை வாழ்க்கையின் குரூரம் நன்றாக வெளிப்படுகிறது.

பிற சிறுகதைகளை நான் பெரிதாக ரசிக்கவில்லை. அதற்கான maturity உருவாக இன்னும் பத்து வருஷம் ஆகுமோ என்னவோ!

தொகுக்கப்பட்ட பக்கம்: சுப்ரபாரதிமணியன் பக்கம்