என் அப்பா இறந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. ஆயிரம்தான் பிள்ளைகள் இருந்தாலும் அம்மாவின் இழப்பு பெரியது. அகவுலக இழப்பு மட்டுமல்ல, புறவுலக இழப்பும் அம்மாவுக்கு கவலை தருவது. வெளியுலகத் தொடர்புகள் அனைத்தையும் – குறிப்பாக பணவிஷயம் எல்லாவற்றையும், பேப்பர்காரனுக்கு பணம் தருவது முதல் வங்கியில் பணம் எடுப்பது வரை அப்பாதான் பார்த்துக் கொண்டிருந்தார். அம்மாவுக்கு தன்னால் இவற்றை கவனிக்கமுடியுமா என்ற அச்சம். 55 வருஷ வாழ்க்கைமுறையை மாற்றிக் கொள்வது சுலபமான காரியம் அல்ல.
அப்பா இறந்த முதல் வாரம் சுற்றி என்ன நடக்கிறது என்பதே எனக்கு சரியாகத் தெரியவில்லை. துக்கம், அம்மாவின் அச்சங்களைப் பற்றிய மன உளைச்சல், பற்றாக்குறைக்கு அமெரிக்காவில் சில பிரச்சினைகள். திடீரென்று அம்பை எழுதிய ஒரு சிறுகதை நினைவு வந்தது – பிளாஸ்டிக் டப்பியில் பராசக்தி முதலியோர். அந்தச் சிறுகதை அம்மாவுக்கு தைரியம் தரும் என்று தோன்றியது. அம்பையைத் தொடர்பு கொண்டு அதற்கு மின்பிரதி கிடைக்குமா என்று கேட்டேன். சிறுகதையை ஸ்கான் செய்து அனுப்பினார்.
அம்மா படித்துவிட்டு ஒன்றும் சொல்லவில்லை. ஏற்கனவே படித்திருக்கிறேன் என்று மட்டும் சொன்னாள்.
எனக்கு அப்போது அந்த சிறுகதையை மீண்டும் படிக்கும் மனதிடம் இல்லை. நேற்றுதான் மீண்டும் படித்தேன். நான் கேட்டது என்னை தைரியப்படுத்திக் கொள்ளத்தானோ என்று தோன்றியது. அம்மா சமாளித்துக் கொள்வாள், அம்மாவுக்கென்று ஒரு உலகம், பிள்ளைகளை மட்டும் சார்ந்து இருக்காத ஒரு வாழ்வு இருக்கிறது என்று எனக்கு மீண்டும் சொல்லிக் கொள்ளத்தான் அந்தச் சிறுகதையைத் தேடினேனோ என்னவோ தெரியவில்லை.
மீள்வாசிப்பில் என் மாமியாரையும் கண்டுகொண்டேன். என் மாமியாருக்கு பாட்டுக்களால் நிறைந்த ஒரு உலகம் இருக்கிறது. அந்த உலகம் இருக்கும் வரையிலும் எதுவும் அவரை அசைத்துக் கொள்ள முடியாது.
சிறுகதை archive.org தளத்தில் கிடைக்கிறது. கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
அம்பைக்கு என் மனப்பூர்வமான நன்றி!
தொகுக்கப்பட்ட பக்கம்: அம்பை பக்கம்
தொடர்புடைய சுட்டி: பிளாஸ்டிக் டப்பியில் பராசக்தி முதலியோர்
சமீபத்தில் தான் நானும் இந்தக் கதையைப் படித்தேன். கணவன் இல்லாமல் போனதும் உலகமே தலைகீழாகி விட்டது போல் அல்லாமல் அந்த தாய் தனக்கென்று ஒரு உலகத்தை உருவாகிக் கொள்வதும்,அதற்கு மகள்கள் உறுதுணையாக இருப்பதும் ரொம்ப எளிமையாக கையாளப்பட்டிருக்கும். “பிளாஸ்டிக் டப்பாவில் பராசக்தி முதலியோர்” சிறுகதை வாசித்து மனதில் நிறுத்தி வைத்துகொள்ள வேண்டிய கதை.
LikeLike
வரிக்கு வரி அப்படியே என் அம்மாவை நினைவுபடுத்தும் கதை.
LikeLike
கௌரி, இதையும் மொழிபெயர்க்க திட்டம் ஏதாவது உண்டா?
நடராஜன், உங்களுக்கும் கதை பிடித்திருப்பது மகிழ்ச்சி!
LikeLike
சாகித்ய அகாதமி கடந்த செப்டம்பர் மாதம் சேலத்தில் நடத்திய மொழிபெயர்ப்பு பட்டறையில் பங்கு பெரும் வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுது தமிழிலிருந்து தெலுங்கிற்கு மொழிபெயர்த்த கதைகளின் “அம்பை அவர்களின் இந்த கதையும் இருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்த கதை என்பதோடு அதே தொனியுடன் தெலுங்கில் கொண்டு போக முடிந்தது என்ற திருப்தி எனக்கு.
LikeLike