சிங்காரவேலு: தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட்

1900-1950 காலகட்டத்தின் இரண்டாம், மூன்றாம் நிலை தலைவர்கள் – காந்தி, நேரு, படேல், ராஜாஜி லெவலில் அல்லாதவர்கள் – அதிலும் தமிழ்நாட்டில் வாழ்ந்தவர்கள் – என்னை fascinate செய்பவர்கள். திரு.வி.க., வரதராஜுலு நாயுடு, ஜார்ஜ் ஜோசஃப், வைத்யநாத ஐயர், எஸ். ஸ்ரீனிவாச ஐயங்கார், சத்தியமூர்த்தி, நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை, கோவை அய்யாமுத்து என்று சொல்லிக் கொண்டே போகலாம். அந்த வரிசையில் உள்ளவர் சிங்காரவேலு.

கே. முருகேசன் எழுதிய ‘Singaravelu: First Communist in South India‘ என்ற புத்தகம் சமீபத்தில் கிடைத்தது. இது அவரது நிறைகுறைகளை பார்க்கும் புத்தகம் என்று சொல்லிவிட முடியாது. ஆனாலும் எனக்கு ஆர்வமூட்டிய புத்தகம்.

சிங்காரவேலுவின் முக்கிய பங்களிப்பு என்று நான் கருதுவது தொழிற்சங்கங்களை அமைத்து அன்றைய தொழிலாளர்களுக்கு உங்களுக்கும் உரிமைகள் உண்டு என்று காட்டியதுதான். அவர் எந்த இயக்கத்தில் இருந்தாலும் தொழிலாளர் நலன் என்பதுதான் அவருக்கு முக்கியமாக இருந்திருக்கிறது. சுதந்திரப் போராட்டத்திலும் பங்கேற்றிருக்கிறார், ஒத்துழையாமை போராட்டத்தில் சிறை சென்றிருக்கிறார், ஈ.வெ.ரா.வோடு சேர்ந்து சுயமரியாதை இயக்கத்திலும் பணியாற்றி இருக்கிறார். ஆனால் தொழிலாளர் நலனே முக்கியம் என்று  கம்யூனிசம் பக்கம் சாய்வதில் என்ன வியப்பு? கம்யூனிஸ்டாகத்தான் இறந்திருக்கிறார்.

சிங்காரவேலு மீனவர் குடும்பத்தில் 1860-இல் பிறந்திருக்கிறார். ஆனால் அப்பா பேர் வெங்கடேச செட்டியாராம். செட்டியார்களில் மீன்பிடிக்கும் உட்பிரிவு உண்டு என்பது எனக்கு ஆச்சரியம்தான். 24 வயதில் பி.ஏ. பட்டம் பெற்றிருக்கிறார். அன்றைய சூழ்நிலையில் மீனவ இளைஞர் இவ்வளவு தூரம் படிக்க முடிந்திருக்கிறது என்றால் வசதியுள்ள குடும்பமாக இருந்திருக்க வேண்டும். வக்கீலுக்கு படித்திருக்கிறார், ஆனால் 45 வயதிற்கு மேல்தான் ப்ராக்டிஸ் செய்ய ஆரம்பித்திருக்கிறார், ஏனென்று தெரியவில்லை. 1902-இல் லண்டன் போயிருக்கிறார். தொழிற்சங்கங்கள், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் இயக்கம், சுயமரியாதை இயக்கம் என்று அன்றைய அரசியலில் நிறைய பங்கேற்றிருக்கிறார். பௌத்த மதத்திற்கு மாறி இருக்கிறார். சுதந்திரத்துக்கு முன்னாலேயே – 1946-இல் – 85 வயதில் இறந்திருக்கிறார்.

அவ்வப்போது ஹிந்துவுக்கு கடிதங்கள் எழுதினாலும் அரசியலில் முழுமூச்சாக 1921 வாக்கில் இறங்கி இருக்கிறார். தன்னுடைய வக்கீல் தொழிலை நிறுத்தி ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு சிறை. 1921-22 காலகட்டத்தில் B&C ஆலை தொழிலாளர் போராட்டங்கள். கிட்டத்தட்ட 13000 தொழிலாளர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனராம். திரு.வி.க. முன்னின்று நடத்தி இருக்கிறார். 1922 கயா காங்கிரசில் பேசி இருக்கிறார், தன் ஒரு கம்யூனிஸ்ட் என்று அறிவித்துக் கொண்டிருக்கிறார். இந்தியாவில் முதல் முறையாக மே தினத்தை 1932-இல் கொண்டாடி இருக்கிறார். 1925-இல் சென்னை மாநகராட்சி கவுன்சிலராக இருந்திருக்கிறார், அப்போது மதிய உணவு திட்டத்தை கார்ப்பரேஷன் பள்ளிகளில் கொண்டு வந்தாராம். ஆச்சரியம்தான், அன்றைக்கு பள்ளிகளில் படிக்கவே கட்டணம் உண்டு என்று நினைத்திருந்தேன், இலவசமாக உணவு எப்படி? முதல் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டின் தலைவர். கான்பூர் சதி வழக்கில் இவர் மீது கேஸ், விடுதலை ஆகிவிட்டார் போலிருக்கிறது. 1927-28 வாக்கில் ரெயில்வே தொழிலாளர்கள் வேலைநிறுத்தம். பின்னாளில் ஜனாதிபதியான வி.வி. கிரி இதில் முக்கிய பங்கேற்றார் என்று படித்திருக்கிறேன், ஆனால் கிரி சமரசம் செய்து கொள்ளவே முயன்றாராம். இதற்குப் பிறகு தென்னிந்திய ரெயில்வே ஸ்ட்ரைக் – இதற்காக 70 வயதில் சிறை சென்றிருக்கிறார். சுயமரியாதை இயக்கத்தில் கொஞ்ச நாள் இருந்திருக்கிறார். ஈ.வெ.ரா. அனேகமாக அரசுக்கு ஆதரவு தருபவர், அவருக்கு தன் இயக்கம் நடக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். கம்யூனிச சார்பு உடைய பலர் – சிங்காரவேலு, ஜீவா உட்பட – ஒரு கட்டத்தில் அதிலிருந்து விலகினர்.

சிங்காரவேலு 1900-1950 காலகட்டத்தில் சமூக, அரசியலைப் பற்றி சிந்தித்து செயல்பட்டவர்களில் ஒருவர். அந்தக் காலகட்டத்தில் பலரும் சிந்திக்கவில்லை, காந்தி காட்டிய வழியில் போனால் போதும் என்று முடிவு செய்துவிட்டார்கள்.  சுயமாக சிந்தித்தவர்கள் குறைவு. சிங்காரவேலு தொழிலாளர் உரிமை என்று தன் இலக்கை கண்டடைந்து அதற்காக இடைவிடாமல் போராடி இருக்கிறார். நான் இருக்கும் இசங்களில் முதலாளித்துவமே சிறந்தது, ஆனால் பல குறைகள் உள்ளது என்று கருதுபவன். தொழிலாளர் நலன் என்ற எதிர்விசை இல்லாவிட்டால் முதலாளித்துவம் உருப்படாமல் போகும் என்று நினைப்பவன். சிங்காரவேலு அதற்காகப் போராடிய முன்னோடி, அவருக்கு என் வணக்கங்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்