C.J. Sansom எழுதிய வரலாற்று+துப்பறியும் நாவல்கள்

வரவர எனக்கு வரலாற்றுப் பின்னணியில் எழுதப்படும் துப்பறியும் நாவல்கள் பிடித்திருக்கின்றன. நானே எழுதலாமா என்று யோசிக்கிறேன் இன்னும் கதை சரியாக அகப்படவில்லை. ஆனால் துப்பறியும் வந்தியத்தேவன், பீர்பல், தெனாலிராமன், அட கபீர்தாஸ் என்று நினைத்தால் நன்றாகத்தான் இருக்கிறது.

உண்மையை ஒத்துக் கொள்கிறேன், இங்கிலாந்தின் வரலாற்றில் எனக்கு பெரிய ஈடுபாடு எதுவும் கிடையாது. எவன் பிள்ளை ஆட்சிக்கு வந்தால் எனக்கென்ன? அதுவும் இங்கிலாந்தில்? ராஜராஜ சோழன் என்றாலாவது கொஞ்சம் ஆர்வம் இருக்கும். எனக்குத் தெரிந்திருக்கும் இங்கிலாந்து வரலாறு அனேகமாக நாவல்களின் மூலம் அறிந்தவையே. பெர்னார்ட் கார்ன்வெல்லின் நாவல்கள், ஷேக்ஸ்பியரின் சில நாடகங்கள், ஹார்ன்ப்ளோயர் கதைகள், ஜான் ஃபீல்டிங் கதைகள், ஜோசஃபின் டே எழுதிய Daughter of Time, ஹில்லரி மாண்டல் எழுதிய Wolf Hall, இப்போது சான்சம்.

ஆனால் ஒன்று தெளிவாகத் தெரிகிறது. இங்கிலாந்தின் மன்னர்களில் எட்டாம் ஹென்றி ஒரு intriguing மன்னன். கல்யாணம் செய்து கொள்ள வேண்டியது, பிறகு மணவிலக்கு இல்லாவிட்டால் கள்ளத் தொடர்பு இருக்கிறது என்று பொய்யோ மெய்யோ குற்றம் சாட்டி மரண தண்டனை விதிப்பது, பிறகு அடுத்த பெண். இப்படியே ஒன்றன் பின் ஒன்றாக ஆறு மனைவிகள். பிரதமராக இருப்பவர் முட்டுக்கட்டை போட்டாலோ, அட முட்டுக்கட்டையை விடுங்கள், சரியாக ஒத்துழைக்கவிட்டாலோ, அவர் மீது தேசத்துரோகக் குற்றம் சாட்டி அவர்களுக்கும் மரண தண்டனை. போப் முட்டுக்கட்டை போட்டதால் இங்கிலாந்து கத்தோலிக்கர்களிடம் இருந்து பிரிந்து இன்றைய ஆங்கிலிகன் உபமதம் உருவாகி இருக்கிறது. எட்டாம் ஹென்றி காலத்திலிருந்து யார் மன்னனோ (அல்லது ராணியோ) அவரே ஆங்கிலிகம் உபமதத்தின் தலைவரும் கூட. எட்டாம் ஹென்றி பற்றித்தான் நிறைய எழுதுகிறார்கள். C.J. Sansom-உம் இந்த ஹென்றியின் காலத்தில் இந்தக் கதைகளை எழுதி இருக்கிறார்.

ஒரே ஒரு புத்தகம் படிக்க வேண்டுமென்றால் நான் பரிந்துரைப்பது Tombland (2018). சிறப்பாக எழுதப்பட்ட நாவல். அன்றைய இங்கிலாந்தில் பிரபுக்கள் பொது ஜனங்களின் உரிமைகளை கொஞ்சம் கொஞ்சமாக பறித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களால் சட்டத்தை இஷ்டத்துக்கு வளைக்க முடிந்தது. ஒரு கட்டத்தில் நார்விச் நகரம் அருகே பெரிய புரட்சி வெடித்திருக்கிறது. Kett’s Rebellion. அங்கே மாட்டிக் கொள்ளும் வக்கீல் ஷார்ட்லேக். அன்றைய சமூகநிலை மிக அருமையாக விவரிக்கப்படுகிறது. இங்கிலாந்தின் வரலாற்றில் கொஞ்சம் கூட ஆர்வம் இல்லாத என்னால் புத்தகத்தை கீழே வைக்க முடியவில்லை. இத்தனைக்கும் எண்ணூறு பக்க நாவல்!

பரிந்துரைக்கும் இன்னொரு நாவல் Heartstone (2010). இத்தனைக்கும் இது மெதுவாகச் செல்லும் நாவல்; நிறைய பில்டப்; முடிச்சு மிகவும் சிம்பிளானதுதான். ஆனால் கதை விரியும் விதம், கதைப் பின்னல், சரித்திரப் பின்னணி, இங்கிலாந்தில் அன்று சட்டத்துக்கு பெயரளவில் இருந்த மதிப்பு, சட்டத்தை நடைமுறையில் மன்னனிலிருந்து தொடங்கி கொஞ்சம் அதிகாரம் இருப்பவன் வரை எப்படி எல்லாம் வளைக்கிறார்கள் என்ற உண்மை, எல்லாம் மிகச் சிறப்பாக இருக்கின்றன.

இவற்றைத் தவிர Dissolution (2003), Lamentation (2014) இரண்டையும் பரிந்துரைக்கிறேன்.

முதல் நாவலான Dissolution (2003)-இல் மாத்யூ ஷார்ட்லேக் அறிமுகம் ஆகிறார். அவர் ஒரு கூனர். வக்கீல். நாவல் ஆரம்பிக்கும்போது தாமஸ் க்ராம்வெல் ஏறக்குறைய பிரதம மந்திரி. இந்தக் காலகட்டத்தில் இங்கிலாந்து போப்பின் பிடியிலிருந்து விலகிவிட்டது. அப்புறம் அன்றைய சர்ச்சுகள், அவற்றின் சொத்துக்களின் கதி? இங்கிலாந்தின் பல சர்ச்சுகள் – நம்மூர் மடங்களுக்கு ஏறக்குறைய சமமானவை – கலைக்கப்பட்டு அவற்றின் நிலங்கள், சொத்துக்கள் அரசுக்கே உரிமைப்படுத்தப்பட்டன. இந்தப் பின்னணியில்தான் இந்த நாவல் எழுதப்பட்டிருக்கிறது. ஷார்ட்லேக் க்ராம்வெல்லின் நம்பிக்கைக்குரியவர். க்ராம்வெல் ஒரு ‘மடத்தை’ கைவசப்படுத்த அனுப்பிய அதிகாரி அங்கே கொல்லப்படுகிறார். கொலையாளியை கண்டுபிடிக்கவும், மடத்தை ‘கைப்பற்றவும்’ ஷார்ட்லேக் அனுப்பப்படுகிறார்.

இந்த நாவலின் கவர்ச்சி என் கண்ணில் அதன் சரித்திரப் பின்னணிதான். என்ன வேண்டுமானாலும் தகிடுதத்தம் செய்து மடத்தை கைவசப்படுத்தலாம், ஆனால் சட்டரீதியாக செல்லுபடி ஆகவேண்டும். அதனால் சர்ச்சின் தலைமைப் பாதிரியாரையே நாங்கள் இந்த மடத்தை கலைத்து விடுகிறோம் என்று சொல்ல வைக்க வேண்டும். பாதிரியாருக்கு என்ன கிறுக்கா பிடித்திருக்கிறது? அதனால் மடத்தில் பல ‘குற்றங்கள்’ நடக்கின்றன என்று ஒரு ஷோ காட்ட வேண்டும். வசதியாக பலருக்கும் ஓரினச் சேர்க்கை ஆசை இருக்கிறது. அன்று ஓரினச் சேர்க்கை சட்டப்படி குற்றம். ஆனால் இரண்டு வருஷத்துக்கு முன்னால் இது வரை நடந்த எல்லாவற்றுக்கும் மாப்பு கொடுக்கப்பட்டுவிட்டது. மாப்புக்குப் பிறகும் குற்றங்கள் குறையவில்லை, அதனால் கலைக்கிறோம், நாங்களாக கலைப்பதற்கு பதில் நீயாக விலகிக் கொள் என்று அழுத்தம் தர வேண்டும். ஷார்ட்லேக் அந்த சர்ச்சில் சந்திக்கும் மருத்துவர் – கறுப்பு இனத்தவர் – சுவாரசியமான பாத்திரம்.

மர்மம் சுமார்தான். ஆனால் சுவாரசியம் குன்றாமல் போகிறது.

இரண்டாவது நாவலான Dark Fire (2004) சுவாரசியமான பின்புலம் கொண்டது. மன்னர் ஹென்றி தனது மண வாழ்வு பிரச்சினைகளில் க்ராம்வெல் மீது கடுப்பானார், ஒரு கட்டத்தில் க்ராம்வெல் மீது துரோகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அவர் தலை துண்டிக்கப்படது என்பது வரலாறு. நாவல் ஆரம்பிக்கும்போது க்ராம்வெல்தான் ‘பிரதமர்’, ஆனால் அவர் நிலை ஆபத்தில் இருக்கிறது. ஹென்றிக்கு க்ராம்வெல் தேடிப் பிடித்து வந்த மணமகளைப் பிடிக்கவில்லை, அடுத்த பெண்ணைத் தேடுகிறார். ஷார்ட்லேக் இன்னும் க்ராம்வெல்லைத்தான் ஆதரிக்கிறார், ஆனால் க்ராம்வெல்லும் எதிர்த்தரப்புக்கும் வித்தியாசங்கள் இல்லை என்று உணர்ந்திருக்கிறார். அதனால் தானுண்டு தன் வக்கீல் தொழிலுண்டு என்று இருக்கிறார். க்ராம்வெல்லுக்கு ஓர் அதிபயங்கர ஆயுதம் – ஏறக்குறைய flamethrower – பற்றி தெரிய வருகிறது. அதை வைத்து எதிரிக் கப்பல்களை நிமிஷத்தில் அழித்துவிடலாம். ஹென்றியிடம் அதைப் பற்றி சொல்லி தன் நிலையை இன்னும் உறுதிப்படுத்திக் கொள்ள நினைக்கிறார். ஹென்றியும் உற்சாகமாக அந்த ஆயுதத்தை நேரில் பார்வையிட நாள் குறிக்கிறார். ஆயுதத்தையும் அதைக் கொண்டு வந்தவர்களையும் காணவில்லை. சொன்ன நாளில் ஆயுதத்தைக் காட்ட முடியவில்லை என்றால் தனக்கு ஆப்புதான் என்று உணர்ந்திருக்கும் க்ராம்வெல் ஷார்ட்லேக்கின் உதவியை நாடுகிறார். ஷார்ட்லேக் மர்மத்தை அவிழ்த்தாலும் க்ராம்வெல்லை காப்பாற்ற முடியவில்லை. ஷார்ட்லேக் இதில் தனது உதவியாளர் பாரக்கை சந்திக்கிறார்.

மூன்றாவது நாவலான Sovereign (2004) கொஞ்சம் இழுவை. வளர்த்திவிட்டார். ட்யூடர் வம்சம் இங்கிலாந்தின் ஆட்சியை கைப்பற்றியதில் பல சிக்கல்கள் உண்டு. அவர்கள்தான் உண்மையான வாரிசுகளா என்பது கொஞ்சம் சந்தேகமான விஷயம். எட்டாம் ஹென்றி யார்க்‌ஷைரில் நடந்த ஒரு கலகத்துக்குப் பிறகு பெரும் ஊர்வலமாக அங்கே சென்றார். அந்தப் பின்புலத்தில் ஹென்றியின் வாரிசுரிமையைப் பற்றிய சதி ஒன்றில் ஷார்ட்லேக் மாட்டிக் கொள்கிறார்.

நான்காவது நாவலான Revelation (2008) கொஞ்சம் நீளம் அதிகம். எடிட் செய்யப்பட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இந்த முறை ஒரு மதத் தீவிரவாதி பைபிளின் Revelation பகுதியில் விவரிக்கப்படுவதைப் போலவே ஏழு கொலைகளை செய்கிறான். எதிர்கால ராணியாக வரப் போகும் காதரின் பாரை ஷார்ட்லேக் காப்பாற்றுகிறார். பின்புலமாக இருப்பது அன்றைய பைத்தியக்கார ஆஸ்பத்திரிகள்.

Heartstone (2010) இவற்றுள் மிகச் சிறப்பானது. தாய் தந்தையர் இறந்த பிறகு பத்து பனிரண்டு வயது அக்காவும் தம்பியும் – ஹ்யூ மற்றும் எம்மா – ஒரு கார்டியனால் வளர்க்கபப்டுகிறார்கள். இங்கிலாந்தின் சட்டப்படி யார் வேண்டுமானாலும் கார்டியன் ஆகலாம். அதற்காக எவ்வளவு ஃபீஸ் கட்டுகிறீர்கள் என்பதுதான் முக்கியம். ஏறக்குறைய ஏலம் எடுப்பது போல பணக்கார வீட்டுப் பிள்ளைகளுக்கு – அதுவும் நெருங்கிய உறவினர் இல்லாதவர்களுக்கு – போட்டி இருக்கிறது. பிள்ளைகளை வயதுக்கு வரும்வரை சொத்துக்களை இந்த கார்டியன்கள் அனுபவிக்கலாம். அவர்களின் திருமணம் யாரோடு என்பதையும் நிர்ணயிக்கும் உரிமை இந்த கார்டியன்களுக்க்த்தான். அதனால் தன் பிள்ளைகளுக்கு மணம் செய்து வைத்து சொத்துக்களை தன் குடும்பத்தின் கீழ் கொண்டு வந்துவிடும் வாய்ப்பு உண்டு. ஏழெட்டு வருஷம் கழித்து ஹ்யூ-எம்மா வளர்க்கப்படும் விதம் சரியில்லை என்று அவர்களின் முன்னாள் ஆசிரியன் வழக்கு தொடர்கிறான். வழக்கு கோர்ட்டுக்கு வருவதற்குள் அவன் இறந்துவிடுகிறான். அவன் அன்றைய ராணிக்கு தெரிந்தவன் என்பதால் ராணி ஷார்ட்லேக்கை விசாரிக்கச் சொல்கிறாள். இன்னொரு மர்மமும் இருக்கிறது – ஷார்ட்லேக்குக் தெரிந்த பெண் ஒருத்தி பைத்தியக்கார மருத்துவமனையில் இருக்கிறாள், ஏன் என்ன என்று துப்பறிகிறார். பின்புலமாக இருப்பது ஃப்ரான்ஸ் அன்று இங்கிலாந்தை போர்ட்ஸ்மவுத் பகுதியில் தாக்க எடுத்த முயற்சியில் மேரி ரோஸ் கப்பல் போர்ட்ஸ்மவுத்தில் முழுகியது.

Lamentation (2014) ஆறாவது நாவல். இதுவும் நல்ல நாவல். ராணி காதரின் பார் தனது மத நம்பிக்கைகளை ஒரு புத்தகமாக எழுத நினைக்கிறாள். மன்னர் எட்டாம் ஹென்றியோ எந்த மதக்குழு பக்கம் சாய்வது என்ற ஊசலாட்டத்தில் இருக்கிறான். புத்தகத்தை வெளியிட்டால் மன்னன் எப்படி உணர்வான் என்று சொல்ல முடியாது, தனது ஆணைகளுக்கு எதிராக ராணியின் நம்பிக்கைகள் இருக்கின்றன, இது ராஜத்துரோகம் என்று மரண தண்டனை விதித்தாலும் விதிக்கலாம் என்ற அச்சத்தில் கையெழுத்துப் பிரதியை அழித்துவிட நினைக்கிறாள். அதற்குள் புத்தகம் திருட்டுப் போய்விடுகிறது. ஷார்ட்லேக் அழைக்கப்படுகிறான். நல்ல denouement.

இந்த சீரிஸில் கடைசி நாவல் (இப்போதைக்கு) Tombland (2018). ஒரு கொலையைப் பற்றி விசாரிக்கச் செல்லும் ஷார்ட்லேக் புரட்சியில் மாட்டிக் கொள்கிறார். அவரது உதவியாளனாக வரும் நிக்கோலசின் மனமாற்றம், ஷார்ட்லேக்கால் புரட்சியாளர்களின் பக்கம் இருக்கும் நியாயங்களை பார்க்க முடிவது, சட்டம் பேரளவிலாவது பின்பற்றப்பட வேண்டும் என்பதில் இங்கிலாந்துக்காரர்களுக்கு இருக்கும் முனைப்பு எல்லாம் பிரமாதமாக வந்திருக்கின்றன. இதற்கு முன் வந்தவை பொழுதுபோக்குக் கதைகள்தான். ஆனால் இந்த நாவல் என் கண்ணில் இலக்கியமே.

எட்டாம் ஹென்றியைப் பற்றி ஆங்கிலேயர்களுக்கே பெரிதாக ஆர்வம் இருக்குமா என்று தெரியவில்லை. மேலும் இவை அனேகமாக பொழுதுபோக்குக் கதைகள் மட்டும்தான். அதனால் என்ன? படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: துப்பறியும் நாவல்கள்

தொடர்புடைய சுட்டி: சான்சமின் தளம்