கி.வா.ஜ. உ.வே.சாமிநாதய்யரின் அணுக்க சீடர். சம்பிரதாயமான தமிழ் பண்டிதர். சிலேடையாகப் பேசுவதில் வல்லவராம். ‘சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ.‘, ‘கி.வா.ஜ. சிலேடைகள்‘ என்று அவரது சிலேடைப் பேச்சை புத்தகமாகவே போட்டிருக்கிறார்கள். கலைமகள் ஆசிரியராக வெகு நாள் இருந்தவர். வீரர் உலகம் என்ற புத்தகத்துக்காக சாஹித்ய அகாடமி விருது பெற்றிருக்கிறார். அவரது புத்தகங்கள் பொதுவாக ஏதாவது சங்கக் கவிதை விளக்கமாகவோ, அல்லது முருகன் துதி விளக்கமாகவோ இருக்கும். சம்பிரதாயமான இலக்கிய விளக்கம் எல்லாம் நமக்கு கொஞ்சம் தூரம், ஜெயமோகன் மாதிரி ஆள்தான் சரிப்பட்டு வருகிறது. அவரை மறந்துவிடுவார்கள் என்றே நினைக்கிறேன்.
கி.வா.ஜ.வின் சொந்த வாழ்க்கை அன்றைய தமிழ் பண்டிதர்களின் வாழ்க்கைக்கு ஒரு ஜன்னல். ஏழை பிராமணக் குடும்பம். சிறு வயதில் தமிழார்வம், பக்தி. பள்ளிப் படிப்பு முடிக்கவில்லை. கவிதை எழுத வந்தது. கிராம மிராசுதார்களின் தயவில் 20-25 வயது வரை வாழ்க்கை. கிராமத்து குழந்தைகளுக்கு படிப்பு சொல்லிக் கொடுத்து, சொற்பொழிவுகள் ஆற்றி, நாலு பெரிய மனிதர்களை புகழ்ந்து கவி பாடி, வெள்ளைக்காரர் ஒருவருக்கு தமிழ் கற்றுக் கொடுத்து, ஐந்தும் பத்தும் சம்பாதித்து வாழ்க்கை ஓடி இருக்கிறது. உ.வே.சா.விடம் சேர வேண்டும் என்று ஆசை. உ.வே.சா.வும் பெரும் பணக்காரர் அல்லர். அவர் என்னிடம் பாடம் கற்றுக் கொள்ளலாம், ஆனால் நிலைத்து இருக்க வேண்டும், உன் செலவுக்கு நீதான் பொறுப்பு என்று சொல்லி இருக்கிறார். சேர்த்து வைத்திருந்த பணத்தை வைத்து கொஞ்ச நாள் ஓட்டி இருக்கிறார். பிறகு மீண்டும் பெரிய மனிதர்கள் அவ்வப்போது உதவுவது. உ.வே.சா. ஒரு கட்டத்தில் இவருக்கு மாத சம்பளம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். விகடன் உட்பட்ட சில இடங்களில் வேலைக்கு கூப்பிட்டிருக்கிறார்கள், ஆனால் இவருக்கு குருபக்தி அதிகம், உ.வே.சா.வை விட்டு போக மறுத்திருக்கிறார். கலைமகளில் பகுதி நேர வேலை, நினைத்தபோது வரலாம், போகலாம் என்றதும் அதை ஏற்றுக் கொண்டிருக்கிறார். பிறகு கலைமகள் ஆசிரியராகி, பேச்சாளராகி…
கி.வா.ஜ. மந்தவெளியில் வாழ்ந்தவர். நான் சிறுவனாக இருந்தபோது ஒரு முறை அவர் வீட்டுக்குப் போயிருக்கிறேன். கட்டை குட்டையாக இருப்பார். அப்போதெல்லாம் கந்தர் அனுபூதி, கந்தரலங்காரம் ஆகியவற்றைப் பற்றி சொற்பொழிவுகள் பிரபலமாக இருந்தன. கந்தரலங்காரம் பற்றிய சொற்பொழிவுத் தொகுப்பு – தனி வீடு – ஒன்றை நாஸ்டால்ஜியாவுக்காக புரட்டிப் பார்த்தேன். இனி மேல் படிக்க முடியாது என்று நினைக்கிறேன்.
அவரது சில புத்தகங்களை கொஞ்சம் தம் கட்டிப் பிடித்தேன். அவற்றைப் பற்றி:
புது மெருகு: பல தொன்மக் கதைகள் – எல்லாம் புலவர்கள் பற்றியது. தொல்காப்பியரிலிருந்து ஆரம்பிக்கிறது. எனக்குப் பிடித்திருந்தது.
தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்: கி.வா.ஜ.வுக்கு கல்கியே தமிழ் நாவலின் உச்சம். அவரது கருத்துகளை இன்றைக்கு பொருட்படுத்த வேண்டியதில்லைதான், ஆனால் ஓரளவு ஆவண முக்கியத்துவம் உள்ள புத்தகம். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெளியான பல தமிழ் நாவல்களைப் பற்றி கொஞ்சம் விவரம் கிடைக்கிறது.
தமிழ் நூல் அறிமுகம் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களைப் பற்றி சிறிய, படிக்கக் கூடிய அறிமுகங்களைத் தருகிறது
தமிழ்த் தாத்தா: உ.வே.சா.வைப் பற்றிய சம்பிரதாயமான வாழ்க்கை வரலாறு. இதை விட உ.வே.சா.வின் சுயசரிதையையே படித்துக் கொள்ளலாம்.
என் ஆசிரியப்பிரான்: உ.வே.சா.வைப் பற்றிய துதி நூல் என்றே சொல்லலாம். கி.வா.ஜ.வைப் பற்றியும் குறை சொல்வதற்கில்லை, உ.வே.சா. அவருக்கு ஏறக்குறைய தெய்வம்தான். ஆனால் உபயோகமான தகவல்கள் எதுவும் இல்லை, உ.வே.சா.வை யார் பாராட்டினார்கள், என்ன சொன்னார்கள் என்பதைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை.
வாருங்கள் பார்க்கலாம்: பாடல் பெற்ற சிவஸ்தலங்களை சுற்றிப் பார்த்திருக்கிறார். சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், திருவாமூர், திருவெண்ணெய்நல்லூர், திருவதிகை என்று பல ஸ்தலங்கள். எனக்கும் இப்படி கோவில் கோவிலாக சுற்ற வேண்டும் என்று இப்போதெல்லாம் ஒரு ஆசை இருக்கிறது. ஜெயமோகனால் வந்த வினை. அதே போல இலங்கை பயண அனுபவங்களை கதிர்காம யாத்திரை என்று ஒரு புத்தகமாக எழுதி இருக்கிறார்.
அறப்போர், காவியமும் ஓவியமும், எல்லாம் தமிழ், மனை விளக்கு, அதியமான் நெடுமான் அஞ்சி, இன்பமலை, கன்னித்தமிழ், புது வெள்ளம் போன்றவை சங்கப் பாடல்களின் விளக்கங்கள் மற்றும் புலவர்கள் பற்றிய குறிப்புகள். என் கண்ணில் இவற்றுக்கான தேவை இன்னமும் இருக்கிறது. ஆனால் அவரது விளக்கங்கள் சம்பிரதாயமானவையே. கோனார் நோட்சை சுவாரசியமாக எழுதும் முயற்சி, அவ்வளவுதான். ஆனால் வாழும் தமிழ் என்ற புத்தகத்தை குறிப்பிட்டு சொல்ல வேண்டும். தொல்காப்பியத்துக்கு – அது கூட இல்லை, அதில் சில பகுதிகளுக்கு – நல்ல அறிமுகம்.
கரிகால் வளவன் என்ற புத்தகத்தையும் குறிப்பிட வேண்டும். இலக்கிய ஆதாரங்களைக் கொண்டு கரிகாலனின் வாழ்க்கையை விவரிக்கிறார்.
நாயன்மார் கதை போன்றவை முக்கியமானவை. பெரிய புராணத்தை சுருக்கமாக தரும் முயற்சி.
சகலகலாவல்லி போன்ற புத்தகங்கள் முக்கியமானவை. குமரகுருபரர் இயற்றிய செய்யுள்களை விளக்கி இருக்க்கிறார். இவர் போன்றவர்கள் இல்லாவிட்டால் இப்படி ஒரு பாடல் இருப்பதே நமக்கெல்லாம் தெரியப் போவதில்லை.
ஒரு சாண் வயிறு, நல்ல சேனாபதி போன்ற புத்தகங்களின் முக்கியத்துவம் கவிதைகள் நம் ரேடாரில் பட வைக்கிறது என்பதுதான். இவையெல்லாம் முக்கியமான பங்களிப்பு என்பது வயதாக வயதாகத்தான் தெரிகிறது.
பாராட்ட வேண்டிய இன்னொரு விஷயம் – செவ்வியல் இலக்கியங்களோடு நின்றுவிடாமல் நாட்டுப் பாடல்களையும் தொகுத்திருக்கிறார். மலை அருவி அப்படிப்பட்ட ஒரு தொகுப்பு.
பாண்டியன் நெடுஞ்செழியன் (1956) எனக்கு பயனுள்ள புத்தகம். நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் இவற்ற்றைப் பற்றி ஒரு அட்சரமும் தெரியாது. இரண்டும் தலையாலங்கனத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை வைத்துப் பாடப்பட்டவை. நெடுநல்வாடை நக்கீரராலும் மதுரைக்காஞ்சி மாங்குடி மருதனாராலும் எழுதப்பட்டவை. முன்னது நெடுஞ்செழியனின் மனைவி குளிர்காலத்தில் போருக்கு சென்றிருக்கும் மன்னனைப் பிரிந்து வாடுவதாக எழுதப்பட்டிருக்கிறது. பின்னது அரசனின் போர் வெற்றிகளை விவரித்து ஆனால் நாட்டின் நலத்தை – விவசாயம், நீர்வளம், வணிகம் – ஆகியவற்றிலும் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்துகிறது.
பரம்புமலை வள்ளல், எழுபெரு வள்ளல்கள், குமண வள்ளல் வரலாறு, கோவூர் கிழார் போன்ற புத்தகங்கள் பள்ளி மாணவர்களைக் குறி வைத்து எழுதப்பட்டவை போலத் தெரிகின்றன. கோவூர் கிழார் புத்தகத்தை 2012-இல் சரியாக ஏழாம் வகுப்புக்கு துணைப்பாடமாகவும் வைத்திருக்கிறார்கள்.
கவிதைகளையும் சிறுகதைகளையும் முயற்சித்திருக்கிறார். அறுந்த தந்தி, கலைஞனின் தியாகம், குமரியின் மூக்குத்தி, கோவில் மணி, மூன்று தலைமுறை, வளைச்செட்டி, கலைச்செல்வி என்ற சிறுகதைத் தொகுப்புகள் கிடைத்தன. அறுந்த தந்தி சுமார்; மற்ற எதுவும் குறிப்பிடும்படி இல்லை. சிறுவர் நூல்களைக் கூட விடவில்லை. (நல்ல பிள்ளையார், நாலு பழங்கள்)
கலைமகள் ஒரு காலத்தில் நல்ல இலக்கியத் தரம் வாய்ந்த சிறுகதைகள், நாவல்களைப் பதித்தது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். (எழுபதுகளில் அப்படி எல்லாம் இல்லை.) அதற்கு அவரது பங்களிப்பும் இருந்திருக்கும். அவர் வீடு சென்னை மந்தவெளியில் இருந்தது. சிறு வயதில் ஒரு முறை அவர் வீட்டுக்குப் போயிருக்கிறேன். நான் பார்த்த முதல் தமிழ் எழுத்தாளர் அவர்தான். அதற்கப்புறம் நான் தமிழ் எழுத்தாளர்கள் பக்கம் தலை வைத்துப் படுக்க ரொம்ப நாளாயிற்று. 🙂
கி.வா.ஜ. போன்ற பண்டிதர்கள், தமிழறிஞர்கள் தேவை. இல்லாவிட்டால் பழைய தமிழ் இலக்கியங்களைப் பற்றி யாரிடம் போய் கேட்பது? அவர் போன்றவர்களிடம் தமிழ் கற்றுக் கொண்டிருந்தால் தமிழில் கொஞ்சம் ஊக்கம் அதிகரித்திருக்கும் வியக்க வைக்கும் ஒரு விஷயம் அவர் இலக்கியங்களோடு நிறுத்திக் கொள்ளாமல் நாடோடிப் பாடல்கள் மீதும் கவனம் செலுத்தி சேகரித்திருப்பது. சில காலமாவது கலைமகளை இலக்கியப் பத்திரிகையாக நடத்தி இருக்கிறார். ஆனால் அவர் பொருட்படுத்தப்பட வேண்டிய புனைவு எழுத்தாளர் அல்லர். அதனால் ஒரு குறைவுமில்லை.
தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழறிஞர்கள்
Like this:
Like ஏற்றப்படுகின்றது...