அறியப்படாத எழுத்தாளர் – எக்பர்ட் சச்சிதானந்தம்

(மீள்பதிவு)

இந்த வாரம் சிறுகதை வாரம்.

பதிவுகளுக்கு விடுமுறை விட்டிருந்த காலத்தில் எக்பர்ட் சச்சிதானந்தத்தின் சில சிறுகதைகளைப் படிக்க முடிந்தது. இதற்கு முன் இவரைப் பற்றி அதிகம் கேள்விப்பட்டதில்லை. குறைவாகத்தான் எழுதி இருக்கிறார் என்று நினைக்கிறேன், ஆனால் கிடைத்த நாலு சிறுகதைகளும் பிரமாதமானவை.

egbert_sachidanandamஎக்பர்ட் சச்சிதானந்தத்தின் பெயரை நான் முதன்முதலாக கேள்விப்பட்டது ஜெயமோகனின் சிறந்த தமிழ் சிறுகதைகள் பட்டியல் மூலமாகத்தான். (ஆனால் ஜெயமோகன் தனிப்பட்ட உரையாடல் ஒன்றில் இந்தப் பட்டியல் தனது ரசனையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டதல்ல, மாறாக திறனாய்வாளன் என்று அவர் மனதில் இருக்கும் பிம்பத்தினால் உருவாக்கப்பட்டது என்று சொன்னார் என்பதை பதிவு செய்கிறேன்.) சச்சிதானந்தத்தின் நுகம், ஃபிலிப்பு என்ற இரு சிறுகதைகளை ஜெயமோகன் தனது பட்டியலில் சேர்த்திருந்தார். நுகம் எஸ்.ரா.வின் நூறு சிறந்த தமிழ் சிறுகதைகள் பட்டியலிலும் இடம் பெறுகிறது.

நுகத்தைப் படிக்கும்போதே இவர் செங்கல்பட்டு – காஞ்சிபுரம் பகுதிகளில் பள்ளி ஆசிரியராக பணி புரிபவர் என்று அனேகமாகத் தெரிந்துவிட்டது. என் பெற்றோர்கள் இருவரும் அந்தப் பகுதிகளில் பள்ளி ஆசிரியர்களாகப் பணியாற்றியவர்கள், மாற்றல் வந்து மாற்றல் வந்து நாங்களும் சில பல ஊர் தண்ணீர் குடித்திருக்கிறோம். பாம்பின் கால் பாம்பறியாதா என்ன? பிறகு அவரைப் பற்றி இணையத்தில் தேடி அந்த யூகத்தை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டேன்.

அதிகமாகத் தெரியாத எழுத்தாளர். இணையத்தில் கூட பெரிய விவரங்கள் கிடைக்கவில்லை. ஒரு தளம் ஆரம்பித்து நிறுத்திவிட்டார் என்று தெரிகிறது. தளத்தில் ஒரு பதிவில் இலக்கியங்களை மேற்கோள் காட்டி இருப்பதைப் பார்த்தால் தமிழாசிரியராக இருப்பாரோ என்று தோன்றுகிறது. நல்ல எழுத்தாளர்களைத் தேடித் தேடி அறிமுகப்படுத்தும் ஜெயமோகன் கூட இவரைப் பற்றி எதுவும் எழுதியதாகத் தெரியவில்லை. காஞ்சிபுரம் இலக்கிய வட்டம் நாராயணனைப் பற்றிய ஒரு பதிவில் புத்தகங்களை நாராயணன் பணம் வராது என்று தெரிந்தாலும் கடனுக்குக் கொடுப்பார், செலவை சில சமயம் சச்சிதானந்தம் ஏற்றுக் கொள்வார் என்று ஒரு வரி வருகிறது, அவ்வளவுதான். அந்த வரியிலிருந்து சஹிருதயராக இருப்பார் என்று நினைக்கிறேன்.

நுகம் நல்ல சிறுகதை, ஆனால் என் anthology-யில் வராது. ஏழை ஏழை என்று உருகிய ஏசுவின் பேரால் அமைந்த மதம் எப்படி ஏழைகளை ஒதுக்குகிறது என்று casual ஆகக் காட்டிவிடுகிறார். அமைப்பு என்று ஒன்று ஏற்பட்டுவிட்டாலே லட்சியங்கள் மதிப்பிழந்துவிடுகின்றன என்பதை பிரமாதமாகக் காட்டி இருக்கிறார். கட்டாயம் படிக்க வேண்டிய கதை.

ஃபிலிப்பு என் கண்ணில் ஒரு மாற்று குறைவுதான். உண்மையான உழைப்பாளி ஃபிலிப், ஓய்வு பெற்ற பின்னும் அவனுக்கும், அவனுடைய தார்மீகக் கோபத்துக்கும் அவன் வார்ட் பாயாக வேலை செய்த ஆஸ்பத்திரியில் இன்னும் மரியாதை இருக்கிறது. சாகக் கிடக்கிறான். குடும்பம் அவனை உதறிக் கொண்டிருக்கிறது.

அவரது தளத்தில் சோதோம் பட்டணம் என்ற கதை கிடைக்கிறது. சோதோம் நகரத்துக்கு வந்த தேவதூதர்கள் அங்கே இருந்த ஒரே நல்ல மனிதனான லாட், (லோத் என்கிறார் ஆசிரியர், எது சரியான உச்சரிப்பு என்று தெரியவில்லை) மற்றும் அவன் குடும்பத்தைக் காப்பாற்றி நகரத்தை அழிக்கிறார்கள் என்பது விவிலியத் தொன்மம். Sodomy என்ற வார்த்தையின் மூலமே சோதோம் நகரம்தான். கதையில் கைவிடப்பட்ட சிறுவர்களுக்கான கிறிஸ்துவ விடுதியில் புதிதாக சேர்ந்திருக்கும் பள்ளி மாணவன். ஓரினச் சேர்க்கை உட்பட்ட பாலியல் அத்துமீறல்கள் சகஜமாக இருக்கும் விடுதி. பிஷப் கூட ஒரு ஆசிரியையைத் தடவுகிறார். இவன் சாக்கில் (chalk) சிற்பங்கள் செய்யும் திறமை வாய்ந்தவன். லாட்டின் குடும்பத்தைக் காக்கும் தேவதூதர்களை சிற்பங்களாக செதுக்குகிறான். லாட்டும், தேவதூதர்களும் கெட்டவர்கள், அவன் மனைவி குழந்தைகள் நல்லவர்கள் என்கிறான். பிரமாதமான இடம். குறியீடாக நிற்கும் ஒரு மரம் வெட்டப்படுகிறது. சீக்கிரமாக வேறொரு மரத்தை நடுங்கள், அதிக ஆழத்துக்கு வேர்கள் போகாத மரங்கள் நிறைய இருக்கின்றன என்று மேலிடத்திலிருந்து கடிதம் வருகிறது. ஏசுவின் போதனைகளே அப்படித்தானே என்றுதான் எனக்கு தோன்றியது.

என்னை மிகவும் கவர்ந்த கதை ‘மலையின் தனிமை‘. அப்பா ஓய்வு பெற்ற ஆசிரியர். அம்மாவுக்கு ஏதோ வியாதி, குழந்தை மாதிரி ஆகிவிடுகிறாள். மகன்கள் வெளிநாட்டில். அவரது தனிமையும், கைவிடப்பட்ட நிலையும் மிக அற்புதமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. பெற்றோரைத் தனிமையில் விட்டுவிட்டேனோ என்று வெளிநாட்டில் வசிக்கும் என் மனது அவ்வப்போது உறுத்தும். உள்மன உறுத்தல்தான் காரணமோ என்னவோ, எப்படி இருந்தாலும் இதை கட்டாயமாக என் anthology-யில் சேர்ப்பேன். கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

நுகம், ஃபிலிப்பு சிறுகதைகள் இரண்டும் நன்றாக இருக்கின்றன என்றாலும் அவற்றை விட சோதோம் பட்டணம், மலையின் தனிமை இரண்டும் எனக்கு இன்னும் கொஞ்சம் உசத்திதான்.

சச்சிதானந்தம் கிறிஸ்துவர்கள் பின்னணிக் கதைகளைத்தான் பெரும்பாலும் எழுதி இருக்கிறார் என்று தெரிகிறது. எந்த வித தயவு தாட்சணியமும் இல்லாமல், நேர்மையான கதைகளை எழுதி இருக்கிறார். அடுத்த முறை இந்தியா போகும்போது இவரை சந்திக்க முடியுமா என்று பார்க்க வேண்டும். இன்னும் நிறைய எழுதி இருக்கக் கூடாதா என்று நினைக்க வைக்கிறார்.

நுகம் சிறுகதைத் தொகுப்பு, சில சிறுகதைகள் பற்றி பிச்சைப்பாத்திரம் கண்ணன், யாழிசை லேகா, அ. ராமசாமி ஆகியோர் எழுதியது மட்டுமே கிடைத்தது. இந்தப் புத்தகத்தை வாங்க வேண்டும்.

இணைப்பு கொடுத்துள்ள சிறுகதைகளை கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: எக்பர்ட் சச்சிதானாந்தம் பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:
இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகள் – நுகம், ஃபிலிப்பு, சோதோம் பட்டணம், மலையின் தனிமை