2020 பத்ம விருதுகள்

இந்த வருஷம் சில பல எழுத்தாளர்களுக்கு பத்ம விருதுகள் கிடைத்திருக்கின்றன. மனோஜ் தாசுக்கு பத்மபூஷன். 4 பேர் – தமயந்தி பெஷரா, லில் பஹதூர் செத்ரி, அபிராஜ் ராஜேந்திர மிஸ்ரா, யெஷெ டோர்ஜி தோங்சி – ஏற்கனவே சாஹித்ய அகடமி விருது பெற்றவர்கள். சமஸ்கிருதம் (2 விருதுகள்), சந்தால், நேபாளி, அஸ்ஸமீஸ், ஒடியா, காஷ்மீரி, கோக்போரக் (திரிபுரா மாநிலத்து மொழியாம்), குஜராத்தி, ஆங்கில மொழிகளில் எழுதுபவர்களுக்கு விருதுகள் கிடைத்துள்ளன. புதுச்சேரி, அஸ்ஸாம், ஒடிசா (2), ஹிமாசலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், திரிபுரா, காஷ்மீர், குஜராத், தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு விருதுகள் கிடைத்திருக்கின்றன.

நான் பேராசிரியர் டைப்களை இங்கே கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. அது என்னவோ இலக்கியம், கல்வி, பத்திரிகைத்துறை மூன்றையும் ஒரே துறையாகக் கருதி விருதுகள் கொடுக்கப்படுகின்றன. எனக்கு இலக்கியத்தில் மட்டுமே ஆர்வம். தொன்மையான புத்தகங்களை, வரலாற்றை முன்வைப்பவர்களையும் கணக்கில் சேர்த்துக் கொள்ள முயற்சித்திருக்கிறேன்.

சமஸ்கிருதத்தின் மீது அலாதி பாசம் தெரிகிறது.  இந்தப் பதிவின் நோக்கம் இதுவல்ல, இந்த விருதுகளை நான் இந்தப் பதிவில் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் கண்ணில் பட்டது. சமஸ்கிருதத்தில் பத்திரிகை நடத்துபவர்கள், சமஸ்கிருதத்தை பிற நாடுகளில் (ப்ரேசில், ஃப்ரான்ஸ்) ஓரளவு பரப்புபவர்கள், நம் நாட்டிலும் முயல்பவர்களைப் பார்த்தால் விருது கொடுத்துவிடுவார்கள் போலத் தெரிகிறது.

சரி சமஸ்கிருதத்தை விட எனக்கு தமிழ்தான் முக்கியம். இந்திரா பார்த்தசாரதிக்குப் பிறகு ஒரு தமிழ் எழுத்தாளரும் கண்டுகொள்ளப்படவில்லை. அடுத்த வருஷமாவது கி.ரா.வை, பூமணியை கவனிங்கப்பா! அ.நீ., ஜடாயு, ராஜமாணிக்கம் மாதிரி யாராவது கொஞ்சம் புஷ் பண்ணுங்க! பி.ஏ. கிருஷ்ணன், அம்பை, பாரதி மணி, உங்களால் ஏதாவது முடியுமா? அதுவும் கி.ரா.வுக்கு தொண்ணூற்று சொச்சம் வயதாகிறது, இன்னும் எத்தனை நாள் இருப்பார்? செத்த பிறகு சிலை வைத்து என்ன பயன்?

விருது பெற்றவர்கள்:

 • மனோஜ் தாஸ் ஒடியா மற்றும் ஆங்கிலத்தில் எழுதுபவர். இவருக்கு பத்மபூஷன் விருது கிடைத்திருக்கிறது. புதுச்சேரி அரவிந்த ஆசிரமத்தில் வாழ்கிறாராம். மேலும் விவரங்கள் இங்கே.
 • தமயந்தி பெஷ்ரா சாஹித்ய அகடமி விருது பெற்ற சந்தால் மொழி எழுத்தாளர். ஒடிசாக்காரர். மேலும் விவரங்கள் இங்கே.
 • லில் பஹதூர் செத்ரி சாஹித்ய அகடமி விருது பெற்ற நேபாளி மொழி எழுத்தாளர். அஸ்ஸாம்காரர். மேலும் விவரங்கள் இங்கே.
 • அபிராஜ் ராஜேந்திர மிஸ்ரா சாஹித்ய அகடமி விருது பெற்ற சமஸ்கிருத எழுத்தாளர். கவிஞர். காசி சம்பூரணானந்த் சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர். மேல் விவரங்கள் இங்கே.
 • யெஷெ டோர்ஜி தோங்சி சாஹித்ய அகடமி விருது பெற்ற அஸ்ஸாமிய மொழி எழுத்தாளர். அருணாசலப் பிரதேசத்தை சேர்ந்தவர். மேலும் விவரங்கள் இங்கே.
 • பினாபாணி மோஹந்தி ஒடிய எழுத்தாளர். மேல் விவரங்கள் இங்கே
 • ஷிவ் தத் நிர்மோஹி காஷ்மீரி எழுத்தாளர், பேராசிரியர் என்று தெரிகிறது. அதிக விவரங்கள் கிடைக்கவில்லை.
 • பேனிசந்திர ஜமாதியா திரிபுராக்காரர். கோக்போரக் என்ற மொழியில் எழுதுபவராம். வங்காள மொழித்தாக்கம் உள்ள நாட்டார் கவிதைகள் எழுதுபவர் என்று தெரிகிறது. மேல் விவரங்கள் இங்கே.
 • ஷஹாபுதின் ராத்தோட் குஜராத்தி. நகைச்சுவக் கட்டுரைகள் எழுதுபவராம். பள்ளி ஆசிரியராக இருந்திருக்கிறார். மேல் விவரங்கள் இங்கே
 • ஸ்ரீபாஷ்யம் விஜயசாரதி தெலிங்கானாக்காரர். சமஸ்கிருதக் கவிஞர். மேல் விவரங்கள் இங்கே.
 • யோகேஷ் பிரவீன் லக்னோகாரர். அவத் வரலாற்று நிபுணராம். ஜூனூன், உம்ரா ஜான் திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதி இருக்கிறார். மேல்விவரங்கள் இங்கே.
 • ராபர்ட் தர்மன் அமெரிக்கர். திபெத்திய புத்த மதம் சார்ந்த பல நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். நடிகை உமா தர்மனின் அப்பா. மேல்விவரங்கள் இங்கே.

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள்