
உ.வே.சா.வின் என் சரித்திரம் ஒரு காலத்தின் வாழ்க்கை முறைக்கு ஆவணம். அவருடைய உண்மையான தேடலை எடுத்துக் காட்டுகிறது. அவரது குணாதிசயம் மிக நன்றாகப் புரிகிறது. கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்.
உ.வே.சா., உ.வே.சா.வின் குருநாதரான மீனாட்சிசுந்தரம் பிள்ளை, மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் சமகாலத்தவரான கோபாலகிருஷ்ண பாரதியார், ஏன் உ.வே.சா.வின் அப்பா கூட 19-ஆம் நூற்றாண்டின் பாணர்கள். அவர்களுக்கு தமிழில் புலமை, சங்கீதத் திறமை, செய்யுள் எழுதும் திறன், கீர்த்தனங்கள் எழுதும் திறன் என்று ஏதாவது ஒன்று இருந்திருக்கிறது. வாழ்க்கையை ஓட்ட கிராமங்களில் கச்சேரி, கதாகாலட்சேபம், உரைகள், எதையாவது நடத்தி இருக்கிறார்கள். மிராசுதார்கள், பண்ணையார்கள், சமஸ்தான அதிபதிகள், ஆதீனங்கள் யார் தயவாவது வேண்டி இருந்திருக்கிறது. ஆங்கிலேய ஆட்சியில் தமிழ் பண்டிதர்கள் மெதுமெதுவாக அரசு வேலைகளை நோக்கி நகர்ந்திருக்கிறார்கள். மீனாட்சிசுந்தரம் பிள்ளை அப்படி புரவலர் ஆதரவில் வாழ்ந்தவர்களின் கடைசி பிரதிநிதிகளில் ஒருவர். உ.வே.சா. மெதுமெதுவாக அரசு வேலைகள் பக்கம் நகர்ந்தவர்களின் முதல் பிரதிநிதிகளில் ஒருவர்.
சிறு வயதிலேயே உ.வே.சா.வின் மனம் தமிழில் ஈடுபட்டுவிட்டது. யாராவது ஏதாவது சொல்லித் தரமாட்டார்களா, எந்த நூலையாவது கற்றுக் கொள்ள மாட்டோமோ என்று அலைந்திருக்கிறார். அந்தக் காலகட்டத்தில் முதன்மையான தமிழ் பண்டிதர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. முட்டி மோதி கடைசியில் அவரிடம் சேர்ந்திருக்கிறார். மெதுமெதுவாக பிள்ளையின் முதன்மை சீடர் ஆகி இருக்கிறார். பிள்ளையின் மறைவுக்குப் பிறகு பிள்ளை இருந்த ஸ்தானத்தில் திருவாவடுதுறை ஆதீனத்தின் ஆதரவில் வாழ்ந்திருக்கிறார்.
இந்தக் காலகட்டத்தில் தெளிவாகத் தெரிவது உ.வே.சா. பணம், பதவி உள்ளவர்களிடம் பணிவுடன் நடந்து கொள்வது. சில பல அவமானங்களை சகித்துக் கொள்வது. அவர்களின் ஆதரவு இல்லாமல் வாழ்க்கையை ஓட்ட முடியாது என்று அவருக்கு தெளிவாகத் தெரிந்திருக்கிறது. அவரை விடுங்கள், பிள்ளையே வளைந்து கொடுத்துத்தான் வாழ்க்கையை ஓட்ட முடிந்திருக்கிறது.
தெளிவாகத் தெரியும் இன்னொரு விஷயம் ஜாதி ஆசாரம். உ.வே.சா. பிராமணர். குருநாதர் மீது எத்தனை மரியாதை, அன்பு இருந்தாலும் பிள்ளை வீட்டில் இவர் சாப்பிட முடியாது, பிராமணர் சமைத்துத்தான் சாப்பிட வேண்டும். ஆனால் ஓரளவு நெகிழ்வுத்தன்மையும் தெரிகிறது. பிள்ளையின் சீடர்கள் பல ஜாதியினர். ஏன், கிறிஸ்துவரான சவேரிநாதப் பிள்ளை பிள்ளையின் முதன்மை சீடர்களில் ஒருவர்.
சில காலத்துக்குப் பிறகு தியாகராஜ செட்டியார் பரிந்துரையில் கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியராக பணி புரிகிறார். அப்போதும் கல்லூரி முதல்வர் தன் பணியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற டென்ஷன் எல்லாம் இருந்திருக்கிறது. அதாவது, கல்லூரி முதல்வர் தன் சொந்தப் பணத்தை இவருக்கு சம்பளமாகத் தரவில்லை என்றாலும், அவர்தான் இப்போது உ.வே.சா.வுக்கு புரவலர், அவர் மனம் கோணாமல் நடந்து கொள்ளவேண்டும் என்று முயன்றிருக்கிறார்.
தமிழில் பல பிரபந்தங்கள், உலாக்கள் போன்ற கொஞ்சம் பிற்கால நூல்களைப் படித்திருந்தாலும் உ.வே.சா. சிலப்பதிகாரம், மணிமேகலை, போன்ற பல நூல்களைப் பற்றி கேட்டதே இல்லை. அது வரை தமிழ் நூல்களைப் படிப்பது என்றால் குரு சீடருக்கு தலைமுறை தலைமுறையாக சொல்லித் தந்து வருவதுதான். சிறந்த தமிழறிஞர்களான மீனாட்சிசுந்தரம் பிள்ளை, தியாகராஜ செட்டியார் போன்றவர்களே சீவக சிந்தாமணி போன்ற நூல்கள் சரியாக புரியவில்லை என்று விட்டுவிட்டார்களாம். இந்த நூல்களைப் படிக்கும் சரடு எப்படியோ அறுந்து போயிருக்கிறது.
தற்செயலாக சேலம் ராமசாமி முதலியார் மூலம் இந்த நூல்களைப் பற்றி அறிந்து கொண்டிருக்கிறார். அவரது வாழ்க்கையே மாறிவிட்டது. சிந்தாமணியைப் புரிந்து கொள்ள பல வருஷம் உழைத்திருக்கிறார். சிந்தாமணியில் பல ஜைன மதம் சார்ந்த குறிப்புகள் உண்டாம். உ.வே.சா. பல ஜைனர்களிடம் சென்று பாடம் கேட்டிருக்கிறார். உ.வே.சா. பட்டினியோடு போராடவில்லை என்றாலும் பணக்காரர் அல்லர். பதிக்க பணம் வேண்டும். சி.வை. தாமோதரம் பிள்ளை தன்னால் பணம் புரட்ட முடியும், தான் பதிக்கிறேன் என்று கேட்டிருக்கிறார். தன் உழைப்புக்கு சி.வை.தா. புகழ் பெறுவதில் உ.வே.சா.வுக்கு சம்மதமில்லை, ஆனால் அவருக்கு நல்ல பதவியில் இருப்பவரை மறுப்பது சுலபமாகவும் இல்லை. தான் பணம், பதவி உள்ளவர்களின் ஆதரவில் வாழும் பாணன் என்ற மனப்பான்மை அவரை கடைசி வரையில் விடவே இல்லை என்றுதான் நினைக்கிறேன். பல போராட்டங்களுக்கு பின்னால் சிந்தாமணி பதிக்கப்பட்டிருக்கிறது.
அதற்குப் பிறகு அவரது வாழ்க்கை முறையே இதுதான் – ஏடுகளைத் தேடுவது, பதிப்பது. பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம் என்று புத்தகத்திற்கு மேல் புத்தகமாக பதித்திருக்கிறார். புகழ் பெற்றிருக்கிறார். இன்றும் பழைய புத்தகங்களைப் பதித்தவர்களில் முதல்வர் அவரே.
வளையாபதியின் முழு வடிவத்தை திருவாவடுதுறை ஆதீனத்தில் சிறு வயதில் பார்த்ததாகவும் ஆனால் புத்தகங்களைப் பதிக்க ஆரம்பித்த பிறகு அது கிடைக்கவில்லை என்றும் ஓரிடத்தில் சொல்கிறார். கொஞ்சம் வருத்தமாக இருந்தது.
உ.வே.சா.வின் வாழ்க்கையின் முதல் தாக்கம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. அவரை ஆதரித்தவர் திருவாவடுதுறை சுப்ரமணிய தேசிகர். அவருடைய அருமை தெரிந்து அவரை உயர்த்தப் பாடுபட்டவர் தியாகராஜ செட்டியார். அவரது வாழ்க்கையை மாற்றியவர் சேலம் ராமசாமி முதலியார். படிக்கும்போது ஆச்சரியமாக இருந்தது. ஜாதி ஆசாரம் மிகுந்து இருந்த நாட்களில் ஒரு பிராமணரின் வாழ்க்கைக்கு பிள்ளை, செட்டியார், முதலியார் என்று பலரும் கை கொடுத்திருக்கிறார்கள்!
வேறு சில இடங்களில் உ.வே.சா. பிராமணர்களுக்கு மட்டுமே தமிழ் சொல்லித் தருவார் என்றும் படித்திருக்கிறேன். அவருடைய முதன்மை சீடர் கி.வா. ஜகன்னாதன் என்பது தெரிந்ததே. குறிப்பாக நாரண. துரைக்கண்ணனின் தமிழறிவைப் பாராட்டினாலும் துரைக்கண்ணன் சூத்திரன், சூத்திரனுக்கு தமிழ் சொல்லித் தரமாட்டேன் என்று மறுத்துவிட்டாராம். இது உண்மையாக இருந்தால் ஆச்சரியம்தான் – மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் ஏறக்குறைய பக்தியே உள்ளவர், சவேரிநாதப் பிள்ளையையும் தியாகராஜ செட்டியாரையும் ராமசாமி முதலியாரையும் தன் உயிர் நண்பர்களாகக் கருதியவர், செட்டியார் வீட்டிலும் முதலியார் வீட்டிலும் பல காலம் தங்கியவர், சூத்திரனுக்கு தமிழ் கற்றுத் தர மாட்டேன் என்று சொல்லி இருப்பாரா? ஒரு வேளை துரைக்கண்ணனுக்கு தமிழ் சொல்லித் தரக் கூடிய சூழ்நிலை இல்லாமல் இருந்திருக்கலாம், அது இப்படி பிராமணன்-சூத்திரன் என்று கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.
உ.வே.சா. பலரது வாழ்க்கை வரலாறுகளை எழுதி இருக்கிறார். அவருடைய ஆப்தரான தியாகராஜ செட்டியார் மீது, அவருக்கு சில காலம் சங்கீதம் கற்றுக் கொடுத்த கோபாலகிருஷ்ண பாரதியார் மீது எல்லாம் எழுதி இருக்கிறார்.
புதியதும் பழையதும், நல்லுரைக் கோவை போன்றவை அவர் எழுதிய பல கட்டுரைகளின் தொகுப்பு. Charming ஆக இருந்தது.
‘என் சரித்திரம்’ புத்தகத்தை கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் அபுனைவுகள்
Like this:
Like ஏற்றப்படுகின்றது...