2018 பரிந்துரைகள்

2018-இல் நான் படித்தவற்றில், மீண்டும் படித்தவற்றில், நினைவு கூர்ந்தவற்றில் பரிந்துரைப்பவை கீழே. எட்டு மாதம் லேட்!

தமிழ்:

ஆங்கிலம்:

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்

பெர்டோல்ட் ப்ரெக்ட் எழுதிய கவிதை

இந்தக் கவிதையை ஜெயமோகன் தளத்தில்தான் பார்த்தேன் என்று நினைவு. படித்தவுடன் புன்னகைக்க வைத்தது, ஒரு நிமிஷம் ஏன் இப்படி ஓடிக் கொண்டே இருக்கிறோம் என்று நினைக்க வைத்தது. ஹேமாவுக்கும் பிடித்திருந்தது.

I sit by the roadside
The driver changes the wheel.
I do not like the place I have come from.
I do not like the place I am going to.
Why with impatience do I
Watch him changing the wheel?

பெர்டோல்ட் ப்ரெக்ட் என் மனம் கவர்ந்த நாடக ஆசிரியர்களில் ஒருவர். Life of Galileo, Mother Courage and Her Children, The Good Women of Szechwan, Caucasian Chalk Circle போன்ற நாடகங்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. கவிதை எல்லாம் எழுதுவார் என்று தெரியவே தெரியாது. 🙂

தொகுக்கப்பட்ட பக்கம்: பெர்டோல்ட் ப்ரெக்ட் பக்கம்

ஜார்ஜ் ஆர்வெல்லின் கட்டுரை – Shooting an Elephant

நாம் – குறிப்பாக இந்தியர்கள் – எப்போதும் காலனியத்தை பாதிக்கப்பட்டவர்களின் கண்ணோட்டத்தில்தான் பார்க்கிறோம். எப்போதாவது பாதித்தவர் கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால் அனேகமாக அவர்கள் நம்மை அடிமைப்படுத்துவதில் எந்தத் தவறும் காணாதவர்கள், மேட்டிமை மனநிலை கொண்டவர்கள், நம்மை எப்போதுமே இரண்டாம்தர மனிதர்கள் என்று நினைப்பவர்கள். மிக அபூர்வமாக அது தவறு என்று உணர்பவர்கள், அதைத் திருத்தப் போராடுபவர்கள். ஆனால் கணிசமானவர்கள் அது தவறு என்று உணர்ந்தும் அதற்காக ஒன்றும் செய்ய முடியாத கையாலாகதவர்கள். அவர்களுக்கு இந்தப் பக்கமும் போக முடியாது, அந்தப் பக்கமும் போக முடியாது. பீஷ்மரும் துரோணரும் தவறு என்று தெரிந்தும் கௌரவர்களுக்காக போராடுவதைப் போன்ற மனநிலைதான்.

அந்தக் கண்ணோட்டம் ஜார்ஜ் ஆர்வெல்லின் இந்தக் கட்டுரையில் – Shooting an Elephant – சிறப்பாக வெளிப்படுகிறது. யானை ஊரை நாசம் செய்கிறது. வெள்ளைக்கார துரைதான் பிரச்சினையை சமாளிக்க வேண்டும். துரை துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வருவதற்குள் யானை அமைதி அடைந்துவிடுகிறது. ஆனால் துரை யானையைக் கொல்வதைப் பார்க்க ஊரே கூடி இருக்கிறது. துரைக்கு யானையைக் கொல்லவும் மனதில்லை, ஆனால் கொல்லாமல் போனால் ஊரே சிரிக்கும். துரை என்ன செய்வார்?

ஆர்வெல் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். 1984, Animal Farm போன்ற பிரமாதமான, நல்ல நாவல்களை எழுதி இருக்கிறார். ஆனால் எனக்கு மிகவும் பிடித்தது அவர் எழுதிய Homage to Catalonia என்ற அபுனைவுதான்.

கட்டுரையைப் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜார்ஜ் ஆர்வெல் பக்கம்

வார்த்தைகளின் ரிஷிமூலம்

Boycott என்ற வார்த்தையை எல்லாரும் பயன்படுத்துகிறோம். அந்த வார்த்தை எப்படி உபயோகத்தில் வந்தது? சார்லஸ் பாய்காட் என்று ஒரு மிராசுதார் அயர்லாந்தில் இருந்திருக்கிறார். 1880 வாக்கில் அவரது குத்தகைக்காரர்களுடன் வரித் தகராறில் அவரை எல்லாரும் boycott செய்திருக்கிறார்கள். வார்த்தை பிறந்துவிட்டது!

இப்படி இன்னும் பல வார்த்தைகளின் ரிஷிமூலத்தைப் பற்றி இந்தக் கட்டுரை பேசுகிறது. படித்துப் பாருங்கள்!

Dude, grotesque, silhoutte, surreal பற்றிய anecodotes-ஐ ரசித்தேன். Yankee Doodle Dandy என்ற பிரபலமான பாடலிலிருந்து – Doodle என்ற வார்த்தையிலிருந்து Dude பிறந்திருக்கிறது. Grotesque என்றால் விகாரம் என்று ஏறக்குறைய பொருள் வருகிறது, ஆனால் அது grotto என்ற வார்த்தையிலிருந்து பிறந்தது. Silhoutte அதிசயமான வார்த்தை. ஃப்ரான்சின் பதினான்காம் லூயி மன்னன் காலத்தில் Étienne de Silhouette என்ற மந்திரி கடுமையான வரிகளை விதித்திருக்கிறார். இருப்பதை எல்லாம் பிடுங்கிவிட்டால் மிஞ்சுவது வெறும் நிழல், வடிவம் மட்டுமே – அதாவது silhoutte! Surreal – real அற்றது!

உங்களுக்கு நினைவு வரும் வார்த்தைகளின் மூல காரணத்தைப் பற்றி சொல்லுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்

முதல் துப்பறியும் கதைகள் – எட்கர் ஆலன் போ

துப்பறியும் கதைகள் இன்று உலகம் முழுதும் பிரபலம். ஷெர்லக் ஹோம்ஸ் என்ற பேரைக் கேள்விப்படாதவர்கள் மிக அபூர்வம்தான். அப்படிப்பட்ட துப்பறியும் கதைகளை முதலில் எழுதியவர் யார்?

எட்கர் ஆலன் போ முதல் துப்பறியும் கதைகளை எழுதினார் என்பது உங்களை வியப்படைய வைக்கலாம். போ அமெரிக்க இலக்கியத்தில் முக்கியமான இடம் வகிப்பவர். பொதுவாக இலக்கியத்தரம் வாய்ந்த அமானுஷ்ய திகில் கதைகளை (Gothic genre) எழுதிய முன்னோடி என்று கருதப்படுகிறார். கவிதை Raven, சிறுகதைகள் Cask of Amontillado, Fall of the House of Usher, Tell-Tale Heart போன்றவை அவரது சாதனைகளாகக் கருதப்படுகின்றன.

திகில் கதைகளிலிருந்து துப்பறியும் கதைகளுக்கு தூரம் அதிகமில்லை. அதுவும் உலகின் முதல் துப்பறியும் கதையான Murders in the Rue Morgueயை (1841) திகில் கதை என்றும் பகுக்கலாம். அதை துப்பறியும் கதை என்று வகைப்படுத்துவதற்கான முக்கிய காரணம் – முதன்முதலாக துப்பறியும் நிபுணர் என்று ஒரு பாத்திரம், அவருடைய நண்பர்/உதவியாளராக ஒரு பாத்திரம் (முதன் ஷெர்லக் ஹோம்ஸ்-வாட்சன் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.), ஒரு மர்மம், அதைப் பற்றிய விவரங்கள், சாட்சியங்கள், சாட்சியங்களை வைத்து யார் குற்றவாளி இல்லை, யார் குற்றவாளி என்ற முடிவுக்கு அறிவுபூர்வமாக வருவது என்று துப்பறியும் கதைகளின் வடிவ அமைப்பு கச்சிதமாக அமைக்கப்பட்டிருப்பதுதான். Locked Room Mystery (அதாவது, பூட்டப்பட்ட அறைக்குள்ளே கொலை – கொலையாளி வந்தது எப்படி, வெளியே போனது எப்படி என்று குழப்பம்) என்ற sub-genre-இல் எழுதப்பட்ட முதல் கதையும் இதுதான்.

Rue Morgue இன்று படிக்க சுலபமாக இருக்குமா என்று எனக்கு சந்தேகம்தான். போவுடைய நடை கொஞ்சம் பழையதாகிவிட்டது. அதுவும் இழுத்து நீட்டித்தான் முடிவுக்கு வருவார். அதுவும் இத்தகைய முடிவுக்கு வருவது இயலாத காரியம். ஆனால் முன்னோடி துப்பறியும் சிறுகதை. சாதனை.

போவுடைய பழையதான நடை ஒரு பொருட்டே அல்ல என்று உணர வைக்கும் சிறுகதை Purloined Letter (1844). சிறு வயதில் குங்குமத்திலோ குமுதத்திலோ அதன் மொழிபெயர்ப்பைப் படித்திருக்கிறேன். அதன் denouement அன்றும் சரி, இன்று மீண்டும் படிக்கும்போதும் சரி, அட என்று வியக்க வைப்பது. இது வரை படித்ததில்லை என்றால் கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

இந்தக் கதைகளின் துப்பறியும் நிபுணர் டூபின் (C. Auguste Dupin). ஷெர்லக் ஹோம்ஸ் சிறுகதை ஒன்றில் டூபினைப் பற்றிக் குறிப்பிடுவார். டூபின் Mystery of the Marie Roget (1842) கதையிலும் துப்பறிவார். இந்தச் சிறுகதை நிஜக்கொலை ஒன்றை அடிப்படையாகக் கொண்டது.

டூபின் இல்லாத துப்பறியும் கதை Gold Bug. இந்தச் சிறுகதையை 15, 16 வயதில் படித்தேன். அந்த வயதில் மிகவும் மகிழ்ச்சி தந்த சிறுகதை. cipher-இல் எழுதப்பட்ட செய்தியை ஆங்கில மொழியின் அடிப்படையை வைத்து என்ன செய்தி என்று நாயகன் கண்டுபிடிப்பான். பிற்காலத்தில் எழுதப்பட்ட புகழ் பெற்ற ஷெர்லக் ஹோம்ஸ் சிறுகதையான Dancing Men-இன் மூலக்கரு இந்தச் சிறுகதையிலிருந்து பெறப்பட்டதுதான்.

டூபின் இல்லாத இன்னொரு துப்பறியும் கதை Thou Art the Man (1850). நல்ல மர்மக் கதை என்று சொல்லமாட்டேன், ஆனால் முன்னோடி துப்பறியும் கதை. இதில் உள்ள உத்தி மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுவது.

போவின் தாக்கம் பெரியது, உலகளாவியது. ஆனால் எனக்குத் தெரிந்து போவின் பாணியில் எழுதியவர்கள் இலக்கியம் படைக்கவில்லை. சமீபத்தில் ஜப்பானிய எழுத்தாளர் எடோகாவோ ரான்போ போவின் பாணியில் எழுதிய சிறுகதைத் தொகுப்பு கூட ஒன்று கிடைத்தது. ‘எடோகாவோ ரான்போ’ என்பது ஜப்பானிய மொழியில் ‘எட்கர் ஆலன் போ’ என்பதின் மருவிய வடிவம், அதையே ராம்போ தனது புனைபெயராக வைத்துக் கொண்டிருக்கிறார். ராம்போ போவின் பாணியை முழுமையாகக் கடைப்பிடிக்கிறார், ஆனால் அவை எதுவும் என் கண்ணில் இலக்கியம் இல்லை. ஆனால் ஜப்பானில் திகில் கதைகள், துப்பறியும் கதைகளின் தந்தையாகக் கருதப்படுபவர் ரான்போதான்.

தொகுக்கப்பட்ட பக்கம்: எட்கர் ஆலன் போ பக்கம்