அம்மாவுக்கா எனக்கா?

என் அப்பா இறந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. ஆயிரம்தான் பிள்ளைகள் இருந்தாலும் அம்மாவின் இழப்பு பெரியது. அகவுலக இழப்பு மட்டுமல்ல, புறவுலக இழப்பும் அம்மாவுக்கு கவலை தருவது. வெளியுலகத் தொடர்புகள் அனைத்தையும் – குறிப்பாக பணவிஷயம் எல்லாவற்றையும், பேப்பர்காரனுக்கு பணம் தருவது முதல் வங்கியில் பணம் எடுப்பது வரை அப்பாதான் பார்த்துக் கொண்டிருந்தார். அம்மாவுக்கு தன்னால் இவற்றை கவனிக்கமுடியுமா என்ற அச்சம். 55 வருஷ வாழ்க்கைமுறையை மாற்றிக் கொள்வது சுலபமான காரியம் அல்ல.

அப்பா இறந்த முதல் வாரம் சுற்றி என்ன நடக்கிறது என்பதே எனக்கு சரியாகத் தெரியவில்லை. துக்கம், அம்மாவின் அச்சங்களைப் பற்றிய மன உளைச்சல், பற்றாக்குறைக்கு அமெரிக்காவில் சில பிரச்சினைகள். திடீரென்று அம்பை எழுதிய ஒரு சிறுகதை நினைவு வந்தது – பிளாஸ்டிக் டப்பியில் பராசக்தி முதலியோர். அந்தச் சிறுகதை அம்மாவுக்கு தைரியம் தரும் என்று தோன்றியது. அம்பையைத் தொடர்பு கொண்டு அதற்கு மின்பிரதி கிடைக்குமா என்று கேட்டேன். சிறுகதையை ஸ்கான் செய்து அனுப்பினார்.

அம்மா படித்துவிட்டு ஒன்றும் சொல்லவில்லை. ஏற்கனவே படித்திருக்கிறேன் என்று மட்டும் சொன்னாள்.

எனக்கு அப்போது அந்த சிறுகதையை மீண்டும் படிக்கும் மனதிடம் இல்லை. நேற்றுதான் மீண்டும் படித்தேன். நான் கேட்டது என்னை தைரியப்படுத்திக் கொள்ளத்தானோ என்று தோன்றியது. அம்மா சமாளித்துக் கொள்வாள், அம்மாவுக்கென்று ஒரு உலகம், பிள்ளைகளை மட்டும் சார்ந்து இருக்காத ஒரு வாழ்வு இருக்கிறது என்று எனக்கு மீண்டும் சொல்லிக் கொள்ளத்தான் அந்தச் சிறுகதையைத் தேடினேனோ என்னவோ தெரியவில்லை.

மீள்வாசிப்பில் என் மாமியாரையும் கண்டுகொண்டேன். என் மாமியாருக்கு பாட்டுக்களால் நிறைந்த ஒரு உலகம் இருக்கிறது. அந்த உலகம் இருக்கும் வரையிலும் எதுவும் அவரை அசைத்துக் கொள்ள முடியாது.

சிறுகதை archive.org தளத்தில் கிடைக்கிறது. கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

அம்பைக்கு என் மனப்பூர்வமான நன்றி!

தொகுக்கப்பட்ட பக்கம்: அம்பை பக்கம்

தொடர்புடைய சுட்டி: பிளாஸ்டிக் டப்பியில் பராசக்தி முதலியோர்

மோகமுள் பிறந்த கதை

சொல்வனத்தில் பார்த்தது. 57 வருஷங்களுக்கு முன்னால் தி.ஜா. இந்த நாவலின் ரிஷிமூலத்தை விவரித்திருக்கிறார்.

வசதிக்காக இங்கே மீள்பதித்திருக்கிறேன். சொல்வனத்துக்கும், சொல்வனத்துக்கு இதை அனுப்பிய லலிதாராமுக்கும், தி.ஜா.விடம் இதைக் கேட்டு வாங்கிய கல்கி பத்திரிகைக்கும் நன்றி!


கண்ணாடிப் பாட்டியைப் பல வருடங்களுக்குப் பிறகு ஒரு கல்யாணத்தில் பார்க்க நேர்ந்தது. “யார்றாப்பா அது, ஜானகியாடா?” என்று கண்ணாடியை இரண்டு விரல்களால் தூக்கி விட்டுக்கொண்டே அருகில் வந்தாள்.

“ஆமாம் பாட்டி. சௌக்கியம்தானே?”

“சௌக்கியமா இருக்கறதுக்குத்தான் வழி பண்ணிக்க வந்திருக்கேன். பேப்பர்லே கதை போட்டுண்டு வறியே, அதுக்கெல்லாம் பணம் தருவாளோ! இல்லே, ராமையா பாகவதரைக் கூப்பிட்டுக் கதை பண்ணச் சொல்றாப்பலே தேங்காய் மூடியோ?” என்று கூறி நிறுத்தினாள் பாட்டி.

“தேங்காய் விலைதான் ஏறிக்கிடக்கே, இப்போ! பணமாகவே கொடுத்துவிடுகிறார்கள்.”

“அது என்னமோப்பா! பாதிப் பணம் அப்பப்ப எனக்கு வரணுமே, வரலையேன்னு கேட்கிறேன். நான் கேட்கிறது நியாயம்தானே?” என்றாள் பாட்டி.

“எல்லாம் உங்க ஆசீர்வாதம்தானே!”

“அப்படிச் சொல்லிண்டே கிளம்பிப் போயிடலாம்னு பார்க்கறியா? என் பேச்சு, மூனாச்சி கதை, யோகாம்பா கதை, ரங்கு கதை – அவாளுக்குக் கொடுத்தாலும் கொடு. கொடுக்கப்பட்டாலும் போ – எனக்காவது கொடுக்கலாமோல்லியோ நீ?”

பாட்டி கேட்டது வேடிக்கையாகத்தான். சொன்னது அவ்வளவும் உண்மை. எழுதத் தூண்டிய, வழி காட்டிய பல குருமார்களில் கண்ணாடிப் பாட்டிக்கு நான் தனி ஸ்தானம் கொடுத்திருக்கிறேன். காவேரி வண்டலில் செழித்த பயிர் கண்ணாடிப் பாட்டி. பேச்சில் அசாதாரணமான நயம், நகைச்சுவை, சுருக்சுருக்கென்று தைக்கிற கூர்மை, சில சமயம் என்ன அர்த்தத்தில் சொல்லுகிறாள் என்று இலேசில் கண்டுபிடிக்க முடியாத பூடகம், சொல்லாமல் சொல்லுகிற தொனி, அதிர்வேட்டு மாதிரியும், சிற்றிலை போலவும் பல தினுசுச் சிரிப்புகளை எழுப்பக் கூடிய ஹாஸ்ய வகைகள், எதைச் சொன்னாலும் தனக்கென்று ஒரு தனிப்பார்வை – பாட்டி ரொம்பப் பெரியவள்.

மோகமுள் நாவலில் வருகிற பல பாத்திரங்களும் சம்பவங்களும் கண்ணாடிப்பாட்டியும் நானும் கண்டு ரசித்தவைதான். அவற்றையெல்லாம் ஒரு நாவலாக எனக்கு எழுதத் தோன்றியதே பாட்டியின் பார்வையை இரவல் வாங்கிக் கொண்டதனால்தான். பாட்டிக்கு எழுதப் படிக்கத் தெரியாது. ஆனால் அவளுக்குத் தெரிந்த கதைகளும், மன விசித்திரங்களும், சொல் ஜாலங்களும் இந்த உலகத்திலேயே சிலருக்குத்தான் கைவரும். பாட்டியின் கலைக்கண்ணில் ஒரு தவலை கூட நமக்கு லபிக்கவில்லையே என்று எனக்குத் தீராத குறை. மோகமுள்ளில் சில அத்தியாயங்களைக் கிடைத்தபொழுது வாசிக்கச் சொல்லிக் கேட்டாளாம் பாட்டி. ஓரிரண்டு இடங்களை நன்றாக இருப்பதாக அவள் ஒப்புக்கொண்டு கூடவிட்டாள். ஆகவே மற்ற விமர்சகர்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை.

பள்ளிக்கூடத்தில் படித்த பத்து வருஷங்களில் ஞாபகம் இருக்கக் கூடியதாக ஒன்றுமில்லை. எப்பொழுது இச்சிறையிலிருந்து விடுபடப் போகிறோம் என்று ஆத்திரப்பட்டது ஞாபகம் இருக்கிறது. “உனக்குக் கணக்கு வராது. நீ கதை பண்ணத்தான் லாயக்கு. தொலை” என்று என் முகத்தில் பிரம்பை விட்டெறிந்த நாமமும், அம்மை வடு முகமும் கொண்ட மூன்றாம் வகுப்புக் கணக்கு வாத்தியார் ரங்காச்சாரியார், எனக்கு ஆசீர்வாதம் செய்தார். அந்த ஆசீர்வாதம்.

வகுப்புக் கட்டுரைகளில் சொந்தக் கைவரிசையைக் காட்டி அதிகப்பிரசங்கித்தனமாக அசடு வழிந்ததற்கு, சில வாத்தியார்கள் மற்றப் பையன்களுக்கு நடுவில் பரிகாசம் செய்து மனத்தைக் கிழித்துப் போட்டதில் ஏற்பட்ட புண்கள்.

தஞ்சாவூரில் அப்பொழுதெல்லாம் மூலைக்கு மூலை சங்கீதக் கச்சேரிகள் அமர்க்களப்படும். சிவகங்கை அனுமார், வெங்கடேசப்பெருமாள் சன்னிதி அனுமார், மேலவீதி விசுவநாதர், மேலவீதி பிள்ளையார், தெற்குவீதி காளி அம்மன், வரகப்பையர் சந்தில் தியாகையர் பூஜித்த ராம விக்கிரகங்கள், நாணயக்காரச் செட்டித்தெரு ராமலிங்க மடம், பக்கத்தில் திருவையாறு – இத்தனை தெய்வங்களுக்கும் நடக்கிற உற்சவ சங்கீதக் கச்சேரிகளை ஒன்றுவிடாமல் ஐந்து வயதிலிருந்தே கேட்டுக் கொண்டிருந்த பழக்கம்.

நாலைந்து பேரிடம் சிறுவயதிலிருந்தே சங்கீதம் கற்கும் வாய்ப்புக் கிடைத்தது. கலைஞர்களுக்கு உரிய பேச்சின் அழகில் மயங்கினது.

உமையாள்புரம் சுவாமிநாதய்யரிடம் சில நாட்கள் சங்கீதம் சொல்லிக் கொள்ளப் போய்க்கொண்டிருந்தேன். மற்றவர்களைவிட சங்கீதத்தை உபாசணையாக, தியான மார்க்கமாக, அவர் கையாண்ட ஒரு தனிப்பண்பு, உலகத்தின் ஒலிகளையெல்லாம் நாதக் கடவுளின் பற்பல சைகைகளாகவும் விவகாரங்களாகவும் அவர் கண்ட விந்தையைத் துளியாவது பார்க்கக் கிடைத்த வாய்ப்பு.

கும்பகோணத்தில் கல்லூரியில் படித்த நாலு வருடங்களும் பள்ளி வாழ்க்கைக்கு நேர்மாறாக இருந்தன. அவ்வளவு உற்சாகம். அவ்வளவு அமைதி. இலக்கியங்களைப் பரவலாகப் படிக்க வாய்ப்புக் கிடைத்தது. பரம ரசிகர்களாக இருந்த இரண்டு மூன்று ஆசிரியர்களின் தோழமை இந்த வாய்ப்பைப் பெருக்கிற்று. அந்தப் பூரிப்பு.

கல்லூரியில் எனக்கு இணைபிரியாத நண்பன் ஒருவன் உண்டு. எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் தெய்வமாக வணங்குவான். அதை ஒரு தனி மதமாக வளர்த்திருந்தான் அவன். அவனோடு நெருங்கிப் பழகப் பழக என் உள்ளத்தில் சபலத்துக்கும் தூய்மைக்கும் மூண்ட ஓயாத சண்டைகள்.

நான் குடியிருந்த தெருவில் ஒரு கிழவர் ஐம்பத்தைந்து வயதில் ஒரு பதினாறு வயதுக் கட்டழகியை (அழகான பெண்கள் யார் யாருக்கோ போய்ச் சேர்வதைப் பாருங்கள்) கலியாணம் செய்து கொண்டு வந்து முப்பத்திரண்டு வயதுப் பிள்ளையை அவன் மனைவி குழந்தைகளுடன் வீட்டை விட்டு விரட்டி, சரியாக ஒரு வருஷம் புது மனைவியோடு தனிக்குடித்தனம் செய்துவிட்டு, திடீரென்று ஒருநாள் சிவபதம் அடைந்து விட்டார். அதை ஒரு வருஷம் பார்த்துக் கொண்டிருந்த ஆற்றாமை.

தஞ்சாவூர் ஜில்லாவில் ஒரு கிராமம். அங்கே ஒரு மிராசுதார் . சிறு பையனாக இருக்கும் பொழுதே முப்பது வேலி நிலத்துக்கு வாரிசாகிவிட்டான். தகப்பனார் இறந்து, நிலம் கைக்கு வந்ததுமே, பண்ணை முறையை உதறி எல்லா நிலங்களையும் குத்தகைக்குவிட்டு விட்டுச் சுகவாசியாக வாழத் தொடங்கினான். சுகவாசியென்றால் வேறொன்றுமில்லை. திண்ணையில் பெரிய கலியாண ஜமக்காளத்தை விரித்து, ஊரில் உள்ள சின்னவர் பெரியவர்களையெல்லாம் சேர்த்துக் கொண்டு சீட்டாட்டம். ஓயாத ஒழியாத சீட்டாட்டம். அரையில் வேட்டி நழுவியதைக் கூட உணராத சீட்டாட்டம். மற்ற நேரங்களில் திண்ணையில் மரச்சாய்வு நாற்காலியைப் போட்டு, சட்டத்தை நீட்டி அதன்மேல் காலைப்போட்டு, எப்பேர்ப்பட்ட பெரியவர்கள் வந்தாலும் (ரெவின்யூ இன்ஸ்பெக்டர், தாசீல்தாரைத் தவிர) அந்தக் காலை மடக்காமல், எழுந்து கொண்டுவிடாமல் படுத்திருப்பான். வம்பளப்பான். இந்த மாதிரி எத்தனையோ ஜன்மங்கள் தஞ்சாவூர் ஜில்லாவில் இருக்கின்றன. (மற்ற ஜில்லாக்கள் அவ்வளவாக எனக்குப் பழக்கமில்லை). இந்த ஜன்மங்கள் ஒன்றிரண்டைப் பார்த்த குழப்பம்.

தஞ்சாவூரில் நான் படிக்கும்பொழுது ஒரு நாள் நாலைந்து வடக்கத்தியர்கள் தம்புராவைத் தூக்கிக் கொண்டு வாசலோடு போனார்கள். என் தகப்பனாரும் நானும் திண்ணையில் நின்று கொண்டிருந்தோம். எங்கள் வாசலண்டை வந்த அவர்கள் என் தகப்பனாருக்குக் கும்பிடு போட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தார்கள். ஹாலில் உட்கார்ந்தார்கள். தம்புராவை மீட்டினான் ஒருவன். பெரியவர் ஒருவர் பாட ஆரம்பித்துவிட்டார். ஒரு மணி நேரம் உலகப் பிரக்ஞை அழிய அழியப் பாடினார் அவர். அவர் மகனும் சேர்ந்து கொண்டான். அந்த மாதிரி சாரீரங்களை நான் இதுவரையில் கேட்டதில்லை. அவ்வளவு கனம், அவ்வளவு இனிமை, அவ்வளவு சுருதி உணர்வு, விண்ணுக்கும் பாதாளத்துக்கும் அனாயாசமாக ஓடி, ஓடிப் பாய்கிற ஆற்றல்! கட்டி விழுந்த குழந்தையின் முனகல் போன்ற சில கர்நாடக வித்வான்களின் குரல்களும் நினைவில் வந்தன. பல வருஷங்கள் கழித்து, பிழை பொறுக்காமல் வடக்கத்தியர்களின் குரல்வளத்தைப் பற்றி ஒரு பிரபல கர்நாடக வித்வானுடன் தர்க்கம் செய்ய நேர்ந்தது. ‘குரல் இருந்தால் மட்டும் போதுமா’ என்று ஒரே வார்த்தையில் அலட்சியப் புன்னகையோடு அவ்வளவையும் பைசல் செய்துவிட்டார் அவர்! ஒரு கிணற்றில் இத்தனை தவளைகளை எப்படி அடைத்திருக்கிறார் பகவான் என்று அப்போது ஓர் ஆச்சரியம் ஏற்பட்டது. அந்த ஆச்சரியம்.

என்னை விட எட்டு வயது அதிகமான ஒரு பெண். நன்றாகப் படித்தவள். நல்ல வடித்தெடுத்த அழகு. அடிக்கடி அவளோடு பேசிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. ஆழ்ந்த அமைதியும், புத்திக் கூர்மையும், எதையும் கண்டு வியந்துவிடாத அழுத்தமும் நிறைந்த அவளை மரியாதையாகப் போற்றத் தொடங்கினேன். கடைசியில் அது மோகமாக மாறி, அவள் அதைத் தெரிந்துகொண்டு, என்னைப் பார்த்துச் சிரித்துவிட்டுப் போய், ஒரு வருஷம் கழித்து யாரோ ஒரு மின்சார என்ஜினீயரைக் கலியாணம் பண்ணிக் கொண்ட செய்தியைக் கேட்டது.

இந்த எல்லாமாகச் சேர்ந்து, கொதித்து மோகமுள் என்ற நாவலாக ஆகிவிட்டது. முக்கியமானவற்றைச் சொல்லியாயிற்று.

எப்படி அதை எழுதினேன் என்று கேட்டால் பதில் சொல்ல முடியவில்லை. அந்த எல்லா ஞாபகங்களும் உள்ளே கிடந்தன. ஒரு நாள் ஒரு வாரப் பத்திரிகையிலிருந்து மூன்று பேர்கள் வந்து ‘ஒரு தொடர்கதை எழுதுங்களேன்’ என்றார்கள். நாலைந்து தடவை வந்தார்கள். இந்த ஞாபகங்கள், என் ஆசைகள், நப்பாசைகள், நான் எப்படி இருந்திருக்க வேண்டும் என்று நினைத்தேனோ, பார்த்த மனிதர்கள் பாத்திரங்களாக எப்படி மாறவேண்டும் என்று விரும்பினேனோ, எல்லாமாகச் சேர்ந்து நாவலாக உருவாயின. மறுபடியும் எப்படி என்றால் அதற்குப் பதில் சொல்ல முடியவில்லை. ஏதோ உட்கார்கிறோம், எழுதுகிறோம். சில சமயம் தரதரவென்று எழுதமுடிகிறது. சில நாளைக்கு ஒரு வரி கூட எழுத முடியவில்லை. நாட்கணக்கில் எழுதவே முடிவதில்லை. எழுத வந்தால்தானே! நாலு நாட்கள் வந்து நாட்கள் மண்டையை உடைத்துக் கொண்டு, கடைசியில் அழாத குறையாக படுத்து விடுகிறது. காலையில் எழுந்திருக்கும் பொழுது பளிச்சென்று கோவில், சினிமாவுக்குப் போகிற ஸ்திரீகள் குக்கரில் வைத்துவிட்டுப் போகிற அரிசி மாதிரி எல்லாச் சிரமங்களும் விடிந்து தானாக எண்ணங்கள் பக்குவமாகி இருக்கும். வேகமாக பேனா அதை எழுதிவிடுகிறது. அவ்வளவுதான்.

தொடர்கதை எழுதுவதைப் பற்றி விமர்சகர்கள் நல்ல அபிப்பிராயம் சொல்வதில்லை. எனக்குக்கூட அந்த அபிப்பிராயத்தில் சிறிது சார்பு உண்டு. ஆனால் நான் எழுதின மூன்று நாவல்களும் தொடர்கதைகளாக வந்தவைகள்தான். பாத்திரத்தில் பச்சைத் தண்ணீரில் கிடக்கிற காய்கறிகளை வேக வைக்க, தொடர்கதை எழுதச் சொல்லும் பத்திரிகாசிரியரின் தூண்டுதல் நல்ல தீயாக வந்து உதவிச் சமைத்துக் கொடுக்கிறது. நெருப்பை ஜாக்கிரதையாகப் பயன்படுத்துவது நம் பொறுப்பு.

என்ன, சமையல் உபமானமாகவே இருக்கிறதே என்று நீங்கள் கேட்கிறீர்களா? முன் ஜன்மத்தில் தவசிப் பிள்ளையாக இருந்தேனே, என்னவோ, யார் கண்டார்கள்?

(கல்கி – 27.08.1961)

தொகுக்கப்பட்ட பக்கம்: தி.ஜா. பக்கம்

C.J. Sansom எழுதிய வரலாற்று+துப்பறியும் நாவல்கள்

வரவர எனக்கு வரலாற்றுப் பின்னணியில் எழுதப்படும் துப்பறியும் நாவல்கள் பிடித்திருக்கின்றன. நானே எழுதலாமா என்று யோசிக்கிறேன் இன்னும் கதை சரியாக அகப்படவில்லை. ஆனால் துப்பறியும் வந்தியத்தேவன், பீர்பல், தெனாலிராமன், அட கபீர்தாஸ் என்று நினைத்தால் நன்றாகத்தான் இருக்கிறது.

உண்மையை ஒத்துக் கொள்கிறேன், இங்கிலாந்தின் வரலாற்றில் எனக்கு பெரிய ஈடுபாடு எதுவும் கிடையாது. எவன் பிள்ளை ஆட்சிக்கு வந்தால் எனக்கென்ன? அதுவும் இங்கிலாந்தில்? ராஜராஜ சோழன் என்றாலாவது கொஞ்சம் ஆர்வம் இருக்கும். எனக்குத் தெரிந்திருக்கும் இங்கிலாந்து வரலாறு அனேகமாக நாவல்களின் மூலம் அறிந்தவையே. பெர்னார்ட் கார்ன்வெல்லின் நாவல்கள், ஷேக்ஸ்பியரின் சில நாடகங்கள், ஹார்ன்ப்ளோயர் கதைகள், ஜான் ஃபீல்டிங் கதைகள், ஜோசஃபின் டே எழுதிய Daughter of Time, ஹில்லரி மாண்டல் எழுதிய Wolf Hall, இப்போது சான்சம்.

ஆனால் ஒன்று தெளிவாகத் தெரிகிறது. இங்கிலாந்தின் மன்னர்களில் எட்டாம் ஹென்றி ஒரு intriguing மன்னன். கல்யாணம் செய்து கொள்ள வேண்டியது, பிறகு மணவிலக்கு இல்லாவிட்டால் கள்ளத் தொடர்பு இருக்கிறது என்று பொய்யோ மெய்யோ குற்றம் சாட்டி மரண தண்டனை விதிப்பது, பிறகு அடுத்த பெண். இப்படியே ஒன்றன் பின் ஒன்றாக ஆறு மனைவிகள். பிரதமராக இருப்பவர் முட்டுக்கட்டை போட்டாலோ, அட முட்டுக்கட்டையை விடுங்கள், சரியாக ஒத்துழைக்கவிட்டாலோ, அவர் மீது தேசத்துரோகக் குற்றம் சாட்டி அவர்களுக்கும் மரண தண்டனை. போப் முட்டுக்கட்டை போட்டதால் இங்கிலாந்து கத்தோலிக்கர்களிடம் இருந்து பிரிந்து இன்றைய ஆங்கிலிகன் உபமதம் உருவாகி இருக்கிறது. எட்டாம் ஹென்றி காலத்திலிருந்து யார் மன்னனோ (அல்லது ராணியோ) அவரே ஆங்கிலிகம் உபமதத்தின் தலைவரும் கூட. எட்டாம் ஹென்றி பற்றித்தான் நிறைய எழுதுகிறார்கள். C.J. Sansom-உம் இந்த ஹென்றியின் காலத்தில் இந்தக் கதைகளை எழுதி இருக்கிறார்.

ஒரே ஒரு புத்தகம் படிக்க வேண்டுமென்றால் நான் பரிந்துரைப்பது Tombland (2018). சிறப்பாக எழுதப்பட்ட நாவல். அன்றைய இங்கிலாந்தில் பிரபுக்கள் பொது ஜனங்களின் உரிமைகளை கொஞ்சம் கொஞ்சமாக பறித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களால் சட்டத்தை இஷ்டத்துக்கு வளைக்க முடிந்தது. ஒரு கட்டத்தில் நார்விச் நகரம் அருகே பெரிய புரட்சி வெடித்திருக்கிறது. Kett’s Rebellion. அங்கே மாட்டிக் கொள்ளும் வக்கீல் ஷார்ட்லேக். அன்றைய சமூகநிலை மிக அருமையாக விவரிக்கப்படுகிறது. இங்கிலாந்தின் வரலாற்றில் கொஞ்சம் கூட ஆர்வம் இல்லாத என்னால் புத்தகத்தை கீழே வைக்க முடியவில்லை. இத்தனைக்கும் எண்ணூறு பக்க நாவல்!

பரிந்துரைக்கும் இன்னொரு நாவல் Heartstone (2010). இத்தனைக்கும் இது மெதுவாகச் செல்லும் நாவல்; நிறைய பில்டப்; முடிச்சு மிகவும் சிம்பிளானதுதான். ஆனால் கதை விரியும் விதம், கதைப் பின்னல், சரித்திரப் பின்னணி, இங்கிலாந்தில் அன்று சட்டத்துக்கு பெயரளவில் இருந்த மதிப்பு, சட்டத்தை நடைமுறையில் மன்னனிலிருந்து தொடங்கி கொஞ்சம் அதிகாரம் இருப்பவன் வரை எப்படி எல்லாம் வளைக்கிறார்கள் என்ற உண்மை, எல்லாம் மிகச் சிறப்பாக இருக்கின்றன.

இவற்றைத் தவிர Dissolution (2003), Lamentation (2014) இரண்டையும் பரிந்துரைக்கிறேன்.

முதல் நாவலான Dissolution (2003)-இல் மாத்யூ ஷார்ட்லேக் அறிமுகம் ஆகிறார். அவர் ஒரு கூனர். வக்கீல். நாவல் ஆரம்பிக்கும்போது தாமஸ் க்ராம்வெல் ஏறக்குறைய பிரதம மந்திரி. இந்தக் காலகட்டத்தில் இங்கிலாந்து போப்பின் பிடியிலிருந்து விலகிவிட்டது. அப்புறம் அன்றைய சர்ச்சுகள், அவற்றின் சொத்துக்களின் கதி? இங்கிலாந்தின் பல சர்ச்சுகள் – நம்மூர் மடங்களுக்கு ஏறக்குறைய சமமானவை – கலைக்கப்பட்டு அவற்றின் நிலங்கள், சொத்துக்கள் அரசுக்கே உரிமைப்படுத்தப்பட்டன. இந்தப் பின்னணியில்தான் இந்த நாவல் எழுதப்பட்டிருக்கிறது. ஷார்ட்லேக் க்ராம்வெல்லின் நம்பிக்கைக்குரியவர். க்ராம்வெல் ஒரு ‘மடத்தை’ கைவசப்படுத்த அனுப்பிய அதிகாரி அங்கே கொல்லப்படுகிறார். கொலையாளியை கண்டுபிடிக்கவும், மடத்தை ‘கைப்பற்றவும்’ ஷார்ட்லேக் அனுப்பப்படுகிறார்.

இந்த நாவலின் கவர்ச்சி என் கண்ணில் அதன் சரித்திரப் பின்னணிதான். என்ன வேண்டுமானாலும் தகிடுதத்தம் செய்து மடத்தை கைவசப்படுத்தலாம், ஆனால் சட்டரீதியாக செல்லுபடி ஆகவேண்டும். அதனால் சர்ச்சின் தலைமைப் பாதிரியாரையே நாங்கள் இந்த மடத்தை கலைத்து விடுகிறோம் என்று சொல்ல வைக்க வேண்டும். பாதிரியாருக்கு என்ன கிறுக்கா பிடித்திருக்கிறது? அதனால் மடத்தில் பல ‘குற்றங்கள்’ நடக்கின்றன என்று ஒரு ஷோ காட்ட வேண்டும். வசதியாக பலருக்கும் ஓரினச் சேர்க்கை ஆசை இருக்கிறது. அன்று ஓரினச் சேர்க்கை சட்டப்படி குற்றம். ஆனால் இரண்டு வருஷத்துக்கு முன்னால் இது வரை நடந்த எல்லாவற்றுக்கும் மாப்பு கொடுக்கப்பட்டுவிட்டது. மாப்புக்குப் பிறகும் குற்றங்கள் குறையவில்லை, அதனால் கலைக்கிறோம், நாங்களாக கலைப்பதற்கு பதில் நீயாக விலகிக் கொள் என்று அழுத்தம் தர வேண்டும். ஷார்ட்லேக் அந்த சர்ச்சில் சந்திக்கும் மருத்துவர் – கறுப்பு இனத்தவர் – சுவாரசியமான பாத்திரம்.

மர்மம் சுமார்தான். ஆனால் சுவாரசியம் குன்றாமல் போகிறது.

இரண்டாவது நாவலான Dark Fire (2004) சுவாரசியமான பின்புலம் கொண்டது. மன்னர் ஹென்றி தனது மண வாழ்வு பிரச்சினைகளில் க்ராம்வெல் மீது கடுப்பானார், ஒரு கட்டத்தில் க்ராம்வெல் மீது துரோகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அவர் தலை துண்டிக்கப்படது என்பது வரலாறு. நாவல் ஆரம்பிக்கும்போது க்ராம்வெல்தான் ‘பிரதமர்’, ஆனால் அவர் நிலை ஆபத்தில் இருக்கிறது. ஹென்றிக்கு க்ராம்வெல் தேடிப் பிடித்து வந்த மணமகளைப் பிடிக்கவில்லை, அடுத்த பெண்ணைத் தேடுகிறார். ஷார்ட்லேக் இன்னும் க்ராம்வெல்லைத்தான் ஆதரிக்கிறார், ஆனால் க்ராம்வெல்லும் எதிர்த்தரப்புக்கும் வித்தியாசங்கள் இல்லை என்று உணர்ந்திருக்கிறார். அதனால் தானுண்டு தன் வக்கீல் தொழிலுண்டு என்று இருக்கிறார். க்ராம்வெல்லுக்கு ஓர் அதிபயங்கர ஆயுதம் – ஏறக்குறைய flamethrower – பற்றி தெரிய வருகிறது. அதை வைத்து எதிரிக் கப்பல்களை நிமிஷத்தில் அழித்துவிடலாம். ஹென்றியிடம் அதைப் பற்றி சொல்லி தன் நிலையை இன்னும் உறுதிப்படுத்திக் கொள்ள நினைக்கிறார். ஹென்றியும் உற்சாகமாக அந்த ஆயுதத்தை நேரில் பார்வையிட நாள் குறிக்கிறார். ஆயுதத்தையும் அதைக் கொண்டு வந்தவர்களையும் காணவில்லை. சொன்ன நாளில் ஆயுதத்தைக் காட்ட முடியவில்லை என்றால் தனக்கு ஆப்புதான் என்று உணர்ந்திருக்கும் க்ராம்வெல் ஷார்ட்லேக்கின் உதவியை நாடுகிறார். ஷார்ட்லேக் மர்மத்தை அவிழ்த்தாலும் க்ராம்வெல்லை காப்பாற்ற முடியவில்லை. ஷார்ட்லேக் இதில் தனது உதவியாளர் பாரக்கை சந்திக்கிறார்.

மூன்றாவது நாவலான Sovereign (2004) கொஞ்சம் இழுவை. வளர்த்திவிட்டார். ட்யூடர் வம்சம் இங்கிலாந்தின் ஆட்சியை கைப்பற்றியதில் பல சிக்கல்கள் உண்டு. அவர்கள்தான் உண்மையான வாரிசுகளா என்பது கொஞ்சம் சந்தேகமான விஷயம். எட்டாம் ஹென்றி யார்க்‌ஷைரில் நடந்த ஒரு கலகத்துக்குப் பிறகு பெரும் ஊர்வலமாக அங்கே சென்றார். அந்தப் பின்புலத்தில் ஹென்றியின் வாரிசுரிமையைப் பற்றிய சதி ஒன்றில் ஷார்ட்லேக் மாட்டிக் கொள்கிறார்.

நான்காவது நாவலான Revelation (2008) கொஞ்சம் நீளம் அதிகம். எடிட் செய்யப்பட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இந்த முறை ஒரு மதத் தீவிரவாதி பைபிளின் Revelation பகுதியில் விவரிக்கப்படுவதைப் போலவே ஏழு கொலைகளை செய்கிறான். எதிர்கால ராணியாக வரப் போகும் காதரின் பாரை ஷார்ட்லேக் காப்பாற்றுகிறார். பின்புலமாக இருப்பது அன்றைய பைத்தியக்கார ஆஸ்பத்திரிகள்.

Heartstone (2010) இவற்றுள் மிகச் சிறப்பானது. தாய் தந்தையர் இறந்த பிறகு பத்து பனிரண்டு வயது அக்காவும் தம்பியும் – ஹ்யூ மற்றும் எம்மா – ஒரு கார்டியனால் வளர்க்கபப்டுகிறார்கள். இங்கிலாந்தின் சட்டப்படி யார் வேண்டுமானாலும் கார்டியன் ஆகலாம். அதற்காக எவ்வளவு ஃபீஸ் கட்டுகிறீர்கள் என்பதுதான் முக்கியம். ஏறக்குறைய ஏலம் எடுப்பது போல பணக்கார வீட்டுப் பிள்ளைகளுக்கு – அதுவும் நெருங்கிய உறவினர் இல்லாதவர்களுக்கு – போட்டி இருக்கிறது. பிள்ளைகளை வயதுக்கு வரும்வரை சொத்துக்களை இந்த கார்டியன்கள் அனுபவிக்கலாம். அவர்களின் திருமணம் யாரோடு என்பதையும் நிர்ணயிக்கும் உரிமை இந்த கார்டியன்களுக்க்த்தான். அதனால் தன் பிள்ளைகளுக்கு மணம் செய்து வைத்து சொத்துக்களை தன் குடும்பத்தின் கீழ் கொண்டு வந்துவிடும் வாய்ப்பு உண்டு. ஏழெட்டு வருஷம் கழித்து ஹ்யூ-எம்மா வளர்க்கப்படும் விதம் சரியில்லை என்று அவர்களின் முன்னாள் ஆசிரியன் வழக்கு தொடர்கிறான். வழக்கு கோர்ட்டுக்கு வருவதற்குள் அவன் இறந்துவிடுகிறான். அவன் அன்றைய ராணிக்கு தெரிந்தவன் என்பதால் ராணி ஷார்ட்லேக்கை விசாரிக்கச் சொல்கிறாள். இன்னொரு மர்மமும் இருக்கிறது – ஷார்ட்லேக்குக் தெரிந்த பெண் ஒருத்தி பைத்தியக்கார மருத்துவமனையில் இருக்கிறாள், ஏன் என்ன என்று துப்பறிகிறார். பின்புலமாக இருப்பது ஃப்ரான்ஸ் அன்று இங்கிலாந்தை போர்ட்ஸ்மவுத் பகுதியில் தாக்க எடுத்த முயற்சியில் மேரி ரோஸ் கப்பல் போர்ட்ஸ்மவுத்தில் முழுகியது.

Lamentation (2014) ஆறாவது நாவல். இதுவும் நல்ல நாவல். ராணி காதரின் பார் தனது மத நம்பிக்கைகளை ஒரு புத்தகமாக எழுத நினைக்கிறாள். மன்னர் எட்டாம் ஹென்றியோ எந்த மதக்குழு பக்கம் சாய்வது என்ற ஊசலாட்டத்தில் இருக்கிறான். புத்தகத்தை வெளியிட்டால் மன்னன் எப்படி உணர்வான் என்று சொல்ல முடியாது, தனது ஆணைகளுக்கு எதிராக ராணியின் நம்பிக்கைகள் இருக்கின்றன, இது ராஜத்துரோகம் என்று மரண தண்டனை விதித்தாலும் விதிக்கலாம் என்ற அச்சத்தில் கையெழுத்துப் பிரதியை அழித்துவிட நினைக்கிறாள். அதற்குள் புத்தகம் திருட்டுப் போய்விடுகிறது. ஷார்ட்லேக் அழைக்கப்படுகிறான். நல்ல denouement.

இந்த சீரிஸில் கடைசி நாவல் (இப்போதைக்கு) Tombland (2018). ஒரு கொலையைப் பற்றி விசாரிக்கச் செல்லும் ஷார்ட்லேக் புரட்சியில் மாட்டிக் கொள்கிறார். அவரது உதவியாளனாக வரும் நிக்கோலசின் மனமாற்றம், ஷார்ட்லேக்கால் புரட்சியாளர்களின் பக்கம் இருக்கும் நியாயங்களை பார்க்க முடிவது, சட்டம் பேரளவிலாவது பின்பற்றப்பட வேண்டும் என்பதில் இங்கிலாந்துக்காரர்களுக்கு இருக்கும் முனைப்பு எல்லாம் பிரமாதமாக வந்திருக்கின்றன. இதற்கு முன் வந்தவை பொழுதுபோக்குக் கதைகள்தான். ஆனால் இந்த நாவல் என் கண்ணில் இலக்கியமே.

எட்டாம் ஹென்றியைப் பற்றி ஆங்கிலேயர்களுக்கே பெரிதாக ஆர்வம் இருக்குமா என்று தெரியவில்லை. மேலும் இவை அனேகமாக பொழுதுபோக்குக் கதைகள் மட்டும்தான். அதனால் என்ன? படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: துப்பறியும் நாவல்கள்

தொடர்புடைய சுட்டி: சான்சமின் தளம்

தமிழறிஞர் வரிசை 24: பெரியசாமி தூரன்

தூரனைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. சிறு வயதில் அவர் தொகுத்த கலைக்களஞ்சியத்தை புரட்டிப் பார்த்திருக்கிறேன். அது ஒரு சாதனை. ஆனால் இணைய யுகத்தில் என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா கூட அவ்வளவு முக்கியமான புத்தகம் இல்லை. அவர் எழுதிய சிறுவர் பாடல்கள் சில படித்து, பாடி, கேட்டிருக்கிறேன். அவ்வளவுதான் தெரியும்.

விக்கியிலிருந்து அவருக்கு பத்மபூஷன் விருது தரப்பட்டது என்று தெரிகிறது. தகுதியானவருக்கு தரப்பட்ட விருது. எப்படி இவர் பேர் சிபாரிசு செய்யப்பட்டது என்றுதான் புரியவில்லை. 🙂

சிறுகதைகள், நாடகங்கள், கவிதைகள் எல்லாம் எழுதி இருக்கிறார். மாயக்கள்ளன் போன்ற நாவல்கள் – (விக்கிரமாதித்தன்-வேதாளம் ஃபார்முலா) நினைவிருக்கின்றன. அவற்றின் தரம் சொல்லும்படி இருந்ததாக நினைவில்லை.

இன்று யோசித்துப் பார்த்தால் கலைக்களஞ்சியத்துக்குப் பின்னால் இருந்த உழைப்பு அசர வைக்கிறது. இவரைப் போன்றவர்களை நாம் ஏன் கொண்டாடுவதில்லை? சரி இவர் பேராவது இன்னும் சில பேர் நினைவில் இருக்கிறது. இவருடைய டீமில் யார் யார் இருந்தார்கள், அவர்களும் எவ்வளவு உழைத்திருப்பார்கள்? அவர்கள் பேர் கூடத் தெரியவில்லையே!

பாரதியாரை பல வகையாக பிரித்து தொகுத்திருக்கிறார். எடுத்துக்காட்டாக ‘பாரதியும் உலகமும்‘ பாரதி உலக நாடுகளைப் பற்றி எழுதிய கவிதைகள், கட்டுரைகளின் தொகுப்பு. பாரதியின் வீச்சு அந்தக் காலத்துக்கு மிகப் பெரியது. துருக்கி, சீனா, பாரசீகம், ரூஸ்வெல்ட் என்று பல நாடுகள், அரசியலைப் பற்றி நிறைய எழுதி இருக்கிறார்.

சரி இந்தத் தளத்தைப் படிப்பவர்களில் சிலராவது தூரனைப் பற்றி தெரிந்தவர்களாக இருக்க மாட்டார்களா, ஏதாவது சொல்ல மாட்டார்களா என்ற ஆசையில்தான் இந்தப் பதிவை எழுதுகிறேன்.

பிற்சேர்க்கை:
விஜயன் “பிரிக்கப்படாத சென்னை ராஜதானியின் கல்வி மந்திரியாயிருந்த T.S. அவினாசிலிங்கம் செட்டியார் அவர்களின் பெருமுயற்சியினால் தமிழில் கலைக்களஞ்சியம், குழந்தைகளுக்கான கலைக்களஞ்சியம், காந்தியின் அனைத்து படைப்புகளும் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு 19 volumeகளாக வந்தன. குழந்தைகள் கலைக்களஞ்சிய பணி பெரியசாமி தூரனிடம் ஒப்படைக்கப்பட்டது” என்று தகவல் தருகிறார்.

தூரனின் சாகித்யங்கள் எதையும் நான் கேட்டதில்லை. ஜீவா, பி.ஆர். ஹரன், ஜெயமோகன் பதிவுகளில் அவர் சாகித்யங்களைப் பற்றி எழுதி இருக்கிறார்கள்.

ரா.கி. ரங்கராஜன் ”பெ.தூரன் ஒரு கலைக்களஞ்சியம்” என்று ஒரு அற்புதமான நூலை எழுதியிருக்கிறார் என்று ரமணன் தகவல் தருகிறார்.

தூரனின் கலைக்களஞ்சியம் இங்கே கிடைக்கிறது. கிண்டிலில் சில நூல்கள் கிடைக்கின்றன. தகவல் தந்த ஸ்ரீனிவாச கோபாலனுக்கு நன்றி!

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழறிஞர்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
தமிழ் விக்கி, ஆங்கில விக்கி
ஜெயமோகன் பதிவு
தென்றல் மாத இதழில் தூரன் பற்றி (அவரது புனைவுகளின் லிஸ்ட் கிடைக்கிறது) – Registration Required
தூரன் பற்றி பசுபதி தளத்தில் பகுதி 1, பகுதி 2
தமிழ் ஹிந்து தளத்தில் பி.ஆர். ஹரன்
ஜீவா எழுதிய பதிவு (தூரன் எழுதிய சாகித்யங்களைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ளலாம்)
தூரனைப் பற்றி ஒரு புத்தகம் (சனிமூலை தளம்)

நாட்டுடமை ஆக்கப்பட்ட எழுத்து 2: என்.வி. கலைமணி

ஏ.கே. வேலன் பற்றிய பதிவில்

சில முறை தரமற்ற எழுத்தாளர்களின் படைப்புகளையும் நாட்டுடமை ஆக்கிவிடுகிறார்கள். அதுவும் கட்சி சார்ந்தவர், தெரிந்தவர், எழுத்து எத்தனை குப்பையாக இருந்தாலும் சரி, செய்துவிடுவோம் என்று தோன்றிவிடுகிறது என்று நினைக்கிறேன். ஏ.கே. வேலன் அந்த ரகம்.

என்.வி. கலைமணியும் அதே ரகம்தான். அவர் எழுதி இருக்கும் புத்தகங்கள் பல இங்கே கிடைக்கின்றன. எல்லாம் நாலாவது ஐந்தாவது படிக்கும் மாணவன் படிக்கும் தரத்தில் எழுதப்பட்ட அறிமுகப் புத்தகங்கள் மட்டுமே. கலைமணி திராவிடநாடு, முரசொலி பத்திரிகைகளில் பணியாற்றியவர். கலைஞருக்கு தெரிந்தவர் என்று நினைக்கிறேன். மறைந்த சேதுராமன் திமுகவின் அன்றைய முக்கிய பிரமுகர் என்.வி. நடராஜனுக்கு உறவினரோ என்று சந்தேகிக்கிறார். அதனால்தானோ என்னவோ 2009-இல் அவரது எழுத்துக்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டன.

நான் இவற்றுள் சிலவற்றை படித்துப் பார்த்தேன். அனேகமாக தெரிந்த விஷயங்களை rehash செய்திருக்கிறார். தலைவர்களைப் பற்றி எழுதினால் அது hagiography ஆகத்தான் இருக்கும். சேரன்மாதேவி குருகுலத்தை எதிர்த்த ஈ.வே.ரா. பாரம்பரியத்தை சேர்ந்தவர்தான்; ஆனால் வ.வே.சு. ஐயர் பற்றிய புத்தகத்தில் அதைக் கண்டித்து எழுதுவதைக் கூட முடிந்த வரை தவிர்க்கத்தான் பார்த்திருக்கிறார். அவரையும் மீறி ஒரே ஒரு வரி இது சரியில்லை என்று எழுதி இருக்கிறார். 🙂 கப்பலோட்டிய தமிழன் புத்தகம் ஏறக்குறைய ம.பொ.சி. எழுதியதைப் போலவேதான் இருக்கிறது. வ.உ.சி. கல்கத்தாவில் காந்தியின் ஒத்துழையாமை இயக்க தீர்மானத்தை தீவிரமாக எதிர்த்ததைப் பற்றி கொஞ்சம் விவரித்திருக்கிறார்.

மறைந்த சேதுராமன் கஷ்டப்பட்டு 2009-இல் யார் யார் எழுத்து நாட்டுடமை ஆக்கப்பட்டிருந்தாலும் அவரைப் பற்றி விவரங்கள் சேகரித்திருந்தார். அவரால் கூட அப்போது கலைமணியைப் பற்றி பெரிதாக விவரங்கள் சேகரிக்க முடியவில்லை.

சேதுராமனின் குறிப்புகள்: (கூட்டாஞ்சோறு தளத்திலிருந்து)

எழுத்தாளர், பத்திரிகையாளர் என்று கார்த்திக் சந்திர தத் பதிப்பித்துள்ள WHO IS WHO OF WRITERS (1999) சொல்கிறது. தமிழரசி என்ற வாரப்பத்திரிகையை வெளியிட்டு வந்தவர். நூற்றைம்பதுக்கும் மேலான புத்தகங்கள் எழுதியுள்ளார் என்றும் தெரிகிறது. இலக்கியம், நுண்கலைகள், அரசியல், இதழியல் முதலியவற்றைப் பற்றியுமல்லாது நாவல்களும் எழுதியுள்ளார்.

ஐம்பதுகளில் பல்வேறு தினசரி பத்திரிகைகளில் பணி புரிந்துள்ளார். இவற்றுள் முக்கியமானவை அண்ணா தொடங்கிய திராவிட நாடு, முரசொலி, தனி அரசு, தென்னகம், எரியீட்டி, நமது எம்ஜிஆர் நாளிதழ்களாகும்.

புத்தகங்களின் சில தலைப்புகள் — “தேசத் தலைவர் காமராஜ்”, “ஏழைகள் நெஞ்சில் எம்.ஜி.ஆர்”, “நேருவும் கென்னடியும்”, “நீதி மன்றத்தில் எம்.ஜி.ஆர்” முதலான வாழ்க்கைக் குறிப்புகள், “வஞ்சக வலை”, “மரண மாளிகை” போன்ற சரித்திர நாவல்கள், “இலட்சிய ராணி”, “சாம்ராட் அசோகன்” முதலிய நாடகங்கள், “சிந்தனை சிக்கல்கள்” என்ற அறிவியல் புத்தகம் — இவருடைய படைப்புகளாகும்.

டிசம்பர் 30, 1932ல் பிறந்த இவர் அண்ணமலை பல்ககலைக்கழகத்தின் மாணவர் – சரித்திரத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றவர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் ‘புலவர்’ பட்டமும் பெற்றவர்.

U.N.I. செய்திக் குறிப்புப்படி புலவர் கலைமணி 2007 மார்ச் 6-ஆம் தேதி காலமானார் என்று தெரிகிறது. மனைவி, இரண்டு பெண்கள், இரண்டு பிள்ளைகள் கொண்டது இக்குடும்பம்.

என்.வி. என்ற இனிஷியல்களும், அண்ணா மற்றும் கழக நாளிதழ்களின் தொடர்பும், இவர் தி.மு.க.வை நிறுவிய ஐவர்களுள் ஒருவரான என்.வி.நடராஜன் குடும்பத்தைச் சேர்ந்தவரோ என்ற எண்ணத்தை உண்டாக்குகிறது.

(தகவல் உபயம் – Who is Who of Indian Writers K. C. Dutt (1999) – UNI Press Release Mar. 7, 2007)

தொகுக்கப்பட்ட பக்கம்: நாட்டுடமை ஆன எழுத்துக்கள்

தொடர்புடைய சுட்டி: என்.வி. கலைமணி பற்றிய விக்கி குறிப்பு

ஆஸ்கார் விருது பெற்ற Green Book

இந்த வருஷம் சிறந்த திரைப்படத்துக்கான ஆஸ்கார் விருதை Green Book வென்றிருக்கிறது. சிறந்த குணசித்திர நடிகருக்கான விருதை திரைப்படத்தின் இணை நாயகனான மெஹர்ஷலா அலி வென்றிருக்கிறார். சிறந்த திரைக்கதைக்கான விருதை நிக் வாலேலொங்கா, ப்ரையன் கரி, படத்தின் இயக்குனரான பீட்டர் ஃபாரெலி ஆகிய மூவரும் வென்றிருக்கிறார்கள்.

திரைப்படம் உண்மை நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டது. பியானோ மேதையும் கறுப்பருமான டான் ஷிர்லி அன்று நிறவெறி அதிகமாக இருந்த, கறுப்பர்கள் ஒடுக்கப்பட்ட தென் மாநிலங்களில் இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்த சென்றபோது அவருக்கும் அவரது கார் ட்ரைவராக பணி புரிந்த டோனி வாலேலொங்காவுக்கும் ஏற்படும் நட்பு, அன்றைய கறுப்பர்கள் சந்தித்த பிரச்சினைகள் இவற்றை அடிப்படையாக வைத்து திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது. திரைக்கதைக்கான விருதை வென்ற நிக் வாலேலொங்கா அந்த ஓட்டுனர் டோனி வாலேலொங்காவின் மகன் என்பது கூடுதல் சுவாரசியம்.

கறுப்பர்கள் இன்றும் பிரச்சினைகளை சந்திக்கத்தான் செய்கிறார்கள். அறுபதுகளில், அதுவும் அமெரிக்காவின் தென் மாநிலங்களில் (ஜியார்ஜியா, அலபாமா, மிஸ்ஸிஸிபி, லூசியானா, டெக்ஸஸ், ஆர்கன்சா போன்றவை) இன்றைப் போல பல மடங்கு பிரச்சினைகள். இசை வல்லுனரான டான் ஷிர்லி இந்த மாநிலங்களில் பல இடங்களில் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். ஆனால் அவர் கறுப்பர். அன்று இந்த மாநிலங்களில் அவர் இரண்டாம் நிலை குடிமகனே. Segregation அமலில் இருந்த காலகட்டம் அவர் நல்ல ஹோட்டல்களில் தங்க முடியாது. எல்லா உணவு விடுதிகளிலும் சாப்பிடமுடியாது. ஒரு காட்சியில் அவர் ஒரு பெரிய பணக்காரர் வீட்டில் நிகழ்ச்சியை நடத்துகிறார், ஆனால் அவருக்கு அந்த வீட்டின் கழிவறையை பயன்படுத்த அனுமதி மறுக்கப்படுகிறது. அவருக்கு பாதுகாப்பு அளிக்கவும், அவரது காரை ஓட்டவும் டோனி – கொஞ்சம் அடாவடியான, கறுப்பர்கள் மீது கொஞ்சம் aversion உள்ள – வேலைக்கு அமர்த்தப்படுகிறார். டோனி, ஏழை தொழிலாளி வர்க்கம். ஷிர்லி சராசரி கறுப்பரை விட பல மடங்கு பணமும் புகழும் உள்ள மேல்தட்டு மனிதர். (ஒரு காட்சியில் அவரை போலீஸ் கைது செய்ய, அவரால் நாட்டின் அட்டர்னி ஜெனரலான ராபர்ட் கென்னடியை – அன்றைக்கு ஜனாதிபதி கென்னடிக்கு அடுத்த நிலையில் இருந்தவர் அவர்தான் – உதவிக்கு அழைக்க முடிகிறது). ஷிர்லிக்கும் டோனிக்கும் ஏற்படும் உரசல்கள், ஷிர்லி சந்திக்கும் அவமானங்கள், டோனியின் மெதுவான மாற்றம் இவையே திரைப்படமாக அமைந்திருக்கின்றன.

பல காட்சிகள் சிறப்பாக வந்திருக்கின்றன. சில நிமிஷங்களில் தான் நிகழ்ச்சி நடத்தப் போகும் உணவு விடுதியில் ஷிர்லிக்கு உணவு அருந்த அனுமதி மறுக்கப்படுவது, மனைவிக்கு கடிதம் எழுத டோனிக்கு ஷிர்லி தரும் பயிற்சி, ஷிர்லிக்கு டோனியின் தாய்மொழியான இத்தாலியன் தெரிந்திருப்பது, களைத்திருக்கும் டோனியை தூங்கவிட்டுவிட்டு ஷிர்லி காரை ஓட்டுவது, ஷிர்லியைப் பற்றி எதுவும் தெரியாத கறுப்பர்களின் மது விடுதியில் ஷிர்லி பியானோ வாசிப்பது என்று பல காட்சிகள்.

டோனியாக நடிக்கும் விக்கோ மார்டென்சன், ஷிர்லியாக நடிக்கும் மஹர்ஷலா அலி, டோனியின் மனைவியாக நடிக்கும் லிண்டா கார்டெல்லினி அருமையாக நடித்திருக்கிறார்கள்.

Feel Good திரைப்படம். ஆனால் திரைப்படத்தில் என்னவோ குறைகிறது. கொஞ்சம் லைட்டாக இருக்கிறது. என்னால் திரைப்படத்தில் முழுதாக ஒன்றி உலகை மறந்துவிட முடியவில்லை. இதை விட நல்ல படங்கள் எதுவும் இந்த வருஷம் வரவில்லையோ என்னவோ, இதற்கு ஆஸ்கர் கிடைத்துவிட்டது.

பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள்

சூப்பர் டீலக்ஸ் – திரைப்பட விமர்சனம்

எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று Pulp Fiction. அது வெளியானபோது நான் அமெரிக்காவில்தான் வசித்துக் கொண்டிருந்தேன். திரைப்படத்தைப் பார்த்த நெருங்கிய நண்பன் மனீஷ் அடுத்த நாளே என்னை இழுத்துக் கொண்டு போனான். அடுத்த நாளே நெருங்கிய நண்பர்களான பத்மாகரையும் ஷெண்பாவையும் நான் இழுத்துக் கொண்டு போனேன். அடுத்த ஓரிரு வருஷங்களில் ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் எதையாவது கண்டுகொண்டு சிரித்துக் கொண்டிருந்தேன்.

சூப்பர் டீலக்ஸ் Pulp Fiction அல்ல. ஆனால் அதில் பத்து சதவிகிதமாவது இருக்கிறது. தமிழ்ப் படத்தில் அப்படி வருவது பெரிய சந்தோஷம். Black Humor என்றால் என்ன என்று இயக்குனருக்கு நன்றாகப் புரிந்திருக்கிறது.

நான் கதைச்சுருக்கம் எல்லாம் எழுதப் போவதில்லை. குறைகள் கண்ணுக்குத் தெரிகின்றனதான், ஆனால் அவற்றையும் பற்றி எழுதப் போவதில்லை. அப்பாவைத் தேடும் சிறுவனாக வருபவன் கலக்கிவிட்டான், அவனைப் பற்றியும் அதிகமாக எழுதப் போவதில்லை.

திரைப்படமாக சின்னச் சின்ன நகாசு வேலைக் காட்சிகள் நன்றாக அமைந்திருந்தன. ‘Fuck! Fuck! Fuck!’ என்று கத்தும் சிறுவன், ‘ஃப்ரிஜ்ஜில நான்-வெஜ் எதுவும் இல்லியே’ என்று கேட்கும் மாமி, பிட்டு பட டிவிடியை வாடகைக்கு எடுக்கும் காட்சி, அடிக்க வரும் ஆட்டோ டிரைவர் ஸ்க்ரூட்ரைவருடன் ஓடி வரும் இளைஞனைக் கண்டதும் பம்முவது, தண்ணீர் பாட்டிலைப் பார்த்து ‘சரக்கை எடு’ என்று சொல்லும் கணவன், லோக்கல் தாதா வீட்டில் ஓடிக் கொண்டிருக்கும் எம்ஜிஆர் படம், ‘என்னால செய்யக் கூடியதா இருந்தா செஞ்சிருப்பேன்’ என்று சொல்லும் கணவனிடம், ‘தம்பி, என்னைப் பத்தி உனக்குத் தெரியாது’ என்று சொல்லும் இன்ஸ்பெக்டர், ‘நாளைக்கு 55 இஞ்ச் டிவி’ என்று சொல்லும் அந்த குண்டுப்பையன், ‘தேவடியாப் பையா’ என்று திட்டும் நண்பனைப் பார்த்து ‘தம்பி, நல்லா யோசிச்சுப் பேசு’ என்று ஜோக்கடிக்கும் நண்பன் இன்று பல காட்சிகள் சிறப்பாக செதுக்கப்பட்டிருந்தன.

இந்த சின்ன சின்னக் காட்சிகளும், அப்பாவை எந்தக் கேள்வியும் இல்லாமல் ஏற்றுக் கொள்ளும் சிறுவன் பகுதியின் ‘feel-good denoument’-உம், ஃப்ஹத் ஃபாசிலின் புலம்பல்களும்தான் இந்தப் படத்தை நினைவில் வைத்திருக்கப் போகின்றன.

என் தலைமுறையினருக்கு ஜானே பி தோ யாரோ திரைப்படம் மாதிரி இன்றைய பதின்ம வயதினருக்கு இது ஒரு cult classic ஆக வாய்ப்பிருக்கிறது. நான் என் நண்பர்களை இழுத்துக் கொண்டு போன மாதிரி படத்தைப் பார்க்கும் இளைஞர்கள் தங்கள் நண்பர்களை இழுத்துக் கொண்டு போவார்கள் என்று நினைக்கிறேன்.

திரைப்படம் என்பதைத் தாண்டியும் ஒரு விஷயம். கிறிஸ்துவ மதத்தை, இந்தியாவில் அதன் பிரச்சார முறைகளை, பரிசுத்த ஆவி வந்து உன்னை குணப்படுத்தும் பிரார்த்தனைக் கூட்டங்களை, மருத்துவமனையில் மனம் தளர்ந்திருக்கும் வேளையில் செய்யப்படும் மதமாற்ற முயற்சிகளை விமர்சிக்கும் தமிழ்த் திரைப்படம் எனக்குத் தெரிந்து இது ஒன்றுதான். இத்தனைக்கும் அவ்வப்போது safe-ஆக நான் கிறிஸ்துவன் அல்ல என்று disclaimer போட்டுக் கொள்கிறார்கள். இருந்தாலும் தெள்ளத்தெளிவாக இருக்கிறது. அந்த தைரியத்துக்கு பெரிய பாராட்டுக்கள்! இப்படி நாலு படம் வந்தால்தான் கருத்து சுதந்திரம் என்பதற்கு கொஞ்சமாவது பொருளிருக்கும். (1930களில் வந்த சவுக்கடி சந்திரகாந்தாவிலேயே சாமியார் நிஷ்டைக்கு போக ஆரம்பித்துவிட்டார் என்பதை நினைவூட்டுகிறேன்.)

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள்