அம்பை

ஏப்ரல் மாத சொல்வனம் அம்பை சிறப்பிதழாக வந்திருக்கிறது. அப்போதே அம்பை பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தேன், ஆனால் விரும்பிய அளவுக்கு மீள்வாசிப்பு செய்யமுடியவில்லை. சரி நினைவிலிருப்பதை எழுதுவோம் என்றுதான் இதை எழுதுகிறேன்.

சொல்வனம் இதழில் வெங்கட் சாமிநாதன், எஸ்ரா, எம்.ஏ. சுசீலா, இ.பா. என்று பலரும் அம்பையைப் பற்றி எழுதி இருக்கிறார்கள். நல்ல எழுத்தாளரை கௌரவித்ததற்காக சொல்வனம் குழுவினருக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!

அம்பையின் “வீட்டின் மூலையில் ஒரு சமையலறை” புத்தகத்தை நான் முதன்முதலாக படித்தபோது எனக்கு இருபது இருபத்திரண்டு வயதிருக்கலாம். அது வரையில் பெண், பெண்ணிய எழுத்தாளர்கள் என்றாலே அய்யோ அய்யய்யோ என்று ஓடிவிடுவேன். சுப்ரபாரதிமணியன் அப்போதெல்லாம் செகந்தராபாத்தில் இருந்தார், வருஷாவருஷம் ஒரு புத்தகக் கண்காட்சி ஒன்றை கஷ்டப்பட்டு நடத்துவார். அவர் பரிந்துரையில் வாங்கிய புத்தகம். அதன் tattered copy இன்னும் கூட என் புத்தக அலமாரியில் எங்கோ இருக்கிறது. நான் குமுதம் விகடன் அவ்வப்போது கல்கி கலைமகள் என்று வாரப்பத்திரிகை படித்து வளர்ந்தவன். அன்று பிரபலமாக இருந்த லக்ஷ்மி, சிவசங்கரி போன்றவர்களின் எழுத்து எனக்கு மகா சின்னப்பிள்ளைத்தனமாகத்தான் தெரிந்தது. என் கண்ணில் முதன்முதலாகப் பட்ட பெண் என்ற அடைமொழி தேவையில்லாத பெண் எழுத்தாளர் அம்பைதான். அந்தப் புத்தகத்திலிருந்த பல கதைகள் என் முகத்தில் அறைந்தன.

அம்பையின் சிறுகதைகளில் மிகச் சிறந்ததாக நான் கருதுவது வீட்டின் மூலையில் ஒரு சமையலறை. ராஜஸ்தானி குடும்பத்தின் சமையலறையை வைத்து காலம் காலமாக ஒடுக்கப்படும் பெண், அதை பெண்கள் அதை ஏற்றுக் கொள்ளும், எதிர்கொள்ளும், circumvent செய்யும் விதங்களை மிகச் சிறப்பாக காட்டிவிடுகிறார். அபாரமான சிறுகதை, தமிழ் மட்டுமல்ல, உலக அளவில் நான் படித்த சிறந்த சிறுகதைகளில் ஒன்று.

பிளாஸ்டிக் டப்பியில் பராசக்தி முதலியோர் என்னை பாதித்த சிறுகதைகளில் ஒன்று. அதைப் பற்றி இங்கே.

தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்த சிறுகதை வெளிப்பாடு.

நாப்பது வருஷத்துல ஒரு நாளைக்கு இருபது மேனிக்கு எவ்வளவு தோசை…

என்ற ஒரு வரி எனக்கு என்றும் மறக்காது. I realized how much I take my mother for granted in the instant I read that sentence. இந்த வரியை ஜெயமோகன் கிண்டலடிப்பார். 🙂 இன்று வரை அதில் கிண்டலடிக்க என்ன இருக்கிறது என்று புரிந்ததில்லை. அவரிடமே கேட்டும் இருக்கிறேன். 🙂

டக்கென்று இந்தக் கணம் நினைவு வரும் அருமையான சிறுகதைகள் கறுப்பு குதிரை சதுக்கம் மற்றும் மல்லுக்கட்டு.அம்பையின் குரல் எப்போதும் கொஞ்சம் ஓங்கி ஒலிக்கும். ஆனால் மல்லுக்கட்டு மிகவும் subtle ஆக எழுதப்பட்ட சிறுகதைகளில் ஒன்று.

ஆனால் பெரிதும் சிலாகிக்கப்படும் அம்மா ஒரு கொலை செய்தாள் சிறுகதையை நான் பெரிதாக ரசித்ததில்லை. தேய்வழக்காகத் (cliche) தெரிந்தது. தோழி அருணா ஒரு முறை நான் பெண்ணாகப் பிறந்திருந்தால் அந்தக் கதையை ஒரு வேளை புரிந்து கொண்டிருக்கலாம் என்று சொன்னார். அடுத்த ஜன்மத்தில்தான் பார்க்க வேண்டும்.

ஜெயமோகன் அம்மா ஒரு கொலை செய்தாள், கறுப்பு குதிரை சதுக்கம், வீட்டின் மூலையில் ஒரு சமையலறை ஆகிய சிறுகதைகளை தன் seminal சிறுகதை பரிந்துரைகளில் தேர்ந்தெடுத்திருக்கிறார். எஸ்ரா அம்மா ஒரு கொலை செய்தாள் மற்றும் காட்டில் ஒரு மான் சிறுகதைகளை தமிழின் சிறந்த 100 சிறுகதைகளில் இரண்டாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

அம்பையின் பெண்ணிய நோக்கு, முற்போக்கு அரசியல் நிலை சில சிறுகதைகளில் வலுவான பிரச்சார நெடியாக வெளிப்படத்தான் செய்கிறது. உதாரணமாக புனர். அது என் ஆண் பார்வையின் கோளாறாக இருந்தாலும் இருக்கலாம்.

அம்பையின் சமீபத்திய சிறுகதைகளில் தென்படும் ஒரு கரு முதுமையை எதிர்கொள்வது. சில கஷ்டமான, தனிப்பட்ட முறையில் நான் எதிர்கொள்ள விரும்பாத கேள்விகளை சாம்பல் மேல் எழும் நகரம் போன்ற சிறுகதைகளில் கேட்கிறார். ஆனால் குரல் உரத்து ஒலிக்கிறது, அதனால் முழுமை கூடவில்லை என்று கருதுகிறேன்.

அம்பையின் பல சிறுகதைகளை இங்கே படிக்கலாம்.

அம்பைக்கு என் மனப்பூர்வமான நன்றி மற்றும் வாழ்த்துக்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: அம்பை பக்கம்