பவா செல்லதுரை சிறுகதைகள்

என் பள்ளி நாட்களில் நான் வசித்த கிராமம் மானாம்பதி. உத்திரமேரூரிலிருந்து காஞ்சிபுரம் போகும் வழியில் இருக்கிறது. அந்தக் காலத்தில் நெசவாளர் கிராமம். நிறைய பேர் வீட்டில் தறி இருக்கும். வறண்ட கிராமம்தான். வீடுகளில் கிடைக்கும் கிணற்றுத் தண்ணீர் கொஞ்சம் உப்பாக இருக்கும். ஏரி உண்டு, ஆனால் அனேகமாக தண்ணீர் இருக்காது. அருகில் ஓடும் செய்யாறு நதியிலும் தண்ணீரைப் பார்த்ததில்லை. ஊரிலிருந்து காஞ்சிபுரம் போகும் சாலையிலேயே இரண்டு மைல் நடந்தால் அது வந்தவாசி-காஞ்சிபுரம் சாலையை சந்திக்கும். அந்த சந்திப்பை – கூட்ரோடு என்று சொல்லுவோம் – தாண்டினால் இன்னும் வறண்ட குன்றுகள் இருக்கும். நெடுங்கல் என்று பேர். ஓணானும் அரணையும் சில சமயம் ஓரிரு உடும்புகளும்தான் தென்படும். ஒரு குகை இருந்தது, அதற்குள் ஒரு முறை போயிருக்கிறோம். கூட வந்த தெய்வசிகாமணி குகையின் கூரையில் ஒரு மலைப்பாம்பைப் பார்த்ததாக சொன்னதால் அடுத்த முறை உள்ளே போக யாருக்கும் தைரியம் இருந்ததில்லை.

பவா செல்லதுரை பல வருஷங்களுக்குப் பிறகு அந்த வறண்ட நிலப்பரப்பை நினைவு கூர வைக்கிறார். இவர் வாழும் திருவண்ணாமலையும் இப்படிப்பட்ட நிலப்பரப்புதானோ என்னவோ. எனக்குத் தெரிந்து இந்த நிலப்பரப்பை, இந்த கிராமங்களை எழுதும் ஒரே எழுத்தாளர் இவர்தான். அதற்காகவே இவரைக் கொண்டாட வேண்டும். கண்மணி குணசேகரனும் எக்பர்ட் சச்சிதானந்தமும் இந்த உலகத்தை – ஆனால் வேறு வகைகளில் காட்டுகிறார்கள். அவர்கள் எழுத்தில் தெரிவது சமூகநிலை. இவர் எழுத்தில் எனக்கு மீண்டும் மீண்டும் தெரிவது அந்த நிலம்.

பவாவின் பெயர் அவ்வப்போது இலக்கிய நண்பர்கள் பற்றி எழுத்தாளர்கள் பேசும்போது அடிபடும். பல எழுத்தாளர்களோடு அவருக்கு உள்ள நட்பு, இலக்கிய வாசிப்பை ஊக்குவிக்க அவர் எடுக்கும் முயற்சிகள், (எழுத்தாளர் சந்திப்புகள், உரைகள் ஏற்பாடு செய்வது) அவரது விருந்தோம்பல், வம்சி பதிப்பகம், அவரது மனைவி ஷைலஜாவின் மொழிபெயர்ப்புகள் என்று பலதும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அவை எல்லாம் அவரது எழுத்துக்களை ஓரளவு மங்கவைத்துவிட்டனவோ என்று எனக்கு ஒரு நினைப்பு உண்டு.

பவாவின் இரண்டு கதைகள் ஜெயமோகனின் சிறந்த சிறுகதைகள் பட்டியலில் இடம் பெறுகின்றன – ஏழுமலை ஜமா மற்றும் ஓணான் கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள். எஸ்.ரா.வின் பட்டியலில் இவர் கதைகள் இடம் பெறவில்லை.

நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை என்ற சிறுகதைத் தொகுப்பை சமீபத்தில் படித்தேன். வேட்டை, பச்சை இருளன், சத்ரு கதைகளுக்காகத்தான் இவரை கொண்டாட வேண்டும் என்று தோன்றுகிறது.

மற்றவற்றில் ஏழுமலை ஜமா நல்ல சிறுகதை. கூத்து வாத்தியார் வாழ்க்கைத் தேவைகளுக்காக என்னென்னவோ செய்தாலும் கூத்துக்கு மீளும் தருணம் சிறப்பாக வந்திருக்கிறது.

ஓணான் கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள் எனக்கு புரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

மற்ற கதைகளைப் படிக்கலாம். படித்தே ஆக வேண்டியவை அல்ல.

பவாவின் சில சிறுகதைகளை இங்கே படிக்கலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

தொடர்புடைய சுட்டி: பவாவின் தளம்