நாராய் நாராய் செங்கால் நாராய்

(மீள்பதிவு) – பாடலுக்கு யூட்யூப் சுட்டி கிடைத்ததால் மீள்பதித்திருக்கிறேன்.

எனக்கு கவிதை அலர்ஜி உண்டு என்றாலும் சில கவிதைகள் பிடிக்கும். எனக்குப் பிடித்த தமிழ் கவிதைகள் என்று ஒரு லிஸ்ட் கூட போட்டிருந்தேன். அதில் விட்டுப் போன ஒரு கவிதை.

நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்
நீயும் நின் பெடையும், தென் திசைக் குமரியாடி
வடதிசைக்கு ஏகுவீராயின்
எம்மூர் சத்திமுத்த வாவியுள் தங்கி
நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி
பாடு பாத்திருக்கும் எம் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதிக் கூடலில்
ஆடையின்றி வாடையில் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்தி
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே

சிறு வயதிலேயே பிடித்துப்போன ஒரு கவிதை இது. பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பவளக் கூர்வாய் செங்கால் நாராய் என்ற வரிகளில் இருக்கும் அழகான படிமம், நனை சுவர் கூரை கனைபடு பல்லி, கையது கொண்டு மெய்யது பொத்தி ஆகியவை கொண்டு வரும் வறுமையின் காட்சிகள், பாட்டு பூராவும் இழைந்திருக்கும் சோகம், சந்தத்தை மொழி பெயர்க்க முடியாவிட்டாலும் மொழி பெயர்க்கக் கூடிய கருத்து எல்லாமே மிக அற்புதமாக இருக்கிறது.

கவிதையை எழுதியவர் பெயர் தெரியவில்லை. கவிதையில் சத்திமுத்த வாவி என்று ஒரு இடத்தில் வருகிறது, அதனால் எழுதியவரையும் சத்திமுத்தப் புலவர் என்றே குறிப்பிடுகிறார்கள்.

இன்னும் கோனார் நோட்ஸ் இல்லாமல் பாட்டு புரிகிறது. நான் மொழியை கருத்துகளை பரிமாறக் கொள்ள உதவும் ஒரு கருவி என்ற அளவில் மட்டுமே பார்ப்பவன். எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு என்றால் கொஞ்சம் தள்ளிப் போய் முழங்குப்பா, காது ரொய்ங் என்கிறது என்று சொல்லக் கூடியவன். ஆனால் இதைப் படிக்கும்போது நான் தமிழன், இது என் மொழி, பல நூறு வருஷங்களுக்கு முன்னால் சாரமுள்ள இந்த கவிதையை இன்றும் புரியும் வார்த்தைகளில் எழுதியவன் என் பாட்டன் என்று ஒரு பெருமிதம் ஏற்படுகிறது என்று பீற்றிக்கொண்டேன். உடனே இந்த தளத்தின் சக ஆசிரியரான பக்ஸ் (பகவதி பெருமாள்) “ஒண்ணுமே புரியலே உலகத்திலே” என்று பாட ஆரம்பித்துவிட்டான். அவன் போன்றவர்களுக்காக எழுதிய நோட்ஸ் கீழே.

வரி பொருள்
நாராய் நாராய் செங்கால் நாராய் நாரையே நாரையே சிவந்த கால்களை உடைய நாரையே
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பழங்கள் நிறைந்த பனைமரத்து கிழங்கை பிளந்தது போன்ற
பவளக் கூர்வாய் செங்கால் நாராய் பவளம் போல் சிவந்த கூர்மையான அலகை கொண்ட செங்கால் நாரையே
நீயும் நின் பேடையும் தென் திசைக் குமரியாடி நீயும் உன் பெட்டையும் தென் திசையில் உள்ள கன்யாகுமரியில் நீராடிய பின்
வட திசைக்கு ஏகுவீராயின் வட திசைக்கு திரும்புவீரானால்
எம்மூர் சத்திமுத்த வாவியுள் தங்கி எங்கள் ஊரில் உள்ள சத்திமுத்த குளத்தில் தங்கி
நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி நனைந்த சுவர்களையும் கூரையையும் கனைக்கும் பல்லிகளும் கொண்ட
பாடு பாத்திருக்கும் என் மனைவியை கண்டு வீட்டில் என்னை எதிர்பார்த்திருக்கும் என் மனைவியிடம்
எங்கோன் மாறன் வழுதிக் கூடலில் எங்கள் அரசன் மாறன் வழுதி ஆளும் மதுரையில்
ஆடையின்றி வாடையில் மெலிந்து குளிர்காலத்தில் சரியான ஆடையில்லாமல் உடல் மெலிந்துபோய்
கையது கொண்டு மெய்யது பொத்தி போர்வை இல்லாததால் கையைக் கொண்டு உடம்பை பொத்தி
காலது கொண்டு மேலது தழீஇப் காலைக் கொண்டு என் உடலை தழுவி
பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும் பெட்டிக்குள் பிடித்து வைத்திருக்கும் பாம்பை போல உயிரை பிடித்து வைத்திருக்கும்
ஏழையாளனை கண்டனம் எனமே உன் ஏழைக் கணவனை கண்டோம் என்று சொல்லுங்கள்!

இது சங்கக் கவிதையா தனிப் பாட்டா எதுவும் தெரியாது. தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்!

ஒரு மங்கலான நினைவு -“எங்கள் வாத்தியார்ஏதோ ஒரு திரைப்படத்தில் நாகேஷ் ரிடையர் ஆன ஏழை வாத்தியார்; ஏதோ பெரிய செலவுக்காக பழைய மாணவர்களிடம் பண உதவி கேட்கப் போவார். அப்போது நாராய் நாராய் செங்கால் நாராய் என்று தொடங்கும் ஒரு பாட்டை பாடுவார்.

தகவல் தந்த சாரதாவுக்கு நன்றி! பாடலில் டைப்போவை திருத்திய ஜடாயுவுக்கும் நன்றி! பாடலுக்கு யூட்யூப் சுட்டி தந்த சந்திரனுக்கு நன்றி!

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்

56 thoughts on “நாராய் நாராய் செங்கால் நாராய்

  1. ஆயிரத்திஐநூறு ஆண்டுகளுக்கு முன் கும்பகோணத்திற்கருகேயுள்ள சத்திமுத்தம் என்ற கிராமத்தில் வாழ்ந்த கவி ஒருவர் மதுரைக்குப் பயணித்திருந்தபோது அங்கு வலசை (migration) போகும் செங்கால் நாரை ஜதை (pair) ஒன்றைக் கவனித்திருக்கின்றார்.

    சத்திமுத்தப் புலவர் எழுதியதாகக் கூறப்படும் கவிதை இந்த நாரையை வர்ணித்து,மனைவியிடம் தூது போகும்படி கேட்டுக் கொள்கின்றது.

    Like

  2. டியர் ஆர்.வி.
    ‘நாராய் நாராய் செங்கால் நாராய்’ என்ற இப்பாடல் எனக்கும் பிடித்த பாடல். மிகவும் எளிமையாகப் புரியக்கூடியது. புற்நானூற்றுத்தொகுப்பில் இடம் பெற்ற பாடல் என்று தமிழாசிரியர் திரு. வேலையா சொன்னதாக நினைவு. எழுதியவர் ‘சத்திமுற்றப்புலவர்’ என்றே குறிப்பிடப்படுவார்.

    ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பாடலும் இத்தொகுப்பில் இடம்பெற்றதே. (சிலர் ‘கேளீர்’ என்று கேளுங்கள் என்ற பொருளில் நீட்டிச்சொல்வர். ஆனால் அது ‘கேளிர்’தான். சொந்தக்காரர்கள் எனப்பொருள் தரும்). இதே புறநானூற்றுத்தொகுப்பில் இடம் பெறும் ‘பல்சான்றீரே பல்சான்றீரே’ என்ற பாடலும் ரொம்ப பிரபலம்.

    இப்போது சினிமா: நீங்கள் குறிப்பிட்ட அந்தப்படம் ‘எங்கள் வாத்தியார்’. அதில் ஏழை வாத்தியார் நாகேஷ், தன் மகளின் (கவிதா) திருமணத்துக்காக, தன்னிடம் படித்த பழைய மாணவர்களிடம் உதவிகேட்டுச் செல்வார். பழைய மாணவர்களாக தேங்காய், ஷ்ரீகாந்த், ஜெயமாலினி போன்றோர். ‘சமுத்திர ராஜகுமாரி’ என்ற இனிய பாடல் நினைவிருக்கிறது.

    Like

  3. // நீயும் நின் பேடையும் தென் திசைக்கு மரியாடி

    நீயும் உன் பெட்டையும் தென் திசைக்கு சென்ற பிறகு மீண்டும் //

    மரியாடி என்று ஒரு சொல்லே தமிழில் கிடையாது சுவாமி.

    தென்திசைக் குமரியாடி என்று பிரிக்கவேண்டும்… அதாவது தென் திசையில் உள்ள குமரியில் ஆடி (குளித்து).

    கங்கை ஆடிலென் காவிரி ஆடிலென்
    கொங்குதண் குமரித்துறை ஆடிலென்
    ஓங்கு மாகடல் ஓதநீர் ஆடிலென்
    எங்கும் ஈசன் எனாதவர்க் கில்லையே

    என்பது அப்பர் தேவாரம்.

    Like

  4. அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிவு நன்றாக இருந்தது.

    “நாராய் நாராய் செங்கால் நாராய்
    பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
    பவழக்கூர் வாய் செங்கால் நாராய்
    நீயும் நின் மனைவியும் தென் திசைக் குமரியாடி
    வடதிசைக் கேகுவீராயின்
    எம்மூர் சத்திமுத்த வாவியுள் தங்கி
    நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி
    பாடு பார்த்திருக்கும் எம் மனைவியைக் கண்டு
    எங்கோன் மாறன் வழுதி கூடலில்
    வாடையின் மெலிந்து
    கையது கொண்டு மெய்யது பொத்தி
    காலது கொண்டு மேலது தழீஇப்
    பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
    ஏழையாளனைக் கண்டனம் எனுமே.”

    இந்த பாட்டு http://kumarananthan.blogspot.com/2010/07/39.html
    என்ற வலைத்தளத்திலும் வந்திருக்கிறது .
    அதில் “ஆடையின்றி ” என்ற சொல் வரவில்லை .
    எது சரி .தெரிந்தவர்கள் சொல்லுங்கள் .(பிழையான பாட்டுக்கு பாண்டிய மன்னனிடம் காசு வாங்கிக்கிட்டு போயிரக்கூடாதில்ல)

    Like

    1. ஆடை யின்றி வாடையில் மெலிந்து
      என வரும்.
      இது ஆசிரியப்பா என்னும் வகைப்பா.
      ஒரு வரியில் நான்கு சொல் வரும்.
      ஆடையின்றி என இருந்தால்தான் பாட்டு முழுமை பெறும்.
      நான்1967ல் SSLC படித்த போது இது மனப்பாடப்பாட்டு.அதில் ஆடை யின்றி இருந்தது.

      Like

  5. ஜடாயு, பிடிச்சிட்டீங்களே! இப்போது திருத்திவிட்டேன்.

    அண்ணாமலை, “ஆடையின்றி” என்று வராவிட்டால் சந்தம் உதைக்கிறது. அதனால் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

    சாரதா, கலக்கிட்டீங்க போங்க! இந்த பாட்டுக்கு வீடியோ, ஆடியோ ஏதாவது கிடைக்குமா?

    யாத்தீ, கொல்லன், ஸ்ரீனிவாஸ், ரத்னவேல், மறுமொழிக்கு நன்றி!

    Like

  6. முதன்முறையாக இப்பாடலை இங்கே படிக்கிறேன்.. நல்லா இருக்கு 🙂 🙂 🙂 மனனம் செய்துவிட்டேன்..
    நாங்கள் படிக்கும் போது இப்பாடல் இல்லை..

    Like

      1. In this “Naaraay Naaraay” poem , not only the poor status of the pulavar ,but ” Birds migration”
        is also narrated. In the peak winter season, the birds [Sengaal Naaai ]are moving from south to north , returning to home. This shows that “Birds migration” is a natural wonder , even from
        Puranaanuru days.

        Like

    1. மிகவும் பிடித்த பாடல் இது . சுமார் 48 ஆண்டுகளுக்கு முன்பு புகுமுக வகுப்பில் மனப்பாடப் பகுதி யாக மனனம் செய்தது.
      “…. நீயும் நின் மனைவியும் தென் திசை குமரியாடி”
      வடதிசை யில் உள்ள சத்தி முற்றம் எனும் ஊர் ஈரோடு அருகே உள்ளது.
      தன் புலமையை வெளிப்படுத்தும் புலவர் தன் குடும்ப நிலையை மிகவும் நாசூக்காக பாண்டிய மன்னனிடம் குறிப்பால் உணர்த்தும் விதம் அபாரம்.
      “நனைசுவர் கூரை” என்பது கூரை இல்லாததால் நனைந்த சுவர், ஏன் கூரை இல்லை என்றால் அந்த கூரையை வேய்வதற்கு கூட முடியாத நிலையில், “பாடு பார்த்திருக்கும்” என்றால் வெளியில் பொருள் ஈட்டி வர சென்ற கணவனின் ஊதியத்தை பார்த்தால் அடுப்பை மூட்டி பசியை முடிவுக்கு கொண்டு வர காத்திருக்கிறாள் என மிக அழகாக தன் குறிப்பினை உணர்த்தும் அழகு பாராட்டத்தக்கது.

      Like

      1. பிரபாகரன், மற்றும் வரதராஜன், இந்தப் பாடலுக்கு இன்னும் இரண்டு ரசிகர்களைப் பார்ப்பதில் மகிழ்ச்சி!

        Liked by 1 person

  7. தங்கள் உரையில் ‘ஆடையின்றி வாடையில் மெலிந்து’ என்ற அடி விடுபட்டுள்ளதை கவனிக்கவும்.

    Like

  8. 1970-களில் பள்ளியில் படித்த பாடல். மிகவும் எளிய முறையில் வடித்த புலவருக்கும் வலைத்தளத்தில் பதிவேற்றிய உங்களுக்கும் நன்றி. இது போன்ற மற்றும் ஒரு எளிய பாடல் குற்றாலக் குறவஞ்சியில் உள்ள “வாணரங்கள் கனி கொடுத்து மந்தியோடு கொஞ்சும், மந்தி சிந்தும் கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்” என்ற இனிய பாடல் நான் மிகவும் ரசித்தது.
    லெனின், P

    Like

  9. சங்க புலவனின் திறன் சொல்லில் தீராதே..! அய்யா..
    நமக்கெல்லாம் தெரிந்த ஒரு பாடல்
    நாராய் நாராய் செங்கால் நாராய்
    பழம் படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
    பவளகூர்வாய் செங்கால் நாராய்

    இப்பாடலின் அடுத்த வரிகள், உன் கணவன் (கவிஞர்) துயரத்தில் கிடக்கிறான் என்ற செய்தியை மனைவிக்கு தூது சொல்லும் படியாய் எழுதப்பட்டது. சத்திமுத்தம் வாவி என்ற பெயர் கொண்டு விளங்குவதால் புலவரின் பெயரையும் சத்திமுத்த புலவர் என்றே நாம் சூட்டிவிட்டோம்.
    இங்கு புலப்படும் அழகியல் தான் சங்கப்பாடல்
    கவிஞன் வானத்தில் பறந்து குளத்தில் மீன் கொத்தும் நாரையை பார்க்கிறான், அப்போதே அவனுக்கு தெரிகிறது, இந்நாரை நெடுந்தொலைவு பறந்து செல்லும் திறன் கொண்டது என்ற உண்மை, அதனாலே தான் நாரையிடம் தனது தூதை விடுத்தான், என்ன அழகு..
    அடுத்து, நாராயின் உடலை கூர் செய்கிறான், அதன் அலகு அவனை எதோ செய்கிறது, தேடுகிறான் உவமைக்கு தன் எதிரே நீண்டு நெடிது வளர்ந்த பனை மரம் தென்படுகிறது, அம்மரத்தின் பழத்தில் இருந்து முளைத்த பனங்கிழங்கின் உருவம் தென்படுகிறது. இந்த கிழங்கை இரண்டாய் கீறி வைத்தது போல் உள்ளது அதன் அலகு . இங்கு கவனிக்க வேண்டிய வரிகள் “பழம் படு பனையின் கிழங்கு பிளந்தன்ன ” பூமியில் இருக்கின்ற எல்லா மரத்தின் பழத்தில் இருந்தும் கிழங்கு முளைப்பதில்லை என்ற மரங்களை பற்றிய நுண் அறிவு அவனிடம் இருந்துள்ளதே..!

    ஏதோ என் அறிவுக்கு எட்டிய வரை.. இன்னும் ஆய்வு செய்ய வேண்டிய வரிகள் புதைந்து கிடைக்கும், நம் சங்க பாடல்களில்.

    தொடர்வோம்.. நன்றி..
    கண்ணன் நபா.

    Like

  10. நீயும் நின் மனைவியும்
    தென்திசை குமரியாடி
    என்று இருக்க வேண்டும்.
    மேலும் எனது தமிழாசிரியர் கூற விழைகிறேன்.அந்த கதையை அவர் கூறும் போது எனக்கு மயிற்கூச்செறியும். கேளுங்கள் என் தமிழாசிரியர் திரு. மாணிக்கவாசகம் சொன்ன கதையும் பாண்டியன் மாறன் தமிழ்பற்றையும் அவன் புலவர்களைக் காத்த பண்பையும்.
    பாண்டியமன்னன் மாறன் ஒருநாள் வேட்டையாட காட்டிற்குச் சென்றான். வேட்டையாடி களைத்து குளத்தங்கரையில் ஓய்வெடுக்கும்பொழுது குளத்தில் செங்கால்நாரைகளைக் கண்டு வியந்தான். இந்த நாள்வரை அந்த பறவையை அவன் கண்டதில்லை. வேறு நாட்டிலிருந்து வந்திருந்த நாரைகளை அன்றுதான் புதிதாய் பார்த்திருந்தான். அரண்மனை திரும்பியதும் ராணியிடம் தான் கண்ட பறவையின் விவரம் கூறினான். அந்த பறவை மிக பெரியதென்றும், நீண்ட சிவந்த கால்களைக் கொண்டவையென்றும், பெரிய நீண்ட அலகுகள் இதுவரை நாம் கண்டதில்லை என்றும் கூறினான். அரசிக்கோ ஆர்வம் பற்றிக் கொண்டது. அரசே அந்த பறவையின் அலகு எப்படி இருந்தது கேட்டாள். நீளமாய் சிவப்பாய் இருந்தது என்பதற்கு மேல் மன்னனால் எதுவும் கூற முடியவில்லை. அரசியோ மன்னனை அதே கேள்வியால் தினம்தினம் துளைத்தவண்ணம் இருந்தாள்.
    இதே நாட்களில் குமரியின் வடக்கு திசையில் உள்ள ஒரு ஊரில் சத்தியமுற்றகுளம் ஒன்று இருந்தது. அதனருகே ஒரு புலவர் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தார். வறுமையில் வாடி வந்தார். ஒருநாள் தன் மனைவிடம் நம் வறுமை நீங்க பாண்டியமன்னனைக் கண்டு கவிபாடி பரிசு பெற்று நம் வறுமையைப் போக்க தாம் கூடல் நகர் செல்வதாகக் கூறி மதுரை வந்தடைந்தார். பல நாட்களாகியும் மன்னனை காணமுடியாமல் பசியினால்வாடினார். இரவு நேரங்களில் தெருமண்டபங்களில் தூங்கி துயரடைந்தார்.
    பாண்டிய மன்னனோ அரசியிடம் நாரையின் அலகைப்பற்றி வர்ணிக்க முடியாமல் தன் தூக்கம் தொலைத்தான்.ஒருநாள் மாலை மாறுவேடத்தில் மன்னன் மக்களின் குறைகாண நகர்வலம் வந்தான். அதேநேரம் நம்புலவரும் பகலெல்லாம் சுற்றிய களைப்பில் ஒரு மண்டபத்தின் திறந்த வெளியில் படுத்தார். சூரியன் மேற்கில் மறைய ஆரம்பித்தான். பறவைகள் இறைதேடி முடித்து தம் உறைவிடம் நோக்கி திரும்பிய வண்ணம் இருந்தன. பலவகை பறவைகள் அவற்றில் நாரைகளைக் கண்டார். தம் ஊரின் சத்தியமுற்ற குளமும் அதில் வநாரையே
    ங்கும் நாரைகளும் குளத்தருகேயிக்கும் வீடும் அதில் வாழும் அவர் மனைவியும் நினைவிற்கு வந்தனர். நாரையிடம் தன் இல்லாளுக்கு தன் நிலைமைபற்றி செய்தி சொல்ல நாரைவிடுதூது அனுப்ப ஆரம்பித்தார். நகர்வலம் சென்ற மன்னனும் வானில் பறக்கும் நாரைகளையும் அவற்றால் தமக்கும் அரசிக்கும் வந்த ஊடலை எண்ணி வருந்தி்யபடி அந்த மண்டபம் வந்தபோது ஒருவர் திறந்தவெளியில் படுப்பதைக் கண்டு கள்வனோ என ஐயுற்று நெருங்கினார். அப்போது கேட்டது கணீரென” நாராய் நாராய் செங்கால் நாராய்”
    செவிகொடுத்த அரசன் அடுத்த வரியில் அரண்டு போனான்.
    “பனம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
    பவழக்கூர்வாய் செங்கால் நாராய்”
    “பனங்கிழங்கை பிளந்தது போல பவளநிறத்தில் கூரான வாயைக் கொண்ட நாரையே” மற்ற வரிகள் தாமாகவே விளங்கும். மன்னன் புலவரை கட்டியணைத்து மகிழ்ந்து பல்லக்கில் ஏற்றிச்சென்று அரசபை கவிஞராக்கி, பரிசுகள் பல வழங்கி, பல்லக்கிலேயே புலவரை அவர் ஊருக்கு அனுப்பி புலவர் மனைவியையும் மகிழச்செய்து, தாமும் அரசியுடன் ஊடல் தீர்ந்து மகிழ்ந்தார்.
    50 ஆண்டுகளுக்கு முன் கற்ற இந்த பாடலும், என் ஆசிரியர் குரலும், நான் அடைந்த இன்பமும் மறக்க முடியவில்லை.

    Like

  11. நன்றி திரு. RV அவர்களே. சுலபமாக புரியும் தமிழில் இப்பாடல் இருப்பதினால் அனைத்து மாணவர்களுக்கும் பிடித்த பாடல்.

    Like

  12. நனைசுவர் கூரை கனை குரற் பல்லி
    பாடு பார்த்திருக்கும் என்பதை

    எத்திசைப்பல்லி கணவன் பற்றி என்ன சேதி சொல்கிறதெனக் கவனித்திருக்கும் எனப்பொருள் கொள்ளலாம்

    Like

  13. Good morning sir
    Who ever you are, my sincere thanks for posting this song. I was searching this song for a very long time. I know only the first four and last four lines and couldn’t recollect the in between lines as I had studied this in my eighth standard Tamil class. But this song always haunts my memory. Now my deep thirst is quenched. Once again thanks a lot

    Like

  14. நான் 11ம் வகுப்பு படிக்கும் போது இப்பாடலை கேட்டிருக்கிறேன். எனக்கு 5 வரிகள் மாத்திரம்தான் இதுவரை தெரிந்ரிந்து இருந்தது ஆனால் பொருள் முழுவதும் தெரியும் . வறுமையான நிலை எப்படி இருந்திருக்கும் என நினைத்து மனம் சஞ்சலப்பட்டதுண்டு. இப்பொழுது எனக்கு முழுப் பாடல் வரிகளும் தெரிந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.

    Like

  15. பொருளில் சிறு திருத்தம்.
    நனைசுவர்க் கூரை கனைகுரற் பல்லி பாடு பார்த்திருக்கும் :
    வீட்டின் நனைந்த கூரையிலும் சுவர்களிலும் இருக்கும் பல்லியின் ஓசையைக் குறியாகக் கொண்டு (என் வரவினை) எதிர் நோக்கியிருக்கும்

    Like

  16. கார்த்திக் கமல்,
    // உமறுபுலவர் என பள்ளியில் படித்ததாக ஞாபகம் // நீங்கள் ஜோக் ஏதாவது அடிக்க முயல்கிறீர்களா? சங்க காலத்தில் ஏது சார் உமறுப்புலவர்?

    Like

    1. “Engal Vathiyar” Movie released in 1980. Not in Sanga Kaalam..

      His question is “எங்கள் வாத்தியார் படத்தில் என்றோ புலவன் பாடலை எழுதியவர் யார்
      பாடல் வரிகள் கிடைக்குமா?”
      Answer : உமறுபுலவர் என பள்ளியில் படித்ததாக ஞாபகம்

      Like

  17. The legend also says that when the poet was singing this poem in a chatram, he was overheard by the king Maran who was also resting there after a hunt. He went back to his palace and ordered a huge reward for this poet.

    Like

  18. சத்தி முத்தப் புலவர் தனிப்பாடல்கள்
    பாடல்கள் இரண்டு
    பக்கம் 79
    குறிப்புரை – செங்கைப் பொதுவன்
    இவை தனிப்பாடல் திரட்டு நூலில் இடம்பெற்றுள்ள பாடல்கள்

    Like

  19. Dear Friend, the real meaning of “Pazhampadu Panaiyin Kizhangu Pilanthanna” is not the one you have mentioned. It is that PanamKizhangu obtained from the fruit of a matured Panai Maram which normally looks huge at the bottom and like a sharp weapon at the other end (which we in South Tamil nadu love to have it.)

    Like

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.