கொத்தமங்கலம் சுப்பு

சமீபத்தில் அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் கொத்தமங்கலம் சுப்புவை நினைவு கூர்ந்து ஃபேஸ்புக்கில் எழுதி இருந்தார். அவரது பதிவுக்கு ஐம்பது அறுபது மறுமொழிகள் வந்தன. எனக்கு ஆச்சரியம்தான், இத்தனை பேர் கொ. சுப்புவை நினைவில் வைத்திருப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவர்களில் எத்தனை பேர் ஐம்பது வயதுக்கு இளையவர்களாக இருப்பார்கள் என்று தெரியவில்லை. அதனால் அவரை நினைவு வைத்திருப்பவர்களுக்கு நாஸ்டால்ஜியா என்ற எண்ணம் இன்னும் மாறவில்லை.

Aside: ஒரு காலத்தில் – அறுபது-எழுபதுகளில் என்று நினைக்கிறேன் – அமுதசுரபியின் பப்ளிஷராக இருந்த பி.எஸ். விஸ்வநாதன் என்னுடைய தங்கையின் மாமனார்.  அப்போதெல்லாம் விக்ரமன் ஆசிரியராக இருந்தார் என்று நினைவு…

thiruppur_krishnanகிருஷ்ணனின் மதிப்பீட்டில் இருந்து நான் மாறுபடுகிறேன். என் கண்ணில் தி. மோகனா நல்ல நாவல் அல்ல, ஆனால் ஆவண முக்கியத்துவம் உள்ள வணிக நாவல். இன்று தி. மோகனா நினைவிருப்பதே அதன் திரைப்பட வடிவத்தால்தான் என்றே கருதுகிறேன். அதனால் என்ன? என் தலைமுறையினருக்கு சுஜாதாவின் லாண்டிரி லிஸ்டையும் ஒரு காலத்தில் படிக்கத் தயாராக இருந்தது போல, அடுத்த தலைமுறையினருக்கு பாலகுமாரன் மீது ஒரு soft corner இருப்பதைப் போல, தி. மோகனா வெளிவந்த காலத்தில் அடுத்த விகடன் இதழ் எப்போது வரும் என்று காத்திருந்தவர் அனேகர். அவர்களின் கண்ணோட்டத்தை வெளிப்படுத்தும் இந்த மதிப்பீடு முக்கியமானது.

கிருஷ்ணனின் மதிப்பீடும் என் ஒரிஜினல் பதிவும் கீழே.

திருப்பூர் கிருஷ்ணனின் வார்த்தைகளில்:

கொத்தமங்கலம் சுப்பு என்றதும் உடனே நினைவுக்கு வருகிற படைப்பு தில்லானா மோகனாம்பாள். ஆனந்த விகடன் வாசகர்களின் மனங்களைக் கொள்ளைகொண்ட நாவல் அது.

நடனமணி மோகனாம்பாள், நாதஸ்வரக் கலைஞன் சண்முக சுந்தரம் இருவரின் காவியக் காதலைச் சொன்ன அந்த நாவல், கூடவே நம் பாரம்பரியக் கலைகளான நாட்டியம், சங்கீதம் போன்றவற்றின் உன்னதங்களையும் சேர்த்துச் சொல்லிற்று. தமிழ் வாசகர்களைப் பித்துப் பிடித்துப் படிக்கச் செய்த தொடர் அது.

பிரபல நாவலாசிரியை வசுமதி ராமசாமி அவர்களிடம் ஒருமுறை பேட்டியெடுக்கச் சென்றிருந்தேன். அவரது நாவலான காப்டன் கல்யாணம் பற்றி அவரிடம் கேட்டேன்.

“என்னுடைய அந்த நாவல் விகடனில் தொடராக வந்தபோது கூடவே தில்லானா மோகனாம்பாள் நாவலும் வந்தது. அதைப் பல்லாயிரக்கணக்கான பேர் ரசித்து வாசித்தார்கள். அதே இதழில் என் தொடர்கதை வந்ததால் அதை வாசித்த அத்தனை வாசகர்களும் என் கதையையும் வாசித்தார்கள் என்பதில்தான் எனக்குப் பெருமை. நான் கொத்தமங்கலம் சுப்பு எழுத்துக்களின் தீவிர ரசிகை!” என்று பண்பட்ட அடக்கத்துடன் தெரிவித்துக் கொண்டார் அவர்.

கலைஞர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் செம்மொழி மாநாடு விமரிசையாக நடைபெற்றது. அதில் தமிழறிஞர் சாலமன் பாப்பையா தலைமையில் ஒரு பட்டிமன்றம் ஏற்பாடாகியிருந்தது. பட்டிமன்றத்தில் நான் ஓர் அணியில் கலந்துகொண்டு பேசினேன்.

அப்போது தமிழின் முக்கியமான எழுத்தாளர்கள் பலரைப் பற்றிக் குறிப்பிட்டபோது தில்லானா மோகனாம்பாள் புகழ் கொத்தமங்கலம் சுப்பு பெயரையும் குறிப்பிட்டேன்.

பட்டிமன்றம் முடிந்தபிறகு என்னை ஏராளமான பேர் தொலைபேசியில் அழைத்து நான் கொத்தமங்கலம் சுப்பு பெயரைச் சொன்னது பற்றிக் கூறி, அதன் பொருட்டாகவே என்னைப் பாராட்டினார்கள். நானும் அவரது ரசிகன்தான் என்றாலும் அவருக்கு எத்தனை ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று ஆச்சரியத்தில் ஆழ்ந்தேன்.

விமர்சகர்கள் வலியத் தூக்கிப் பிடித்து நிறுத்துகிற எழுத்தாளர்கள் கொஞ்சம்பேர் உண்டு. கால வெள்ளத்தில் மக்களால் அவர்கள் மறக்கப்பட்டு விடுவார்கள். தன் எழுத்தின் வலிமையை நம்பாமல், விமர்சகர்களது வாதத்தின் வலிமையை நம்பி இலக்கியம் படைப்பவர்களுக்கு அந்த கதி நேர்வது ஆச்சரியமல்ல.

ஆனால் எழுத்தின் தரத்திலேயே முக்கிய கவனம் செலுத்தி, சமுதாய உணர்வோடு எழுத்தைப் படைத்து, அதன்பொருட்டு வாசகர்களின் ரசனையை மட்டுமே நம்பி வேறு செல்வாக்கைத் தேடாத எழுத்தாளர்களும் சிலர் இருக்கிறார்கள். அவர்களை மக்கள் என்றும் மறப்பதில்லை. அப்படிப்பட்டவர்களில் ஒருவர் கொத்தமங்கலம் சுப்பு. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் வாசகர்கள் ஒருபோதும் அவரை மறக்க மாட்டார்கள்.

தமிழில் எழுதப்பட்ட ஓர் எழுத்து திரைப்படமாகவும் வந்து, எழுத்து பெற்ற அதே வெற்றியைப் பெற்றது என்றால் அந்தப் பெருமை தில்லானா மோகனாம்பாள் நாவலுக்கு மட்டும்தான் உண்டு என்று தோன்றுகிறது. நாட்டியப் பேரொளி பத்மினியையும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனையும் மோகனாம்பாளாகவும் சண்முகசுந்தரமாகவுமே மக்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

தில்லானா மோகனாம்பாளின் இன்னொரு பெருமை கோபுலுவின் கண்ணைக் கட்டி நிறுத்தும் அழகிய சித்திரங்கள். ராவ்பகதூர் சிங்காரம், பந்தநல்லூர் பாமா போன்ற கொத்தமங்கலம் சுப்புவின் மற்ற நாவல்களுக்கும் கோபுலுவே ஓவியம் வரைந்தார் என்றாலும், தில்லானா மோகனாம்பாள் நாவலில் கோபுலு பெற்ற புகழ் அலாதியானது.

என்னதான் சிறப்பாக இருந்தாலும் தில்லானா மோகனாம்பாள் நாவல் நீண்டுகொண்டே போகிறதே என்று ஒரு வாசகர் சாவியிடம் கேட்டாராம். அதற்கு சாவி சொன்ன பதில்:

“குரங்குக்கு வால் நீளமாக இருந்தால் சங்கடம். மயிலுக்குத் தோகை நீளமாக இருந்தால் அழகுதானே? எவ்வளவு வாரம் வருகிறதோ அவ்வளவு வாரங்களும் ரசியுங்களேன்!”

தமிழ் நாவல் வரலாற்றில் தில்லானா மோகனாம்பாள் ஒரு மைல்கல். இந்த ஒரு மைல்கல் மட்டுமல்ல, இன்னும் கவனிக்கப்படாத எத்தனையோ மைல்கற்கள் கொத்தமங்கலம் சுப்பு இலக்கியத்தில் உண்டு. அவற்றில் ஒன்றுதான் அவரது தமிழ் நயம் கொஞ்சும் கவிதைகள்.

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை ஆகியோரைப் போல எல்லோருக்கும் புரிகிற எளிய வார்த்தைகளையே சுப்பு தம் கவிதைகளில் பயன்படுத்தினார். இன்னும் சொல்லப் போனால், நாட்டுப்புற மக்கள் பேசுகிற பேச்சு வழக்கு வார்த்தைகளையெல்லாம் அவர் தம் கவிதைகளில் கையைப் பிடித்துக் கூட்டிக் கொண்டு வந்து உலவவிட்டார்.

பேச்சு வழக்கு என்பது உரைநடையில்தான் இருக்க வேண்டுமா என்ன? கவிதையிலும் இருக்கலாம்தானே? ஒரு குறத்தி பேசுகிற தமிழ், இலக்கணத் தமிழாகவாக இருக்கும்? கவிதையில் குறத்தியைக் கொண்டு வருகிறபோது கொஞ்சம் அவள் வழியாகப் பேச்சுத் தமிழையும் கொண்டு வந்தால்தானே அவளது பாத்திரப் படைப்பு ஜீவனோடு இருக்கும்? இப்படி யோசித்தார் குற்றாலக் குறவஞ்சியை எழுதிய திரிகூட ராசப்பக் கவிராயர்.

தலைவி பார்வதிக்குக் குறி சொல்ல வந்த குறத்தி, மாலையில் தலைவன் சிவபெருமான் வருவான் என்பதைச் சொல்லி “கைந்நொடியில் பொன்னிதழி மாலை வரும்காண் அப்போ கக்கத்தில் இடுக்குவையோ வெக்கத்தை அம்மே?” என்று சொல்வதாக அமைத்து “அப்போ, கக்கம்” முதலிய பேச்சு வழக்குச் சொற்களை இலக்கணம் பிசகாமல் மரபுக் கவிதையில் இணைத்தார். மரபுக் கவிதையில் பேச்சு வழக்குச் சொற்களைக் கொண்டுவந்த முன்னோடிக் கவிஞர் திரிகூட ராசப்பக் கவிராயர்தான்.

அவர் மரபைத்தான் பின்பற்றினார் கவிஞர் கொத்தமங்கலம் சுப்பு. தம் மரபுக் கவிதைகள் பலவற்றில் மிக இயல்பாகப் பேச்சு வழக்கைக் கலந்து அவற்றைப் பரிமளிக்க வைத்தார். இலக்கணம் பிசகாத சந்தக் கவிதைகள் தான். ஆனால் பேச்சு வழக்குச் சொற்கள் சுப்புவுக்குக் கைகட்டிச் சேவகம் செய்தன.

அவர் மேடையில் தாம் எழுதிய காந்தி மகான் கதையை வில்லுப்பாட்டாகப் பாடிய போது பல்லாயிரக்கணக்கான பாமரர்களும் அதை வியந்து ரசித்தார்களே, அதற்குக் காரணம் அதில் இழையோடிய மக்களின் பேச்சு மொழிதான். அந்தப் பேச்சுமொழி அவர் கவிதையோடு பாமரர் முதல் பண்டிதர் வரை எல்லோருக்கும் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தியது.

பழந்தமிழை அதிகம் பயலப் பயில எளிமையாக எல்லோருக்கும் புரியும் நடையில் எழுதும் ஆற்றல் வரும்! இது முரண்பாடாய்த் தோன்றலாம். ஆனால் இதுதான் உண்மை. பழந்தமிழ்ப் பயிற்சி தமிழின் ஜீவன் எது என்பதை இனங்காட்டும். பழந்தமிழ்ப் புலவர்கள் எழுதிய தமிழ் அந்தக் காலப் பேச்சுத் தமிழாகத் தான் இருந்திருக்க வேண்டும்.

உண்மையான தமிழ்ப் பண்டிதர்கள் எளிய தமிழைத்தான் பயன்படுத்துவார்கள் என்பதற்கு எடுத்துக் காட்டு தமிழ்த் தாத்தா உ.வே.சா.! அவரை மிஞ்சிய பண்டிதர் உண்டா? பழந்தமிழ்ப் புதையலை நமக்குத் தோண்டியெடுத்துத் தந்தவரே அவர் தானே?

ஆனால் அவரது என் சரிதம் நூலைப் படித்தால் தெரியும், தமிழை எத்தனை எளிமையாக அவர் கையாண்டிருக்கிறார் என்பது. பண்டிதர்களுக்கு மட்டுமே புரியக் கூடிய வார்த்தையாக ஒன்று கூட அதில் இருக்காது.

கொத்தமங்கலம் சுப்புவின் கவிதைகளின் சிறப்பு அவர் கையாண்ட தமிழ் நடையில் உள்ள எளிமை. எந்தச் சொல்லையும் அகராதியைப் பார்க்காமல் எட்டாம் வகுப்பு மாணவன் கூடப் புரிந்து கொள்ள முடியும். உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும். பாரதி வாக்கு மெய்தான். கொத்தமங்கலம் சுப்புவின் உள்ளத்து ஒளி அவர் வாக்கில் பளிச் பளிச் என மின்னுகிறது.

ராதா ஜயலட்சுமி சகோதரிகள் பாடி, மோட்டார் சுந்தரம் பிள்ளை திரைப்படத்தில் இடம்பெற்று எம்.எஸ். விஸ்வநாதன் இசையால் பெரும்புகழ்பெற்ற மனமே முருகனின் மயில்வாகனம் என்ற பாடலை யாரும் மறந்திருக்க இயலாது. அந்தப் பாடல், கொத்தமங்கலம் சுப்பு இயற்றியதுதான். திரையில் ஒலித்தது பாடலின் முதல் நான்கு வரிகள் மட்டுமே. அந்த நான்கு வரிகளைத் தாண்டியும் முழுக் கவிதையில் இன்னும் அற்புதமான பல வரிகள் உண்டு.

கொத்தமங்கலம் சுப்புவின் ரத்தத்தில் ஊறிய தேச பக்தி, அவரது பேனா வழியே காகிதத்தில் ஊறாதிருக்குமா? “இந்நாட்டு மன்னவனே என்மகனே தாலேலோ” என்கிற தாலாட்டுப் பாடலில் அவர் குழந்தையை எப்படியெல்லாம் தாலாட்டுகிறார் பாருங்கள்:

“ஆளடிமையாய் நாங்கள் அன்னியனின் கால்வருடி
காலம் கழிக்கிறப்போ கருவாக வெறுத்தாயோ?
அடிமை முறிகிழித்து அன்னியனைச் சிறகொடித்து
குடிமை நிமிர்ந்த பின்னே குலந்தழைக்க வந்தாயோ?

திலகர் பிறந்தாரோ சிதம்பரனார் வந்தாரோ
செந்தமிழ் பாரதிதான் திரும்ப வந்து பிறந்தாரோ?
ஆதியாய்த் தன் மைந்தன் ஆளுவதைக் கண்காண
மோதிலால் நேரு வந்து முன்னே பிறந்தாரோ?

தன்னரசு நாடாகி தமிழ் முரசு கொட்டுவதை
தன்னுடைய கண்காண சத்தியமூர்த்தி வந்தாரோ?`
கோட்டையதன் மேலே கொடிக்கம்பத் துச்சியிலே
நாட்டிவைத்த கொடிகாண நம் குமரன் வந்தானோ?”

தன்னுடைய ஆற்றல் சார்ந்த கர்வத்தின் சின்ன ரேகை கூடக் கொத்தமங்கலம் சுப்புவிடம் இருந்ததில்லை. அவர் எழுத்தில் எங்குமே கர்வம் தென்பட்டதில்லை. கர்வமே இல்லாமல் வாழ்ந்த கு. அழகிரிசாமி, வல்லிக்கண்ணன் போன்றோர் வரிசையில் வைக்க வேண்டிய இன்னொரு மகான் அவர்.

என் ஒரிஜினல் பதிவு.

இது கொத்தமங்கலம் சுப்புவின் நூற்றாண்டாம். (நவம்பர் 1910-இல் பிறந்திருக்கிறார்.) 64 வயதில், 1974-இல் மறைந்திருக்கிறார்.

அவர் வாழ்ந்த வீடு – லாயிட்ஸ் ரோடு என்கிற அவ்வை சண்முகம் சாலையில்தான் இருக்கிறது என்று நினைவு, என் அபார்ட்மெண்டிலிருந்து ஒரு நடை போகும்போது எப்போதோ பார்த்திருக்கிறேன். இப்போது அதுவும் அடுக்குமாடி குடியிருப்புதான். அன்றைய எஸ்.எஸ். வாசனின் வீட்டிலிருந்து (ம்யூசிக் அகடமி எதிரில் இருந்தது, இன்று அது ஒரு பளபளக்கும் அலுவலகக் கட்டிடம்) அரை மைல் தூரம்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

சுப்பு ஜெமினி படங்களில் பல பணிகளை வகித்திருக்கிறார் – நடித்திருக்கிறார், படங்களை இயக்கி இருக்கிறார், கதை-வசனம்-பாடல்கள் எழுதி இருக்கிறார். வில்லுப்பாட்டை உயிர்ப்பித்தவர் அவர்தான் என்று கேள்வி. காந்தி மகான் கதை என்ற வில்லுப்பாட்டு மிகவும் பிரபலமாக இருந்தது. பத்மஸ்ரீ விருது கிடைத்திருக்கிறது. ஆனால் சிலிகான் ஷெல்ஃபில் அவர் படைப்புகளைப் பற்றி மட்டும்தான் பேசமுடியும்.

தில்லானா மோகனாம்பாள் என்ற ஒரே ஒரு நாவலால்தான் அவர் தமிழ் இலக்கிய வரலாற்றில் கொஞ்சமாவது நினைவு வைத்துக்கொள்ளப்படுவார் என்று நான் கருதுகிறேன். அதுவும் என் தலைமுறையிலேயே நாவலை விட சினிமாதான் நினைவிருக்கிறது.

தி. மோகனாம்பாள் அப்படி ஒன்றும் பிரமாதமான நாவல் இல்லை. வளவளதான். ஆனால் நாவல் தொடர்கதையாக வந்த காலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. சிக்கல் ஷண்முகசுந்தரம் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையை மூலமாக வைத்து உருவாக்கப்பட்டதாம். இன்றைக்கு ராஜரத்தினம் பிள்ளையே நமது பிரக்ஞையில் இல்லைதான், ஆனால் அன்று அந்த விஷயம் கதையின் கவர்ச்சியை அதிகரிக்கத்தான் செய்திருக்கும்.

தி. மோகனாம்பாள் காட்டும் உலகம் – தாசி என்ற ஒரு பாரம்பரியம், கலைகளை ஆதரித்த சந்தடி சாக்கில் தாசிகளோடு ஜாலியாக இருக்கும் பெரும் பண்ணையார்கள், கர்னாடக இசையை ரசித்த சாதாரண மக்கள், நாதசுரம், பரதம் இல்லை இல்லை சதிர், திருவிழாக்கள், தஞ்சாவூர் பின்புலம் எல்லாம் கொஞ்சம் அன்னியமாகத்தான் தெரிகிறது. ஆனால் படித்தால் அதற்காகத்தான் படிக்க வேண்டும்.

இன்று தி. மோகனாம்பாளைப் படிப்பவர்கள் நாஸ்டால்ஜியா, சினிமாவால் வந்த curiosity, அந்தக் கால mores பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம், எந்த மாதிரி நாவல்கள் வெற்றி பெற்றன என்று ஆராய்ச்சி மாதிரி காரணங்களுக்காகத்தான் படிக்க வேண்டும்.

தி. மோகனாம்பாள் உடுமலை தளத்தில் கிடைக்கிறது. விலை 250 ரூபாய்.

தி. மோகனாம்பாளை ஜெயமோகன் தமிழின் சிறந்த சமூக romance-களில் ஒன்றாக மதிப்பிடுகிறார். எனக்கு இதை அந்த அளவில் வைப்பது கஷ்டம்.

சுப்பு எழுதிய மிஸ் ராதா என்ற ஒரு நாவல், மஞ்சிவிரட்டு என்ற சிறுகதைத் தொகுப்பும் படித்திருக்கிறேன். எதுவும் சுகப்படவில்லை. மஞ்சிவிரட்டு சிறுகதைத் தொகுப்பை வ.ரா. ஆஹா ஓஹோ என்று புகழ்ந்திருக்கிறார். வ.ரா.வின் ரசனை பற்றி சந்தேகமாக இருக்கிறது. 🙂

ராவ்பகதூர் சிங்காரம் என்ற நாவலும் வெற்றி பெற்றது என்று கேள்வி. அது சிவாஜி கணேசன் நடித்து விளையாட்டுப்பிள்ளை என்று சினிமாவாகவும் வந்ததாம்.

நண்பர் விஜயன் தி. மோகனாம்பாள் பின்புலத்தை பந்தநல்லூர் பாமா என்ற புனைவிலும் வைத்து எழுதி இருக்கிறார் என்று தகவல் தருகிறார்.

என் கண்ணில் தமிழ் இலக்கிய வரலாற்றில் கொத்தமங்கலம் சுப்பு ஒரு footnote அளவுக்கு வந்தால் அதிகம். காலாவதியாகிவிட்ட எழுத்து என்றுதான் கணிக்கிறேன்.

தொடர்புடைய சுட்டி:
தில்லானா மோகனாம்பாள் திரைப்பட விமர்சனம்
சுப்புவின் ஒரு கட்டுரை
தென்றல் மாத இதழில் சுப்பு பற்றி (Registration Required)

13 thoughts on “கொத்தமங்கலம் சுப்பு

 1. சுப்பு வெறும் எழுத்தாளர் மட்டுமில்லை. சிறந்த நகைச்சுவை நடிகர் மற்றும் வசனகர்த்தா, கவிஞர். நாட்டுப்புறக் கவிதைகள் எழுதுவதில் மிகத் தேர்ந்தவர். ஜெமினியில் நம்பர் 2 ஆக இருந்தவர்.அவரது மகன் கொத்தமங்கலம் விஸ்வநாதனும் வில்லுப்பாட்டுக் கச்சேரிகள் செய்து வருகிறார்.

  கீழ்கண்ட தளங்களில் மேலதிகத் தகவல்கள் உள்ளன.

  http://www.kothamangalamsubbu.com/

  http://tamilonline.com/thendral/Auth.aspx?id=118&cid=14&aid=6652&m=m&template=n

  Like

 2. தில்லானா மோகனாம்பாளுக்காக வாரவாரம் விகடன் எப்பொழுது வரும் என்று காத்துக்கிடந்தது நினைவில் நிற்கிறது… தி.மோ. வெற்றிக்கு முக்கிய காரணம், கொத்தமங்கலம் சுப்புவின் அந்தப் பாத்திரப்படைப்புத் திறமை!

  அந்த நினைவுகளை மீட்டுத் தந்த சுட்டிகளுக்கு நன்றி. பேராசிரியர் பசுபதி பற்றியும் அறிந்து கொள்ள முடிந்தது.

  Like

 3. ஆர்.வி

  பாலஹனுமான் குறிப்பிடும் கிருஷ்ணன் வெங்கடாசலம் என் அப்பா. அவர் அங்கங்க எழுதுகிறேன் என்று சொன்னார். நான் இப்ப தான் படிக்கிறேன்.

  Like

 4. அருணாவின் அப்பா கிருஷ்ணன் வெங்கடாசலம் தன்னைப் பற்றிக் கூறுகிறார்….
  (http://koodu.thamizhstudio.com/thodargal_8_index.php)

  என்னைப்பற்றி நான் என்ன சொல்ல? அடிப்படையில் நான் ஒரு எழுத்தாளனே அல்ல! ஒரு பொறியாளனாக இருந்தேன். அவ்வளவுதான். ஆனால் எழுத்துடன் தொடர்புடைய குடும்பப் பின்னணி எனக்கு உண்டு. என் அண்ணன் ஒரு எழுத்தாளனாக இருந்து, மிகக்குறைவாக எழுதி, மிகக்குறைந்த வயதிலேயே எங்களை விட்டுப்பிரிந்தார். கிருஷ்ணன் நம்பி என் சகோதரர். என்னை விட எட்டு வயது பெரியவர். தேவையானபோதெல்லாம் கிருஷ்ணன் நம்பியின் தம்பி என்கிற முகமூடியை அணிந்து கொள்வது சற்று சௌகரியமாக இருக்கிறது. கிருஷ்ணன் நம்பியின் இக்கியப் பின்னணி என்னை ஒரு நல்ல வாசகனாக உருவாக்கிக் கொள்வதற்கு உதவியாக இருந்தது. பணியிலிருந்து 1998ல் ஓய்வு பெறுவது வரை ஒரு வாசகனாக மாத்திரமே இருந்து வந்தேன்.

  2002ல் கிருஷ்ணன் நம்பி மறைந்து 25வது வருட நினைவு தினக்கூட்டம் ஒன்று நாகர்கோவிலில் நடைபெற்றபோது அதனை ஒட்டி நம்பியைப் பற்றி புத்தகம் ஒன்றைத் தொகுப்பும் வாய்ப்பும் கிடைத்தது. சொல்லப்போனால் உருப்படியான ஒரு முதல் இலக்கியப் பணியாக இதைச் சொல்லலாம்.

  ‘அமுதசுரபி’ எனது சில கட்டுரைகளை அவ்வப்போது வெளியிட்டு என்னை எழுதத் தூண்டியது. ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், முன்னாள் ஆசிரியர் அண்ணா கண்ணன் ஆகியோருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். ‘ஆடியகாலும், பாடிய வாயும் சும்மா இருக்காது’ என்பார்கள். அது எழுத்துக்கும் பொருந்தும். எழுதி, ஒரு முறை அதை அச்சில் பார்த்துவிட்டால், அதன் பிறகு அந்த மோகம் குறைவதே இல்லை. எனவே, எழுதத்தெரியாத நான் எதையாவது எழுதிப்பார்த்துவிட வேண்டும் என்கிற விழைவில் மீண்டும் எழுத முயற்சி செய்தபோது, சிறு வயதிலிருந்தே சினிமா கிறுக்கனாக இருந்த எனக்கு திரைப்படம் சார்ந்த விஷயங்களின்பால் ஆர்வம் ஏற்பட்டது இயல்பானது. இதன் விளைவாக 1940 தொடங்கி 1960 வரையிலான காலத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு, நான் பார்த்த சில நல்ல தமிழ்ப்படங்கள் பற்றிய குறிப்புகளை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆசையில் அப்படங்கள் பற்றிய குறிப்புகளை எழுத, ஆரம்பித்தேன். அதில் ஒரு சில கட்டுரைகள் ‘உயிரோசையில்’ வெளிவந்தது.

  Like

 5. எனது தளத்தில் எழுத்தாளர் பகுதியில் கிருஷ்ணான் நம்பி பற்றி எழுத வேண்டும் என்று தகவல்களைச் சேகரித்துக் கொண்டிருந்தேன். அது பற்றி அந்த சமயத்தில் எழுதிய ‘நாளை மற்றுமொரு நாளே” கவிதையில் கூடக் குறிப்பிட்டிருந்தேன். இப்பொழுது திரு. கிருஷ்ணன் வெங்கடாசலம் பற்றி அவர் தளம் பற்றி அருணா பற்றி எல்லாம் தெரிந்து கொள்ள முடிந்திருந்திருக்கிறது. பி.எஸ். ராமையா பற்றி என் தளத்தில் எழுத்தாளர் பகுதியில் எழுதிய பொழுது அமெரிக்காவிலிருந்து அதைத் தன் மகனுடன் சேர்ந்து படித்த பி.எஸ்.ரா.வின் மகன் திரு.ராமையா சுப்ரமணியன் மனம் நெகிழ்ந்து எழுதியிருந்தார். அதே மாதிரி ர.சு.நல்லபெருமாளின் மகள் திருமதி அலமேர்மங்கையும் அவர் தந்தையைப் பற்றி எழுத வேண்டும் என்று நான் நினைத்த எண்ணத்தை மீ.ப.சோமுவைப் பற்றி எழுதிய பதிவில்குறிப்பிட பொழுது தன் தந்தையைப் பற்றிய தகவல்களைத் தரத் தொடர்பு கொண்டிருக்கிறார். இணையத்தில் எழுதுவதின் அருமை பெருமைப்பட வைக்கிறது. ‘இந்த எழுத்தாளர் பகுதியைப் பற்றி அடிக்கடி நினைவு கொண்டு குறிப்பிடும் ஆர்வியின் தளத்தில் இந்த விவரங்களைக் குறிப்பிடுவதும் பொருத்தமாகத் தான் தெரிகிறது.

  Like

 6. அருணா,

  சிறந்த இலக்கியப் பின்னணி கொண்ட நீங்கள் ஏன் பெரிய அளவில் எழுதக்கூடாது?. பெண் எழுத்தாளர்கள் அருகி வரும் இக்கால கட்டத்தில் நீங்கள் அதைச்சற்று நிலைநிறுத்தலாம் அல்லவா?.

  Like

 7. தி.மோ பாணியில் இன்னுமொரு நாவல் எழுதியுள்ளார்.பந்தநல்லூர் பாமா என்ற பெயரில்.அதவும் so -so தான்.வெள்ளைக்காரன் காலத்து தமிழ்நாட்டில் தஞ்சாவூர் தமிழன் எப்படி minor வாழ்க்கை நடத்தினான் என்பதற்கு சுப்புவின் எழுத்துக்கள்தான் gazattier .

  Like

 8. ரமணன், ஸ்ரீனிவாஸ், விஜயன், நீங்கள் கொடுத்த தகவல்களையும் சேர்த்துவிட்டேன்.

  ஜீவி, அருணா, உங்கள் கருத்துப் பரிமாற்றங்களை ரசித்தேன்…

  ரமணன், உங்கள் குழுமத்தில் விரைவில் சேர்கிறேன்…

  Like

 9. ஆர்வி. மிக்க நன்றி. ஆனால் அது என் குழுமம் அல்ல. நானும் அதில் ஒரு வாசகனே! பட், சமீப காலமாக அது சரியாக இயங்குகிறதா எனத் தெரியவில்லை.

  Like

 10. கொ.சுப்பு எழுத்துகள் நாட்டுடமையாக்கப்பட்டவைதானே? அப்ப பிடிஎஃப், இ-பப் பண்ணலாமே? யாரும் பண்ணவில்லையா?

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.