சாமிநாத சர்மாவை இப்போது மறந்தே போய்விட்டோம். பல மொழிபெயர்ப்புகள், கட்டுரைகள் எழுதி கலக்கி இருக்கிறார். ஒரு நாற்பது வருஷத்துக்கு முன் கூட அவருடைய தாக்கம் உள்ளவர்களை பரவலாகப் பார்க்க முடிந்தது. அவர் கார்ல் மார்க்ஸ் பற்றி எழுதிய புத்தகம் ஓரிரு தலைமுறைகள் முன்னால் மிகவும் முக்கியமான ஒன்று. நான் கண்ட நால்வர் ஒரு அருமையான memoir.
சர்மா அந்த காலத்துக்கு powerful நாடகங்களை எழுதினார். உண்மையில் இவரை விடப் புகழ் பெற்ற அண்ணா, கருணாநிதி போன்றவர்கள் பாணியில் இவர் தாக்கம் தெரிகிறது. இவருடைய நடையை, கதை சொல்லும் விதத்தைத்தான் வேலைக்காரி, ஓரிரவு, சிவாஜி கண்ட ஹிந்து சாம்ராஜ்யம், பராசக்தி, மனோகரா திரைப்படங்களில், நாடகங்களில் பின்பற்றி இருந்தார்கள். நீள நீள உணர்ச்சி பொங்கும் வசனம், ஒரு அஜெண்டாவை வைத்து எழுதப்படும் நாடகங்கள் எல்லாமே சர்மாவில் நாடகங்களில் இருந்து பெறப்பட்டவையே.
சிறு வயதில் பாணபுரத்து வீரன் நாடகத்தைப் பற்றி ரேடியோவில் ஏ.பி. நாகராஜன் பேசக் கேட்டிருக்கிறேன். நாகராஜன் அதில் ஸ்திரீபார்ட்டாம். எஸ்.வி. சஹஸ்ரநாமம் வாலீசனாக நடிப்பாராம். வாலீசன் என்றால் வில்லியம் வாலஸ் (பிரேவ்ஹார்ட் திரைப்படம் வில்லியம் வாலசைப் பற்றித்தான்.), கதாநாயகன் புரேசன் என்றால் ராபர்ட் ப்ரூஸ் (சிலந்தி மீண்டும் மீண்டும் வலை பின்னுவதைப் பார்த்து inspire ஆகி ஏழாவது முறையும் போரிட்ட ஸ்காட்லாண்டு மன்னன்) அவர்களை இந்தியாவுக்கு குடி பெயர்த்து எழுதப்பட்ட நாடகம். ஐம்பதுகளில் சிவாஜி, எஸ்.எஸ்.ஆர். மாதிரி யாரையாவது வைத்து சினிமா எடுத்திருந்தால் ஓடி இருக்கும்.
டி.கே. சண்முகம் இந்த நாடகத்தை நடத்த விரும்பினார். நாடகத்தில் வாலீசனும் புரேசனும் தேசபக்தி பொங்கும் வசங்களை பேசுவார்கள், அதனால் நாடகம் தடை செய்யப்பட்டிருந்தது. என்ன செய்வது? நாடகத்தின் பேரை “தேசபக்தி” என்று மாற்றினார்கள், பாணபுரத்து வீரனுக்குத்தான் தடை, தேசபக்திக்கு இல்லை! அப்படி நடத்தப்பட்ட நாடகம் மக்களிடையே உணர்ச்சிக் கொந்தளிப்பை ஏற்படுத்தியது என்று சண்முகம் அண்ணாச்சி குறிப்பிடுகிறார். சஹஸ்ரநாமம் சொல்கிறார்:
அப்போது நான் மதுரை ஸ்ரீ பால சண்முகானந்த சபையில் டி.கே.எஸ். அவர்களோடு இருந்தேன். அவர் நடத்திய ‘தேசபக்தி’ நாடகத்தில் வாலீசன் என்ற பாத்திரத்தை நான் ஏற்றேன். அது ஏறக்குறைய பகத்சிங்கைப் பிரதிபலிப்பதுதான். நான் வாலீசனாக மேடையில் தோன்றினாலே, ஜனங்கள் எல்லாம் ‘பகத்சிங்குக்கு ஜே’ என்று கோஷம் போடுவார்கள். முதல்முதலாக இந்த நாடகத்தில்தான் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், காந்திஜியின் வரலாற்றை வில்லுப் பாட்டாகப் பாடி அரங்கேற்றினார்.
அபிமன்யு கதை தெரிந்ததுதான். அதைத்தான் வீரம் என்ற ஃபார்முலாவை வைத்து எழுதி இருக்கிறார்.
உண்மையை சொல்லப் போனால் இரண்டுமே நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய நாடகங்கள் இல்லை. ஆனால் முன்னோடி நாடகங்கள். பாட்டை அடிப்படையாக வைத்து காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தபோது இப்படிப்பட்ட நாடகங்கள் பெரிய தாகத்தை உண்டாக்கி இருக்கும் என்று நினைக்கிறேன். முன்னோடி என்பதற்காக, அதுவும் அண்ணா-கருணாநிதி ஸ்டைல் நாடக/திரைப்பட எழுத்துக்கு முன்னோடி என்பதற்காகத்தான் படிக்க வேண்டும். எனக்கு பா. வீரன் மீது கொஞ்சம் நாஸ்டால்ஜியா உண்டு, அதனால்தானோ என்னவோ எனக்கு அந்த நாடகம் பிடித்திருக்கிறது.
அபுனைவுகள் விளக்கக் கட்டுரைகள் என்று எழுதித் தள்ளி இருக்கிறார். தான் அறிந்த அனைத்தையும் தமிழில் எழுதி தமிழர்களுக்கு கொண்டு வந்து சேர்த்துவிட வேண்டும் என்ற பெரும் ஆவல் இருந்திருக்கிறது, அதற்காக தளராமல் முயற்சித்திருக்கிறார். அவருடைய சரளமான நடை இந்த முயற்சிகளுக்கு பெரிய பலம்.
ஆனால் அவற்றில் பலவற்றை இன்று படிக்கவே முடிவதில்லை. காந்தியும் ஜவஹரும், காந்தி யார்? போன்றவை இன்று காலாவதி ஆகிவிட்டன். சுதந்திர முழக்கம் என்று ஒன்று எழுதி இருக்கிறார், அய்யோ அய்யய்யோ! இக்கரையும் அக்கரையும், மனிதன் யார்? போன்ற புத்தகங்களை புரட்டிப் பார்க்கவே தம் கட்ட வேண்டி இருக்கிறது. இவற்றை எல்லாம் அந்தக் காலத்தில் படித்தார்களா என்று வியந்தேன். ஆனால் பார்லிமெண்ட், நமது தேசியக்கொடி, ஐக்கிய தேச ஸ்தாபனம், அரசாங்கத்தின் பிறப்பு போன்றவற்றுக்கு ஒரு காலத்தில் தேவை இருந்திருக்கும். ரூஸ்ஸோ, ருஷ்ய சரித்திர வரலாறு, சோவியத் ரஷ்யா, கிரீஸ் வரலாறு போன்றவற்றை இன்னும் படிக்கலாம். இவை சிறந்த அறிமுகப் புத்தகங்கள்.
சர்மா எழுதுவதற்காகவே வாழ்ந்தவர். அவர் மனைவி இறந்த பிறகு அவளைப் பற்றி பத்து கடிதங்கள் எழுதி அதையும் “அவள் பிரிவு” என்ற புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். பின்னால் புத்தகமாக வெளியிடப் போகிறோம் என்ற பிரக்ஞையுடன் கடிதம் எழுதி இருக்கிறார் என்று நினைக்கிறேன்.
சாமிநாத சர்மாவைப் பற்றி உங்கள் யாருக்காவது ஏதாவது நினைவு வருகிறதா?
தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாடகங்கள்
தொடர்புடைய சுட்டி: சாமிநாத சர்மா பற்றி தினமணியில்