Madras Musings – பத்தி எழுத்தாளர் முத்தையா

சமீபத்தில் மறைந்த முத்தையா ஹிந்து பத்திரிகையில் Madras Musings என்ற பத்தியை தொடர்ந்து எழுதி வந்தார். எனக்குப் பிடித்த பத்திகளில் ஒன்று – ஆனாலும் ஹிந்து பத்திரிகையையே பார்ப்பது நின்றுவிட்டதால் தொடர்ந்து படித்ததில்லை. அவர் மறைந்தபோது அவரது பத்திகளைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தேன், வழக்கம் போல நினைத்தது நடக்கவில்லை.

முத்தையாவின் கட்டுரைகள் மிக சுவாரசியமானவை. ஆனால் அரைக்கிழங்களுக்கு, கொஞ்சம் கிறுக்கு உள்ளவர்களுக்குத்தான் அவை சுவாரசியப்படும் என்று நினைக்கிறேன். நான் கிறுக்குப் பிடித்த அரைக்கிழம் அதனால்தானோ என்னவோ எனக்கு நிறையவே பிடித்திருந்தன.

அவரது கட்டுரைகளின் தொகுப்பு ஹிந்து பத்திரிகையில் கிடைக்கிறது. கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். படிக்க நேரமில்லை என்றால் இந்த ஒரு கட்டுரையை – சென்னையின் முதல் சர்ச் – மட்டுமாவது படித்துப் பாருங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: Obituaries

பிடித்த சிறுகதை – செகாவ் எழுதிய Lady with a Dog

சிறுகதையைப் பொறுத்த வரையில் செகாவ் ஒரு மாஸ்டர். அவருடைய பல சிறுகதைகள் ஆரம்பம், முடிவு, முடிச்சு போன்ற ஃபார்முலாக்களில் அடங்குபவை அல்ல. அவரது சிறுகதைகளை வைத்துத்தான் சிறுகதை என்றால் என்ன என்று வரையறுக்க வேண்டும், வரையறைகளை வைத்துக் கொண்டு அவரிடம் மாரடிக்க முடியாது.

குறிப்பாக ஓரளவு பணம் உள்ள, உயர் மத்தியதர வர்க்க மனிதர்களை சித்தரிப்பதில் செகாவுக்கு இணை அவர்தான். உயர் மத்தியதர வர்க்கம் என்பது முற்றிலும் சரியல்லதான் (not quite accurate) – ஆனால் எனக்குத்தான் அதை விட சிறந்த வார்த்தைகள் கிடைக்கவில்லை. இந்த மனிதர்கள் அனேகமாக சமுதாயத்தில் மதிப்புள்ள ஒரு தொழில் செய்பவர்களாக இருக்கலாம் – உதாரணமாக, ஒரு டாக்டராக, வக்கீலாக, வங்கி நடத்துபவராக இருக்கலாம். ஓரளவு பணம் உள்ள மிராசுதார்களாக, ஆனால் பெரும் பணக்காரர்களோ அல்லது செல்வாக்குள்ள பிரபு குடும்பங்களில் பிறக்காதவர்களாக இருக்கலாம். அவர்களால் விடுமுறைக்கு கோடை நகரங்களுக்கு செல்ல முடியும். நடனம், நாட்டியம், இசை நிகழ்ச்சிகளுக்கு போக முடியும். வேட்டையாட செல்ல முடியும். உடலை வைத்து உழைக்கத் தேவை இல்லாதவர்கள்.

இந்த சிறுகதையும் அப்படிப்பட்ட இருவரைத்தான் சித்தரிக்கிறது. கதைக்கு ஆரம்பம் இருக்கிறது. முடிச்சு? இல்லை என்றுதான் சொல்வேன். முடிவு? அதுவும் கிடையாது என்றுதான் சொல்வேன். ஆனால் இதே கதையைப் படிக்கும் இன்னொருவர் முடிச்சும் முடிவும்தான் இருக்கின்றனவே என்றும் நினைக்கலாம்.

கதை என்று பெரிதாக எதுவுமில்லை. அர்த்தமற்ற வாழ்க்கையில் ஓரளவு சலிப்புற்ற நாயகன் குரோவ். நாயகி அன்னாவின் வின வாழ்விலும் பொருளில்லையா என்று செகாவ் பெரிதாக விவரிக்கவில்லை, எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். இருவரும் ஒரு கோடை நகரத்தில் சந்திக்கிறார்கள். இருவரும் மணமானவர்கள். இருவருமே மணவாழ்வில் நிறைவற்றவர்கள். அவர்களுக்கு நடுவே உண்மையான, ஆழமான காதல் உருவாகிறது. ஆனால் என்றும் அவர்களால் இணைய முடியாது, விவாகரத்து என்பதெல்லாம் சாத்தியமில்லை. அவ்வளவுதான் கதை.

காதலின் அழுத்தம் மெதுமெதுவாக அதிகரிப்பது மிக அருமையாக சித்தரிக்கப்படுகிறது. குரோவ் அன்னாவைப் பார்க்க அவள் ஊருக்குப் போகும் காட்சி மிகப் பிரமாதமானது.

இதெல்லாம் ஒரு கதையா, ஒன்றுமே நடக்கவில்லையே என்று நீங்கள் நினைக்கலாம். நான் செகாவ் அல்லன், என்னால் முடிந்த விவரிப்பு இவ்வளவுதான்.

கதையைப் பல தளங்களில் படிக்கலாம். சாரமில்லாத வாழ்க்கையைத் தொடர்வதை விட வாழ்க்கைக்கு பொருள் தரக்கூடியதை என்ன விலை கொடுத்தேனும் செய்வது மேல் என்று புரிந்து கொள்ளலாம். அப்படி பொருள் தரும் செய்கை சமூகம் ஏற்காததாக இருக்கலாம். அதனால் என்ன என்று செகாவ் கேட்கிறார் என்று புரிந்து கொள்ளலாம். அப்படிப்பட்ட ஒரு செய்கைக்கு நீங்கள் பெரும்விலை கொடுக்க நேரிடலாம், அதற்கு நீங்கள் தயாரா என்று செகாவ் கேட்கிறார என்றும் புரிந்து கொள்ளலாம். திரௌபதியை துகிலுரிய ஆணையிடுவது அநியாயம்தான், அக்கிரமம்தான், ஆனால் அதுதான் துரியோதனனின் வாழ்க்கையைப் பொருளுள்ளதாக ஆக்குகிறது என்றால் துரியோதனன் என்னதான் செய்வது? அதற்காக தான் தொடை உடைந்து இறக்க நேரிடலாம் என்று அவனுக்கு ஒரு கணம் கூட தோன்றி இருக்காதா என்ன?

காதல் – அது கூட வேண்டாம், இன்னொரு மனிதரோடு ஏற்படும் உண்மையான பந்தம் – மனிதர்களை எப்படி மாற்றுகிறது, அது எப்படி மனிதர்களுக்கு வாழ்க்கையை சாரமுள்ளதாக மாற்றுகிறது என்றும் படிக்கலாம். என் வயதில் பந்தங்கள் எல்லாம் உதிர்ந்து கொண்டிருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும். அதனால்தானோ என்னவோ பந்தங்களின் தேவை நன்றாகவே புரிகிறது.

அப்படி ஒன்றும் காவிய நிகழ்ச்சி அல்ல, இது சாதாரண mid-life crisisதான், ஆனால் அது மனிதர்களின் வாழ்க்கையை எப்படி புரட்டிப் போடுகிறது என்று விவரிக்கிறார் என்றும் புரிந்து கொள்ளலாம். அசோகமித்திரன் இந்தக் கதையை எழுதினால் அப்படித்தான் எழுதுவார் என்று தோன்றுகிறது. அவருக்கு அதன் அபத்தத்தைக் காட்டுவதில்தான் அதிக சுவை.

என் பணக்கார உறவினர் ஒருவர் மகனுக்கு திருமணம் செய்து வைத்த பிறகு ஒரு பதின்ம வயதுப் பெண்ணை மணம் புரிந்து கொண்டார். அதற்கான விலையை அவரது குடும்பம் இன்னும் தந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் அதுதான் அவர் வாழ்விற்கு பொருள் தரும் என்றால் அவர் என்னதான் செய்வது?

மீண்டும் சொல்கிறேன், செகாவ் ஒரு மாஸ்டர். அவரது சிறுகதைகளைத் தவறவே விடாதீர்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: செகாவ் பக்கம்

தொடர்புடைய சுட்டி: Lady with a Dog