என் பதின்ம வயதுகளில் Men of Mathematics என்றால் ஏழெட்டு வயதில் பெ.நா. அப்புசாமி விஞ்ஞானிகள் பற்றிய எழுதிய இரண்டு தொகுப்புகள். அந்தக் காலத்தில் என் வயதுப் பையன்களிடம் நீ பெரியவனாகி என்ன ஆகப்போகிறாய் என்று கேட்டால் கலெக்டர், டாக்டர், அரசு வேலை, 4 figure salary, கிரிக்கெட் வீரன், நடிகன் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். நான் மட்டும் விஞ்ஞானி ஆகப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். அறிவியல் பற்றிய பிரக்ஞையை உருவாக்கியவர் அப்புசாமிதான். (எனக்கு ஒரு பிம்பமும் இருந்தது – குறுந்தாடியோடு கண்ணாடியும் வெள்ளை நிற ஏப்ரனும் அணிந்து டெஸ்ட் ட்யூப்களில் வண்ண வண்ண திரவங்களை கலந்து கொண்டிருப்பதுதான் விஞ்ஞானிக்கு முக்கிய அடையாளம், டெஸ்ட் ட்யூப்களிலிருந்து புகை வர வேண்டியது மிக அவசியம்)
பெ.நா. அப்புசாமியின் இரண்டு வால்யூம் புத்தகங்களையும் ஏழெட்டு வயதில் கிராம நூலகத்திலிருந்து எடுத்துப் படித்தது எனக்கு இன்றும் அழியாத நினைவுதான். இன்னும் எந்த அத்தியாயத்தில் யாரைப் பற்றி எழுதினார் என்பது கூட நினைவிருக்கிறது. அரிஸ்டாட்டில் (நான்காவது அத்தியாயம்), கேலன் (ஆறாவது அத்தியாயம்), வெசாலியஸ் (ஒன்பதாவது அத்தியாயம்), ராபர்ட் ஹூக் (17-ஆவது அத்தியாயம்?), நியூட்டன் (18ஆவது அத்தியாயம்) பற்றி எழுதியவை இன்னும் நினைவிருக்கின்றன. எனக்கு அறிவியலில், கணிதத்தில் ஆர்வம் பிறந்ததற்கு முக்கியமான காரணம் இந்தப் புத்தகங்கள். முக்கியமான விஷயம், ஏழெட்டு வயது பையனுக்கு எல்லாம் புரிந்துவிடவில்லை, ஆனால் நிறைய புரிந்தது. அதனால் அறிவியலில் ஆர்வம் வலுத்தது.
அப்புசாமி அசப்பில் என் பெரியப்பா பி.எஸ்.ஒய். நாராயணன் போல இருப்பார். அதுவும் அவரது கவர்ச்சிக்கு ஒரு காரணம்.
பிற்காலத்தில் நினைத்ததுண்டு – இந்தப் புத்தகங்கள் நூலகங்களில் ஆயிரம் பிரதிகள் இருந்திருக்குமா? இரண்டாயிரம் பேர் படித்திருப்பார்களா? 100 பேருக்காவது அறிவியலில் ஆர்வம் பிறந்திருக்குமா? 100 பேர் வாழ்க்கையை தன் புத்தகங்கள் மூலம் மாற்றினார் என்றால் அது எத்தனை பெரிய சாதனை!
அவரைத் தவிர அந்தக் காலத்தில் “கல்வி” கோபாலகிருஷ்ணன் என்று ஒருவரும் அறிவியல் பற்றி எழுதினார். குறிப்பாக ஒரு விஞ்ஞானியின் மகன் ஏதோ மாத்திரையை சாப்பிட்டுவிட்டு மினியேச்சர் சிறுவனாக மாறி மனித உடலுக்குள் சென்று ரத்தம், குடல், பாக்டீரியாவைப் பார்ப்பது என்று போகும். ஆனால் அவர் சிறுவர்களுக்காக எழுதுகிறார் என்பது அந்த வயதிலேயே தெளிவாகவே தெரியும். அவ்வப்போது குழந்தைத்தனமாக இருக்கும். அப்புசாமி வேறு லெவலில் இருந்தார். அவர் எழுதியது சிறுவர்களுக்காக அல்ல, ஆனால் சிறுவர்களாலும் புரிந்து கொள்ள முடியும்.
இவற்றைத் தவிர தினமணி ஆசிரியர் ஏ.என். சிவராமன் எழுதிய “அப்போலோ கண்ட விண்வெளி விஞ்ஞானம்” என்ற புத்தகமும் என் கனவுகளைத் தூண்டியது. நாசாவைப் பற்றிய புத்தகம், நிறைய புகைப்படங்கள். அன்றைய விலை பத்து ரூபாய்!
தமிழில் அறிவியலை கொண்டு வந்தே தீர வேண்டும் என்று வாழ்க்கை முழுவதும் முனைந்தவர் அப்புசாமி. வேறு சில புத்தகங்களையும் படித்திருக்கிறேன். கலைக்கதிர் என்ற அறிவியல் பத்திரிகைக்கும் ஆசிரியராக இருந்தார் என்று நினைவு. அவருக்கு எத்தனை ஜே போட்டாலும் தகும்.
சீனிவாச கோபாலனின் மறுமொழியிலிருந்து: (அவருக்கு நன்றி!)
தமிழிணையம் இணைய நூலகத்தில் இவரது நூல்கள் கிடைக்கின்றன. தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட தொகுதிகள் மூன்றும் ரயிலின் கதை நூலும் கிடைக்கின்றன. அப்புசாமிக்குப் பெரியப்பா அ. மாதவையா. பெரியப்பா சொல்லி எழுதத் தொடங்கினாராம். அப்படி அவர் எழுதிய முதல் கட்டுரையின் தலைப்பே வசீகரமானது. பிரபஞ்சத்தில் மனிதன் தனித்திருக்கிறானா?. வசனமும் கவிதையும் என்ற பெயரில் அமெரிக்க இலக்கிய வரலாறும் எழுதியிருக்கிறார். சில நூல்களை மொழிபெயர்க்கவும் செய்துள்ளார். விஞ்ஞானமும் விவேகமும் என ஜேம்ஸ் கோனன்ட் நூலின் மொழியாக்கமும் தமிழிணையத்தில் கிடைக்கிறது. இலக்கியப் பூந்துணர் என பாடப்புத்தகத்துக்கு படைப்புகளைத் தொகுத்திருக்கிறார். அதில் அவரது தேர்வுகள் அவரது ஆளுமைக்குச் சான்று பகர்கின்றன. நினைவுகூர்ந்து போற்ற வேண்டிய அறிவியல் தமிழ் முன்னாடி.
தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழறிஞர்கள்
வணக்கம். பெ. நா. அப்புசாமிவைப் பற்றி வாசித்ததில் மகிழ்ச்சி. தமிழிணையம் இணைய நூலகத்தில் இவரது நூல்கள் கிடைக்கின்றன. தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட தொகுதிகள் மூன்றும் ரயிலின் கதை நூலும் கிடைக்கின்றன. அப்புசாமிக்குப் பெரியப்பா அ. மாதவையா. பெரியப்பா சொல்லி எழுதத் தொடங்கினாராம். அப்படி அவர் எழுதிய முதல் கட்டுரையின் தலைப்பே வசிகரமானது. ‘பிரபஞ்சத்தில் மனிதன் தனித்திருக்கிறானா?’. வசனமும் கவிதையும் என்ற பெயரில் அமெரிக்க இலக்கிய வரலாறும் எழுதியிருக்கிறார். சில நூல்களை மொழிபெயர்க்கவும் செய்துள்ளார். விஞ்ஞானமும் விவேகமும் என ஜேம்ஸ் கோனன்ட் நூலின் மொழியாக்கமும் தமிழிணையத்தில் கிடைக்கிறது. இலக்கியப் பூந்துணர் என பாடப்புத்தகத்துக்கு படைப்புகளைத் தொகுத்திருக்கிறார். அதில் அவரது தேர்வுகள் அவரது ஆளுமைக்குச் சான்று பகர்கின்றன. நினைவுகூர்ந்து போற்ற வேண்டிய அறிவியல் தமிழ் முன்னாடி. உங்கள் பதிவில் குறிப்பிட்டிருக்கும் கல்வி கோபாலகிருஷ்ணனின் கதைக் கரு சுவாரஸ்யமாக உள்ளது. நூலின் தலைப்பு ஞாபகம் வந்தால் பதிவில் சேர்க்க வேண்டுகிறேன்.
LikeLike
ஸ்ரீனிவாச கோபாலன், உங்கள் மறுமொழி மிகவும் மகிழ்ச்சி அளித்தது. அதில் உள்ள தகவல்களையும் பதிவில் சேர்த்துவிட்டேன். கல்வி கோபாலகிருஷ்ணனின் புத்தகத்தின் பெயர் நினைவு வந்தால் கட்டாயம் குறிப்பிடுகிறேன்.
LikeLike