(மீள்பதிவு, சில திருத்தங்களுடன்)
என் அப்பா இறந்து இன்றோடு ஒரு வருஷம் முடிகிறது. என் முதல் ரோல் மாடல் அவரே. அவரது நினைவு வந்துகொண்டேதான் இருக்கிறது. அவரோடு போட்ட சண்டைகள், சிரித்த தருணங்கள், அவரோடு உட்கார்ந்து ரேடியோவில் கேட்ட கிரிக்கெட் கமெண்டரிகள், அவர் அடித்துவிட்ட கதைகள், சோர்ந்திருந்தத்போது அவர் தந்த தைரியம், அவர் சோர்ந்திருந்தபோது என்னால் தர முடிந்த தைரியம், அவரது கொஞ்சம் கனமான குரல் எல்லாம் அவ்வப்போது நினைவு வந்து wry smile ஒன்றை உருவாக்கிக் கொண்டேதான் இருக்கின்றன.
அவர் இறந்தபோது அவரைப் பற்றி எழுதினேன். ஆனால் அதை இன்னும் பதிப்பதற்கில்லை. இப்போதைக்கு அவர் சிறு வயதில் சொன்ன கதையைப் பற்றி மீள்பதித்திருக்கிறேன்.
என் சிறு வயதில் என் அம்மா எனக்கும் என் தங்கைகளுக்கும் நிறைய கதை சொல்லி இருக்கிறாள். ஆனால் அப்பா எங்களுக்கு இரண்டே இரண்டு கதைகள் மட்டுமே சொல்லி இருக்கிறார். ஒன்று Tale of Two Cities, இரண்டு Treasure Island. கொஞ்சம் கனமான குரலில் மங்கலான லைட் பல்ப் ஒளியில் அவர் “15 Men on the Dead Man’s Chest” என்று பாடுவது அழியாத நினைவு.
இப்படி நாஸ்டால்ஜியாவோடு எந்தப் புத்தகத்தைப் படித்தாலும் பிடிக்கத்தான் பிடிக்கும். இந்தப் புத்தகமும் அப்படித்தான்.
நான் கதைச்சுருக்கம் எல்லாம் எழுதப் போவதில்லை. வேண்டுமென்றால் விக்கியில் படித்துக் கொள்ளுங்கள்.
எனக்கு கதையின் ஆரம்பம்தான் மிகவும் பிடித்த பகுதி. கடற்கொள்ளையர், பில்லி போன்ஸ், அவனுக்குக் கொடுக்கப்படும் Black Spot, அதைக் கொண்டு வரும் குருட்டு ப்யூ, அங்கே நடக்கும் சண்டை, அந்த atmosphere எல்லாமே மிகவும் த்ரில்லிங் ஆக இருக்கும். லாங் ஜான் சில்வரின் பாத்திரப் படைப்பு நன்றாக இருந்தாலும், கதை சில்வரின் வருகைக்குப் பிறகு கொஞ்சம் தொய்வடைகிறது. பென் கன் பேய் போல அவர்களை பயமுறுத்துவது எனக்கு பர்சனலாக நாஸ்டால்ஜியாவை உருவாக்குகிறது.
சிறு வயதில் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகம் என்று சொல்வேன். கட்டாயம் குழந்தைகளை – குறிப்பாக பத்து வயது சிறுவர்களை – படிக்க வையுங்கள்.
ஒரே ஒரு சோகம் என்னவென்றால் கதையை என் குழந்தைகளுக்கும் சொல்ல முயற்சித்திருக்கிறேன். அவர்கள் அதை அவ்வளவாக ரசிக்கவில்லை. சின்னவளுக்கு அதை ரசிக்கும் வயதில்லை. பெரியவளுக்கு நான் சொல்ல ஆரம்பித்தபோது என்னிடம் கதை கேட்கும் ஆர்வம் இல்லை, அவளே படித்துக் கொள்வதுதான் அவளுக்கு சரிப்பட்டு வந்தது.
நான் சமீபத்தில் 1961-62 கல்வியாண்டில் பள்ளியிறுதி வகுப்பு படிக்கும்போது இப்புத்தகத்தின் சுருக்க வடிவம் எனக்கு ஆங்கில துணைபாடமாக இருந்தது.
அச்சமயம் எங்கள் ஆசிரியர் இப்புத்தகத்தின் ஒரு அதிசயமாக ”இதில் பெண் கதாபாத்திரங்களே கிடையாது” எனக் கூறினார். என் வகுப்பில் இருந்த வரதராஜன் என்னும் பையன் “சார் ஜிம்மின் அம்மா பாத்திரம் இருக்கிறதே” என கர்ணகடூர குரலில் கத்த, ஆசிரியர் அவனை வகுப்பிலிருந்து வெளியேற்றினார்.
ஆசிரியர் சொன்னதிலும் தவறில்லைதான். முதல் அத்தியாயத்துக்கு பிறகு ஜிம்மின் அம்மா வருவதில்லைதானே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
LikeLike
சாண்டில்யனின் ‘கடல் ராணி’ கதையில் ஜான் சில்வர் ஒரு கதாபாத்திரமாக வருவான்.
LikeLike
உயர்நிலை பள்ளி குழந்தைகளுக்கு நான் பரிந்துரைக்கும் இன்னும் சில நாவல்கள்,tombrown “s scooldays ,oliver twist ,david copperfield .
LikeLike
எனக்கு என் சிறு வயது ஞாபகங்கள் வந்து விட்டது – Yo ho ho and a bottle of rum!
நான் ரொம்பவும் ரசித்து படித்திருக்கிறேன் – அதன் பின், R.L. Stevenson எழுதிய மற்ற புத்தகங்களையும் படிக்க வேண்டும் என்ற ஆவலில், ‘Kidnapped’, ‘Dr. Jekyll and Mr. Hyde’ கூட படித்தேன்.
LikeLike
ஆர்வி,
இந்த வகை 18 ஆம் நூற்றாண்டு ஐரோப்பிய [குறிப்பாக பிரிட்டிஷ்] நாவல்கள் மற்றும் காமிக்குளின் அரசியல் பற்றி நிறைய எழுதப்பட்டுள்ளது. ’கதையை கதையாக பாக்கணும்’ போன்ற அப்பாவித்தனமான கூற்றுகளை கைவிட்டு நம் குழந்தைகளுக்கு அந்த அரசியலையும் அறிமுகம் செய்தாகவேண்டும். அது அவர்களின் இளம் வயது மனநிலை ஒரு குறிப்பிட்ட வகையான அரசியல்பார்வையை அவர்கள் அறியாமலே ஏற்றுக்கொண்டு ‘கண்டிஷன்’ ஆவதை தடுக்கும்
இந்தவகை நாவல்கள் எப்போதும் ஐரோப்பாவுக்கு வெளியே தூரத்து நாடுகளில்
பெரும் செல்வம் ஒளிந்திருப்பதைப்பற்றியதாக இருக்கும். அவற்றை தங்கள் சாகசம் மூலம் எடுக்கும் ஐரோப்பிய கதாநாயகர்களைப்பற்றி அவை பேசும். அந்த நாயகர்களின் வீரமே அவற்றை அவர்களுக்கு சொந்தமானதாக ஆக்கிவிடும். அதாவது கிட்டத்தட்ட கொள்ளை. ஆனால் அச்சமில்லாமல் சாகசமாக கொள்ளையடித்தால் கொள்ளைப்பொருள் அதற்கான வெகுமதியாக ஆகிவிடும்! இதுவே பதினெட்டாம்நூற்றாண்டு ஐரோப்பிய காலனியாதிக்க மனநிலையை கட்டமைத்த அடிப்படை நம்பிக்கை.
பிற நாடுகளின் பண்பாடு, மக்கள் எதுவுமே முக்கியமல்ல. அங்குள்ள ‘புதையலே’ முக்கியம். அந்த புதையல் ‘ஆளில்லாதது’ அது ‘சாகசக்காரனுக்காக’ காத்திருக்கிறது. அதை அடைய சாகசம் என்ற பேரில் எதுவும் செய்யலாம். அதற்கான உரிமை வெள்ளையனுக்கு உள்ளது — சுருக்கமாகச் சொன்னால் பிள்ளைகளுக்கு இந்த கதைகள் அளிக்கும் மனச்சித்திரம் இதுவே.
அந்த தொலைதூர நாடுகள் [அனேகமாக அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஆசியா கண்டங்கள்] மிக கடுமையானவை. அங்குள்ள மக்கள் கொடூரமானவர்கள். ஆனால் நாகரீகமற்றவர்கள். இதெல்லாம்தான் இந்த கதைகள் உருவாக்கும் பொதுச்சித்திரம். அந்த மக்களில் இருந்து ஒருசிலர் வெள்ளையருக்கு உதவுவார்கள். அவர்களே நியாயமானவர்கள், நல்லவர்கள்.
டார்ஜான் , ஃபேண்டம் போன்ற கதைகளில் இந்த மனநிலை இன்னும் கொஞ்சம் ‘மேம்படுத்த’பட்டுள்ளது. செல்வங்களை கொள்ளையிட வருபவர்கள் வில்லன்களாக இருக்கிறார்கள். ஆனால் அவர்களிடமிருந்து கறுப்பர்களை காப்பவர் ஒரு அசாதாரண வெள்ளைக்கார கதாநாயகன்
மெக்கன்னாஸ் கோல்ட், கிங் சாலமோன் மைன் முதல் இண்டியானா ஜோன்ஸ் வரை இந்த புதையல் தேடும் மனநிலை நீடிக்கிறது. இது ஒரு காலனியாதிக்க மனநிலை என்பதை நம் பிள்ளைகளுக்குச் சொல்லியாகவேண்டும். நான் என் பிள்ளைகளுக்கு அவர்கள் ஐந்தாம் வகுப்பு படிக்கும் காலகட்டத்திலேயே சொல்லியிருந்தேன். ஏனென்றால் இந்தக்கதைகளை நாம் பள்ளிகளில் பாடநூல்களாக வைக்கிறோம். செய்தித்தாள்களில் தொடராக வெளியிடுகிறோம். சினிமாக்களாக பார்த்துக்கொண்டிருக்கிறோம்
’அவதார்’ போன்ற படங்கள் இன்று நேர் எதிரான மனநிலையுடன் வருகின்றன. அங்குள்ள குழந்தைகளுக்கு மனநிலை மாற்றம் உருவாகி வருகிறது. நம்மவர் இன்னும் அதே 18 ஆம் நூற்றாண்டில் வாழ்கிறோம்
ஜெ
LikeLike
ஜெயமோகன், நீங்கள் சொல்வது பல புத்தகங்களுக்கு – Allan Quatermain, Westward Ho , Fu Manchu, சாப்பர் (Sapper) எழுதிய பல புத்தகங்களுக்குப் பொருந்தும். ஏன் கிப்ளிங்கில் கூட எப்போதும் ஒரு patronizing attitude உண்டு. ஜாக் லண்டனின் சில கதைகளில் கூடத் தெரியும். வேறு சில நாவல்களில் இன வெறுப்பே – குறிப்பாக யூத வெறுப்பு தெரியும். ஆனால் Treasure Island-உக்குப் பொருந்தாது என்றே கருதுகிறேன். இங்கே எல்லா வில்லன்களும் கடற்கொள்ளையர்கள்தான். அமெரிக்கா, ஆப்பிரிக்கா, பிற நாடுகளின் பண்பாடு எதைப் பற்றியும் ஸ்டீவன்சன் எழுதவே இல்லை. கொடூரமான கடற்கொள்ளையன் கேப்டன் ஃபிளின்ட் என்றுதான் குறிப்பிடுகிறார். வெள்ளையர்களைத் தவிர வேறு இனத்தவரான ஒரு பாத்திரம் கூட கிடையாது. திருடர்களிடமிருந்து புதையலை எடுத்துக் கொள்வதைப் பற்றி “நல்லவர்களுக்கு” எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை என்றுதான் அதிகபட்சம் குற்றம் சொல்ல முடியும். இன்று கூட புதையல் கிடைத்தால் யாருக்கு சொந்தம் என்று தேடுவதில்லை. மேலும் எலிசபெத் கால கடற் கொள்ளையர் ஏறக்குறைய கடற்படையாகவே செயல்பட்டனர், பிற இனத்தவரிடமிருந்து திருடிய ஸ்பாநியர்களிடமிருந்துதான் அநேகமாகத் திருடினார்கள்.
இது காலனியாக மனநிலைப் புத்தகம் இல்லை. அப்படிப்பட்ட மனநிலை ஸ்டீவன்சனிடம் இல்லை என்று சொல்வதற்கில்லை. அவருடைய சில பசிஃபிக் தீவுகள் கதைகளில் இது தெரியும். ஆனால் இந்த சாகசக் கதையில் இல்லை.
டோண்டு, ஆசிரியர் சொல்வதில் தவறு கண்டுபிடிப்பது எப்போதுமே டேஞ்சர்தான். 🙂
ராஜ், ஆம் கடல் ராணியில் சில்வர் வரும் நினைவிருக்கிறது.
விஜயன், டாம் ப்ரவுனா? பசங்க பாவம்!
உஷா, ஜெகில் அண்ட் ஹைட் என் கண்ணில் இலக்கியம். அருமையான புத்தகம். ஸ்டீவன்சனின் பிற கதைகளை – Kidnapped, Catriona ஆகியவற்றை நான் அவ்வளவாக ரசிக்கவில்லை. Bottled Imp சிறுகதை கொஞ்சம் நன்றாக இருக்கும்.
LikeLike
@RV:நான் இந்த கதையை சின்ன வயதில் படித்ததில்லை. பத்து வயது நந்துவிடம் கேட்டேன்.
போன வருடமே பள்ளி நூலகத்தில் இருந்தது, படித்துவிட்டேன் என்றான் (re told story).
மெதுவாக இந்த புதையல், கொள்ளை என்று ஆரம்பித்தேன்…”அப்பா, நிறுத்துங்கள் (“ங்கள்” நானே போட்டுக்கொள்கிறேன், ஆங்கிலத்தில் இல்லையே!)
அவர்கள் கொள்ளையர்கள், எப்படி ethic எதிர்பார்க்கலாம்!”
@ஜெ: அவதார் பற்றிய உங்கள் பதிவில் அவதாரிலும் ஒர் ஐரோப்பியமையவாதம் உள்ளது, அவ்வளவு சக்திகளுடன் பண்டோர மக்கள் பழங்குடிகளாகவே இருக்கிறார்கள், அவர்களை காப்பாற்ற வெள்ளை மனிதன் உருமாற வேண்டியதிருக்கிறது என்று சொல்லியிருந்தீர்கள்…
நீங்கள் சொன்னமாதிரி அந்த வெள்ளை மனிதன் அவர்களாக மாறுவதே கொஞ்சம் முன்னகர்ந்திருப்பதற்கான அறிகுறிதான்!
@டோண்டு சார்: 1961ல் உங்கள் ஆசிரியர் கேட்ட கேள்வியை 2011ல் இன்று என் நந்துவிடம் கேட்டேன்; உங்கள் வகுப்பு தோழர் வரதராஜன் சொன்ன அதே பதிலைத்தான் சட்டென்று சொன்னான்..! ஆசிரியர் போல் வெளியேறச்சொல்லாமல் தலையை தடவிக்கொடுத்தேன்!
LikeLike
சிவா, // அவர்கள் கொள்ளையர்கள், எப்படி ethic எதிர்பார்க்கலாம்!” // நந்து கேட்டது சரியான கேள்வி!
LikeLike