நாட்டுடமை ஆக்கப்பட்ட எழுத்து 3 – கே.பி. நீலமணி

கே.பி. நீலமணி பெரும்பாலும் சிறுவர்களுக்கான புத்தகங்களை எழுதியவர். அவரது படைப்புக்கள் 2011-இல் நாட்டுடமை ஆக்கப்பட்டிருக்கின்றன. வொர்த் உள்ளவரோ இல்லையோ, ஒருவரது படைப்புகள் நாட்டுடமை ஆக்கப்பட்டிருந்தால் அவரது புத்தகங்களைப் பற்றி எழுதிவிட வேண்டும் என்று எனக்கு ஒரு நப்பாசை, அதனால்தான் இவரைப் பற்றி எழுதுகிறேன்.

மந்தைவெளிக்காரர். அங்கே ஒரு வாடகைப் புத்தக நூல் நிலையம் நடத்தினாராம். இதைத் தவிர இவரது வாழ்க்கையைப் பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை. ஒரு புகைப்படம் கூட கிடைக்கவில்லை.

பெரியவர்களுக்காக அவர் எழுதிய ஒரே நாவல் ‘புல்லின் இதழ்கள்‘. இது ஐம்பதுகளிலோ, அறுபதுகளிலோ கலைமகள் பத்திரிகையில் தொடர்கதையாக வந்ததாம். அந்தக் காலகட்டத்தில் விரும்பிப் படிக்கப்பட்டிருக்கும். பழைய பழகிய பாதையிலேயே சரளமாக போகும் நாவல். மானுட தரிசனம், இலக்கியத்தரம் என்றெல்லாம் சொல்ல எதுவுமில்லை. அறுபதுகளின் சமூகக் கற்பனை வணிக நாவலுக்கு (social romance) நல்ல எடுத்துக்காட்டு. பிற்காலத்தில் அனுராதா ரமணன் எழுதிய முதல் காதல் என்ற (அ. ரமணன் எழுதியதில் சுமாரான நாவல் இதுதான்) நாவலை நினைவுபடுத்தியது.

அபூர்வமாக இந்த நாவலை நினைவு கூர்பவர்கள் சங்கீதப் பின்னணி கொண்ட நாவல் என்று சொல்லாமல் இருப்பதில்லை. கதையில் நாயகனாக ஒரு (கீழ்ஜாதி) பாடகன்; அவனை எடுத்து வளர்த்து கர்நாடக இசையை சொல்லித் தரும் ஒரு பாகவதர்; அவனிடம் பாட்டுக் கற்றுக் கொள்ள வந்து அவனால் ஈர்க்கப்படும் மூன்று பெண்கள்; அங்கங்கே கல்யாணி, காம்போதி, கச்சேரி என்று வருவது – இப்படி மட்டும் இருந்தால் சங்கீதப் பின்னணி ஆகிவிடாது. எனக்குத் தெரிந்து மோகமுள்ளைத் தவிர நல்ல சங்கீதப் பின்னணி கொண்ட நாவல் தமிழில் இல்லை. சிதம்பர சுப்ரமணியனின் இதயநாதத்தை distant second என்று சொல்லலாம். இது அதிலிருந்து கண்ணுக்கெட்டாத தூரத்திலிருக்கும் distant third என்று சொல்லலாம்.

தந்தை பெரியார் என்று பெரியாரைப் பற்றிய வழக்கமான புகழ் மாலைகளோடு ஒரு வாழ்க்கை வரலாற்று நூல், ண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை நிறுவிய அண்ணாமலை செட்டியாரைப் பற்றி ஒரு சம்பிரதாயமான அறிமுகம் (அண்ணாமலை எனும் அற்புத மனிதர்) எதற்காக நேரத்தை வீணாக்குவானேன்? வேறு எந்தப் புத்தகமும் குறிப்பிட வேண்டிய தரத்தில் இல்லை. புல்லின் இதழ்கள் அன்றைய சம்பிரதாயமான வணிக நாவல் எப்படி இருந்திருக்கும் என்று தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு மட்டும்.

படைப்புகளை நாட்டுடமை ஆக்குவது நல்ல விஷயம். அதற்கான எழுத்தாளர்களை தேர்ந்தெடுப்பது subjective, எனக்கு தகுதி இல்லாததாகத் தெரிவது தேர்ந்தெடுத்தவர்களுக்கு வேறு மாதிரியாகத் தெரிய வாய்ப்பிருக்கத்தான் செய்கிறது. ஆனால் இது எழுத்தாளர் குடும்பத்துக்கு உதவுவோம் என்று செய்த மாதிரிதான் இருக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: நாட்டுடமை ஆன எழுத்து