எம்ஜிஆர் பற்றி சில புத்தகங்கள்

எம்ஜிஆர் பற்றி சில புத்தகங்களை சமீபத்தில் படித்தேன்.

ஆர்.எம். வீரப்பன் எம்ஜிஆர் யார் என்று ஒரு புத்தகத்தை எழுதி இருக்கிறார். அதில் எம்ஜிஆரை விட ஜெயலலிதா பற்றிதான் அதிகம் எழுதி இருக்கிறார். ஜெ மீது எப்போதும் எம்ஜிஆருக்கு ஒரு soft corner இருந்திருக்கிறது. ஜெ தான் எம்ஜிஆரின் ‘துணைவி’, தன்னால் எம்ஜிஆரை அடக்கி ஆள முடியும் என்று காட்ட அறுபதுகளின் இறுதியிலும் எழுபதுகளின் ஆரம்பத்திலும் முயன்றாராம். ஆர்எம்வீயின் தலையீட்டால்தான் ஜெ உலகம் சுற்றும் வாலிபனில் நடிக்க முடியாமல் போயிற்றாம். ஆர்எம்வீ ஜெவை நீங்கள் அழைத்துச் சென்றால் உங்கள் கீப்பை அழைத்துக் கொண்டு ஜாலியாகப் போகிறீர்கள் என்றுதான் பேச்சு வரும் என்ற் வெளிப்படையாகவே எம்ஜிஆரிடம் சொன்னாராம். அப்போது ஆரம்பித்த உரசல் அரசியலிலும் நீடித்திருக்கிறது.

முன்னாள் போலீஸ் அதிகாரி மோகன்தாஸ் – எம்ஜிஆருக்கு மிகவும் நெருக்கமானவர் என்று சொல்லப்பட்டவர் – எழுதிய MGR: The Man and the Myth புத்தகத்தில் புதிதாக எதுவுமில்லை. அந்தக் காலத்து செய்தித் தாள்களைத் தொகுத்தது போலத்தான் இருக்கிறது.

ரவீந்தர் எம்ஜிஆருடன் கூடவே இருந்திருக்கிறார். எம்ஜிஆருக்காக பல ட்ரீட்மென்ட்களை எழுதி இருக்கிறார், அவற்றில் வெகு சிலவே படமாகி இருக்கின்றன என்று தெரிகிறது. நாடோடி மன்னன் படத்தில் இவரது பங்களிப்பு இருந்திருக்கிறது. எம்ஜிஆரைப் பற்றி வேதநாயகன் எம்ஜிஆர் என்று ஒரு புகழ்மாலை எழுதி இருக்கிறார். ஆனாலும் அதில் அங்கங்கே எம்ஜிஆரின் பழி வாங்கும் குணம் வெளிப்படத்தான் செய்கிறது. தியாகராஜ பாகவதர் அசோக்குமார் திரைப்படத்தில் எம்ஜிஆர் நடிப்பதை விரும்பவில்லையாம், முதல்வராக இருந்தபோது அவரது மனைவியை காத்துக் கிடக்க வைத்திருக்கிறார், கடைசியில் அரசு மூலம் ஏதோ சிறு உதவி செய்திருக்கிறார். வில்லன் நடிகர் அசோகன் ஏதோ சொல்லிவிட்டார் என்று அவரை பழி வாங்கி இருக்கிறார். மஞ்சுளா போட்ட ஒப்பந்தத்தை மீறி வெளிப்படங்களில் நடித்ததற்காக அவரை விரட்டி இருக்கிறார். தன் இமேஜில் வெகு கவனமாக இருந்திருக்கிறார் என்று தெரிகிறது.

இவற்றில் எதுவும் படித்தே ஆக வேண்டிய புத்தகமில்லை. (ஆர்எம்வீ புத்தகம் கொஞ்சம் பரவாயில்லை) தமிழர்களைத் தவிர வேறு யாருக்கும் இவை சுவாரசியப்படவும் போவதில்லை. ஆனால் எம்ஜிஆர் பற்றிய பிம்பம் இன்னும் உறுதிப்படுகிறது. என்றைக்காவது எம்ஜிஆரைப் பற்றிய நடுநிலையான, உண்மைகளை மட்டுமே பிரதானப்படுத்தும் வாழ்க்கை வரலாறு வராதா, தமிழில் ராஜ்மோகன் காந்தியும் ராமச்சந்திர குஹாவும் சர்வபள்ளி கோபாலும் என்றுதான் அவதரிக்கப் போகிறார்கள் என்ற ஏக்கம் எழுகிறது. அது சரி, உண்மையை எழுதினால் தொ/குண்டர் படை வீட்டுக்கு அனுப்பப்படலாம்…

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் அபுனைவுகள்