Top 100 Thrillers

(மீள்பதிவு)

நான் த்ரில்லர்களை, துப்பறியும் கதைகளை விரும்பிப் படிப்பவன். பதின்ம வயதில் ஏற்பட்ட மோகம் இன்னும் விடவில்லை. அலிஸ்டர் மக்ளீன் புத்தகங்களை அந்தக் காலத்தில் மிகவும் விரும்பிப் படித்தேன். இன்று மைக்கேல் கானலி, சாரா பாரட்ஸ்கி என்று பலர் இருக்கிறார்கள்.

என்பிஆர் மக்கள் தேர்வுகளாக டாப் 100 த்ரில்லர் பட்டியல் ஒன்றை 2011-இல் வெளியிட்டிருக்கிறது. முன்னும் ஒரு முறை இதைப் பற்றி எழுதி இருக்கிறேன், இந்த முறை பட்டியலில் நான் கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைப்பவற்றை இணைத்திருக்கிறேன்.

வசதிக்காக டாப் டென் கீழே:
1. The Silence of the Lambs by Thomas Harris
2. The Girl with the Dragon Tattoo by Stieg Larsson
3. Kiss the Girls, by James Patterson
4. The Bourne Identity, by Robert Ludlum
5. In Cold Blood, by Truman Capote
6. The Da Vinci Code, by Dan Brown
7. The Shining, by Stephen King
8. And Then There Were None, by Agatha Christie
9. The Hunt for Red October, by Tom Clancy
10. The Hound of the Baskervilles, by Sir Arthur Conan Doyle

இந்தப் பட்டியலில் பாதியை – அதாவது ஐம்பது புத்தகங்களைப் படித்திருக்கிறேன். டாப் டென்னில் ஐந்தைப் படித்திருக்கிறேன். என் கண்ணில் டான் ப்ரவுன், ஜேம்ஸ் பாட்டர்சன் போன்றவர்களைப் படிப்பது வேஸ்ட். டாப் டென் பட்டியலில் And Then There Were None, Hound of the Baskervilles இரண்டையும் பரிந்துரைப்பேன். The Girl with the Dragon Tattoo, Bourne Identity, Hunt for Red October போன்றவற்றைப் படிக்கலாம். முழு பட்டியலில் நான் கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைப்பவை கீழே:

8. And Then There Were None, by Agatha Christie
10. The Hound of the Baskervilles, by Sir Arthur Conan Doyle
19. The Day of the Jackal, by Frederick Forsyth
23. The Count of Monte Cristo, by Alexandre Dumas
28. Presumed Innocent, by Scott Turow
29. The Maltese Falcon, by Dashiell Hammett
32. Gone Baby Gone, by Dennis Lehane
33. Gorky Park, by Martin Cruz Smith
39. The Spy Who Came in from the Cold, by John Le Carre
46. The Manchurian Candidate, by Richard Condon
47. Tinker, Tailor, Soldier, Spy, by John Le Carre
63. Shogun, by James Clavell

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்

பிடித்த சிறுகதை: Bartleby the Scrivener

ஹெர்மன் மெல்வில் எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். அவர் எழுதிய நாவலான மோபி டிக் பெரும் சாதனை. திமிங்கிலம் மோபி டிக், கேப்டன் அஹாப் எந்த இதிகாச நாயகர்களுக்கும் இணையானவர்கள்.

மோபி டிக் மெல்வில்லின் பிற எழுத்துக்களை மங்க வைத்துவிட்டது என்று எனக்கு ஒரு எண்ணம் உண்டு. Bartleby the Scrivener அப்படிப்பட்ட ஒரு சிறுகதை. ஆனால் மெல்வில்லின் மிகப் பிரபலமான சிறுகதை இதுவாகத்தான் இருக்க வேண்டும்.

சிறுகதையை விவரிப்பது கஷ்டம். Immovable Object என்று மட்டும்தான் சொல்லப் போகிறேன், வேறு ஒன்றுமே சொல்வதற்கில்லை.. பார்டில்பி ஒவ்வொரு முறையும் ‘I prefer not to’ என்று சொல்லும்போது என்னால் புன்னகைக்காமல் இருக்க முடிவதில்லை. மற்ற குமாஸ்தாக்களான Turkey மற்றும் Nippers-இன் சித்திரம் எல்லாம் பிரமாதம்தான்; பார்டில்பியை அலுவலகத்திலிருந்து துரத்த முடியாமல் அலுவலகத்தையே மாற்றிக் கொள்ளும் வக்கீலின் சித்திரமும் அபாரமானதுதான். ஆனால் ‘I prefer not to’ என்பதுதான் கதை.

மோபி டிக் தலையணை சைசுக்கு இருக்கும் புத்தகம். படிப்பதற்கான பொறுமை இந்த வயதில் எனக்கு இருக்குமா என்று எனக்கே சந்தேகமாகத்தான் இருக்கிறது.  இத்தாம் பெரிய புத்தகத்தைப் படிக்க உங்களுக்கும் கஷ்டமாக இருந்தால் இந்த் சின்ன சிறுகதையையாவது – நாற்பது ஐம்பது பக்கம் இருக்கும் – படித்துப் பாருங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: ஹெர்மன் மெல்வில் பக்கம்

இரானியத் திரைப்படம் – A Separation

பிபிசி 100 சிறந்த ‘அயல்நாட்டுத் திரைப்படங்கள்’ என்று ஒரு பட்டியலைப் பிரசுரித்திருந்தது. இந்தத் திரைப்படம் – A Separation – நெட்ஃப்ளிக்சில் இருந்ததால் பார்க்க ஆரம்பித்தோம்.

நேராக பாயிண்டுக்கு வந்துவிடுகிறேன். பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன். நல்ல திரைப்படம், நல்ல திரைக்கதை – குறிப்பாக இந்திய வம்சாவளியினருக்கு அப்பீல் ஆகக் கூடிய திரைக்கதை, நம்மால் சுலபமாக ஒன்றக்கூடிய பின்புலம், அயலாகத் தெரியவில்லை. ஆரம்பத்திலிருந்து முடிவு வரை சீராகச் செல்கிறது, இதைத் தவிர்க்கவே முடியாது என்ற உணர்வை ஏற்படுத்துகிறது. அருமையான நடிப்பு.

பாரசீக மொழியில் திரைப்படத்தின் பெயர் – ஜொடாயே நாடர் அஜ் சிமின். நாடர் மற்றும் சிமினின் பிரிவு என்று அர்த்தம். ஜொடாயே என்பது ஜுதாயி/ஜுடாய் என்ற ஹிந்தி/உருது வார்த்தைக்கு அருகில் இருக்கிறது. திரைப்படம் பார்க்கும்போது அங்கும் இங்கும் ஓரிரு வார்த்தைகள் புரிந்தன, அதில் ஒரு சின்ன சந்தோஷம்.

திரைப்படம் நாயகி சிமின் தன் கணவன் நாடரிடமிருந்து விவாகரத்து கேட்கும் காட்சியிலிருந்து ஆரம்பிக்கிறது. ஏன் விவாகரத்து? இருவரும் எங்கோ வெளிநாட்டில் சென்று வேலை செய்ய விசா வாங்கி இருக்கிறார்கள், விசா காலம் முடிவடையப் போகிறது. கணவன் இப்போது வெளிநாடு வர மறுக்கிறான். ஏன் மறுக்கிறான்? அவன் அப்பாவுக்கு அல்சைமர், அவரைப் பார்த்துக் கொள்ளும் கடமை அவனுக்கு இருக்கிறது. இது சின்னக் குடும்பத் தகராறு இதற்கெல்லாம் விவாகரத்து தர முடியாது என்று கோர்ட் மறுத்துவிடுகிறது. சிமின் கோபித்துக் கொண்டு அம்மா வீட்டுக்குப் போய்விடுகிறாள். தான் வேலைக்குப் போகும்போது அப்பாவைப் பார்த்துக் கொள்ள ரசியாவை நாடர் நியமிக்கிறான். சில பல பிரச்சினைகள். ஒரு நாள் நாடர் வீடு திரும்பும்போது அப்பாவைக் கட்டிலில் கட்டிப்போட்டுவிட்டு ரசியா வெளியே போயிருக்கிறாள். அப்பாவுக்கு இழுத்துக் கொண்டிருக்கிறது. திரும்பி வரும் ரசியாவிடம் நாடர் கத்துகிறான், பிரச்சினை முற்றி ரசியாவை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகிறான். ரசியா கர்ப்பவதி – ஆனால் அவளாக யாரிடமும் சொல்லவில்லை, வயிறு இன்னும் தெரியவில்லை. கீழே விழும் ரசியாவுக்கு கருச்சிதைவு. இது இரானில் கொலைக்குற்றமாக கருதப்படுகிறது. மிச்சத்தை வெள்ளித் திரையில் காண்க!

கிரேக்க நாடகங்களைப் படிக்கும்போது, மகாபாரதத்தைப் படிக்கும்போது, எதார்த்தமான செயல்கள் ஒரு துன்பியல் முடிவுக்கு பாத்திரங்களைத் தள்ளுகின்றன என்ற உணர்வு ஏற்படும். சில சமயம் பாத்திரங்கள் அந்த துன்பியல் முடிவைத் தடுகக் என்னதான் முயன்றாலும் அது அவர்களை அந்த முடிவுக்குத்தான் கொண்டு போகும். அந்த பாத்திரங்களின் இயல்பு அப்படித்தான். துரியோதனனைப் பார்த்து சிரித்தால் திரௌபதியின் சேலை உருவப்படுவதை தடுக்க முடியாது. திரௌபதியின் சேலை உருவப்பட்டால் துரியோதனன் தொடை உடைந்து இறப்பது தவிர்க்க முடியாதது. அப்படி ஓர் உணர்வைத்தான் இந்தத் திரைப்படம் ஏற்படுத்தியது. நாடர்-சிமினின் பிரிவு தவிர்க்க முடியாதது. அப்பாவைத் தனியாக விட்டுவிட்டுப் போக வேண்டிய அவசியம் ரசியாவுக்கு ஏற்படுகிறது. அப்படி ரசியா போனால் நாடர் அவளைக் தள்ளுவது தவிர்க்க முடியாதது. அதிலிருந்து விளையும் சிக்கல்கள் எதுவும் தவிர்க்க முடியாதவை.

திரைக்கதை நம்மால் – இந்தியர்களால் உணர்வுபூர்வமாக புரிந்து கொள்ளக் கூடியது. உடல் நலமில்லாத அப்பாவை கூடவே இருந்து பார்த்துக் கொள்ள விரும்பும் மகன். தான் பிரிந்து போகிறேன் என்று சொன்னால் போகாதே என்று கணவன் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கும் மனைவி. மனைவியோடு தகராறு இருந்தாலும் மனைவியின் குடும்பத்தாரோடு சுமுகமான உறவு உள்ள கணவன். கணவனுக்குப் பிரச்சினை என்றதும் தகராறை மறந்துவிட்டு உதவிக்கும் வரும் மனைவி. இருவருக்கும் நடுவில் மாட்டிக் கொண்டு முழிக்கும் பதின்ம வயது மகள். அதீத மத நம்பிக்கை, மதம் இதைத் தவறு என்று நினைத்துவிடுமோ அதைத் தவறு என்று சொல்லிவிடுமோ என்று பயப்படும் பெண். அவளது சிறு குழந்தை. ஒவ்வொரு பாத்திரமும் நமக்குத் தெரிந்தவையே, நம் குடும்பங்களில் பார்ப்பவையே. பிரமாதமான திரைக்கதை.

நடிப்பும் மகா அருமை. நாயகன், நாயகி, பிற பாத்திரங்கள் எல்லாரும் அருமையாக நடித்திருக்கிறார்கள். ஆனால் அந்தப் பதின்ம வயதுப் பெண்ணாக நடிப்பவள் அவர்கள் எல்லாரையும் தூக்கி சாப்பிட்டுவிட்டாள்!

திரைப்படத்தின் இயக்குனர் அஸ்கர் ஃபர்ஹடி. நாயகன் நாடராகா பெய்மான் மோஅடி, நாயகி சிமினாக லைலா ஹடமி, முக்கிய பாத்திரங்களில் ஷஹப் ஹொசேனி, சாரே பயட், சரினா ஃபர்ஹடி நடித்திருக்கிறார்கள். இனி மேல் அஸ்கர் ஃபர்ஹடி இயக்கிய படங்களைத் தேடிப் பார்க்க வேண்டும்.

பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள்

பாதாம்/பிஸ்தாவின் பிஸ்தா – A Kingdom from Dust

கொஞ்சம் நீளமான கட்டுரை. கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

எதைப் பற்றி? தண்ணீர். பெரிய அளவில் விவசாயம் செய்பவர்களுக்கான தண்ணீர் தேவைகள். அது எப்படி பூர்த்தி செய்யப்படுகிறது? இயற்கை வளங்கள் திருடப்படுவதற்கும் பயன்படுத்தப்படுவதற்கும் என்ன வித்தியாசம்?

ஸ்டூவர்ட் ரெஸ்னிக் உலகின் மிகப் பெரிய பாதாம் விவசாயி. பிஸ்தா பருப்பு விவசாயி. பெரிய அளவு திராட்சை, ஆரஞ்சுப் பழம் விவசாயம் செய்பவர். கலிஃபோர்னியாவில் நிறைய விவசாயம் உண்டு, ஆனால் அதன் மிகப் பெரிய விவசாயி இவராகத்தான் இருக்க வேண்டும். கலிஃபோர்னியாவில் தண்ணீர் பிரச்சினை இருக்கும்போதும் இவருக்கு விவசாயம் செய்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. எங்கிருந்து தண்ணீர் கிடைக்கிறது?

நான் மேலே பெரிதாக எழுதப் போவதில்லை. படித்துக் கொள்ளுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்

 

 

வ.உ.சி. சொற்பொழிவு

வ.உ. சிதம்பரம் பிள்ளை கல்வி முறை பற்றி பேசிய இந்த உரை ராட்டை தளத்தில் கிடைத்தது. மிகச் சிறப்பாகப் பேசி இருக்கிறார். அவரது பேச்சில் தெரியும் உண்மை, genuineness என் உள்ளத்தைத் தொட்டது.

சிறைக்குச் சென்று திரும்பி வந்து 1924-இல் வக்கீல் தொழிலில் மீண்டும் ஈடுபட்டபோது கூட மாதம் ஆயிரம் ரூபாய் சம்பாதித்திருக்கிறார். திறமையான வக்கீலாக இருந்திருக்க வேண்டும். எழுபதுகளில் இறுதியில் கூட four figure salary என்பது பெரிய விஷயமாக இருந்தது.

அரசியலைத் தவிர்க்கிறேன் என்று வெளிப்படையாகவே சொல்கிறார். அவர் வார்த்தைகளில்:

அரசியல் விஷயங்களைக் குறித்து நான் ஒன்றும் இப்பொழுது அதிகமாய்ப் பேசுவதில்லை. சாரமாகச் சொல்வதுண்டு. அரசியலைப் பற்றிப் பேச நண்பர்களான திரு ரங்கசாமி ஐயங்கார், சத்தியமூர்த்தி அவர்களே தகுதியுடையவர்கள். ஏனென்றால், சில சமயங்களில் பொய் பேச நேரலாம், புகழும்படி நேரலாம். எனவே நான் அதற்குச் சிறிதும் அருகனல்ல. நான் பேசினேனானால் “ஸ்பிரிட்’ உண்டாகிவிடும். உடனே என் மனதில் உள்ளன எல்லாம் வெளியில் வந்துவிடும்.

உடனே இன்னும் நான்கு வருஷமோ, நாற்பது வருஷமோ, ஜெயிலுக்குப் போகவேண்டுவதுதான். பின்னர் என் பெண்டாட்டி, பிள்ளைகளெல்லாம் சாப்பாட்டிற்குத் திண்டாட வேண்டியதுதான்.

கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.வசதிக்காக முழு உரையையும் கீழே கட் பேஸ்ட் செய்திருக்கிறேன். ராட்டை தளத்திற்கு நன்றி!

கல்வி முறையும் பெண்கள் சீர்திருத்தமும்

வ. உ. சிதம்பரம் பிள்ளை

(13.3.1928 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்குக் காரைக்குடி காந்தி செளக்கத்தில் சிவஞான யோகிகள் தலைமையில் ஆற்றிய சொற்பொழிவு.)

தலைவர்களே! சீமான்களே! சீமாட்டிகளே! நமது தேசத்தில் இப்பொழுது கல்வி கற்பிக்கும் முறை பொருத்தமானதாயில்லை. அதனைச் சீர்திருத்தி நன்னிலைக்குக் கொண்டு வரத் தலைவர்கள் ஆராய்ந்து முடிவு செய்திருக்கிறார்கள், அம்முடிவை நீங்கள் நன்கு ஆராய்ந்து நன்மையெனத் தோன்றும் பட்சத்தில் அதனைக் கவர்மெண்டு கலாசாலைகளிலும் ஸ்தல ஸ்தாபனங்கள் ஏற்படுத்தியுள்ள கலாசாலைகளிலும் நடைமுறைக்குக் கொண்டு வர முயற்சியுங்கள். புதிதாக ஏற்படுத்தப் பெறும் கலாசாலை, பாடசாலைகளிலும் இத்திருத்தங்களைச் செய்ய வேண்டும்.

நம் தேசத்தினர் கலாசாலைகளில் படித்து வெளிவந்தவுடன் கவர்ன்மெண்டு உத்தியோகங்கட்கும், கிளர்க்கு வேலைகட்கும் முயற்சி செய்கின்றனர். அவர்கள் அவ்வேலைகட்கன்றி வேறு வேலைகட்கு உபயோகமானவர்களாக இருக்கவில்லை. கவர்ன்மெண்டிலும் எத்தனை பேருக்குத்தான் உத்தியோகம் கிடைத்தல் கூடும்?

இந்தியாவில் ஸ்கூல் ஃபைனல் பரீட்சையில் தேறியவர்கட்கு எத்தனை பேருக்கு உத்தியோகம் கிடைக்கிறதென்று கணக்கிட்டால், ஆயிரத்துக்கு ஒரு பேரும், எப்.ஏ., பி.ஏ., எம்.ஏ.க்களில் ஆயிரத்துக்கு இருபத்தைந்து பேருக்குமேல் உத்தியோகம் கிடைப்பதில்லை. மற்றவர்க்குப் பிழைப்புக்கு வழியில்லாமலிருக்கிறது.

வக்கீல் உத்தியோகத்தில் எனக்குள்ள அனுபவத்தைக் கூறுகிறேன். 1924ஆம் வருஷத்தில் மீண்டும் நான் வக்கீல் தொழிலில் புகுந்தேன். அப்போது சராசரி மாதம் ரூபாய் ஆயிரம் எனக்கு வரும்படி வந்தது. அவ்வமயம் இருபது வக்கீல்கள் என்னுடனிருந்தனர். இப்பொழுது நாற்பது வக்கீல்கள் இருக்கின்றனர். எனவே, இப்பொழுது மாதம் ரூபாய் நானூறு, ஐநூறுதான் வருகின்றது. பிராமணர், பிராமணரல்லாதார் சண்டைக்குக் காரணம் உத்தியோகமென்றே கூறலாம்.

தொழிற்கல்வி:

நமது கலாசாலைகளில் தொழிற்கல்வி கற்பிக்க வேண்டும். பணமுள்ளவர்கள் தேசச் சரித்திரம், பூகோள சாஸ்திரம், தத்துவ சாஸ்திரம் முதலியவைகளில் தேர்ச்சி பெறுதற்கு வேண்டிய கல்வியைக் கற்கலாம், சாதாரண மாணவர்கள் எல்லோரும் நன்கு எழுதவும், பேசவும். அவசியமானால் உபந்யாசம் செய்யவும் வேண்டிய கல்வியைக் கற்பதோடு, தொழிற் கல்வியையும் கற்க வேண்டும், தந்தி வாசிக்கும் அளவு ஆங்கிலமும் கற்றுக்கொள்ள வேண்டும். விவசாயம், கைத்தொழில் ஆகியவற்றை மாணவர்கட்குப் போதிக்க வேண்டும்.

நன்செய், புன்செய், தோட்டம் ஆகியவற்றில் மாணவ மாணவிகளுக்குப் பயிற்சியளித்தல் அவசியமாகும். எல்லா விஷயங்களிலும் அவர்களை ஆலோசித்துச் செய்தல் அவசியமாகும், ஆனால் அவர்கள் அதற்குத் தகுதியுடையவர்களா என்று பார்க்கின், இல்லை. ஏன்? அவர்கட்குக் கல்வி இல்லாமையே. எனவே பெண்கட்குக் கல்வி கற்பிக்க வேண்டியது அவசியமாகும்.

புஞ்சை, நஞ்சைகளில் வேலை செய்வதற்குக் கூட கல்வி அவசியமாவெனக் கேட்கலாம். இருபது வயது வரை வெயிலில் நின்று வேலை செய்யாத பழக்கத்தால், இருபது வயதுக்கு மேல் நஞ்சை, புஞ்சை ஆகியவற்றில் வேலை செய்தல் கஷ்டமாக இருக்கின்றது. எனவே, சிறு வயதிலேயே அப்பயிற்சியை அளித்தல் வேண்டும்.

நான் ஜெயிலில் இருக்கும் பொழுது மீண்டும் வக்கீல் தொழில் செய்வதில்லையென்று சத்தியமும் செய்து கொண்டதுண்டு. ஆனால் வெளியில் வந்து பத்திரிகை ஆஃபீசில் உதவி ஆசிரியனாக இருந்தேன். நெய் வியாபாரம் செய்தேன். ஆனால் ஒன்றும் சரிப்பட்டு வரவில்லை.

எனக்கு நிலங்கள் உண்டு. எனினும், சிறு போழ்தில் வெயிலில் வேலை செய்து பழக்கமின்மையால், விவசாயம் செய்து ஜீவிக்க முடியவில்லை. என் மனைவி மக்களும் அவ்வாறே இருக்கின்றார்கள். என் செய்வது!

இனி, கலாசாலைகளில் ஒரு மணி நேரம் தொழிற் கல்வியும் கற்பித்தல் வேண்டும். கைத்தொழில், விவசாயம் ஆகியவற்றைக் கட்டாயப் பாடமாக வைத்தல் அவசியமாகும்.

ஆதித்திராவிடர்கள்:

நேற்று ஸ்ரீமான் மெய்யப்ப செட்டியார் (ஜெயங்கொண்டபுரம் மெ.ராம. மெ.) அவர்களால், ஆதித் திராவிடர்களுக்காக வைக்கப் பெற்றிருக்கும் பள்ளிக் கூடத்தையும், மேல் ஜாதியாருக்காக வைக்கப் பெற்றிருக்கும் பள்ளிக் கூடத்தையும் பார்த்தேன். ஆதித் திராவிட பள்ளிப் பிள்ளைகட்கு வேட்டி வாங்கிக் கொடுக்கிறார்கள். இன்னும் வேண்டும் சௌகரியங்களைச் செய்து கொடுக்கிறார்கள். எனினும் அங்குக் கொடுக்கப்படும் கல்வி முறையைக் கண்டபொழுது எனக்கு ஒரு சந்தேகமுண்டாயிற்று. அதனை இங்கும் தெரிவிக்கிறேன்.

தனவைசியர்கட்குப் பணமுடை இல்லாதிருக்கலாம். அவர்கள் நாற்பதினாயிரம் ஜனங்கள்தான், மற்ற ஜனங்கள் அவ்வாறில்லை, எனவே, அவர்களுக்குத் தொழிற்கல்வி போதிக்க வேண்டும். அத்தொழிலில் வரும் வரும்படியை அவர்கள் பெற்றோர்கட்குக் கொடுத்துவிடலாம். ஆதித் திராவிடர்கள் நன்கு படித்துவிட்டாலும் உத்தியோம் கிடைத்தாலல்லாவா சாப்பிட்டுக் கொண்டிருக்க முடியும்?

படித்தவர்கள் எல்லோருக்கும் உத்தியோகம் கிடைத்துவிடுமா? ஒவ்வொரு கலாசாலையிலும், குருகுலம் போல தோட்டம், நன்செய், புன்செய் முதலியன ஏற்படுத்தித் தொழிற்கல்வி போதிக்க வேண்டும்.

ஆதித் திராவிட மாணவர்கட்குப் பன்னிரண்டு மணி வரை விவசாயமும், அதற்குமேல் பாஷா ஞானமும் போதிப்பது மேன்மை தரும். பணமில்லாமல் ஒருவனும் ஒரு வேலையும் செய்ய முடியாது. தரித்திரனாக ஒருவன் இருப்பானாயின் அவன் அறிவு திறம்பட வேலை செய்வதில்லை. அரசாங்கத்தாரால் அனைவருக்கும் உத்தியோம் கொடுக்க முடியுமா என்பது பற்றி நான் ஒன்றும் கூற முடியாது.

அரசியல் விஷயங்களைக் குறித்து நான் ஒன்றும் இப்பொழுது அதிகமாய்ப் பேசுவதில்லை. சாரமாகச் சொல்வதுண்டு. அரசியலைப் பற்றிப் பேச நண்பர்களான திரு ரங்கசாமி ஐயங்கார், சத்தியமூர்த்தி அவர்களே தகுதியுடையவர்கள். ஏனென்றால், சில சமயங்களில் பொய் பேச நேரலாம், புகழும்படி நேரலாம். எனவே நான் அதற்குச் சிறிதும் அருகனல்ல. நான் பேசினேனானால் “ஸ்பிரிட்’ உண்டாகிவிடும். உடனே என் மனதில் உள்ளன எல்லாம் வெளியில் வந்துவிடும்.

உடனே இன்னும் நான்கு வருஷமோ, நாற்பது வருஷமோ, ஜெயிலுக்குப் போகவேண்டுவதுதான். பின்னர் என் பெண்டாட்டி, பிள்ளைகளெல்லாம் சாப்பாட்டிற்குத் திண்டாட வேண்டியதுதான்.

பொருளில்லாமல் ஒரு வேலையும் செய்ய முடியாது. அதற்குத் தொழிற்கல்வி, விவசாயம் கற்பிக்க வேண்டியது அவசியமாகும். சட்டசபை மெம்பர்களிடம் சொல்லிக் கட்டாயமாக விவசாயம், கைத்தொழில் ஆகியவற்றைப் போதிக்க வேண்டுமென்று மசோதா கொண்டு வரச் செய்யுங்கள். அதனை அவர்கள் செய்யாவிட்டால், அடுத்த தேர்தலில் அவர்கட்கு ஓட்டுக் கொடுக்காதீர்கள்.

தனவைசியர்கள் கலாசாலை போன்றவைகளுக்குப் பொருள் நல்குவது சந்தோஷத்தைத் தருகின்றது. ஆனால், பணத்தைப் பிறரிடம் தொடுத்தால் எடுத்துக் கொண்டு விடுவார்களோ என்று பயப்படக் கூடாது. எனினும் வறுமையுடையவனிடம் பணப் பொறுப்பை விடுதல் தகாது. ஏனெனில், தனக்குத் தேவையிருக்கும்போது அப்பணத்தை உபயோகப்படுத்திவிடுவான்.

பெண் மக்கள் நிலை:

நம் நாட்டில் பெண் மக்களைச் சமைக்கும் இயந்திரமாகச் செய்து விட்டனர். இந்நாட்டில் இது இல்லையென எண்ணுகிறேன். பிள்ளை பெறும் இயந்திரமாக அனைவருமே செய்துவிட்டோம். நம்மைப் போல் பெண்கட்கும் சமஉரிமை இருத்தல் வேண்டும். எல்லா விஷயங்களிலும் அவர்களை ஆலோசித்துச் செய்தல் அவசியமாகும். ஆனால், அவர்கள் அதற்குத் தகுதியுடைவர்களா என்று பார்க்கின், இல்லை. ஏன்? அவர்கட்குக் கல்வி இல்லாமையே. எனவே பெண்கட்குக் கல்வி கற்பிக்க வேண்டியது அவசியமாகும்.

இந்நாட்டில் மனைவியோடு பேசுவது கஷ்டமென்று எனது நண்பர் சொன்னார். இது மிக மோசமானது. பெண்களும் தங்கள் கணவர்களை நன்கு மதித்து நடக்க வேண்டும்.

எச்சில் இலையில் சாப்பிடும் வழக்கம் எங்கள் ஜாதியில் உண்டு. இங்கு உண்டோ என்னமோ தெரியவில்லை. (உண்டு, உண்டு என்று ஜனங்கள் கூறினர்.) பிராமண வீட்டிலும் இருக்கிறதா? (இருக்கிறது என்றனர்.) நாகரிகமில்லாதவர் என்பவரிடத்தில்கூட இக்கொடுமை இல்லை.

அயலூருக்கு விருந்துக்குப் போயிருந்தாலும், ஆயிரம் பேர் சாப்பிட்ட இலைகளில் என் இலையைத் தேடிப் பார்த்து அதிலேயே என் மனைவி சாப்பிடவேண்டும். அதில் மண் விழுந்திருக்கும். இன்னொருவருடைய இலையில் அப்பளங்கள் விழுந்திருக்கலாம். அவைகளைக் கவனிப்பதில்லை. எச்சில் இலையை நாய்களன்றோ தின்னும்? முருங்கைக் காயைக் கடித்து மென்று தின்று விட்டுத் துப்பியிருப்பேன்; (சிரிப்பு) அதில் உண்ண வேண்டும், அப்படி இல்லாவிட்டால் புருஷன் மேல் பற்றில்லாதவளென்று கூறப்படுகிறது. எச்சிலிலையில் சாப்பிடாவிட்டால், “புருஷன் இலையில் சாப்பிடாத தேவடியாள்’ என்று சொல்லுகின்றனர்.

எனக்குக் கல்யாணம் ஆனது முதல், எச்சில் இலையில் உண்ணக் கூடாது என்று என் மனைவிக்கு உத்தரவிட்டு விட்டேன். பெண்கட்கும் சம சுதந்திரம் கொடுக்க வேண்டும். ஆனால், கல்வி இல்லாத அக்காலத்தில் தீர்ப்பளிக்கும் உரிமை புருஷனிடம் இருக்க வேண்டும். உரிமை பெறப் பெண்கள் போராடுதல் வேண்டும்.

பத்திரிகைச் சண்டை:

உள்ளூர் சம்பந்தமாக ஒன்று கூற விரும்புகிறேன். தனவைசியர்களால் நடத்தப்படும் இரண்டு பத்திரிகைகள் கொடிகட்டிச் சண்டையிட்டுக் கொள்கின்றன. அதனை நான் லேசாக நினைத்தேன். பிச்சப்பா சுப்பிரமணியன் செட்டியார், “குமரன்’ ஆசிரியருக்கும் ‘ஊழியன்’ ஆசிரியருக்கும் நண்பர். பார்க்கும் பொழுது இருவரிடத்திலும் ஒரே விதமான அன்பிருக்கிறதாகவே தோன்றுகின்றது. அவர் தலையிட்டால் இச்சண்டையை ஒழித்து விடலாம். ஆனால் அவர்கள் இருவர்களையும் சமாதானப் படுத்தமுடியாதென்று சொல்லுகிறார்கள். சந்தாதார்கள் கூட்டம் போட்டு இம்மாதிரி ஒருவருக்கொருவர் சொந்தச் செய்திகளைக் குறித்துச் சண்டையிட்டுக் கொள்வதைத் தடுக்க வேண்டும். குமரனில் ‘இதோடு முடித்து விட்டோம்’ என்ற குறிப்பைப் படித்துப் பார்த்தேன்.

இதழ்: திராவிடன், 15.3.1928

 

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

கவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது

பழைய செய்திதான். கவிஞர் அபிக்கு இந்த வருஷத்திற்கான விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டிருக்கிறது.

அபியின் கவிதைகளைப் பற்றி ஏதாவது எழுத முடியும்போது விருது வழங்கப்படுவதைப் பற்றி எழுதலாம் என்று நினைத்திருந்தேன். நாள் செல்லச் செல்ல அபி எனக்கான எழுத்தாளர் அல்லர் என்ற எண்ணம்தான் உறுதிப்படுகிறது. சில சமயம் அப்படித்தான். காஃப்கா எனக்கான எழுத்தாளர் அல்லர், அது காஃப்காவின் குறை அல்ல, எனது குறையே. அதனால் இது தகவல் பதிவு மட்டுமே.

அபியின் இயற்பெயர் ஹபிபுல்லா. கல்லூரி பேராசிரியராக பணி புரிந்திருக்கிறார். அவரோடு பழகியவர்களும் சரி, அவர் எழுத்தைப் புரிந்து கொள்பவர்களும் சரி அவரை விதந்தோதுகிறார்கள்.

விஷ்ணுபுரம் விருது குழுவினரை இரண்டு விஷயங்களுக்காகப் பாராட்ட வேண்டும். அபி போன்றவர்கள் குடத்திலிட்ட விளக்காகத்தான் இருந்திருக்கிறார்கள், அவரை கொஞ்சம் வெளியே தெரிய வைத்திருக்கிறார்கள், அவரது கவிதைகளைப் பலரையும் புரட்டியாவது பார்க்க வைத்திருக்கிறார்கள். அதுவும் என்னைப் போன்ற கவிதை புரியாத ஞானசூன்யங்கள் அவர் பெயரைக் கூட முன்னால் கேட்டதில்லை, எனக்கும் தெரிய வைத்திருக்கிறார்கள். இரண்டாவது, விருது விழாவுக்கு ஆறேழு மாதம் முன்னால் விருதைப் பற்றி அறிவிக்கிறார்கள், அது சில பல மாதங்களுக்கு அந்த எழுத்தாளரை பொதுப் பிரக்ஞைக்கு கொண்டு வருகிறது.

கவிஞர் அபிக்கும் விஷ்ணுபுரம் குழுவினருக்கும் வாழ்த்துக்கள்!

தொகுப்பட்ட பக்கம்: விருதுகள்

தொடர்புடைய பக்கம்: அபியின் கவிதைகள் சில

Ballad of Buster Scruggs

Ballad of Buster Scruggs என்ற திரைப்படத்தை சமீபத்தில் பார்த்தேன். சுமாரான திரைப்படம். பல Western genre திரைக்கதைகளை வைத்து தொகுப்பாக எடுக்கப்பட்டது. ஆனால் அதில் வரும் சில பகுதிகளின் மூலக்கதைகளைப் படிக்க வேண்டும் என்ற ஆவலைக் கிளப்பியது.

All Gold Canyon பகுதி ஜாக் லண்டன் எழுதிய சிறுகதையை அடிப்படையாகக் கொண்டது. நல்ல சிறுகதை. மண்ணில் கலந்திருக்கும் தங்கத்தைத் தேடும் prospectors Western genre-இல் வரும் ஒரு archetype. அந்தச் சித்திரத்தை அருமையாக லண்டன் விவரித்திருக்கிறார். மாதக் கணக்காக சக மனிதரையே சந்திக்காமல் பூமிக்குள் இருக்கும் தங்கத்தைத் தேடும் கொஞ்சம் வயதான miner, அவனைக் கொன்று அவன் உழைப்பின் பயனைத் திருட நினைப்பவன், எல்லாவற்றுக்கும் மேலாக Mr. Pocket – அதாவது தங்கம் கனிமமாக மண்ணில் மறைந்திருக்கும் இடம். திரைப்படம் அந்த நிலப்பரப்பைக் காட்சியாகக் காட்டுவது இன்னும் அருமையாக இருக்கிறது. சிறுகதையைப் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

The Girl Who Got Rattled பகுதியும் நல்ல சிறுகதையை அடிப்படையாகக் கொண்டது, ஆனால் திரைப்படமாகப் பார்ப்பது இன்னும் நல்லது. சிறுகதையை எழுதியவர் Stewart Edward White. டென்ஷனையும் அந்தப் பெண் எடுக்கும் முடிவும் இன்னும் தெளிவாகப் புரிகிறது. இந்தச் சிறுகதையையும் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

திரைப்படம் எல்லாருக்கும் அப்பீல் ஆகுமா என்று தெரியவில்லை. ஆனால் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள்