சாண்டில்யனின் நாவல்களில் மிகவும் பிரபலமானவை யவனராணியும் கடல் புறாவும்தான். எனக்கு முந்தைய தலைமுறையினர் பலரும் யவன ராணியையே ஒரு மாற்று அதிகமாக எடை போட்டார்கள், சாண்டில்யனின் மாஸ்டர்பீஸாக கருதினார்கள்.
யவனராணியைப் படிக்கும்போது எனக்கு எட்டு, ஒன்பது வயதிருக்கலாம். அந்த வயதில் என்னை வெகுவாகக் கவர்ந்த படைப்பு. குறிப்பாக கடலில் மூழ்கும் நாயகன் கடல் ஆமையோடும் சுறாக்களோடும் சண்டையிடும் காட்சி. பிறகு ஆயுதங்களை வீசக்கூடிய யவனப் பொறிகள் என்ற ஐடியாவே த்ரில்லிங் ஆக இருந்தது. பற்றாக்குறைக்கு ஒன்றுக்கு மூன்று பெண்கள், சதிக்கு மேல் சதி என்று அடுக்கிக் கொண்டே போனார். இன்றும் இளவயதினர் படிக்க ஏற்ற புத்தகம், காமிக்ஸாக வெளியிட்டால் வெற்றி பெறும் என்று தோன்றுகிறது.
சாண்டில்யனைப் படித்த தலைமுறைகளுக்கு வயதாகிவிட்டதால் கதைச்சுருக்கத்துக்கு தேவை இருக்கலாம். சோழ அரசன் இளஞ்சேட்சென்னி சதியால் கொல்லப்பட்டவுடன் வாரிசு சண்டை. இளவரசன் கரிகாலனைக் கொல்ல சதி நடக்கிறது. அவன் பக்கம் இருக்கும் படைத்தலைவன் இளஞ்செழியன். இதற்கிடையில் புகார் நகரத்தை யவனர் டைபீரியஸின் தலைமையில் கைப்பற்ற முயல்கிறார்கள். அவர்களின் ராணிக்கு இளஞ்செழியன் மேல் காதல். டைபீரியஸ் இளஞ்செழியனை கப்பலில் ஏற்றி கிரேக்கத்துக்கு அனுப்பிவிடுகிறான். அங்கே தப்பி, அடிமையாக விற்கப்பட்டு, அரேபிய சிறு நாடு ஒன்றில் மாட்டிக்கொண்டு, மீண்டும் தப்பி, தமிழகம் வந்து, டைபீரியஸை சமாளித்து, கரிகாலனை மன்னனாக்க உதவுகிறான்.
இன்று யோசித்துப் பார்த்தால் என்ன இத்தனை பூ சுற்றுகிறாரே என்று தோன்றுகிறது. இளஞ்செழியனை மயக்கமருந்து கொடுத்து கப்பலில் ஏற்றி, அங்கேயே முடிந்தால் கொன்றுவிடுமாறு டைபீரியஸ் உத்தரவிடுகிறான். இவனே கூட கொஞ்சம் விஷத்தைக் கொடுத்திருக்கலாம். தமிழகம் திரும்பும் இளஞ்செழியன் தான் டைபீரியஸுக்கு உதவ வந்திருக்கும் யவனக் கப்பல் படைத்தலைவன் என்று சொல்லிக் கொண்டு டைபீரியஸை பல முறை சந்திக்கிறான். ஆனால் எப்போதும் முகத்தில் கவசத்துடன், அதனால் டைபீரியஸுக்கு இவன்தான் இளஞ்செழியன் என்று தெரியவில்லையாம். கழட்டுடா என்று ஒரு முறை கூடவா சொல்லமாட்டான்? எல்லாவற்றையும் விடுங்கள், எந்த யவனன் (கிரீஸ் நாட்டுக்காரன்) டைபீரியஸ் என்று பேர் வைத்துக் கொள்வான்? டைபர் ஆறு ஓடுவது ரோம் நகரத்தில். சாண்டில்யன் தமிழர்களுக்கு பிற நாடுகளைப் பற்றி எதுவும் தெரியாது என்று நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறார். இல்லாவிட்டால் ரோமாபுரிக்காரர்களைத்தான் யவனர் என்று குறிப்பிடுகிறார் என்று வைத்துக் கொள்ள வேண்டியதுதான்.
குமுதம் பத்திரிகையின் பெருவெற்றிக்கு சாண்டில்யனின் தொடர்கதைகள் ஒரு முக்கிய காரணம். யவன ராணி, கடல் புறா போன்றவையே அந்த தொடர்கதைகளில் மக்கள் மனதை அதிகம் கவர்ந்தவை என்று நினைக்கிறேன். தெரிந்தவர்கள் சொல்லுங்கள்!
இலக்கியம் அல்லதான்; குறைகள் உள்ள வணிக நாவல்தான். ஆனால் இள வயதினருக்கு படிப்பதில் ஆர்வத்தைத் தூண்டக் கூடிய நாவல். பதின்ம வயதினரைப் படிக்க வையுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் சரித்திர நாவல்கள்
எனக்கும் கடல் புறாவை விடவும் யவன ராணி பிடித்தது. பாத்திரங்கள் நினைவில் நிற்கும் படியான கதை (டைபீரியஸ், ராணி, கரிகாலன், இரும்பிடர்த்தலையார், இருங்கோவேள் எனப் பலர்). கொஞ்சம் புத்திசாலித்தனமான கட்டங்களும் இருந்தது என்று ஞாபகம் (நாகலிங்கப்பூ வைத்து போர் வியூகம், வெண்ணிப்பறந்தலைப் போர் விவரணை). அத்தோடு சாண்டில்யன் பலமும் பலவீனமும் ஒன்று தான் – நாம் ஒரு திசையில் போகும் என நினைக்க இன்னொரு திசையில் போகும். இப்படிப் பல திருப்பங்களுடன் எழுதுவது சுவாரஸ்யம் தான். ஆனால் இப்படி அநியாயத்துக்கு வண்டியைத் திருப்பித் திருப்பி கடைசியில் ஊரைச் சுற்றிக்காட்டி விட்டுப் பக்கத்து வீட்டில் வந்து நிறுத்துவார். யவன ராணியும் அதே கதைதான்.
LikeLike
ப்ருந்தாபன், சாண்டில்யனை மிகச்சரியாக விவரித்திருக்கிறீர்கள்!
LikeLike
Kanni madam is the best
LikeLike
Kanni madam good
LikeLike
ஸ்ரீனிவாசன், கன்னிமாடம் பற்றி இங்கே
LikeLike