அண்ணாதுரையின் படைப்புகள்

அண்ணாவின் முக்கியப் பங்களிப்பாக நான் கருதுவது அவரது நாடகங்களைத்தான். அவரது நாடகங்கள் குறைகள் மலிந்தவையே. பிரச்சார நெடி அடிப்பவையே. பிராமண பாத்திரம் – இல்லை இல்லை பார்ப்பன, ஆரிய பாத்திரம் – என்றால் அந்தப் பாத்திரம்தான் வில்லன். அவரது நாடகத்தின் கதைகள் அவரது “முற்போக்கு” வசனங்களை மாட்ட உதவும் சட்டகம் (frame) மட்டுமே. தற்செயல் அதிசய நிகழ்ச்சிகள் கொண்ட மிகை உணர்ச்சி, ஃபார்முலா நாடகங்களே. ஆனால் ஓரிரவு அந்த ஃபார்முலாவை மீறுகிறது. சிவாஜி கண்ட ஹிந்து சாம்ராஜ்யம் நாடகத்தை மீறிய கலைத் தாக்கம் உடையது. வேலைக்காரி தமிழ் நாடக வரலாற்றில் முக்கியமான நாடகம். (ஆனால் நல்ல நாடகம் இல்லை.) இவை மூன்றையுமே அவரது முக்கியப் பங்களிப்பாக நான் கருதுகிறேன்.

பிற நாடகங்களில் சந்திரோதயம் நாடகம் குறிப்பிட வேண்டிய ஒன்று. இதில் பிரச்சாரத்துக்காக அவர் பயன்படுத்தும் உத்திகள் புத்திசாலித்தனமானவை. நாடகத்தின் நடுவே திமுக செயலாளர் நெடுஞ்செழியனின் ரேடியோ பேச்சாக ஒரு சிறு உரை; புத்திசாலித்தனமான வசனங்கள் (கடவுள் நம்பிக்கை உள்ள வேலைக்காரனை அவனது எஜமான் காலைத் தூக்கிக் கொண்டு நில் என்கிறான். இரண்டு நிமிஷத்தில் கால் வலிக்கிறது என்று அவன் காலை கீழே வைக்க நடராஜர் மட்டும் எப்படிய்யா காலைத் தூக்கிக் கொண்டே நிற்கிறார் என்று கேட்கிறான். அது கல்லுங்க என்று அந்த வேலைக்காரன் சொல்லிவிடுகிறான்.) 1943-இல் எழுதப்பட்ட நாடகம், ஆனால் பிற்காலத்தில் கொஞ்சம் அப்டேட் செய்திருக்கிறார். திமுக செயலாளர் நெடுஞ்செழியன், அரியலூர் ரயில் விபத்து என்றெல்லாம் வருகிறது.

நீதிதேவன் மயக்கம் என்ற நாடகத்தையும் குறிப்பிடலாம். நாடகத்தில் ராவணன் தன் கேசை எமன் முன்னால் வாதிடுகிறான். இதை வைத்து “கடவுள்கள்”, தேவர்கள் செய்த அநீதிகளை எடுத்துச் சொல்லி வாங்கு வாங்கென்று வாங்குகிறார். சிந்திக்க ஆரம்பிக்கும் காலத்தில் – பதின்ம வயதுகளி – தோன்றக் கூடிய சாதாரணக் கேள்விகளின் தொகுப்புதான். இருந்தாலும் அந்தக் காலத்தில் தேவை இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது.

ஆனால் அனேகமான நாடகங்கள் தண்டமே. ராகவாயணம்காதல் ஜோதி நாடகங்களில் பார்ப்பனர்களை வில்லன்களாக காட்ட வேண்டும் என்ற முனைப்பு மட்டுமே தெரிகிறது. இந்த லட்சணத்தில் இது ஜெய்ஷங்கர், ரவிச்சந்திரன், காஞ்சனா நடித்து திரைப்படமாகவும் வேறு வந்தது. சொர்க்கவாசல் இன்னொரு தண்டம். நன்கொடைகண்ணாயிரத்தின் உலகம், ரொட்டித்துண்டு, கல் சுமந்த கசடர், இரக்கம் எங்கே, புதிய மடாதிபதி போன்ற இன்னும் சில பிரச்சார நாடகங்களையும் படித்துத் தொலைத்திருக்கிறேன். கண்ணீர்த்துளி நாடகத்தில் காமராஜர் ஒரு முக்கிய பாத்திரம் – அவர் ஈ.வே.ரா.வை சாமர்த்தியமாக ஏய்த்துவிட்டதாக எழுதி இருக்கிறார்.

வேலைக்காரி, ஓரிரவு, நல்லதம்பி, ரங்கோன் ராதா சினிமாவாகப் பார்த்திருக்கிறேன்.

நான் அண்ணாதுரையின் சிறுகதைகள்/நாவல்களை அதிகமாகப் படித்ததில்லை. செவ்வாழை என்ற சிறுகதை தவிர வேறு எதுவும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய தரத்திலும் இல்லை. பிரச்சாரக் கதைதான், ஆனால் சராசரி பிரச்சாரக் கதையை விடப் பரவாயில்லை என்று சொல்லலாம். அதுவும் மலையாளைப் படைப்பு ஒன்றைத் தழுவியது, ஒரிஜினல் சரக்கு அல்ல என்று ஜெயமோகன் தகவல் தருகிறார்.

இமையம் எழுதிய இந்த கட்டுரையில் சில விவரங்கள் கிடைக்கின்றன. 113 சிறுகதைகள் எழுதி இருக்கிறாராம். எல்லாவற்றிலும் பிரசாரம்தான் போலிருக்கிறது. தன்னை வருத்திக் கொள்ள விரும்புபவர்களுக்காக (for masochists) – பித்தளை அல்ல பொன்னேதான் என்ற தொகுப்பு ப்ராஜெக்ட் மதுரை தளத்தில் கிடைக்கிறது.

படித்தவற்றில் சிறந்தது ரங்கோன் ராதா (1947). பிரச்சார நோக்கம் உள்ள, நயம் குறைவான நாவல்தான், ஆனால் அதுதான் இருப்பவற்றில் சிறந்தது. வண்டிக்காரன் மகன் படுசுமார். என் வாழ்வு (1940) பெரும் ஏமாற்றம். இவ்வளவு தண்டமாக எழுதுவார் என்று தெரியாமல் போனது. வில்லன்களை முனைந்து பார்ப்பனராகக் காட்டுவது, சாமியாரின் இன்ப வெறி, தாசிகள் என்று போகிறார். கலிங்க ராணி நாவல் தண்டம். வில்லனுக்கு பேர் கூட இல்லை, ‘ஆரியன்’ என்றே குறிப்பிடுகிறார். குமரிக் கோட்டம் என்று குறுநாவலில் கீழ்ஜாதிப் பெண்ணை மணம் செய்து கொள்ள விரும்பும் மகனை வீட்டை விட்டு விரட்டிவிடும் அப்பா இன்னொரு கீழ்ஜாதிப் பெண்ணிடம் மயங்குகிறார், அதனால் திருந்தி சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்துவிடுகிறார். அந்தக் காலத்து திராவிட இயக்கத்தினர் விரும்பிப் படித்திருப்பார்கள் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. இன்று தவிர்த்துவிடுவது ஓடிவிடுவது பெட்டர். கபோதிபுரத்து காதல், குமாஸ்தாவின் பெண் குறுநாவல்கள் தண்டம்.  கன்னி விதவையான கதை, தசாவதாரம், வாழ்க்கைப்புயல் சிறுகதை தொகுப்புகளைத் தவிர்ப்பது நலம்.

அண்ணாவின் எழுத்துகளை நாட்டுடமை ஆக்கினார்களா இல்லையா என்று கூடத் தெரியவில்லை. தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் மின் நூலகத்தில் அவரது படைப்புகள் எதுவும் இது வரை இல்லை. நல்ல விமர்சகர்கள் என்று நான் கருதும் எவரும் – க.நா.சு., சுஜாதா, ஜெயமோகன் இத்யாதியினர் – யாரும் அவரது எழுத்துகளைப் பற்றி நல்லபடியாக ஒரு வார்த்தை சொன்னதில்லை. அவரது எழுத்துகளை யாரும் ஆய்வு செய்தும் நான் பார்த்ததில்லை.

நான் படிக்க விரும்பியவற்றில் கம்பரசம் ஆகியவற்றைப் படித்து எழுதியும் விட்டேன். ரங்கோன் ராதா இன்னும் கிடைக்கவில்லை.

அவரது அபுனைவுகள் பதின்ம வயதில் தோன்றக் கூடிய சிந்தனைகளை எழுதியது போலத்தான் இருக்கிறது. புராண மதங்கள் சிந்திக்க ஆரம்பிக்கும் காலத்தில் தோன்றக் கூடிய சாதாரணக் கேள்விகளின் தொகுப்பு – கிருஷ்ணன் செய்தது அயோக்கியத்தனம் (வியாசரே அப்படி சொல்கிறார்), அவனை வழிபடலாமா இத்யாதி. இவற்றுக்கு அந்தக் காலத்திலாவது தேவை இருந்திருக்குமோ என்று தெரியவில்லை. அண்ணா கண்ட தியாகராயர் போன்றவை அலங்காரத் தமிழில் விஷயமே இல்லாமல் எழுதப்பட்டவை. பணத்தோட்டம் “பனியா” ஆதிக்கம் பற்றி பேசுகிறது. படிக்கும்போது தென்னிந்தியர்களுக்கு எதிராகக் கிளம்பிய சிவசேனா நினைவுதான் வந்தது. ஆரிய மாயை போன்ற புத்தகங்களோ ஏறக்குறைய இன்றைய ஹிந்துத்துவர்கள் “அன்னிய” இனங்களைப் பற்றிப் பேசுவது போல இருக்கிறது. எண்ணித் துணிக கருமம் அவர் திராவிட நாடு என்ற பிரிவினை கோரிக்கையை ஏன் கைவிட்டார் என்பதற்கான விளக்கம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
ஓரிரவு நாடகம்
சிவாஜி கண்ட ஹிந்து சாம்ராஜ்யம் நாடகம்
வேலைக்காரி நாடகம்
கம்பரசம்

33 thoughts on “அண்ணாதுரையின் படைப்புகள்

 1. “செவ்வாழை” நான பள்ளியில் படிக்கும் காலத்தில் பாடத்தில் இருந்தது. தேவலை. ஆனால் எனது பையன்கள் படிக்கும் போது அவர்களுக்கு “பூபதியின் ஒரு நாள் வாழ்க்கை” என்ற ஒரு கதை இருந்தது. ரொம்ப மொக்கை. அதனை மீண்டும் (!) படித்து ரசிக்க ஆவலாக உள்ளேன். ஆனால் கிடைக்க மாட்டேங்கிறது. ஆமாம், கல்கி அவர்கள் “இதோ இருக்கிறார் இன்னமொரு பெர்னார்ட்ஷா” என்று சொன்னது சீரியஸாகவா அல்லது உள்குத்துடனா? – சிமுலேஷன்

  Like

   1. சுட்டிக்கு நன்றி சிமுலேஷன்! இப்போதுதான் சிவாஜி கண்ட ஹிந்து சாம்ராஜ்யம் படித்து முடித்தேன்…

    Like

 2. கல்கி தமிழருக்குத் தமிழின் பெருமை தெரியவில்லையே என்று வருத்தப் பட்டாராம்.சென்னை கடற்கரையில் தமிழறிஞர்கள் சிலரை வர வழைத்துச் சிறப்பாகக் கூட்ட நடத்த ஏற்பாடு செய்தாராம்.மக்கள் வந்து விட்டனர் ஆனால் தமிழறிஞர்கள் வரவில்லை.அப்போது இள வயது பேச்சாளர் அண்ணாதுரை மட்டுந்தான் வந்திருந்தாராம்.மிக்க கோபத்துடன் இருந்த கல்கியிடம் உங்களுக்கு ஆட்சேபனை இல்லா விட்டால் நீங்கள் கொடுத்துள்ள தலைப்புக்களில் எல்லாம் நானே பேசுகின்றேன் என்றாராம்.கல்கி உன்னால் முடியுமா என்றாராம்.முயற்சி செய்கின்றேன் என்று அண்ணாதுரை பேச ஆரம்பித்தாராம். பேச்சு முடிந்ததும் கல்கி ஆனந்தக் கூத்தாடி ” நீ வெறும் அண்ணாதுரை அல்ல, அறிஞர் அண்ணாதுரை” என்றாராம். அறிஞர் அண்ணாவின் பேச்சும், எழுத்தும் அந்தக் கால கட்டத்தில் வைத்துப் பார்க்கப் பட வேண்டியவை.
  பிரச்சாரத்திற்காக எழுதப் பட்ட படைப்புக்கள் தான். ஆனால் கருத்தாழமும், கிண்டலும் நிறைந்திருக்கும்.

  Like

 3. என்னைப் பொறுத்தவரை அண்ணாதுரை புறக்கணிக்கப்பட வேண்டிய எழுத்தாளர் அல்ல. அவரது கதைகளில் பிரசாரம் அதிகம் இருக்கும். கிண்டல், கேலி இருக்கும். ஆனால் அவர் அதை அவர் வழி வந்த பின்னவர்களைப் போல பிழைப்புக்காகக் கையில் எடுக்கவில்லை. ஆரம்பத்தில் உளப்பூர்வமாகவே அவற்றை எழுதினார் என்பது என்பது எனது கருத்து. இரண்டாவது அவர், அவர் வழி இந்த பிற இயக்கத்தவர்களைப் போல் அல்லாமல் ஆழ்ந்த வாசிப்பு உடையவர். அந்த வாசிப்பினை அவர் எழுத்தில் கொண்டு வரவில்லை என்றாலும் ’கம்பரசம்’ போன்றவற்றில் அதை அறியலாம். (கம்ப ரசம் மூலமாகவே நான் கம்பனுக்குள் நுழைந்தேன்) ’கம்பரசம்’ நூலை அவர் ஆபாசமாகவே எழுதியிருந்தாலும் கூட அதுவும் ரசிக்கத் தகுந்த ஒரு படைப்பே., கம்பனை ரசிக்காமல் அவற்றை எழுதியிருக்க முடியாது அல்லவா?.

  அவரது நாடகங்கள், திரைப்படங்கள் எல்லாமே பிரச்சார வடிவம் தான். ’செவ்வாழை’ நல்ல கதைதான். (சம்பவங்கள் செயற்கையாகவே இருந்தாலும்- மு.வ. கூட அப்படி சில சிறுகதைகள் எழுதியிருப்பதாக ஞாபகம்)

  // கல்கி அவர்கள் “இதோ இருக்கிறார் இன்னமொரு பெர்னார்ட்ஷா” என்று சொன்னது சீரியஸாகவா அல்லது உள்குத்துடனா?//

  ’பொடி’ வைத்துப் பேசுவதில்/எழுதுவதில் கல்கி வல்லவர். எனக்கு அவர் கிண்டலாகக் கூறியிருப்பார் என்பதாகத் தான் படுகிறது. ’பாரதி மகா கவி அல்லர்’ என்று அவருக்கு அவரே (வேறு ஒரு புனை பெயரில் – கலைஞர் மு.க. தானே கேள்வி – பதில் எழுதுவது போல்) கடிதம் எழுதிக் கொண்டவர் கல்கி. அக்காலத்தில் அவர் கிண்டலாக்ச் சொன்னதை சிலர் சீரியஸாக எடுத்துக் கொண்டு ”தென்னாட்டு பெர்னாட்ஷா” என்று அண்ணாதுரையை விளிக்க ஆரம்பித்த்கிருக்கலாம் என்பதே என் ஊகம்.

  Like

 4. அண்ணாதுரை சீரியசான மனிதரே அல்ல, அதற்கப்பறம் தானே எழுத்தாளர் என்பது.நாடே விடுதலைக்காக போராடிய காலத்தில் இவர் விடலை பையன்கள்போல் சிற்றின்ப கதைகள் படைத்தார்,மேலும் பிராமண பெண்களை எதற்கும் துணிந்தவர்கள் போலவும் யார் கூப்பிட்டாலும் வந்துவிடுவார்கள் போலவும் பல கதைகள் எழுதியுள்ளார்,இதை அண்ணாவின் தம்பிகள் மறுக்க துணிந்தால் நான் ஆதாரத்துடன் வருகிறேன்.

  Like

 5. சிமுலேஷன், அண்ணாவை தென்னாட்டு பெர்னார்ட் ஷா என்று கல்கி அழைத்த கட்டுரையை படித்திருக்கிறேன். சீரியசாகத்தான் எழுதி இருக்கிறார்.

  தமிழன்47, கல்கிதான் அண்ணாவுக்கு அறிஞர் என்று பட்டம் கொடுத்தாரா? கேள்விப்பட்டதில்லை.

  ரமணன் மற்றும் விஜயன், அண்ணாவின் படைப்புகளைப் பற்றி இரண்டு தரப்பாக இருக்கிறீர்கள். நான் படித்ததில்லை, நீங்கள் இருவரும் இன்னும் விவரமாக எழுதினால் நன்றாக இருக்கும்.

  அருள், இந்தப் பதிவுக்கு தொடர்பில்லாவிட்டாலும் நல்ல கட்டுரை.

  Like

 6. ஆர்.வி

  திருமிகு. சி.என். அண்ணாதுரையின் எழுத்தைப் பற்றி மேற்கொண்டு சொல்வதற்கு ஒன்றுமில்லை. நல்ல படைப்பாளியாக வந்திருக்க வேண்டிய படிப்பாளி. அவ்வளவுதான். அரசியல் வேட்கையால், ஈவெராவின் கூட்டால் திசை மாறிப் போனவர்..இப்படி திசைமாறிப் போன பலருள் அவர் முக்கியமானவர். தமிழ்நாடு, தனிநாடு, திராவிடம், திராவிடன் என்றெல்லாம் கோரிக்கை வைத்தாலும் அவர் உள்ளத்துள் ஒரு அகண்ட கனவு இருந்திருக்கிறது. ஆனால் ’விஷக்கிருமி’களோடு அவரும் கலந்து விட்டார். அந்தக் கூட்டால் சீரழிந்த, (எல்லோரையும் நம்பி ஏமாந்த) ஒரு தலைவர். அவருக்குப் பின் அடியொற்றி வந்த பலரது ’ஆபாச’ எழுத்துக்கும், பேச்சுக்கும் பிள்ளையார் சுழி போட்டவர்களுள் இவரும் ஒருவர் என்ற குற்றச்சாட்டை மறுக்க இயலாது.

  Like

 7. அண்ணாதுரை என்னும் அண்ணல் தமிழ் நாட்டு
  வண்ணான் அழுக்கெடுப்பில் வாய்மொழியில் பண்ணாவன்
  சிற்பன் எழுத்தோவியத்தில் செவ்வரசு நாவாயின்
  அற்புதம்சூழ் மாலுமி என்றாடு-

  இது திரு.வி.க அண்ணாவைப் பற்றி எழுதியது

  Like

 8. செவ்வாழைதான் அண்ணாத்துரையின் ஆக்கங்களில் சிறந்தது என்பார்க்ள். அது சங்ஙம்புழ கிருஷ்ணபிள்ளையின் கவிதைக்கதையின் தழுவல். அதன் மொழியாக்கம் செவ்வாழைக்கு முன்னரே தமிழில் வந்துவிட்டது. ஆரம்ப கால பதிப்புகளில் மலையாள கதையை தழுவியது என்று இருந்தது. பின்னால் அந்த குறிப்பு நீக்கம் செய்யப்பட்டது

  Like

 9. ஜெயமோகன், ஏதோ கொஞ்சம் பரவாயில்லை என்று செவ்வாழையைப் பற்றி நினைத்திருந்தேன், அதுவும் காப்பியா?

  Like

 10. அண்ணாதுரை எழுத்தாளரா நாடக ஆசிரியரா என்று சீரியசாகத்தான் ஆராய நினைத்தீர்களா ஆர்வி? அதுவும் அந்த அண்ணனைத் தம்பிகள் மறந்து அய்ம்பது அகவைகள்நெருங்கி கொண்டிருக்கும் இந்த வேளையில்? கல்கி ஒன்றும் சீரியசாகப் பாராட்டின மாதிரித் தெரியவில்லை. கல்கி தன்னை மாதிரியே வேறு இடங்களில் இருந்து சுட்ட விதத்தைத்தான் தென்னாட்டு பெர்னார்ட் ஷா என்று சொன்ன மாதிரித்தான் இருந்தது என்றும் சொல்வார்கள்!

  ஏற்றுக்கொள்ள முடிகிறதோ இல்லையோ ஈவெரா மட்டும் தான் திராவிட இயக்கத்தில் கொஞ்சம் ஒரிஜினலாக அல்லது குதர்க்கமாக யோசித்து எழுதிய ஒரே எழுத்தாளர்!

  Like

  1. கிருஷ்ணமூர்த்தி, ஆம், அண்ணா தமிழின் முக்கிய நாடக ஆசிரியர் என்றே கருதுகிறேன். அண்ணனை தம்பிகள் நினைவு வைத்திருக்கிறார்களா இல்லையா என்பதெல்லாம் நமக்கெதற்கு? கல்கி தென்னாட்டு பெர்னார்ட் ஷா என்று சொன்னதைப் படித்திருக்கிறேன், அவர் சீரியசாக எழுதிய மாதிரிதான் இருக்கிறது. என்ன, பெர்னார்ட் ஷாவைப் படித்துப் பார்த்தாரா இல்லையா என்றுதான் தெரியவில்லை.

   Liked by 1 person

 11. அண்ணா மேடையையும் எழுத்தையும் நாடகங்களையும் திரைப்படங்களையும் தனது் இயக்க வளர்ச்சிக்காக பயன்படுத்தினார். ஆகவே அவை எல்லாவற்றிலும் பிரச்சார நெடி இருந்ததால் ஆச்சரியமில்லை. ஒருவர் இளைஞராக இருந்து எழுதியதற்கும் முதிர்ச்சி அடைந்த பின் எழுதுவதற்கும் வேறுபாடுகள் இருக்கவே செய்யும். அண்ணாவை மற்ற எழுத்தாளர்களுடன் ஒப்பிட்டு அவரை சிறுமைபடுத்த முயற்சிப்பது அர்த்தமற்றது. அவர் ஒரு அரசியல்வாதி. மற்றவை எல்லாம் தனது அரசியல் பயணத்திற்காக அவர் எடுத்துக் கொண்ட ஆயுதங்கள் அவ்வளவே. அரசியலதான் அவருடைய அடையாளம். அதில் அவர் மிகப் பெரிய வெற்றி அடைந்தவர் என்பது ஏறத்தாழ அறுபது ஆண்டுகளுக்கு மேலாக
  ் திராவிட இயக்கம் தமிழகத்தில் கோலோச்சி நிற்பதில் இருந்து அறியலாம்!

  Like

  1. அரங்கநாதன், அண்ணாவின் பிற்கால எழுத்தில் பெரிய முன்னேற்றம் இருந்ததாக எனக்குத் தெரியவில்லை. உண்மையில் அவரது படைப்பாற்றல் நாற்பதுகளுக்குப் பிறகு கொஞ்சம் மங்கிவிட்டதாகத்தான் எனக்கு தோன்றுகிறது. இது வாசிப்புக்கான தளம், அவரது அரசியல் அதிகமாக பேசப்படாது.

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.