சிறு வயதில் – இப்போது கூட – எனக்கு தொன்மங்களின் மீது அதிக ஆர்வம் உண்டு. அவ்வப்போது குபேரனிடம் சங்கநிதி பத்மநிதி என்று இரண்டு பெரும் செல்வங்கள் விளையும் செடிகள் உண்டு என்று கேள்விப்பட்டிருந்தேன். பணம் என்ன செடியில் காய்க்கிறதா என்று கேட்பார்கள், ஆனால் இவை இரண்டும் குபேரன் தோட்டத்து செடிகளில் காய்க்கின்றனவாம். ஆனால் அவை என்ன என்று யாருக்கும் தெரியவில்லை. கதாகாலட்சேபம் செய்யும் பௌராணிகர்கள் கூட ஒன்று சங்கு வடிவிலும் மற்றது தாமரை வடிவிலும் இருக்கும் என்று சொன்னார்களே தவிர வேறு எதுவும் சொல்லவில்லை. அதுவும் தெரிந்து சொன்னார்களோ இல்லை பேரை வைத்துக் கொண்டு சும்மா அடித்துவிட்டார்களோ என்று எனக்கு அப்போது ஒரு சின்ன சந்தேகம் இருந்தது.
சமீபத்தில்தான் தெரிந்துகொண்டேன். சங்கநிதி என்பது கோடி கோடி – அதாவது 10^14. பத்மநிதி என்றால் கோடி கோடி கோடி கோடி கோடி. அதாவது கோடி கோடி கோடி சங்கநிதி. அதாவது 10^35. இத்தனை தங்கக் காசுகளா? வைரங்களா? அதை இன்னொரு நாள் கண்டுபிடிப்போம்!
பெரிய எண்களுக்கு இப்படி பெயர் வைப்பது அவ்வப்போது நடப்பதுதான். Googol என்பது 10^100, googolplex என்பது 10^googol – அதாவது 10^(10^100). இந்தப் பெயரை வைத்தவர் எட்வர்ட் காஸ்னர் என்னடா கூகிள் மாதிரியே இருக்கிறதே, ஸ்பெல்லிங் மட்டும் கொஞ்சம் மாறுகிறதே என்று நினைக்கிறீர்களா? கூகிள் என்ற பெயர் கூகோலை தற்செயலாக தவறாக எழுதிவிட்டதால் உண்டானது என்று சொல்கிறார்கள், உண்மையா பொய்யா தெரியாது.
இன்று புது வருஷம் பிறக்கிறது. உங்கள் அனைவர் வீட்டிலும் இந்த வருஷம் சங்கநிதியும் பத்மநிதியும் பூத்து காய்த்து குலுங்கட்டும்!
தொகுக்கப்பட்ட பக்கம்: தொன்மங்கள்