லண்டன் காவல் துறையின் ஆரம்பம் – துப்பறியும் கதைகள்

Bow Street Runners என்று கேள்விப்பட்டிருக்கலாம். லண்டனின் – ஏன் உலகில் முதல் professional காவல் துறை இதுதானாம். அதற்கு முன் லண்டனில் யார் வேண்டுமானாலும் திருடர்களைப் பிடித்து நீதிமன்றங்களில் ஆஜர் படுத்தலாம். இன்று எழுத்தாளர் என்றே அறியப்படும் ஹென்றி ஃபீல்டிங் (டாம் ஜோன்ஸ் என்ற புகழ் பெற்ற நாவலை எழுதியவர்) அன்று நீதிபதியாக இருந்தவர். அவர்தான் இப்படி ஒரு professional அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்து அதை செயல்படுத்தி இருக்கிறார். அவர் இறந்ததும் அவரது தம்பி ஜான் ஃபீல்டிங் அமைப்பை இன்னும் செம்மைப்படுத்தி இருக்கிறார்.

ஜான் ஃபீல்டிங் கண்ணிழந்தவர். குரலை வைத்தே அடையாளம் கண்டுபிடித்துவிடுவாராம். அவரும் நீதிபதியாக இருந்தவர்தான். அவர்தான் போலீஸ் கெஜட்டை பிரசுரிக்க ஆரம்பித்தார். அதில் குற்றவாளிகள் எப்படி இருப்பார்கள் என்பதை விவரித்தது குற்றவாளிகளைப் பிடிக்க உதவியாக இருந்தது.

ப்ரூஸ் அலெக்சாண்டர் ஜான் ஃபீல்டிங்கை துப்பறிவாளனாக வைத்து ஒரு சீரிஸ் எழுதி இருக்கிறார். ஃபீல்டிங் ஷெர்லாக் ஹோம்ஸ்; அவருக்கு ஒரு பதின்ம வயது உதவியாளன் (வாட்சன்). முதல் ஆங்கில அகராதியைத் தொகுத்த சாமுவெல் ஜான்சன், அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஜேம்ஸ் பாஸ்வெல், பிரபல எழுத்தாளர் ஆலிவர் கோல்ட்ஸ்மித், அன்றைய பிரபல நடிகர் டேவிட் காரிக், பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் போன்றவர்கள் சில நாவல்களில் சிறு பாத்திரங்களாக வருகிறார்கள்.

ப்ரூஸ் அலெக்சாண்டர் எழுதிய ட்ரம்போ என்ற அபுனைவு சமீபத்தில் சிறப்பான திரைப்படமாகவும் வெளிவந்தது. அனேகமாக அவரைப் பற்றி கேள்விப்பட்டிருப்பவர்கள் இந்தத் திரைப்படத்தின் மூலமான வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் என்றே அறிந்திருப்பார்கள். ஆனால் அந்த வாழ்க்கை வரலாற்றை அவர் தனது சொந்தப் பெயரில் – ப்ரூஸ் குக் – என்றே எழுதி இருக்கிறார். இன்னும் குழம்ப வேண்டுமென்றால் ப்ரூஸ் குக்கின் முழுப்பெயர் ப்ரூஸ் அலெக்சாண்டர் குக்!

நாவல்களின் பலம் அந்தக் கால சூழ்நிலையை நன்றாக விவரிப்பதுதான். குறிப்பாக சிறு குற்றங்களின் – குடி, சிறு திருட்டுக்கள், விபச்சாரம் – சூழ்நிலை. ஜான் ஃபீல்டிங் பெரிய பணக்காரர் அல்ல, ஆனால் அவரிடம் பதவியும் அதிகாரமும் அன்றைய அதிகார மையங்களின் தொடர்பும் இருக்கிறது. பல பாத்திரப் படைப்புகள் – ஃபீல்டிங், நாவல்களை விவரிக்கும் ஜெரீமி ப்ராக்டர், ப்ராக்டரின் காதலி க்ளாரிசா, சூதாடும் கிளப் வைத்து நடத்தும் பில்போ, சிறு திருடனாக இருந்து ப்ராக்டரின் நெருங்கிய நண்பனாக மாறும் பன்கின்ஸ், டாக்டர் டானலி என்று பலரும் சுவாரசியமான பாத்திரங்கள் – நன்றாக இருக்கின்றன. பலவீனம்? மர்மங்கள் பொதுவாக பலவீனமானவை.

இவை வணிக, பொழுதுபோக்கு நாவல்கள் மட்டுமே. அதனால் என்ன? சுவாரசியமானவை. படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

முதல் நாவலான ‘Blind Justice‘ (1994)-இல் சிறுவன் ஜெரீமி ப்ராக்டர் அப்பா இறந்ததும் லண்டனுக்கு வருகிறார். திருடன் என்று குற்றம் சாட்டப்பட்டு ஜான் ஃபீல்டிங் முன்னால் நிறுத்தப்படுகிறான். பொய்க் குற்றச்சாட்டு என்று ஃபீல்டிங் நிரூபிக்கிறார். ப்ராக்டர் ஃபீல்டிங்கோடு ஒட்டிக் கொள்கிறான். துப்பாக்கி குண்டால் முகம் சிதைந்து இறந்து கிடக்கும் பிரபு குடும்பத்து தலைவனின் இறப்பை துப்பறிகிறார்கள். சாமுவெல் ஜான்சன், ஜேம்ஸ் பாஸ்வெல் சிறு சிறு பாத்திரங்களாக வருகிறார்கள். சுவாரசியமான புத்தகம்.

Murder at Grub Street (1995)-இலும் சாமுவெல் ஜான்சன் ஒரு சிறு பாத்திரமாக வருகிறார். ஒரு அச்சுக்கூட முதலாளி அவரது குடும்பத்தோடு படுகொலை செய்யப்படுகிறார். கொலை நடந்த இடத்தில் ரத்தம் தோய்ந்த கோடரியோடு ஒரு கவிஞன் அகப்படுகிறான். கவிஞனுக்கு multiple personality disorder – நாவலின் காலகட்டத்தில் அவனுக்கு பைத்தியம். என்ன மர்மம் என்று நாவல் போகிறது.

Watery Grave (1996) இன்னும் ஒரு நல்ல நாவல். கடற்படையின் கப்பல் காப்டன் கடும்புயலில் கடலில் விழுந்து இறந்துவிடுகிறார். அவரைக் காப்பாற்ற அதிகாரி லாண்டன் எடுக்கும் முயற்சிகள் பயனளிக்கவில்லை. இரண்டு வருஷம் கழித்து லாண்டன்தான் காப்டனை கடலில் தள்ளிக் கொன்றார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்படுகிறது. கடற்படை மேலதிகாரிகளுக்கு சந்தேகம் இருந்தாலும் லாண்டன் நிரபராதியாக இருந்து தண்டிக்கப்பட்டாலும் பரவாயில்லை, ஆனால் கடற்படையின் பேர் கெட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள். ஃபீல்டிங் துப்பறிகிறார். கடைசி காட்சியில் குற்றவாளி, நிரபராதி இருவருமே தூக்கிலிடப்படுவது நல்ல denouement.

Jack, Knave and Fool (1998) இன்னும் ஒரு நல்ல நாவல். ஒரு கொலை, துப்பறிதல். ஆனால் எனக்கு சுவாரசியமாக இருந்த பகுதி ஏழை குடிகார அப்பாவின் சித்திரம். வேறு வழி இல்லாமல் குற்ற உலகில் அடி எடுத்து வைக்கும் சித்தரிப்பு நன்றாக இருந்தது.

Death of a Colonial (1999) சுமார். வாரிசில்லாத சொத்துக்கு உரிமை கொண்டாடி வருபவன் ஏமாற்றுக்காரனா இல்லையா என்று துப்பறிகிறார்கள்.

Color of Death (2001) பிரமாதமாக ஆரம்பிக்கும் நாவல். சில ‘கறுப்பர்கள்’ பணக்கார வீடுகளில் புகுந்து கொள்ளை அடிக்கிறார்கள். அதை வைத்து அன்றைய இங்கிலாந்தில் கறுப்பர்களின் நிலையை நன்றாகக் காட்டுகிறார். ஆனால் வேகவேகமாக முடித்துவிட்டது போலிருக்கிறது.

Smuggler’s Moon (2002) நாவலில் கள்ளக்கடத்தலை துப்பறிகிறார்கள். சுலபமாக யூகிக்கக் கூடிய முடிச்சுதான், ஆனால் கடத்தல் பின்புலம் சுவாரசியமாக இருந்தது. ஃப்ரென்சுக் கடற்கரையிலிருந்து இங்கிலாந்தின் கெண்ட் மாநில கடற்கரை 35 மைல்தானாம்.

An Experiment in Treason (2003) நாவலில் பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் ஒரு முக்கியப் பாத்திரம். ஃப்ராங்க்ளின் அப்போது அமெரிக்கக் காலனிகளின் பிரதிநிதியாக இங்கிலாந்தில் இருந்தார். சில கடிதங்கள் திருடப்பட்டு அமெரிக்கா செல்கின்றன. அமெரிக்காவின் விடுதலை உணர்வை அவை தீவிரப்படுத்துகின்றன. அந்தத் திருட்டைத்தான் துப்பறிகிறார்கள்.

Price of Murder (2004) அந்தக் கால குதிரைப் பந்தய பின்னணி. குதிரைகளோடு நல்ல உறவு உள்ள ஜாக்கி ஒருவனின் சகோதரி மகள் – சிறுமி – பாலியல் கொடுமையில் இறக்கிறாள். நன்றாக எழுதப்பட்ட இன்னொரு கதை.

Rules of Engagement (2005) இந்த வரிசையில் கடைசி நாவல். இதை எழுதிக் கொண்டிருக்கும்போதே ப்ரூஸ் அலெக்சாண்டர் இறந்துவிட்டார். இந்த நாவலில் மெஸ்மரிசத்தின் மூலம் அடுத்தவர்களை தன் ஆணைப்படி நடக்க வைக்கும் வில்லன்கள் அவர்களை தற்கொலை செய்து கொள்ள வைக்கிறார்கள்.

இவை வணிக, பொழுதுபோக்கு நாவல்கள் மட்டுமே. அதனால் என்ன? சுவாரசியமானவை. படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: மர்ம நாவல்கள்