மெக்காலேயின் கல்வித் திட்டம்

பல நாட்களாக வருஷங்களாக கேட்டுக் கொண்டிருக்கும், ஏறக்குறைய பொது பிரக்ஞையில் வரலாற்று உண்மையாகவே ஏற்கப்பட்ட ஒரு கருத்தாக்கம் – மெக்காலே இந்தியர்களை குமாஸ்தாக்களாக மாற்ற போட்ட திட்டம்தான் இந்தியக் கல்வி அமைப்பு. பாரம்பரியக் கல்வியைத் தவிர்த்து ஆங்கிலக் கல்வி, மேலைக் கலாசாரம் ஆகியவற்றை முன் வைக்கும் திட்டத்தை உருவாக்கி இந்தியர்களை ஏறக்குறைய அடிமைகளாகவே வைக்கும் நீண்ட கால சதியை செயல்படுத்தினார். சதி என்பது கொஞ்சம் அதிகப்படி என்று கருதுபவர்களும் மெக்காலே திட்டம் இந்திய கல்வி முறையை நிராகரிப்பதன் மூலம் குமாஸ்தா வர்க்கத்தைத்தான் உருவாக்கியது என்கிறார்கள்.

ஆனால் பல தலைமுறைகளாக இந்தியர்கள் மெக்காலே திட்டப்படிதான் கல்வி கற்றுக் கொண்டிருக்கிறோம். சுதந்திரம் கிடைத்து 70 வருஷம் ஆகிவிட்டது, காங்கிரஸ் மாநில அரசுகளை அமைத்து 80 வருஷம் ஆகிவிட்டது. இந்த நிகழ்ச்சிகளுக்கு முன்னாலும் பின்னாலும் உள்ள கல்விமுறைக்கு அடிப்படையில் பெரிய வித்தியாசம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. காந்தியும் நேருவும் ராஜாஜியும் ஏன் பாரதியும் திலகரும் கோகலேயும் விவேகானந்தரும் அம்பேத்கரும் சவர்க்காரும் அண்ணாதுரையும் இந்த முறையில்தான் கல்வி கற்றிருக்கிறார்கள்.

என்றாவது ஒரு நாள் மெக்காலே என்னதான் சொன்னார் என்று படித்துப் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். இங்கே சுட்டி கிடைத்தது.

மெக்காலேயின் வாதங்களை இப்படி சுருக்கலாம்.
1. சமஸ்கிருதத்திலும் அரபியிலும் அறிவியலின் பெரும் சாதனைகள் எதுவும் இல்லை.

2. இவற்றின் இலக்கிய வளமும் ஆங்கிலத்தின் இலக்கிய வளத்தோடு ஒப்பிட்டால் குறைவுதான்.

3. இந்தியர்கள் அவர்கள் சொந்தப் பணத்தை செலவழித்து ஆங்கிலம் கற்றுக் கொள்கிறார்கள். ஆனால் அரபியும் சமஸ்கிருதமும் கற்க அவர்களுக்கு நாம் stipend தருகிறோம். நாம் பதித்திருக்கும் சமஸ்கிருத, அரபி புத்தகங்களை யாரும் வாங்கவில்லை.

4. ஐநூறு அறுநூறு வருஷங்களுக்கு முன் ஆங்கிலேயர்களான நாம் லத்தீனும் கிரேக்கமும் கற்றோம், ஏனென்றால் இலக்கியமும் அறிவியலும் அப்போது அந்த மொழிகளில்தான் செழித்திருந்தது. அதைப் போன்ற நிலையில்தான் இன்று இந்தியர்கள் இருக்கிறார்கள்.

5. ஒரு வாதத்தை அவர் மொழியிலேயே தருகிறேன்.

In one point I fully agree with the gentlemen to whose general views I am opposed. I feel with them that it is impossible for us, with our limited means, to attempt to educate the body of the people. We must at present do our best to form a class who may be interpreters between us and the millions whom we govern, –a class of persons Indian in blood and colour, but English in tastes, in opinions, in morals and in intellect. To that class we may leave it to refine the vernacular dialects of the country, to enrich those dialects with terms of science borrowed from the Western nomenclature, and to render them by degrees fit vehicles for conveying knowledge to the great mass of the population.

6. இந்தியர்களின் கல்விக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் பணத்தை ஆங்கிலக் கல்வி முறையை செயல்படுத்தி செலவழிப்பதே உசிதம்.

மெக்காலேயின் வாதங்கள் எதுவும் எனக்கு தவறாகத் தெரியவில்லை. 1835-இல் மேலை மொழிகளின் மூலம்தான் அன்றைய அறிவியல் உச்சங்களை கற்க முடியும். மெக்காலேவுக்கு தெரிந்த அரபி, சமஸ்கிருத இலக்கியம் மிஞ்சி மிஞ்சிப் போனால் 1001 இரவுகள், சாகுந்தலம் ஆக இருக்கும். அன்றைய இந்தியர்களுக்கே காளிதாசனும் வால்மீகியும் பழக்கம்தானா என்று எனக்கு சந்தேகம்தான். அவரது முடிவுகள் தவறானதாக இருக்கலாம், ஆனால் அவருக்கு கிடைத்த தகவல்களை வைத்து அவர் அப்படி முடிவெடுத்தது வியப்பாக இல்லை.

ஆளும் ஆங்கிலேயர்களுக்கும் ஆளப்படும் இந்தியர்களுக்கும் நடுவே பாலமாக “a class of persons Indian in blood and colour, but English in tastes, in opinions, in morals and in intellect” உருவாக்கப்பட வேண்டும் என்ற கூற்றுதான் மெக்காலேவை திட்டுபவர்கள் அனைவரும் பயன்படுத்துவது. அவரது கண்ணோட்டத்தில் இது மிகச்சரி. கோடிக்கணக்கான இந்தியர்களை ஆயிரக்கணக்கான ஆங்கிலேயர்கள் ஆள வேண்டும் என்றால் அப்படித்தான் செய்தாக வேண்டும். நடுவே ஒரு பாலம் இருந்தாக வேண்டும். ஒரு அதிகார வர்க்கம் உருவாக்கப்பட வேண்டும். சோழ அரசுக்கு அனேகமாக கிராம அதிகாரிகள் அப்படி இருந்திருப்பார்கள். மொகலாய அரசுக்கு மன்சப்தார்கள் அப்படித்தான் இருந்தார்கள். மதுரை நாயக்கர் அரசுக்கு பாளையக்காரர்கள். இதில் தவறென்ன?

மெக்காலேயின் காலனிய ஆதிக்க மனநிலை இந்தப் பேச்சில் வெளிப்படுகிறது என்பதை மறுக்கவே முடியாது. அவருக்கு இந்தியர்கள் அறிவுநிலையில் தாழ்ந்தவர்களே. ஆங்கிலேயர்கள் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள். ஆனால் அன்று லட்சத்தில் ஒரு ஆங்கிலேயன் வேறு மாதிரி நினைத்திருப்பான் என்று நான் கருதவில்லை. துரைகள் ஆட்சியின் கீழ் வாழ்ந்த, அவர்களோடு தொடர்பு இருந்த இந்தியர்களே அப்படி நினைத்திருக்கமாட்டார்கள். அன்றைய சமூக விழுமியங்களை மெக்காலே மட்டும் மீறிவிடுவார், இன்றைய விழுமியங்களை கைக்கொள்வார் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? பாரதியார் கூட பெண்கள் காதலொருவனின் காரியம் யாவிலும் கை கொடுக்க வேண்டும் என்றுதான் பாடி இருக்கிறார், ஆண்கள் காதலியின் காரியங்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று பாடவில்லை. அதனால் அவர் பெண்ணை கீழே வைக்கிறார் என்று பொருளல்ல, அன்றைய விழுமியங்களை கொஞ்சம் தாண்டி இருக்கிறார் என்பதுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டியது.

மெக்காலேயின் திட்டமே மேலை அறிவியலை இந்தியாவுக்கு கொண்டு வந்தது என்று நினைக்கிறேன். அதன் விளைவாக இந்தியாவின் எழுதப்படாத, முறை செய்யப்படாத அறிவியல் மறைந்து போயிருக்கும் என்பதும் உண்மைதான். ஆனால் சமஸ்கிருதத்திலும் அரபியிலும் கல்வி கற்றிருந்தால் மட்டும் அது செழித்து வளர்ந்திருக்காது என்று நினைக்கிறேன். அதனால் மெக்காலே வாழ்த்தப்பட வேண்டும் என்றுதான் தோன்றுகிறது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

தொகுக்கப்பட்ட பக்கம்: வரலாறு

3 thoughts on “மெக்காலேயின் கல்வித் திட்டம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.