ஃபெய்ஸ் அஹமது ஃபெய்ஸ் கவிதையும் சர்ச்சையும்

ஃபெய்ஸ் அஹமத் ஃபெய்ஸ் புகழ் பெற்ற உருது கவிஞர். அவருடைய புகழ் பெற்ற கவிதையான ‘ஹம் தேக்கேங்கே‘ ஐஐடி கான்பூரில் மாணவர் அமைப்பால் பாடப்பட்டிருக்கிறது, அதற்கு ஹிந்துத்துவர்கள் – குறிப்பாக டாக்டர் வாஷி ஷர்மா (ஐஐடி கான்பூரில் பேராசிரியர் போலிருக்கிறது) – எதிர்க்கிறார்கள். நண்பர் ஜடாயு ஷர்மாவின் பதிவுக்கு சுட்டி கொடுத்திருந்தார்.

ஷர்மாவின் வாதங்கள் அனேகமாக கில்லி போல இருந்தன. அவர் ஆட்சேபிக்கும் வரிகளுக்கு பொருள் அவர் சொல்வதுதான் என்றால் அவரது வாதங்கள் செறிவானவையே. ஆனால் சினிமா வசனம் புரியும் லெவலில் மட்டுமே உள்ள என் ஹிந்தியை வைத்துக் கொண்டு இதுதான் பொருள் என்று என்னால் நிச்சயமாக சொல்ல முடியவில்லை. இதுவோ ஹிந்தி கூட இல்லை, உருது. முழு கவிதையையும் படித்துப் பார்த்தேன் – மர்தூதே ஹராம், மஸ்நத், கல்கே குதா என்று என்னென்னவோ வார்த்தைகள். அதிலும் நமக்கு தமிழிலேயே கவிதை புரிவதில்லை…

சரி ஷர்மா ஆட்சேபிக்கும் இரண்டு வரிகளையாவது சரியாகப் புரிந்து கொள்வோம் என்று முயற்சித்தேன். அந்த வரிகள்

ஜப் அர்சே குதா கே காபே சே
சப் பூத் உத்வாயே ஜாயேங்கே

Jab arz-e-khuda ke kaabe se
Sab but uthwae jayenge

இந்த வரிகளைப் படித்ததும் நான் முதலில் புரிந்து கொண்டது

நாம் பார்க்கத்தான் போகிறோம்…(மெக்காவின்) காபாவிலிருந்து சிலைகளை அகற்றும் நாளை…

காபாவிலிருந்து சிலைகளை அகற்றினால் இவருக்கென்ன போச்சு என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்ல. ஜடாயு ஹிந்தி/சமஸ்கிருதம் மற்றும் உருது அறிந்தவர். அவரிடமே காபா என்றால் மெக்காவின் காபாதானே என்று கேட்டேன். அவர் இல்லை, காபா என்றால் இறைவனின் – அல்லாவின் – வீடு என்று பொருள் என்று சொன்னார். காபாவிலிருந்து சிலைகள் அகற்றப்பட்டு பல நூறு வருஷம் ஆகிவிட்டது, அகற்றப்படும் நாளை இனி எதிர்காலத்தில் எப்படி பார்க்க முடியும் என்றும் கேட்டார். எனக்கு ஹிந்தியில் இறந்த/நிகழ்/எதிர்காலம், ஆண்பால்/பெண்பால் எல்லாம் கொஞ்சம் தகராறுதான். அட ஆமாம், உத்வாயே ஜாயேங்கே என்றல்லவா இருக்கிறது என்று அப்போதுதான் உறைத்தது.

ஆனால் அல்லாவின் வீட்டிலிருந்து சிலைகள் அகற்றப்பட வேண்டும் என்று சொன்னால் என்ன தவறு என்று புரியவில்லை. ஷர்மா தன் பதிவில் ‘அல்லாவின் வீட்டிலிருந்து’ என்பதை சௌகரியமாக சாய்சில் விட்டுவிட்டு சிலைகள் அகற்றப்பட வேண்டும் என்று எப்படி சொல்லலாம் என்று கொந்தளிக்கிறார். அவர் வீட்டில் மெக்காவின் காபா படம் இருக்கக்கூடாது, அகற்றப்பட வேண்டும் என்று அவர் சொல்கிறாரோ இல்லையோ, நினைக்கவாவது செய்வார். அதுவும் ஆட்சேபிக்க வேண்டிய விஷயம்தானா? கோவில்கள் இருக்கும் தெருவில் அதற்கு அருகேயே பள்ளிவாசல்கள்/சர்ச்சுகள் திறக்கப்படுகின்றன, இது கூடாது என்று ஜடாயுவே அவ்வப்போது பொங்கி எழுவதைப் பார்த்திருக்கிறேன், பக்கத்தில் சர்ச் இருக்கக் கூடாது என்று ஜடாயு சொல்வதும் ஆட்சேபிக்க வேண்டியதுதானோ?

ஜடாயுவையே இதில் உங்களுக்கு என்ன பிரச்சினை என்று கேட்டேன், என் நேரத்தை வீணடிக்காதே என்று ஒதுங்கிவிட்டார். 🙂

ஷர்மாவின் அடிப்படை சரியாக இருந்தால் அவரது வாதங்கள் பொருள் உள்ளவையே. ஆனால் பில்டிங் ஸ்ட்ராங்காக இருந்து என்ன பயன்? பேஸ்மெண்ட் படு வீக்காக இருக்கிறதே?

இந்தக் கவிதை என்ன context-இல் பயன்படுத்தப்படுகிறது என்று பார்க்க வேண்டும், இதை முஸ்லிம்கள் ஹிந்து மத நம்பிக்கைகளை புண்படுத்தவே பயன்படுத்துகிறார்கள் என்று யாராவது வாதிட்டால்: context பற்றி ஷர்மா சொல்வதை paraphrase செய்கிறேன். “இந்தக் கவிதை என்ன context-இல் பாடப்பட்டது என்பதைப் பற்றி எனக்கென்ன? இதன் வார்த்தைகள்தான் எனக்கு முக்கியம்” – அதையேதான் உங்களுக்கும் சொல்ல வேண்டி இருக்கும்.

ஆனால் இந்தக் கவிதையின் context சுவாரசியமானது. ஜியா-உல்-ஹக் பாகிஸ்தான் அதிபராக இருந்தபோது எழுதப்பட்டதாம். மறைமுகமாக ஜியாவின் ஆட்சி முடிவுக்கு வரும் நாளை பார்க்கத்தான் போகிறோம் என்று சொல்கிறதாம்.

ஃபெய்ஸ் மிக சுவாரசியமான மனிதர். முரண்பாடுகள் நிறைந்தவர். கம்யூனிஸ்ட். கம்யூனிஸ்ட் மதநம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட பாகிஸ்தானில் ஏன் இருக்கிறார்? அவருக்கு பாகிஸ்தானை விட இந்தியாவே தன் அரசியலுக்கு ஏற்ற நாடு என்று தோன்றவில்லையா? (இந்தியாவிலும் சுதந்திரத்துக்கு பின் கம்யூனிஸ்டுகள் அடக்கப்பட்டார்கள்தான், ஆனால் குறைந்தபட்சம் அரசியல் சட்டம் மதச்சார்பற்றது.) மனித நேயத்தை வெளிப்படுத்திய கவிஞர் என்கிறார்கள், ஆனால் அன்றைய கிழக்கு வங்காளம் அடக்குமுறைக்கு ஆளானபோது அரசுப் பணியில் இருந்து கொண்டு அதை நியாயப்படுத்தி இருக்கிறார். புட்டோவின் நண்பர் போலிருக்கிறது, புட்டோ நில உடமை ஆதிக்கவாதிகளின் பிரதிநிதி. அப்புறம் என்ன கம்யூனிசமோ தெரியவில்லை. கம்யூனிச புரட்சி செய்து அன்றைய பாகிஸ்தான் அரசாங்கத்தை கவிழ்க்கப் பார்த்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு ஜெயிலுக்குப் போயிருக்கிறார். ஆனால் பாகிஸ்தான் அரசு பிற்காலத்தில் அவருக்கு நிஷானி பாகிஸ்தான் விருது (பாகிஸ்தானின் பாரத ரத்னா) கொடுத்திருக்கிறது. இன்றைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஹம் தேக்கேங்கே கவிதையைத் தன் பிரச்சாரத்தில் பயன்படுத்தினாராம்.

என் கண்ணில் அப்படி உன்னதக் கவிதை அல்லதான். ஆனால் அதன் பின்னணி எனக்கு இதை சுவாரசியப்படுத்துகிறது.

கவிதையையும் அதன் மொழிபெயர்ப்பையும் கீழே கொடுத்திருக்கிறேன். மொழிபெயர்த்தவர் ஹிந்துத்துவர் அல்லர் என்று நிச்சயமாகத் தெரிகிறது, அதனால் மொழிபெயர்ப்பில் எதுவும் ஆட்சேபிக்கும் வகையில் இல்லை. கவிதையின் nuances சரியாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றதா என்றெல்லாம் பார்க்கும் அளவுக்கு எனக்கு ஹிந்தி/உருது பத்தாது என்பதையும் சொல்லிவிடுகிறேன். (கஜாலாவுக்கு நன்றி, ஒரிஜினல் பதிவு இங்கே.)

Hum dekhenge
Lazim hai ke hum bhi dekhenge
Wo din ke jis ka wada hai
Jo lauh-e-azl mein likha hai

Jab zulm-o-sitam ke koh-e-garan
Rooi ki tarah ur jaenge
Hum mehkoomon ke paaon tale
Ye dharti dhar dhar dharkegi
Aur ahl-e-hakam ke sar oopar
Jab bijli kar kar karkegi

Jab arz-e-Khuda ke kaabe se
Sab but uthwae jaenge
Hum ahl-e-safa mardood-e-harm
Masnad pe bethae jaenge
Sab taaj uchale jaenge
Sab takht girae jaenge

Bas naam rahega Allah ka
Jo ghayab bhi hai hazir bhi
Jo manzar bhi hai nazir bhi
Utthega an-al-haq ka nara
Jo mai bhi hoon tum bhi ho
Aur raaj karegi Khalq-e-Khuda
Jo mai bhi hoon aur tum bhi ho


Ghazala’s Translation

We shall witness
It is certain that we too, shall witness
the day that has been promised
of which has been written on the slate of eternity

When the enormous mountains of tyranny
blow away like cotton.
Under our feet- the feet of the oppressed-
when the earth will pulsate deafeningly
and on the heads of our rulers
when lightning will strike.

From the abode of God
When icons of falsehood will be taken out,
When we- the faithful- who have been barred out of sacred places
will be seated on high cushions
When the crowns will be tossed,
When the thrones will be brought down.

Only The name will survive
Who cannot be seen but is also present
Who is the spectacle and the beholder, both
I am the Truth- the cry will rise,
Which is I, as well as you
And then God’s creation will rule
Which is I, as well as you

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்