கம்பனின் ராமாயணம் அண்ணாதுரைக்கு காமாயணம்

(மீள்பதிவு)

அண்ணாவின் “கம்பரசம்” புத்தகத்துக்கு கொஞ்சம் notoriety உண்டு. “கெட்ட” புத்தகம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதனாலேயே அது கிடைக்குமா என்று பதின்ம வயதில் தேடி இருக்கிறேன். தி.மு.க./அண்ணா தி.மு.க. ஆட்சியில் இருந்த காலத்தில் கூட அது நூலகங்களில் கிடைக்கவில்லை. அப்புறம் கவிதை அலர்ஜி வேறு பெரிதாக டெவலப் ஆகிவிட்டதால் இதைத் தேடும் முயற்சியையே கைவிட்டுவிட்டேன்.

ஜடாயு சமீபத்தில் கம்பர் பாடல்களைப் பற்றி விளக்கினார். இன்னும் கற்பூர வாசனை தெரியவில்லை என்றாலும் வேறு எந்தக் கவிதையை படிக்கிறோமோ இல்லையோ கம்பர் பாட்டையாவது படித்துப் பார்க்க வேண்டும் என்று தோன்றி இருக்கிறது. அப்போது இந்தப் புத்தகம் தற்செயலாக கண்ணில் பட்டது.

ரொம்ப சிம்பிளாக சொல்ல வேண்டுமென்றால் அண்ணாவுக்கு முலை, அல்குல் என்பதெல்லாம் கெட்ட வார்த்தை. அப்படி ஏதாவது வந்திருக்கிறதா என்று கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டு தேடி இருக்கிறார். கிடைத்தவைகளை வைத்துக் கொண்டு கம்பன் எழுதியது ராமாயணம் இல்லை காமாயணம் என்று டிபிகல் திராவிட எழுத்துப் பாணியில் நீட்டி முழக்கி எழுதி இருக்கிறார்.

ராமனுக்கு கல்யாணம், அல்லது பட்டாபிஷேகம் என்றால் பெண்களும் மது அருந்தி, மேலாடையைப் பணயம் வைத்து சூதாடி, காமத்தில் திளைக்கிறார்கள், பக்தி இலக்கியத்தில் இப்படி எல்லாம் எழுதலாமா என்று அங்கலாய்க்கிறார். விக்டோரியன் விழுமியங்கள்!

ஆனால் அவரையும் குறை சொல்வதற்கில்லை. அப்போது பரவலாக இருந்த விழுமியங்கள் அவைதான். அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த திரு.வி.க., ராஜாஜி, கம்பன் அடிப்பொடி சா. கணேசன், டி.கே.சி. போன்றவர்கள் வேறு விதமாக நினைத்திருக்க வாய்ப்பில்லை.

இன்று படிக்கும்போது இரண்டு இடங்கள்தான் கொஞ்சம் யோசிக்க வைக்கின்றன. ஒன்று

இயல்வுறு செயல்வி நாவாய் இரு கையும் எயினர் தூண்டத்
துயழ்வான துடுப்பு வீசித் துவலை கண் மகளிர் மென்றூ
கயல்வுறு பரவவ யல்குலொளி புறத்தளிப்ப வுள்ளத்
தயர்வுறு மதுகை மைந்தர்க்கயா உயிர்ப்பளித்ததம்மா!

ராமனை மீண்டும் நாட்டுக்குக் கூட்டி வர பரதன் தலைமையில் கூட்டம் கூட்டமாக ஜனம் போகிறது. எல்லாரும் பயங்கர துக்கத்தில் இருக்கிறார்கள். கங்கையை படகில் கடக்கிறார்கள். அப்போது துடுப்புகள் தண்ணீரை வாரி அடித்து பெண்களின் ஆடை நனைந்து அல்குல் தெரிந்ததாம், அதைப் பார்த்து துக்கத்தில் ஆழ்ந்து கிடக்கும் ஆண்களுக்கு மறுபடியும் உயிர் வந்ததாம், உற்சாகம் பிறந்ததாம்! இந்த நேரத்திலும் அல்குல் சிந்தனைதானா, கம்பனுக்கு சான்ஸ் கிடைத்தால் இப்படித்தான், சீச்சீ என்கிறார் அண்ணா.

அந்தக் காலத்தில் இதற்கு கம்பனின் ரசிகர்கள் கொஞ்சம் சப்பைக்கட்டு கட்ட முயற்சித்திருக்கிறார்கள். முன்புறம் இல்லை, கம்பர் சொன்னது பின்புறம் தெரிவதைத்தான் என்றெல்லாம் “மழுப்பி” இருக்கிறார்கள். கம்பர் செக்ஸ் மேனியாக் என்று அண்ணாதுரை வாதிடுவதை முன்புறமா பின்புறமா என்று மயிர் பிளப்பது எப்படி மாற்றும் என்று எனக்குப் புரியவில்லை!

ஒரு ஜோக் உண்டு. மனைவி கணவனிடம் நான் நேற்றைக்குப் படித்தேன், ஆண்கள் ஒரு நாளில் எட்டு மணி நேரம் செக்ஸைப் பற்றித்தான் யோசிப்பார்களாமே, இது உண்மையா என்பாளாம். கணவன் மிச்ச நேரம் எல்லாம் எதைப் பற்றி யோசிப்பார்களாம் என்று கேட்பான். கம்பர் மனித இயல்பைத்தான் சொல்லி இருக்கிறார் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

ஆனால் கம்பனின் சிந்தனை இந்தப் பாடலில் எனக்குக் கொஞ்சமும் புரியவில்லை.

வாராழி கலசக் கொங்கை வஞ்சிபோல் மருங்குவாள்தான்
தாராழிக் கலைசார் அல்குல் தடங்கடற்கு உவமை தக்கோய்
பாராழி பிடரில் தாங்கும் பாந்தழும் பணி வென்றோங்கும்
ஓராளித் தேரும் கண்ட உனக்கு நான் உரைப்பதென்ன?

அனுமனுக்கு சீதையின் அங்க அடையாளத்தைச் சொல்லும் ராமன் கொங்கையையும் அல்குலையும் எதற்கு விவரிக்கிறான்? சரி கொங்கையையாவது ஒத்துக் கொள்ளலாம், அல்குல்? அனுமன் என்ன பார்க்கும் பெண்களின் ஆடையை விலக்கி அல்குலை வைத்தா அடையாளம் காணப் போகிறான்? என்ன நினைத்து இதை கம்பர் எழுதி இருப்பார்?

ஓய்வு பெற்ற தமிழ் பேராசிரியை எம்.ஏ. சுசீலா “இடை,அதற்குக் கீழ் மறைந்திருக்கும் பகுதிகள் என அனைத்தையும் ஒருசேர அந்தந்தப் பாடலின் இடம்-பொருள்-ஏவலுக்கேற்பப் பொருள் கொள்ளுமாறு அமைந்த பொதுச்சொல் அல்குல்” என்று விளக்கினார். இங்கே இடை என்று வைத்துக் கொண்டால் பொருத்தமாக இருக்கும்.

நல்ல புத்தகம் என்று சொல்லமாட்டேன். ஆனால் ஒரு காலகட்டத்தின் சிந்தனை முறையை நமக்குக் கொஞ்சம் புரிய வைக்கும் புத்தகம். படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொடர்புடைய சுட்டிகள்:
மின்னூல்
அண்ணாதுரையின் படைப்புகள்
வேலைக்காரி நாடகம்

மலர்மன்னனின் “தி.மு.க. உருவானது ஏன்?

20 thoughts on “கம்பனின் ராமாயணம் அண்ணாதுரைக்கு காமாயணம்

 1. பின்னாளில் அண்ணாதுரை இப்புத்தகத்தை பற்றி கேட்டபொழுது பேச விரும்பவில்லை என்றாராம் அதாவது அப்படி ஒரு புத்தகம் எழுதியதற்கு வருந்தினாராம்.

  Like

 2. //அண்ணாவுக்கு முலை, அல்குல் என்பதெல்லாம் கெட்ட வார்த்தை. //

  //பெண்களும் மது அருந்தி//

  ”சிறிய கட் பெரினே எமக்கீயும் மன்னே” – இது ஔவையின் சங்கப் பாடல்

  அப்படி என்றால் சங்க இலக்கியங்கள் எல்லாமே கெட்ட வார்த்தைகள் உடையதுதான். பெண்கள் குடிப்பதைப் பற்றிப் பேசியிருப்பவைதான். அப்புறம் ஏன் தமிழ், தமிழர், வீரம் என்று நீட்டி முழக்க வேண்டும்? புலியை முறத்தால் அடித்த மறத் தமிழச்சி என்று லாவணி பாட வேண்டும்? ”சங்க ரசம்” என்று எதையாவது எழுதி இருக்கலாமே? ஏன் செய்யவில்லை? – இதில் இருக்கிறது விஷயம்.

  இராமன் என்ற ஷத்திரிய அரசன்மீது காட்டப்படும் பக்தியும், கம்பன் என்ற கவிஞனுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவமும் பொறாது ஒரு சிலர் செய்த தந்திர முயற்சிதான் இதெல்லாம்.

  ”கம்ப ரசம்” என்று அண்ணா எழுதினாலும், தனிப்பட்ட முறையில் கம்பனை ரசித்தவர் அண்ணா. கண்ணதாசனிடம் கம்பனைப் பற்றி மிக உயர்வாகப் பேசியதாக எதிலோ படித்த நினைவு.

  Like

 3. தலைப்பிற்கு தொடர்பில்லாத, உள்ளடக்கத்திற்கு தொடர்பான சுட்டிகள்

  http://www.jeyamohan.in/?p=312
  http://www.jeyamohan.in/?p=308
  http://www.jeyamohan.in/?p=374
  http://www.jeyamohan.in/?p=1702

  இந்த திராவிட கும்பல் செய்த எத்தனையோ நாசவேலைகளில் இதுவும் ஒன்று. கடந்தகால நிகழ்வுகளை, இன்றைய சமூக சட்டங்களில் வைத்து அதை தூற்றுவது.

  எதையும் படித்துவிட நினைக்கும் எனக்கு இந்த திராவிட கும்பலின் எழுத்துக்களை கண்டால் ஒரு வெறுப்புதான் வருகின்றது. ஆனால் இவர்கள் கை வைத்து அதனால் எதிற்மறை விளைவுகள்தான் உண்டாகியுள்ளது. இவர்களை யாரும் சீரீயசாக எடுத்துக்கொள்வதில்லை.

  கண்ணதாசன் எழுதியது ஞாபகம் வருகின்றது, நாத்திகம் பேச கம்பனையும் மற்ற புராணங்களையும் படித்து ஆத்திகரானாதாக கூறுகின்றார்.

  Like

 4. சந்துரு, அண்ணா இதை எழுதியதற்காக வருந்தினார் என்பது தெரியாத தகவல். நன்றி!
  கோகுல், அல்குலுக்கு வேறு பொருள் என்பதெல்லாம் வெறும் சப்பைக்கட்டு. கம்பரசம் எழுதப்பட்ட காலத்திலும் இப்படிப்பட்ட மழுப்பல்கள் பதிலாக வந்திருக்கின்றன, அதற்காகவே அண்ணா அல்குல் என்றால் பெண்ணுறுப்பு என்று நிறுவவே ஒரு அத்தியாயத்தை எழுதி இருக்கிறார், கம்பரின் வேறு பல பாடல்களை மேற்கோள் காட்டி இருக்கிறார்.
  ரமணன், // சங்க இலக்கியங்கள் எல்லாமே கெட்ட வார்த்தைகள் உடையதுதான். // உண்மை. அண்ணாவின் வாதத்தை பக்தி இலக்கியத்தில் இதற்கெல்லாம் இடமில்லை என்று பொருள் கொள்ளலாம்.
  ரெங்கசுப்பிரமணி, // இந்த திராவிட கும்பல் செய்த எத்தனையோ நாசவேலைகளில் இதுவும் ஒன்று. // இது அவ்வளவு சிம்பிள் இல்லை. அண்ணாவின் காலத்தில் இது ஒழுக்கமான விஷயம் இல்லை என்றுதான் கருதப்பட்டிருக்கும். அப்போது திராவிட இயக்கத்தின் எதிரி என்றே சொல்லக் கூடிய ராஜாஜி, டி.கே.சி., கல்கி போன்றவர்கள் இந்தப் பாடல்களைப் பற்றி நல்ல விதமாக பேசி இருப்பார்களா என்ன? அது அன்றைய காலகட்டத்தின் சிந்தனை முறை, நமக்கு இன்று அது காலாவதியாகிவிட்டது, அவ்வளவுதான். இன்றைக்குக் கூட பெண்கள் pub-க்கு போகக்கூடாது என்று “போராடும்” ஸ்ரீராம் சேனாவோ அனுமன் சேனாவோ ஏதோ ஒன்று இல்லையா என்ன?

  Like

 5. கம்பனில் எவ்வளவோ ஆரோக்கியமான விஷயங்கள் இருக்க {காவிய ரசனை,சொல்லாட்சி,கற்பனை வளம்,மனித நேயம் }அதையெல்லாம் விட்டுவிட்டு வாலிப வயோதிக அன்பர்களுக்கு லேஹியம் விற்கும் பஸ் ஸ்டாண்ட் வைத்யன் வேலையை அண்ணாதுரை செய்திருக்கிறார்,அவரை சீரியஸ் ஆக எடுத்து கொள்ளாதீர்கள்.ஜீவாவை போன்ற உண்மையான நாத்தீகர்கள்கூட கம்பனில் மூழ்கி முத்தெடுத்தார்கள்.

  Like

 6. “இராமாயனத்தின் கதாப்பாத்திரங்கள்” – பெரியார் நேரடியாக ராமர் அன் கோ வினைத் தாக்கும் இந்த நூல் பற்றியும் வாய்ப்பிருந்தால் எழுதவும். 32 பக்கங்கள் மட்டுமே என நினைக்கிறேன்

  Like

 7. //RV நிரந்தரத் தொடுப்பு

  சந்துரு, அண்ணா இதை எழுதியதற்காக வருந்தினார் என்பது தெரியாத தகவல். நன்றி!
  கோகுல், அல்குலுக்கு வேறு பொருள் என்பதெல்லாம் வெறும் சப்பைக்கட்டு. கம்பரசம் எழுதப்பட்ட காலத்திலும் இப்படிப்பட்ட மழுப்பல்கள் பதிலாக வந்திருக்கின்றன, அதற்காகவே அண்ணா அல்குல் என்றால் பெண்ணுறுப்பு என்று நிறுவவே ஒரு அத்தியாயத்தை எழுதி இருக்கிறார், கம்பரின் வேறு பல பாடல்களை மேற்கோள் காட்டி இருக்கிறார்.
  ரமணன், // சங்க இலக்கியங்கள் எல்லாமே கெட்ட வார்த்தைகள் உடையதுதான். // உண்மை. அண்ணாவின் வாதத்தை பக்தி இலக்கியத்தில் இதற்கெல்லாம் இடமில்லை என்று பொருள் கொள்ளலாம்.
  ரெங்கசுப்பிரமணி, // இந்த திராவிட கும்பல் செய்த எத்தனையோ நாசவேலைகளில் இதுவும் ஒன்று. // இது அவ்வளவு சிம்பிள் இல்லை. அண்ணாவின் காலத்தில் இது ஒழுக்கமான விஷயம் இல்லை என்றுதான் கருதப்பட்டிருக்கும். அப்போது திராவிட இயக்கத்தின் எதிரி என்றே சொல்லக் கூடிய ராஜாஜி, டி.கே.சி., கல்கி போன்றவர்கள் இந்தப் பாடல்களைப் பற்றி நல்ல விதமாக பேசி இருப்பார்களா என்ன? அது அன்றைய காலகட்டத்தின் சிந்தனை முறை, நமக்கு இன்று அது காலாவதியாகிவிட்டது, அவ்வளவுதான். இன்றைக்குக் கூட பெண்கள் pub-க்கு போகக்கூடாது என்று “போராடும்” ஸ்ரீராம் சேனாவோ அனுமன் சேனாவோ ஏதோ ஒன்று இல்லையா என்ன?///

  ஆர்.வி. ஒரே பொருளை பிடித்துக் கொண்டு தொங்கக் கூடாதுங்க சார் 🙂 இன்னும் விளக்கமாய் கீழே இருக்கிறது படிச்சு பாருங்க.

  > ———- Forwarded message ———-
  > From: Hari Krishnan
  > Date: 2008/7/30
  > Subject: Re: [MinTamil] Re: தமிழகத்தில் நடுகல் – “சதி”கல் வழிபாடு!
  > To: minTamil@googlegroups.com

  > 2008/7/30 வேந்தன் அரசு

  >> >But so is the Sangam literature,

  >> இது மெய்பிக்க முடியாதது.

  >> அல்குல் என்பதற்கு பொது இலக்கியத்தில் ஒரு பொருள். மருத்துவ இலக்கியத்தில்
  >> ஒரு பொருள் என்பது ஏற்கனவே மின்தமிழில் வாதிடப்பட்டது

  > அல்குல் என்ற சொல்லுக்கு மூன்று பொருள் உண்டு.

  > 1. side; 2. waist; 3. Pudendum muliebre

  > என்பது OTL அகராதி, சென்னைப் பல்கலைக்கழக லெக்சிகன் தரும் விளக்கம். (1)
  > பக்கம், (2) அரை (இடையை அடுத்த பகுதி) (3) பெண் பிறப்புறப்பு.

  > இதில் என்ன வேதனை என்றால், தமிழிலக்கியத்தில் எந்த இடத்தில் அல்குல் என்ற
  > சொல்லைப் பார்த்தாலும் ஒட்டுமொத்தமாக எல்லோரும் மூன்றாவது பொருளை மட்டும்தான்
  > எடுத்துக் கொள்கிறோம்.

  > உவமை சொல்கிறார்களே, அதில் ஏதாவது ஒன்று இந்த மூன்றாவது பொருளுடன் ஒத்துப்
  > போகிறதா? புற்றரவல்குல். அது என்ன பாம்பு படம் எடுத்த மாதிரியா இருக்கிறது?
  > தேர்த்தட்டு அல்குல். தேர்த்தட்டு என்ன வடிவத்தில் இருக்கும் இது என்ன
  > வடிவத்தில் இருக்கிறது. (அன்பர்கள் என்னை தயவுசெய்து மன்னித்துக் கொள்ள
  > வேண்டும். இந்தக் குழுவில் இருக்கும் பெண்களை சக்தி சொரூபமாகக் கருதி என்னுடைய
  > வெளிப்படையான எழுத்தை மன்னிக்கவும், பொறுத்துக் கொள்ளவும் வேண்டும் என்று
  > கேட்டுக் கொள்கிறேன். விஷயம் அவ்வளவு முற்றிவிட்டது. அறுவைச் சிகிச்சைதான்
  > செய்யவேண்டியிருக்கிறது.)

  > மாறாக, மான்குளம்பு, சோழியின் அடிப்பக்கம் என்று ராமசந்திர கவிராயர், அந்ததக்
  > கவி வீரராகவ முதலியார் பாடல்களில் குறிப்பிடப்படும் உவமை மூன்றாவது
  > பொருளில்தான் பயன்படுகிறது என்பதைத் தெளிவாகவே காட்டுகிறது.

  > அப்படியானால், இந்தப் புற்றரவல்குல், பரவையன்ன அல்குல் (பரவை=கடல்) எல்லாம்
  > எதைக் குறிக்கின்றன? கொஞ்சம் ஆங்கிலத்தைத் தொட்டுக் கொள்வோம். ஆங்கிலத்தில்
  > hip என்றும் waist என்றும் சொல்கிறோம். இரண்டும் interchangeable ஆகப்
  > பயன்படுத்தப்பட்டாலும், இரண்டுக்கும் ஒரே பொருள் இல்லை. hip என்றால் என்ன?

  > *side of body below waist: *the area on each side of the body between the
  > waist and the thigh

  > என்பது Encarta தரும் விளக்கம். அதாவது வெய்ஸ்ட்டுக்கும் தொடைக்கும்
  > இடைப்பட்ட இடம் ஹிப். அப்படியானால் வெய்ஸ்ட் என்பது என்ன?

  > The narrowing of the body between the ribs and hips (வேர்ட்வெப் அகராதி)

  > *body area between ribs and hips: *the part of the human trunk between the
  > rib cage and the hips, usually narrower than the rest of the trunk (என்கார்ட்டா
  > அகராதி)

  > உடலில் குறுகிவரும் இடம் எதுவோ அது வெய்ஸ்ட். ஆகவேதான் ஆங்கிலத்தில் slender
  > waist உண்டு, slender hip கிடையாது. உடலின் அந்தப் பகுதியை flaring hip என்று
  > சொல்லவேண்டும்.

  > உடல் குறுகி, பிறகு சரேலென்று விரிகிறது அல்லவா அந்தப் பகுதி ஹிப். குறுகி
  > இருக்கும் இடம் வெய்ஸ்ட்.

  > சரி. இங்கிலிபீஸ் எல்லாம் எதுக்கு என்று கேட்கிறீர்கள். அதுதானே? எது
  > ஆங்கிலத்தில் வெய்ஸ்ட் என்று சொல்லப்படுகிறதோ அது இடை. ‘பொய்யோ எனும்
  > இடையாளொடும் இளையானொடும் போனான்’அப்படின்னும், இருக்கிறதோ இல்லையோ
  > என்றெல்லாமும் கவிஞர்கள் பாடுகிறார்களே அதுதான் இது.

  > எதை ஆங்கிலத்தில் ஹிப் என்று சொல்கிறார்களோ அது தமிழில் அரை என்றும் அல்குல்
  > என்றும் சொல்லப்படுகிறது. That portion which flares up after the point where
  > body had narrowed down.

  > இப்படி விரியும் இடத்துக்கு மட்டுமே தேர்த்தட்டு, புற்றரவு போன்ற உவமைகள்
  > பொருந்துகின்றன என்பதையும் கவனிக்க வேண்டும். The outline of a cobra raising
  > its hood resembles half of an hour-glass. தேர்த்தட்டு என்பதும் அப்படித்தான்
  > தேரில் விரிந்து இருக்கும் இடம். இந்த உவமைகள் எதைக் குறிக்கின்றன? அரை
  > (இடைக்குக் கீழே, *பக்கங்களில்* (not directly below) விரியும் பகுதியை.
  > நிச்சயமாக பிறப்புறுப்பை அன்று.

  > இன்னும் கன்வின்ஸ் ஆகவில்லை என்றால்,”கவைத்தாம்பு தொடுத்த காழூன்று
  > அல்குல்”என்று பெரும்பாணாற்றுப்படை சொல்வது எதனை என்று விளக்கவேண்டும். “1
  > கவைத்தாம்பு slip-knot, noose” என்பது ஓடிஎல் தரும் விளக்கம். (ஆடையின்)
  > முடிச்சு போடப்பட்டு உள்ள அல்குல் என்று பெரும்பாணாற்றப்படை சொல்கிறது.
  > பாவாடையின் முடிச்சை எங்கே போடுவார்கள்?

  > சரி போகட்டும். “பூந்துகில்சேர் அல்குல் காமர்எழில் விழலுடுத்து” அப்படின்னு
  > திவ்யப் பிரபந்தம் பேசுகிறது. (கண்ணரே.. இடம் மறந்து பூட்ச்சி.. யார்
  > வாய்மொழி இது) அல்குலைச் சுற்றிலும் பூந்துகில் உடுத்தப்பட்டிருக்கிறது என்று
  > இந்த வரி சொல்லுகிறது. என்னாங்க, மென்மையான துணியை எந்த அல்குலைச் சுற்றி
  > உடுத்துவாங்க?

  > சரி. அதுவும் வேணாம். பெரியாழ்வார் தன்னை யசோதையாக பாவித்துக் கொண்டு
  > பாடுகிறார் அல்லவா, அங்க வாங்க:

  > இருமலைபோலெதிர்ந்தமல்லர் இருவரங்கம்எரிசெய்தாய். உன்
  > திருமலிந்துதிகழ்மார்வு தேக்கவந்து*என்னல்குலேறி*
  > ஒருமுலையைவாய்மடுத்து ஒருமுலையைநெருடிக்கொண்டு
  > இருமுலையும்முறைமுறையா ஏங்கிஏங்கிஇருந்துணாயே.

  > முலையுண்ண வா என்று குழந்தையைத் தாய் அழைக்கிறாள். ‘அப்பா, கொழந்தே, ஓடிவாடா
  > என் கண்ணா, வந்து என் அல்குல் மேல ஏறிக்கோ. மார்பில் பால் அருந்து’ என்று
  > சொல்கின்றாள். பால் குடிக்கத் தன் குழந்தையை வந்து ஏறி அமரச் சொல்லும் தாய்
  > எந்த இடத்தில் அமரச் சொல்வாள்? இடை குறுகியபின், விரியத் தொடங்கும் அந்த
  > இடத்திலா அல்லது வேறெங்காவதா?

  > தமிழிலக்கியத்தில் அல்குல் என்று குறிப்பிடப்படுவது பெரும்பான்மையும்
  > ஆங்கிலத்தில் hip என்று எது குறிப்பிடப்படுகிறதோ அதுவே. மான்குளம்பு, சோழி
  > போன்ற உவமைகளால் மட்டுமே அந்த இன்னொரு பொருள் குறிக்கப்படும். அப்படிக்
  > குறிப்பிடப்படும் இடங்கள் வெகுசிலவே.

  > இத்தோடு இந்த விஷயத்தை ஏழாவது முறையாகவோ எட்டாவது முறையாகவோ எழுதுகிறேன்,
  > கடந்த பத்தாண்டுகளில். ‘நல்ல கற்பனை வளம் உங்களுக்கு’அப்படின்னு எழுதறாங்க.
  > கண்ணைப் பொத்திக் கொண்டு கருக்கிருட்டில் தேடினால் என்ன, காயற வெய்யில்ல தேடினா
  > என்ன? கண்ணைத் திறந்தால்தான் வெளிச்சம் தெரியும்.

  > கண் உள்ளவன் பார்க்கக் கடவன்.

  > —
  > அன்புடன்,
  > ஹரிகி.

  Like

 8. ஒட்டுமொத்த திராவிட இனமே கொண்டாடும் திருக்குறளில் கூட காமத்துப் பால் உண்டு. ஒரு வேளை அண்ணா அதை படிக்காமல் விட்டிருக்ககூடும், இல்லையென்றால் இதையாவது விட்டு வைப்போம் என்றெண்ணியிருக்க கூடும்…

  காமம் என்பதை அசிங்கம் என பார்த்தால் நாமெல்லாம் கம்பனை மட்டுமல்ல எல்லா எழுத்தாளனையும் மறந்துவிட வேண்டியதுதான்.

  “நல்ல புத்தகம் என்று சொல்லமாட்டேன்.” இந்த ஒரு வரிக்காக உங்களை கோடி முறை கூட பாராட்டலாம்….

  Like

 9. விஜயன், // கம்பனில் எவ்வளவோ ஆரோக்கியமான விஷயங்கள் இருக்க {காவிய ரசனை,சொல்லாட்சி,கற்பனை வளம்,மனித நேயம் }அதையெல்லாம் விட்டுவிட்டு வாலிப வயோதிக அன்பர்களுக்கு லேஹியம் விற்கும் பஸ் ஸ்டாண்ட் வைத்யன் வேலையை அண்ணாதுரை செய்திருக்கிறார் // எனக்கு இதில் இசைவில்லை. காமம் வாழ்க்கையின் ஒரு பகுதி, அதை கம்பன் எழுதியதில் என்ன தவறு? சரி அது அப்படியே லேகியம் விற்பது என்று வைத்துக் கொண்டாலும் கம்பன் எழுதலாம், அண்ணா அப்படி எழுதப்பட்டிருக்கிறது என்று சொல்லக் கூடாதா?

  dstjlbk (என்னங்க பேரு இது?), புற்றரவல்குல் என்பது பெண்ணுறுப்புக்கு சரியான உவமையாகத்தான் இருக்கிறது. ஹரிகி என்பவர் அப்படி இல்லை என்று சொல்வதை ஏற்பதற்கில்லை.

  ஷிவ், // இராமாயனத்தின் கதாப்பாத்திரங்கள்” – பெரியார் நேரடியாக ராமர் அன் கோ வினைத் தாக்கும் இந்த நூல் பற்றியும் வாய்ப்பிருந்தால் எழுதவும். 32 பக்கங்கள் மட்டுமே என நினைக்கிறேன் // மின்சுட்டி கிடைக்குமா?

  ஜெகதீஸ்வரன், இன்றைக்குக் கூட இவ்வளவு sensitive ஆக இருக்கிறோம், அன்றைக்கு என்னவெல்லாம் எதிர்ப்பு வந்ததோ?

  Like

 10. //> இருமலைபோலெதிர்ந்தமல்லர் இருவரங்கம்எரிசெய்தாய். உன்
  > திருமலிந்துதிகழ்மார்வு தேக்கவந்து*என்னல்குலேறி*
  > ஒருமுலையைவாய்மடுத்து ஒருமுலையைநெருடிக்கொண்டு
  > இருமுலையும்முறைமுறையா ஏங்கிஏங்கிஇருந்துணாயே.

  > முலையுண்ண வா என்று குழந்தையைத் தாய் அழைக்கிறாள். ‘அப்பா, கொழந்தே, ஓடிவாடா
  > என் கண்ணா, வந்து என் அல்குல் மேல ஏறிக்கோ. மார்பில் பால் அருந்து’ என்று
  > சொல்கின்றாள். பால் குடிக்கத் தன் குழந்தையை வந்து ஏறி அமரச் சொல்லும் தாய்
  > எந்த இடத்தில் அமரச் சொல்வாள்? இடை குறுகியபின், விரியத் தொடங்கும் அந்த
  > இடத்திலா அல்லது வேறெங்காவதா?//

  இதுக்கும் பதில் சொல்லுங்க சார்

  Like

 11. kambarasam nannum padithen. anna avargal athil solli erukkum sankathikal atthanaiyum marukka mudiyatha vathangal. kamban paadiyathu raman endra vuyarndha nokkam konda (oruvanukku oruthi) kaduvulagiya manithanai patri. aanal adikkadi avar vubayogikkum varnanaikalil ellam merkooriya uruppukalai patri samayam kidaikum pothellam kamban padi irukkiran, ithaithan anna marukkirar. ithu kamayanama allathu ramayanama endru. kambanukku avar ethiri alla, manitha theivathai pattri padum pothu kamam kalantha varnanaikal illmal iruthirunthal anna kamabanai orupothum kuttram solli iruka mattar.

  Like

  1. முருகன், காமத்தைப் பற்றிய விக்டோரியா மகாராணி காலத்து விழுமியங்கள் கம்பனுக்கு இல்லாதது நல்ல விஷயம். அது அண்ணாதுரைக்கு இருந்தது புரிந்து கொள்ளக் கூடியதுதான், ஆனால் அந்த விழுமியங்களை நாம் ஏன் இன்னும் பிடித்துக் கொண்டு தொங்கவேண்டும்?

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.