உலகம் சுற்றிய தமிழன் – ஏ.கே. செட்டியார்

செட்டியார் பல ஊர் சுற்றியவர். ‘உலகம் சுற்றிய தமிழன்‘ என்று அவரை செல்லமாக அழைப்பார்கள். தனது அனுபவங்களை வெகு சுவாரசியமாக், இன்றும் படிக்கக் கூடிய விதத்தில் நிறைய எழுதி இருக்கிறார். எனக்கு மிகவும் பிடித்த புத்தகம் ‘உலகம் சுற்றும் தமிழன்‘. இரண்டாம் உலகப் போருக்கு முன் ஜப்பான், ஐரோப்பா, அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, இந்தியாவில் பல இடங்கள் என்று சுற்றிய அனுபவங்களை இன்றும் படிக்கக் கூடிய முறையில் எழுதி இருக்கிறார்.

காந்தியைப் பற்றி ஒரு டாக்குமெண்டரி எடுத்திருக்கிறாராம், இப்போது கிடைக்கிறதா என்று தெரியவில்லை.

தமிழில் பிரயாணக் கட்டுரை என்ற sub-genre அவ்வளவு சுகப்படுவதில்லை. மணியனின் இதயம் பேசுகிறது நான் சிறுவனாக இருந்த காலத்தில் பிரபலமாக இருந்தது. ஆனால் அப்போதே போரடித்தது. பாஸ்கரத் தொண்டைமான், பரணீதரன் (மெரினா) தி.ஜா., தேவன் ஓரளவு பரவாயில்லை என்ற அளவில் எழுதி இருக்கிறார்கள். ஆனால் அனேகமாக ஷேத்ராடனம் போன அனுபவங்கள் போலத்தான் இருக்கும். இன்றைய காலகட்டத்தில் ஜெயமோகனின் அனுபவங்கள் படிக்கக் கூடியவையே. இவை எல்லாவற்றையும் விட செட்டியாரின் கட்டுரைகள் நன்றாக இருக்கின்றன என்று நான் கருதுகிறேன். இவரது தரத்தில் இருப்பதாக எனக்கு நினைவிருப்பது ஒரே புத்தகம்தான் – விட்டல்ராவின் தமிழகக் கோட்டைகளைப் பரிந்துரைக்கிறேன்.

கிடைத்த சில மின்புத்தகங்களை இணைத்திருக்கிறேன் – பிரயாணக் கட்டுரைகள், பிரயாண நினைவுகள். காப்பிரைட் பிரச்சினை வந்தால் எடுத்துவிடுவேன். பிரயாணக் கட்டுரைகளில் அவர் நேபாளம் போன அனுபவங்களை படிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன்.

ஐரோப்பா வழியாக, ஜப்பான் போன்றவை இன்றும் படிக்கக் கூடிய, சிறந்த புத்தகங்கள். படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

குமரிமலர் என்ற பத்திரிகையை நடத்தி இருக்கிறார்.

சா. கந்தசாமி இவரது வாழ்க்கை வரலாற்றை எழுதி இருக்கிறார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் அபுனைவுகள்