ஹாரி பாட்டருக்கு அடுத்தபடி – பெர்சி ஜாக்சன் சீரிஸ்

(மீள்பதிவு)
கிரேக்க ரோமானியத் தொன்மங்களின் பின்புலத்தில் புது சீரிஸ் ஒன்றும் ஆரம்பித்திருக்கிறார். இதில் அப்போலோ மனித உருவத்தில், எந்த வித சக்தியும் இல்லாமல், பூமிக்கு அனுப்பப்படுகிறார். Trials of Apollo என்று ஆரம்பித்திருக்கிறார். Hidden Oracle (2016), Dark Prophecy (2017), Burning Maze (2018) என்று 3 புத்தகங்கள் இது வரை வந்திருக்கின்றன. இந்த சீரிசில் போன வருஷம் வெளிவந்த Tyrant’s Tomb (2019) புத்தகத்தைப் படித்ததால் மீள்பதித்திருக்கிறேன்.

Tyrant’s Tomb பற்றி குறிப்பாக சொல்ல ஏதுமில்லை. Sunk cost, அவ்வளவுதான். இவ்வளவையும் படித்தாயிற்று, முடிவு வரைக்கும் போய்விடுவோம் என்ற எண்ணம்தான். ஒரே ஒரு புத்தகம் – பெர்சி ஜாக்சன் சீரிசின் முதல் புத்தகம் – Lightning Thief வேண்டுமானால் படித்துப் பாருங்கள்.

Tyrant’s Tomb படிக்கும்போது ஒன்று தோன்றியது. அஷோக் பாங்கரின் ராமாயணம் சீரிஸ் போன்றவையும் இப்படித்தான் பெரும் காவியத்தை ஒரு காமிக்ஸ் புத்தக ரேஞ்சில் குறைக்கிறது. கடவுள் உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்கும்போது இரண்டு இட்லி ஒரு வடை கேட்பதைப் போல காவியத்தின் வீச்சை குறைத்துவிடுகிறது என்று உணர்ந்தேன். ஆனால் கிரேக்கத் தொன்மம் என்றால் அது பெரிய குறையாகத் தெரியவில்லை!

Heroes of Olympus சீரிசும் இப்போது நிறைவு பெற்றுவிட்டது. அதனால் இதை மீள்பதிக்கிறேன்.

ஹாரி பாட்டர் இப்போது பழைய செய்தி. சினிமாக்கள் கூட முடிந்துவிட்டன. அடுத்தது என்ன?

ஹாரி பாட்டர் அளவுக்கு இல்லாவிட்டாலும் ரிக் ரியோர்டனின் பெர்சி ஜாக்சன் சீரிஸ் சுவாரசியமாக இருக்கிறது. இதைத்தான் நான் ஹாரி பாட்டர் புத்தக விரும்பிகளுக்கு, சின்னப் பையன்/பெண்களுக்கு இன்று சிபாரிசு செய்வேன். ஆனால் இவை எல்லாம் ஹாரி பாட்டர் புத்தகங்களை விட ஓரிரண்டு மாற்று கம்மிதான்.

இந்தக் கதைகளில் கிரேக்க கடவுள்கள் இன்னும் உலகை “ஆள்கின்றனர்.” ஆனால் இப்போது Zeus நியூ யார்க் எம்பையர் ஸ்டேட் பில்டிங்கிற்கு ஜாகையை மாற்றிவிட்டார். இன்னும் அவ்வப்போது கிரேக்கக் கடவுள்கள் பூமிக்கு வந்து மனிதர்களோடு கூடி அரைக் கடவுள்களை (demigods) உருவாக்குகிறார்கள். அதாவது இந்தக் காலத்து ஹெர்குலிஸ், அகிலிஸ். இந்த அரைக் கடவுள்கள் பொதுவாக பதின்ம வயதைத் தாண்டுவதில்லை. அதற்குள் பல வேறு ராட்சதர்கள் அவர்களைத் துரத்தி துரத்தி கொன்று விடுகிறார்கள். அவர்கள் தப்பிக்க ஒரே வழிதான் – Camp Half Blood என்ற இந்த அரைக் கடவுள்களுக்கான புகலிடத்துக்குப் போய் சேர்வது. அங்கே பழங்கால கிரேக்க நாயகர்கள் பல வேறு சாகசங்கள் புரிய கிளம்பிப் போனது போல இங்கிருந்தும் இந்த டீனேஜர்கள் போகிறார்கள்.

ரியோர்டன் ஒரு சிம்பிளான ஃபார்முலா வைத்திருக்கிறார். கிரேக்க தொன்மங்களில் உள்ள நிகழ்ச்சிகள் எல்லாம் வேறு வேறு context-இல் மீண்டும் நடக்கின்றன. உதாரணமாக மெடுசா இப்போது ஒரு சிலை விற்கும் கடை வைத்திருக்கிறாள், அங்கே வருபவரெல்லாம் அவள் கண்களை சந்தித்து சிலையாகிவிடுவார்கள், யுலீசஸ் குருடாக்கிய ஒற்றைக்கண்ணன் பாலிஃபீமஸ் இன்னும் அந்தத் தீவில் வசிக்கிறான். யுலீசசின் இடிந்த மாளிகையில் அவன் மனைவி பெனலபியை மணக்க விரும்பி அங்கேயே கூடாரம் அடித்துக் கொண்டவர்களின் ஆவிகள் இன்னும் ஒரு முறை அங்கே வருகின்றன. இவர்களை எல்லாம் இந்த அரைக்கடவுள்கள் எப்படி மீண்டும் வெல்கிறார்கள் என்று கதை போகிறது.

நம்மூர் context-இல் சொல்ல வேண்டுமென்றால் ராவணனும் ஹிரண்யகசிபுவும் மீண்டும் உயிரோடு வந்து உலகைக் கட்டுப்படுத்த முயல்வது போலவும், அவர்களை ராமனின் வம்சத்தில் வந்த ஒருவனும் நரசிம்மரின் வம்சாவளியினர் ஒருவனும் சேர்ந்து வெல்வது போலவும் எழுதப்பட்ட கதைகள். இந்த ஃபார்முலாவை க்ரேக்க, ரோமானிய, எகிப்திய, ஸ்காண்டினேவிய தொன்மங்களை வைத்து எழுதித் தள்ளுகிறார்.

பெர்சி கடலின் கடவுளான பொசைடனின் மகன். Zeus-இன் மின்னல் ஆயுதம் திருட்டுப் போயிருக்கிறது. பொசைடனைத்தான் Zeus சந்தேகிக்கிறார். கிரேக்கக் கடவுள்களால் “கொல்லப்பட்ட” க்ரோனோஸ் மீண்டும் உயிர்த்தெழ முயற்சி செய்து கொண்டிருக்கிறார். பெர்சி, அதீனாவின் மகள் அனபெத், ப்ளூட்டோவின் மகன் நிகோ மற்றும் பலர் சேர்ந்து ஐந்து புத்தகங்களில் (Lightning Thief, Sea of Monsters, Titan’s Curse, Battle of Labyrinth, Last Olympian) க்ரோனோசை முறியடிக்கிறார்கள். இதைத் தவிர Demigod Files (2009), Demigod Diaries (2012) என்ற புத்தகங்களில் சில சிறுகதைகள் உள்ளன.

Lightning Thief திரைப்படமாகவும் வந்திருக்கிறது.

என்னைக் கவர்ந்த விஷயம் கிரேக்கத் தொன்மங்களை அங்கங்கே நிரவி இருப்பதுதான். ப்ரொமெதீயஸ், அட்லஸ், மினோடார், cyclops, மெடுசா எல்லாரும் வருகிறார்கள். அவர்களை திறமையாக கதைக்குள் கொண்டு வந்திருக்கிறார்.

தன் அப்பா/அம்மாவை “கொன்று” ஆட்சிக்கு வரும் கடவுள்கள் என்பது எகிப்திய தொன்மங்களிலும் உண்டு. அதை வைத்தும் ஒரு சீரிஸ் எழுதி இருக்கிறார். மூன்று புத்தகங்கள் (Red Pyramid, Throne of Fire, Serpent’s Shadow) வெளிவந்திருக்கின்றன.

கிரேக்க கடவுளர் ரோமானிய கடவுள்களாக மாறியது வரலாறு. அதை வைத்து பெர்சி வேறு சில ரோமன் அரைக் கடவுள்களோடு சேர்ந்து பூமிக் கடவுளான கயாவை (Gaea) எதிர்க்கும் இன்னொரு சீரிசையும்- Heroes of Olympus – எழுதி இருக்கிறார். இது வரை Lost Hero (2010), Son of Neptune (2011), Mark of Athena (2012), House of Hades (2013), Blood of Olympus (2014) என்று மூன்று ஐந்து புத்தகங்கள் வந்திருக்கின்றன.

இப்போது ஸ்காண்டிநேவியத் தொன்மங்களின் பின்புலத்தில் ஒரு புது சீரிஸ் – முதல் புத்தகம் Sword of Summer (2015). Hammer of Thor (2016) மற்றும் Ship of the Dead (2017) என்று மொத்தம் மூன்று புத்தகங்கள் வந்திருக்கின்றன.

படிக்கலாம். குறிப்பாக பதின்ம வயதினர் படிக்கலாம். தொன்மங்களை விரும்பிப் படிப்பவர்கள் படிக்கலாம். சாம்பிள் வேண்டுமென்றால் சில நீள்கதைகள் இங்கே – Son of Sobek, Staff of Serapis, Crown of Ptolemey. இவற்றில் கிரேக்கக் கடவுளர்களுக்குப் பிறந்த நாயகர்களும் எகிப்திய ‘மந்திரவாதி’ டீனேஜர்களும் ஒன்றாகச் சேர்ந்து சில வில்லன்களை சமாளிக்கிறார்கள். இவை தொகுக்கப்பட்டு ‘Demigods and Magicians’ என்று ஒரு புத்தகமாக வெளிவந்திருக்கின்றன.

கிரேக்கத் தொன்மங்களையே Percy Jackson’s Greek Gods என்ற பெயரில் தொகுத்திருக்கிறார்.

தொடர்புடைய சுட்டிகள்:
ரிக் ரியோர்டன் – விக்கி குறிப்பு
ரிக் ரியோர்டனின் தளம்

ராஷோமோன் திரைப்பட கதையை எழுதிய அகுடகாவா

ராஷோமோன் திரைப்படத்தை நம்மில் பலரும் பார்த்திருப்போம். (பார்க்கவில்லை என்றால் கட்டாயம் பார்த்துவிடுங்கள், உலகின் டாப் டென் படங்கள் என்று ஒரு பட்டியல் போட்டால் அதில் ராஷோமோன் இடம் பெறும்) இயக்குனர் அகிரா குரோசாவா அந்தத் திரைப்படத்துக்குப் பிறகு ஏறக்குறைய ஒரு cult figureதான்.

திரைப்படம் ரயனோசுகே அகுடகாவா எழுதிய இரண்டு சிறுகதைகளை இணைத்து உருவாக்கப்பட்டது. ஒன்றின் பெயர் ராஷோமோன். ரொம்ப நாளைக்கு அது இரண்டு சிறுகதைகளின் இணைப்பு என்று தெரியாது. ராஷோமோன் சிறுகதையை மட்டும் படித்துவிட்டு இதிலிருந்து குரோசாவா எப்படி திரைப்படத்தை உருவாக்கினார் என்று வியந்து கொண்டிருந்தேன். In the Grove சிறுகதை திரைப்படத்தின் கதையையும், ராஷோமோன் திரைப்படம் கதையின் ஒரு தளத்தையும் தருகிறது.

அகுடகாவா இளவயதிலேயே – 35 வயதில் தற்கொலை செய்துகொண்டார்.

அகுடகாவாவின் பலம் அவரது வேர்கள்தான் என்று தோன்றுகிறது. நான் படித்த வரையில் அவரது கதைகள் சில பல நூறு வருஷங்களுக்கு முன்னால் நடக்கின்றன. அனேகமாக பெரிய அந்தஸ்து இல்லாதவர்கள்தான் கதை மாந்தர்கள். திடீரென்று ஒரு வீச்சு. In the Grove சிறுகதையில் மனைவி கணவனைக் கொல்லச் சொல்லும் இடம்; பிணங்களின் தலைமுடியைத் திருடும் கிழவி; விளையாட்டாகச் சொன்ன பொய் நிஜமாகவே நடந்ததா இல்லையா என்ற கேள்வி; செய்தி சொல்லப் போகும் நரி; என்று பல இடங்களைச் சொல்லலாம். அவையே அவரது கதைகளை உயர்த்துகின்றன. ஆனால் என் கண்ணில் எவையும் படிக்க வேண்டியவை அல்ல. உளவியல் கூறுகளை வலிந்து புகுத்துகிறார் என்று தோன்றுகிறது. இன்னும் கொஞ்சம் வாழ்ந்திருந்தால் இந்த rough edges எல்லாம் போயிருக்கலாம்.

நான் படித்த தொகுப்பில் ஆறு சிறுகதைகள் இருந்தன. In the Grove சிறுகதை ஒரு rough draft போலத்தான் இருந்தது. அதில் ராஷோமான் திரைப்படத்தை கண்டது குரொசாவாவின் சாதனை என்றுதான் தோன்றுகிறது. ராஷோமான் நல்ல் பின்புலச் சித்தரிப்பு, ஆனால் அவ்வளவு மட்டுமே. Yam Gruel, Martyr, Kesa and Morito ஆகியவை படிக்கக் கூடிய, சுமாரான சிறுகதைகள். Dragon நல்ல சிறுகதை. குளத்திலிருந்து ஒரு ட்ராகன் எழும் என்று கிளப்பிவிடும் புரளி உண்மை ஆகிறதா?

அகுடகாவா புத்தகப் பித்தர்களுக்கு மட்டும்தான். திரைப்படத்தை பார்த்துக் கொள்ளுங்கள் என்றுதான் சொல்வேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: உலக இலக்கியம்

பாகிஸ்தானி-ஆங்கிலேய எழுத்தாளர் ஹனீஃப் குரேஷியின் சிறுகதை: My Son the Fanatic

குரேஷி எனக்கு திரைப்படங்கள் மூலமாகத்தான் – My Son the Fanatic (1997), East is East (1999) – அறிமுகமானார். இரண்டிலும் ஓம் பூரிதான் நாயகன். இங்கிலாந்தில் வாழும் புலம் பெயர்ந்த பாகிஸ்தானி பின்புலத்தில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள். இரண்டும் நன்றாக இருந்தன, ஆனால் பார்த்தே ஆக வேண்டியவை அல்ல.

சமீபத்தில் My Son the Fanatic திரைப்படத்தின் மூலக்கதை (1994) கிடைத்தது. நல்ல சிறுகதை. இளைஞனான மகன் மதத்தில் தீவிரமாக மூழ்கி உங்கள் விழுமியங்களுக்கு எதிராகச் சென்றால், உங்களை கேவலமாகப் பார்த்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? இதை எதில் வேண்டுமானாலும் பொருத்திப் பார்க்கலாம் – ஏதோ ஒரு குழு அடையாளத்துக்காக – முஸ்லிம்கள் இந்தியாவின் இரண்டாம் நிலை குடிமகன்கள் என்று கருதும் ஹிந்து, கறுப்பர்களை இழிபிறவிகளாகப் பார்க்கும் வெள்ளையன், ஜாதி அடையாளம், மொழி அடையாளம் ஏதோ ஒன்று – உங்கள் மகன்/மகள் நீங்கள் உங்கள் வாழ்வின் அனுபவத்தால் அடைந்த விழுமியங்களை நிராகரித்தால் – இல்லை எதிர்த்தால் – எப்படி உணர்வீர்கள்? அல்லது அப்பா ஹிந்துத்துவர், மகன் ஹிந்துத்துவ எதிரி, அப்பா தி.க., பெண் ஆன்மீகவாதி, அப்பா நிறவெறியன், பெண் கறுப்பனை காதலிக்கிறாள் – ஏதோ ஒன்று, பெற்றோர்களின் விழுமியங்களை பிள்ளைகள் தவறு என்று கருதினால் எப்படி மேலே போவது? என் பெண்ணுடன் எல்லாருக்கும் மெடிகேர் எல்லாம் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது, பணம் எங்கிருந்து வரும், வரவுக்குள்தான் செலவிருக்க வேண்டும் என்றோ, இல்லை பில்லியனர்கள் உலகில் இருப்பதில் எந்தத் தவறும் இல்லை, எத்தனை கொடுமைகள் நேர்ந்தாலும் விழைவுதான் மனித சமூகத்தை முன்னே கொண்டு செல்கிறது என்று வாதிடும்போதெல்லாம் இதை கொஞ்சம் உணர்கிறேன்.

குரேஷியின் பூர்வீகம் சென்னை! அவரது குடும்பத்தினர் 1947-இல் பாகிஸ்தானுக்கு குடி பெயர்ந்திருக்கிறார்கள். அப்பா படிக்க இங்கிலாந்து போயிருக்கிறார். அங்கேயே ஒரு வெள்ளைக்காரப் பெண்ணை மணந்து செட்டில் ஆகிவிட்டார். குரேஷி இங்கிலாந்தில் பிறந்தவரே.

சிறுகதையை இணைத்திருக்கிறேன், படித்துப் பாருங்கள்! (முடிந்தால் திரைப்படங்களையும் பாருங்கள்!)

தொகுக்கப்பட்ட பக்கம்: புனைவுகள்

பிடித்த சிறுகதை – சோ. தர்மன் எழுதிய அடமானம்

சிலபல சமயங்களில் சிறுகதைகளை விவரிப்பது பயனற்றதாகத் தெரிகிறது. இந்தச் சிறுகதையும் – அடமானம் – அப்படித்தான் உணர வைக்கிறது. நேரடியாக சொல்லப்படும் சிறுகதை. திருமணம், புது மனைவி – நல்ல தொழிலாளி கணவனின் முதலாளியின் வசமாவது (பாலியல் ரீதியாக அல்ல, தொழிலாளியாக). படித்துக் கொள்ளுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: சோ. தர்மன் பக்கம்

பிடித்த சிறுகதை – சா. கந்தசாமியின் “தக்கையின் மீது நான்கு கண்கள்”

அற்புதமான சிறுகதை. மீன் பிடிப்பதில் தாத்தாவுக்கும் பேரனுக்கும் போட்டி, கௌரவப் பிரச்சினை, தான் வெல்லாத இடத்தில் சிறுவன் வெல்வதை தாத்தாவால் ஜீரணிக்க முடியவில்லை என்று சுருக்கலாம், ஆனால் அது கதையின் வீரியத்தை காட்டவில்லை.

இந்தச் சிறுகதை ஜெயமோகன் பட்டியலிலும் எஸ்ரா பட்டியலிலும் இடம் பெறுகிறது. அ. ராமசாமி இந்த சிறுகதையை இங்கே அலசுகிறார். இயக்குனர் வசந்த் இதை ஒரு குறும்படமாக எடுத்துள்ளார், அதற்கு தேசிய விருதும் கிடைத்திருக்கிறது.

கந்தசாமி விசாரணை கமிஷன் என்ற நாவலுக்காக 1998-இல் சாஹித்ய அகடமி விருது பெற்ற எழுத்தாளர். அவரது சாயாவனம் தமிழின் உலகின் மிகச் சிறந்த நாவல்களில் ஒன்று. அவரது இன்னும் இரண்டு சிறுகதைகள் – ஹிரண்யவதம், சாந்தகுமாரி – ஜெயமோகன் பட்டியலில் இடம் பெறுகின்றன. கந்தசாமியின் ஒரு பேட்டியை இங்கே படிக்கலாம்.

கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: சா. கந்தசாமி பக்கம்

அஞ்சலி: எழுத்தாளர் அய்க்கண்

அய்க்கண் பேரைக் கேட்டிருந்தாலும் நான் எதுவும் படித்ததில்லை. அவரை பற்றி யாரும் பெரிதாகக் குறிப்பிட்டும் நான் பார்த்ததில்லை. வணிக எழுத்தை பொருட்படுத்தி எழுதும் (எனக்குத் தெரிந்த) ஒரே தீவிர இலக்கிய விமர்சகரான ஜெயமோகன் கூட அவரது மறைவைப் பற்றி குறிப்பிடவில்லை.

இப்போதெல்லாம் ஃபேஸ்புக்கில் திருப்பூர் கிருஷ்ணன் சில பல எழுத்தாளர்களை நினைவு கூர்கிறார். அவர்தான் அய்க்கண் மறைவுச் செய்தியை குறிப்பிட்டிருந்தார். அய்க்கண் தமிழ் பேராசிரியராக இருந்திருக்கிறார் என்றும் நிறைய எழுதி இருக்கிறார் என்றும் தெரிகிறது. ஓய்வு பெற்ற தமிழ் பேராசிரியை, தோழி சுசீலாவுக்கு பழக்கம் இருக்கலாம்.

எழுத்தாளனுக்கு அஞ்சலி என்பது அவரது புத்தகங்களைப் பற்றி எழுதுவதுதான் என்பது என் உறுதியான கருத்து. தற்செயலாக அவரது அதியமான் காதலி புத்தகத்தின் மின்பிரதி கிடைத்தது.

தமிழ் சரித்திர நாவல்களில் என் எதிர்பார்ப்பு மிக மிகக் கீழேதான். பல குப்பை சரித்திர நாவல்களை படித்து நொந்து நூலாகி இருக்கிறேன். அய்க்கண் சரளமான நடையில், ரொம்ப வளவளக்காமல் ஓரளவு சுவாரசியமான, ஆனால் வெகு சுலபமாக ஊகிக்கக் கூடிய முடிச்சுகளைப் போட்டிருக்கிறார். மிகவும் சிம்பிளான கதைப்பின்னல்தான். புத்தகத்தை சுவாரசியப்படுத்துவது தியமானுக்கும் அவ்வைக்கும் உள்ள பந்தம் எப்படி ஏற்பட்டது என்ற அவர் கற்பனையும், அவர் பயன்படுத்தி இருக்கும் சங்கப் பாடல்களும்தான். படித்தே ஆக வேண்டிய நாவல் இல்லைதான். ஆனால் படிக்கக் கூடிய நாவல்.

ஓர் அகலிகையின் மகள், மண், மாணிக்கம் சார், மாண்புமிகு மாணவன் என்ற சிறுகதைகள் இணையத்தில் கிடைத்தன. அகலிகை வழக்கமான பாதையில் செல்லும் பெண்ணியக் கதை. மற்றவற்றைப் பற்றி சொல்ல ஒன்றுமில்லை.

ஒரு நாவல், 4 சிறுகதைகளை மட்டும் வைத்து சொல்லிவிட முடியாதுதான். என் கண்ணில் அய்க்கண் இலக்கியம் படைக்கவில்லை. அவர் எழுத்தை வணிக எழுத்து என்றுதான் வகைப்படுத்துவேன். அதியமான் காதலி அறுபது எழுபதுகளில் வாரப்பத்திரிகையில் தொடர்கதையாக வந்திருந்தால் விரும்பிப் படிக்கப்பட்டிருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. நான் படித்த பல குப்பைகளை விட அ. காதலி எவ்வளவோ பரவாயில்லை. நிச்சயமாக் அய்க்கண்ணின் வேறு ஏதாவது புத்தகம் கிடைத்தால் புரட்டியாவது பார்ப்பேன். ஆனால் தமிழ் வணிக எழுத்தின் வரலாற்றிலும் அவர் ஒரு footnote அளவுக்கு வந்தால் அதிகம்.

அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: அஞ்சலிகள்

கோபிகிருஷ்ணன் சிறுகதைகள்

கோபிகிருஷ்ணனைப் பற்றி சாரு நிவேதிதா மூலம் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் பெரிதாகப் படித்ததில்லை. அவருக்கு உளவியல் பிரச்சினைகள் இருந்தனவாம். கடவுளின் கடந்த காலம் போன்ற சிறுகதைகளில் அது தெரிகிறது. ஆனால் என்ன கதை என்றுதான் புரியவில்லை.

படித்த வரையில் intriguing எழுத்தாளர். பிரச்சினைகளால் அமுக்கப்படும் சாதாரண, அனேகமாக கீழ் நடுத்தர வர்க்க மனிதனுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கக் கூட வழி இல்லை, சும்மா ஒப்புக்கு “என்ன கொடுமை சரவணன்” என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிடுகிறான் என்ற உணர்வை ஏற்படுத்துகிறார் – குறிப்பாக புயல் சிறுகதையில். எனக்கு மிகவும் பிடித்த சிறுகதை உரிமை. மொழி அதிர்ச்சி ஓரளவு நல்ல சிறுகதை.

மொழி அதிர்ச்சி திறமையாக எழுதப்பட்ட சிறுகதை. புன்னகைக்காமல் இருக்க முடியாது. ஆனால் ஒரு தளத்தில் வெறும் gimmick எனவும் தோன்றுகிறது. சின்ன சிறுகதை, படித்துப் பாருங்கள்!

உரிமை எனக்குப் பிடித்த சிறுகதைகளில் ஒன்று. ஒரு கணத்தில் உறவில் ஏற்படும் விரிசலை பிரமாதமாகக் காட்டிவிடுகிறார். இதன் இன்னொரு பக்கமாக ஒரு ரூபாய்க்கு ஒரு கதையை சொல்லலாம். உறவில் சின்ன உறுத்தல் இருந்துகொண்டே இருப்பதைக் காட்டுகிறார். ஆனால் உரிமை அளவுக்கு வரவில்லை.

இழந்த யோகம் சிறுகதை படிக்கலாம். சிகரெட் பழக்கத்தை முன்புலத்தில் வைத்து பெண்ணின் பால் ஏற்படும் ஈர்ப்பின் தாக்கத்தைக் காட்டுகிறார்.

புயல் சிறுகதையில் ஒரு பக்கம் பார்த்தால் நம்பகத்தன்மை அதிகம் – கணவன் பிரச்சினையை எதிர்கொள்ளும் விதம். இன்னொரு பக்கம் பார்த்தால் எல்லாரும் ஒரே நாளில் மனைவியிடம் இத்தனை பாலியல் சீண்டல்கள் நடப்பதில் நம்பகத்தன்மை குறைவாக இருக்கிறது. படிக்கலாம்.

இதுவும் சாத்தியம்தான் சுமார். Platonic love சித்தரிப்பு.

பீடி, சமூகப்பணி, மகான்கள், கடவுளின் கடந்த காலம் போன்றவற்றை எப்படி வகைப்படுத்துவது என்றே தெரியவில்லை. சமூகப்பணி சிறுகதையில் மெல்லிய நகைச்சுவை ஓடுகிறதுதான், ஆனால் இரண்டையும் தவிர்க்கலாம்.

கோபிகிருஷ்ணனின் இரு சிறுகதைகளை – மொழி அதிர்ச்சி, காணி நிலம் வேண்டும் – ஜெயமோகன் தனது சிறந்த சிறுகதைகள் பட்டியலில் வைக்கிறார். எஸ்ராவின் பட்டியலில் அவரது சிறுகதைகள் இடம் பெறவில்லை. ஆனால் கோபிகிருஷ்ணனின் படைப்புலகம் பற்றி எழுதியதை அழியாச்சுடர்கள் தளத்தில் பதித்திருக்கிறார்கள்.

அவரது சிறுகதைத் தொகுப்புகளை வாங்கி படித்துப் பார்க்க வேண்டும் என்று தோன்ற வைக்கிறார். ஒரே ஒரு கதை படிக்க வேண்டுமென்றால் உரிமையைப் படித்துப் பாருங்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

நாஞ்சில் நாடன் சிறுகதைகள்

நாஞ்சில் நாடன் நான் தவறவிட்ட தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். பத்து வருஷம் முன்னால் வரை நான் பேரைக் கூட கேட்டதில்லை. அந்த காலகட்டத்தில் அவரைப் பற்றிய பில்டப் நிறைய ஆரம்பித்தது. ஜெயமோகன், நண்பர் ராஜன் மாதிரி நிறைய பேர் அவரை சிலாகித்துக் கொண்டே இருந்தார்கள். அவர்கள் பரிந்துரையின் மேல் படித்த இடலாக்குடி ராசா என்னை பெரிதும் கவர்ந்த ஒரு சிறுகதை. போதாதா? அவர் எழுதிய எண்பத்து சொச்சம் சிறுகதைகள் அடங்கிய ஒரு தொகுப்பை ராஜனிடமிருந்து ஆர்வத்தோடு தள்ளிக் கொண்டு வந்தேன்.

எப்போதெல்லாம் பில்டப் அதிகமாக இருக்கிறதோ அப்போதெல்லாம் நான் அனேகமாக ஏமாற்றம் அடைகிறேன். சிதம்பர சுப்ரமணியனின் இதயநாதம், ஷண்முகசுந்தரத்தின் நாகம்மாள் இரண்டையும் உதாரணமாக சொல்லலாம். என் மனதின் எதிர்பார்ப்புகள் மிக அதிகமாகிவிடுகின்றன என்று நினைக்கிறேன். இப்போதும் எனக்கு அப்படித்தான் ஆயிற்று. படித்த கதைகள் நன்றாகத்தான் இருந்தன, ஆனால் என் எதிர்பார்ப்புகள் இன்னும் மிக அதிகமாக இருந்திருக்க வேண்டும். ஒரு பத்து இருபது கதைகள் படித்த பிறகு என் மனநிலையை மாற்ற வேண்டும், எதிர்பார்ப்புகள் இல்லாமல் படிக்க வேண்டும் என்று நினைத்தேன். அது கொஞ்சம் கஷ்டமான காரியம். புத்தகத்தை எடுத்து மூலையில் வைத்துவிட்டேன். அப்புறம் ஒரே மூச்சாக படிக்காமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக படித்தேன்.

நாஞ்சிலிடம் நான் என்ன எதிர்பார்த்தேன், ஏன் ஏமாற்றம் அடைந்தேன் என்று யோசித்துப் பார்த்தேன். நாஞ்சில் நேரடியாக கதை சொல்கிறார். அதுவே அவரது பலம் என்று புரிந்து கொள்ள எனக்கு நேரம் பிடித்தது. விட்டுவிட்டுப் படிக்கும்போது நன்றாகத்தானே எழுதி இருக்கிறார், அப்படி என்னதான் எதிர்பார்த்தேன் என்று தோன்றிக் கொண்டே இருந்தது. தமிழின் முதன்மைப் படைப்பாளிகளில் ஒருவர் என்றே இன்று கருதுகிறேன்.

சிறந்த சிறுகதைகள் என்று லிஸ்ட் போட்டால் நினைவு வருவன:

இடலாக்குடி ராசா வாழ்வில் களைப்பு ஏற்படும்போதெல்லாம் இதைப் படித்தால் கொஞ்சம் தெளிவு ஏற்படலாம். அந்தஸ்து, பொருளாதாரம் என்ற வகைகளில் எவ்வளவுதான் தாழ்ந்து போனாலும் சுயமரியாதையை விட்டுக் கொடுக்காமல் வாழ்பவர்கள் எந்த விதத்திலும் தாழ்ந்தவர்கள் இல்லை என்பதை அழகாக எழுதி இருக்கிறார்.

வனம். பஸ்ஸில் போகும் அவஸ்தைகளை விவரித்துக் கொண்டே வந்து கடைசியில் “போ மோளே பெட்டென்னு” என்று முடித்த விதம் ஒரு மாஸ்டருக்கு மட்டுமே கைவரும்.

மனகாவலப் பெருமாள் பிள்ளை பேத்தி மறு வீடும் வெஜிடபிள் பிரியாணியும் தமிழின் சிறந்த சிறுகதைகளில் ஒன்று. சைவப் பிள்ளைமார் பின்புலத்தில் எழுதப்படும் கதைகளில் சும்மா பிய்த்து உதறிவிடுகிறார்.

பாம்பு குறிப்பிட வேண்டிய சிறுகதை. மனிதருக்கு தமிழ்ப் பேராசிரியர்கள் மீது என்ன கோபமோ தெரியவில்லை. இந்த மாதிரி நக்கல் அவருக்கு மட்டுமே கைவந்த கலை.

சாலப்பரிந்து இன்னும் ஒரு சிறந்த சிறுகதை. இதே கருவை வண்ணநிலவனின் எஸ்தர் சிறுகதையிலும் தமயந்தியின் அனல்மின் மனங்கள் சிறுகதையிலும் கூட பிரமாதமாகக் கையாண்டிருப்பார்கள்.

இந்த ஐந்து சிறுகதைகளையுமே நாஞ்சிலின் மிகச் சிறந்த கதைகளாகக் கருதுகிறேன். இவற்றில் நான்கை ஜெயமோகன் தன் சிறந்த சிறுகதைகள் பட்டியலில் சேர்க்கிறார்.

ஜெயமோகன் தன் சிறந்த சிறுகதைகள் பட்டியலில் இந்த ஐந்து சிறுகதைகளையும் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

நாஞ்சிலுக்கே அவர் எழுதியவற்றில் பிடித்தது யாம் உண்பேம் சிறுகதைதான் என்று நினைக்கிறேன். நல்ல கதைதான், ஆனால் என் அரைகுறை ஹிந்தியால் எனக்கு ஒரு சின்ன சந்தேகம். “ஹம் காத்தேன்” என்று சொல்லி இருக்கலாம், சில வட்டாரங்களில் தன்னை பன்மையில் சொல்லிக் கொள்வார்கள். அதை நாஞ்சில் தவறாகப் புரிந்து கொண்டுவிட்டாரோ என்று சந்தேகம்.

எஸ்ரா இந்நாட்டு மன்னர் சிறுகதையை தன் சிறந்த சிறுகதைகள் பட்டியலில் வைக்கிறார். நான் இந்தக் கதையை பெரிதாக ரசிக்கவில்லை.

கிழிசல் சிறுகதையை விட்டல்ராவ் தொகுத்த இந்த நூற்றாண்டு சிறுகதைகள் என்ற தொகுப்பில் படித்தேன். ஹோட்டலில் பில் கொடுக்காமல் ஏமாற்றும் அப்பாவை பையனின் கண்ணோட்டத்தில் சித்தரிக்கும் கதை. நல்ல சிறுகதை, ஆனால் சிறந்த சிறுகதைகளில் ஒன்று என்று சொல்லமாட்டேன்.

இவற்றைத் தவிர இந்தக் கதைகளையும் குறிப்பிடலாம்.

விலாங்கு ஒரு கண்ணோட்டத்தில் இது வலியவன் எளியவரிடம் ஆட்டையைப் போடும் கதைதான். நுண்விவரங்கள்தான் இந்தக் கதையை உயர்த்துகின்றன.

துறவு மாதிரி ஒரு கதையைத்தான் நான் எழுத ஆசைப்படுகிறேன். கடைசி வரியில் கதையின் உலகத்தையே மாற்றிவிடுகிறார்.

சுருக்கமாகச் சொன்னால் நாஞ்சிலின் சிறுகதைகள் தவறவிடக் கூடாதவை.

தொகுக்கப்பட்ட பக்கம்: நாஞ்சில் பக்கம்

திலீப்குமார் சிறுகதைகள்

திலீப்குமார் குறைவாகவே எழுதி இருக்கிறார். இன்னும் நிறைய எழுதக் கூடாதா என்று நினைக்க வைப்பவர்களில் ஒருவர்.
ஒரு சிறுகதையில் அவரே தன்னை கிண்டல் செய்துகொள்கிறார் – “ஜெயமோகன் நான் வருஷத்துக்கு அரைக்கதைதான் எழுதறேன்பார்.”

திலீப்குமாரின் கதைகள் அனேகமாக சென்னையின் ஒரு மத்திய தர வர்க்க குஜராத்தி காலனியில் நடைபெறுபவை. அவற்றில் ஒரு பாட்டி தென்பட்டால் கதை சும்மா கலக்கிவிடுகிறது. பல கதைகளில் மெல்லிய நகைச்சுவை. சின்னதாக புன்னகை வரும், வாய்விட்டு சிரித்துவிட மாட்டோம். மிகக் கூரிய அவதானிப்புகள். நாம் நம்மிடமும் பிறரிடம் நடிக்கும் நடிப்புகள், காட்டும் தோரணைகள், ஆகியவற்றை அருமையாகக் காட்டிவிடுவார்.

திலீப்குமாரை ஒரு விதத்தில் அசோகமித்திரன் பாணி எழுத்தாளர் என்று சொல்லலாம். அவரை வேறுபடுத்துவது அசோகமித்திரனின் கசப்பும் குரூரமும் இல்லாமல் மனிதர்களை அவர்களது பலவீனங்களோடு ஏற்பது. மெல்லிய நகைச்சுவை. அசோகமித்திரனின் கதைகளில் எழுத்தாளன் இருக்கமாட்டான்தான், ஆனால் எழுத்தாளன் இருக்கக் கூடாது என்று முனைப்பு தெரியும். திலீப்குமாரின் கதைகளிலோ கதைசொல்லி என்று ஒரு பாத்திரமே இருந்தாலும் எழுத்தாளனின் சுவடே தெரிவதில்லை. புற உலகத்தை இன்னும் துல்லியமாக சித்தரிப்பார். ஆனால் அசோகமித்திரன் போன்று பெரும் மானுட தரிசனங்களுக்கு திலீப்குமார் முனைவதே இல்லை. இன்னொரு விதமாகச் சொன்னால் திலீப்குமார் அசோகமித்திரன் போட்ட ரோட்டில் கோடு மட்டுமே போடுகிறார்.

அவருடைய கடிதம், மூங்கில் குருத்து சிறுகதைகள்தான் எப்போதும் பேசப்படுகின்றன. ஆனால் என்னை மிகவும் கவர்ந்த சிறுகதை கடவு. அடுத்தபடியாக தீர்வு. பிறகுதான் மிச்சம் எல்லாம்.

கடவு சிறுகதையை ஜெயமோகன் கூட எழுதி இருக்கலாம். பாட்டி இன்று அவற்றைப் பற்றி காலனியின் மனைவிமார்களிடம், இளம் பெண்களிடம் சுலபமாக, சின்ன புன்னகை வரும் நகைச்சுவையுடன் பேசும் பாட்டி முன்னால் என்றால் அவள் அனுபவித்த பாலியல் கொடுமைகள் பின்புலம். மிகப் பிரமாதமான சித்தரிப்பு. அவருடைய எழுத்திலேயே இதுதான் கொஞ்சம் ஆர்ப்பாட்டமானது என்று நினைக்கிறேன். அதனால்தானோ என்னவோ, இதுதான் எனக்கு மிகவும் பிடித்த சிறுகதை. முழுக்கதையும் இங்கே.

காலனியின் ஒரே கிணற்றில் பூனை விழுந்து அசுத்தமாகிவிட்டது. என்னதான் தீர்வு? மிகப் பிரமாதமான சிறுகதை. பல முறை அப்படித்தான், நம்மை சமாதானப்படுத்திக் கொள்ள, நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ள, நமக்கு ஏதாவது face-saving தீர்வு தேவைப்படுகிறது. முழுக்கதையும் இங்கே.

இந்த இரண்டு சிறுகதைகளுமாவது சுலபமாகப் புரிந்துவிடுகின்றன, ஏன் பிடித்திருக்கின்றன என்று மண்டையைப் போட்டு குழப்பிக் கொள்ளாமல் சொல்லிவிட முடிகிறது. ஆனால் கடிதமும் மூங்கில் குருத்தும் ஏன் பிடித்திருக்கின்றன என்ற தெளிவாக சொல்ல முடிந்ததே இல்லை. கடிதம் சிறுகதையில் ஒரு குஜராத்தி ஏழைக் கிழவர், குடும்பத்தில் ஆதரவில்லாதவர், தன் பணக்கார உறவினருக்கு எழுதும் கடிதம், அவருக்கு பண உதவி வேண்டும், ஆனால் கேட்பதில் கௌரவப் பிரச்சினைகள் உண்டு. இதில் என்ன இருக்கிறது, ஏன் பிடித்திருக்கிறது, மெல்லிய நகைச்சுவையாலா? (கிழவருக்கு கதைசொல்லிதான் கடிதம் எழுதித் தருகிறான், கிழவர் “என் கண்ணில் கண்ணீர் ததும்புகிறது” என்று எழுது என்று சொன்னவுடன் கதைசொல்லி அவர் கண்ணைப் பார்க்கிறான்). Black Humor-ஆலா? (அவர் கடிதம் எழுதினால் பணக்கார உறவினர் இறந்தே போகிறார்.) மூங்கில் குருத்திலோ ஏழ்மையின், பற்றாக்குறையின் இரக்கமற்ற சித்தரிப்பு. ஆனால் அதையும் மீறி அதில் என்னவோ இருக்கிறது.

மிச்சத்தில் ஒன்று அக்ரஹாரத்தில் பூனை. சாதாரண சிறுகதையாகப் போய்க் கொண்டே இருக்கும். திடீரென்று கடைசி ஓரிரு பாராக்களில் மாறுகிறது!

இன்னொரு குறிப்பிட வேண்டிய சிறுகதை கண்ணாடி. கணவன், மனைவி, குழந்தை, சண்டை, சமாதானம் என்று சிறப்பான சித்தரிப்போடு போகும் கதை, விலகிப் படுக்கும் மனைவியோடு முடியும்போது வேறு தளத்துக்குப் போய்விடுகிறது.

தடம் இன்னொரு நல்ல சிறுகதை. போலீஸ் சித்திரவதையிலிருந்து விடுபட மரணத்தை ஏற்க மனரீதியாக தன்னை தயார்படுத்திக்கொள்பவன் என்று கதையைச் சுருக்கலாம். ஆனால் அது கதையின் வீரியத்தை விவரிக்கவில்லை.

ஜெயமோகன் கடிதம், மூங்கில் குருத்து, அக்ரஹாரத்தில் பூனை, தீர்வு ஆகிய சிறுகதைகளை பரிந்துரைக்கிறார். எஸ்ராவுக்கு கடிதம், மூங்கில் குருத்து இரண்டு மட்டும். மூங்கில் குருத்து விட்டல்ராவ் தொகுத்த “இந்த நூற்றாண்டு சிறுகதைகள்” தொகுப்பிலும் இடம் பெறுகிறது.

ரமாவும் உமாவும் சிறுகதைத் தொகுப்பு பற்றி இங்கே.

அழியாச்சுடர்கள் தளத்தில் கானல் என்ற சிறுகதையும் இணையத்தில் கிடைக்கிறது. சுமார்தான்.

திலீப்குமாரை சந்தித்ததும் மறக்க முடியாத அனுபவம். நானும் புத்தகங்களும் பதிவிலிருந்து:

நான் அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்தபோது கையில் ஓரளவு காசு புரண்டது. புஸ்தகங்களை வாங்கி குவிக்க வேண்டும் என்ற வெறியை தீர்த்துக்கொள்ள நல்ல சந்தர்ப்பம். ஆனால் எங்கே புஸ்தகங்கள்? எனக்குத் அப்போதெல்லாம் தெரிந்த ஒரே புத்தகக் கடை ஹிக்கின்பாதம்ஸ்தான். சில புஸ்தகங்கள் கிடைத்தன. அப்புறம் லாண்ட்மார்க் பற்றி கேள்விப்பட்டு அங்கே போனேன், இன்னும் சில கிடைத்தன. ஆனால் நான் தேடிக்கொண்டிருந்த புஸ்தகங்கள் – வாடிவாசல், நித்யகன்னி மாதிரி – எதுவும் கிடைக்கவில்லை. கடைசியில் அல்லையன்ஸ் பதிப்பகம் போனேன். அங்கே சில தேவன் புத்தகங்களை வாங்கினேன். பிறகு வாடிவாசல் கிடைக்குமா என்று கேட்டேன். விற்பனையாளர் அந்தப் பேரையே கேட்டதில்லை. கடைசியில் அவர் சொன்னார் “இதே ஆர்.கே. மட் ரோட்லே போங்கோ. பி.எஸ். ஹைஸ்கூல் முன்னாலே, இந்தியன் பாங்க் மாடிலே திலீப்குமார்னு ஒருத்தர் சின்னக் கடை நடத்தறார், அவரைப் கேட்டு பாருங்கோ” – சரி இதுதான் கடைசி என்று அங்கே போனேன். என் பல வருஷ தேடல் அங்கே ஒரு நொடியில் முடிந்தது. நான் அதற்கப்புறம் சென்னைக்கு போய் என் உறவினர்கள், நண்பர்களை பார்க்காமல் வந்திருக்கிறேன். திலீப்குமாரை பார்க்காமல் வந்ததில்லை. அவர் கை காட்டும் புஸ்தகங்களை வாங்குவேன். மெதுவாகத்தான் படிப்பேன். (விஷ்ணுபுரம் படிக்க 4 வருஷம் ஆயிற்று.)

ஒரு பத்து வருஷமாவது சென்னையில் அவரது புத்தகக் கடை எனக்கு ஒவ்வொரு முறை இந்தியா செல்லும்போதும் தரிசிக்க வேண்டிய புண்ணிய ஸ்தலமாக இருந்தது. சொந்த வாழ்க்கையில் பட்ட அடிகளால் எல்லாம் கொஞ்சம் நிலைகுலைந்து போய்விட்டன. இன்று அவருக்கு என்னை நினைவிருக்குமா என்று கூட தெரியவில்லை. நினைவில்லை என்றால் பரவாயில்லை, அடுத்த முறை சென்னை செல்லும்போது மீண்டும் அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்!

தொகுக்கப்பட்ட பக்கம்: திலீப்குமார் பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:

சுஜாதா சிறுகதைகள்

மனிதர் எக்கச்சக்க சிறுகதைகள் எழுதி இருக்கிறார். இப்போதைக்கு ஸ்ரீரங்கத்துக் கதைகள் மற்றும் அறிவியல் சிறுகதைகளைத் தவிர்க்கிறேன். (முடிந்த மட்டும்).

அவரது பலம் ஒன்றிரண்டு கோடு போட்டு ஒரு தளத்தை தத்ரூபமாகக் கொண்டுவந்துவிடுவது. ஜன்னல் சிறுகதையில் டாக்டரிடம் தாய் “பச்சையா போறான்” என்று தன் மகனைப் பற்றீ விவரிக்கும் அந்த ஒரு வரி காத்திருக்க ஒரு அறை, டாக்டருக்கு ஒரு அறை, ஐந்து பத்து ரூபாய் ஃபீஸ் வாங்கும் டாக்டர், ஜுரம் அல்லது வயிற்றுவலி அல்லது கட்டி என்று அவரைப் பார்க்க வரும் மத்திய வர்க்கக் குடும்பங்கள் எல்லாவற்றையும் கண் முன் கொண்டுவந்து நிறுத்திவிடுகிறது. அவருக்கே உரிய நடை. பலவீனம்? சில முறை முடிவை நோக்கி வலிந்து தள்ளுவது போல இருக்கிறது. அவரது புகழ் பெற்ற நகரம் சிறுகதையில் அப்போது தெரியவில்லை, இப்போது அப்படித்தான் உணர்கிறேன். என்ன கொடுமை இது சரவணன் என்று அவர் வெளிப்படையாக எழுதாவிட்டாலும் அதைத்தான் சொல்ல முயற்சிக்கிறார் என்று தெரிகிறது – உதாரணமாக அரிசி. பல முறை வாசகனை அதிர்ச்சிக்குள்ளாக்கும் விழைவு தெரிகிறது. இது தொடர்கதைகளில்தான் அதிகம் என்றாலும் சிறுகதைகளிலும் தெரிகிறது. அவர் முயற்சியே செய்யவில்லை என்று நான் உணரும் சிறுகதைகளே எனக்கு இன்றும் அப்பீல் ஆகின்றன.

ஸ்ரீரங்கத்துக் கதைகளில் பல மாணிக்கங்கள் உண்டு. என்னுடைய பர்சனல் ஃபேவரிட் பாம்பு. நான் விவரிக்கப் போவதில்லை, படித்துக் கொள்ளுங்கள்! அவர் காப்பி அடித்த சிறுகதை ஒன்றும் ஸ்ரீரங்கத்துக் கதைகளில் உண்டு – இரண்டணா.

அவரது அறிவியல் சிறுகதைகள் அனேகமாக காலாவதி ஆகிவிட்ட முன்னோடி முயற்சிகள் மட்டுமே. அவற்றுள் திமலா மட்டும் ஒரு ரத்தினம்.


எனக்கு சில பர்சனல் ஃபேவரிட்கள் உண்டு. அதில் ஒன்று பேப்பரில் பேர். இதை விட ஜாலியான கிரிக்கெட் கதை அபூர்வம்! அப்புறம் நிஜத்தைத் தேடி. எனக்கே இதே மாதிரி ஒன்று நடந்திருக்கிறது. அதை வைத்து நானும் ஒரு கதை எழுதி இருக்கிறேன். அப்புறம் ஒரு லட்சம் புத்தகங்கள். படித்த அன்று எப்படி அறை விழுந்தது போல் உணர்ந்தேனோ இன்றும் அப்படியேதான் உணர்கிறேன். காகிதக் கொடிகள் இன்னொரு நல்ல சிறுகதை. ஹை கிளாஸ் ஸ்கூலில் கொடி கட்டும் சிறுவனுக்கு அநியாயமாக அறை விழுகிறது. அவனுடைய ரோஷம் எப்படி வெளிப்படுகிறது?


சுஜாதாவே தான் எழுதியவற்றில் தனக்குப் பிடித்த சிறுகதையாக மஹாபலி சிறுகதையை எங்கோ குறிப்பிட்டிருக்கிறார். நல்ல சிறுகதை. ஏன் என்பது மிகச் சரியான கேள்வி.

தன்னை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறுகதைகளாக அவர் குறிப்பிடுபவை:

  • தனிமை கொண்டு (தனிப் புத்தகம்)
  • ஜன்னல் (கசடதபற): நல்ல சிறுகதை. குறிப்பாக டாக்டரிடம் வரும் இதர நோயாளிகளின் சித்தரிப்பு.
  • காணிக்கை (கல்கி) – ஸ்ரீரங்கத்துக் கதை – படித்துக் கொள்ளுங்கள், விவரிப்பது கஷ்டம்.
  • செல்வம் (கலைமகள்)
  • முரண் (சுதேசமித்திரன்) – பாவண்ணனின் அலசல்
  • நகரம் (தினமணிக்கதிர்)
  • எதிர்வீடு (கணையாழி) – ஸ்ரீரங்கத்துக் கதை
  • அகப்பட்டுக் கொள்ளாதவரை திருடவில்லை (குமுதம்)
  • வீடு (தினமணிக்கதிர்)
  • ஒரே ஒரு மாலை (ஆனந்த விகடன்)
  • அம்மோனியம் பாஸ்ஃபேட் (தினமணிக்கதிர்) – சுமார்தான்
  • பார்வை (தினமணிக்கதிர்)

தான் எழுதியவற்றில் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறுகதை என்று அரிசியை சுஜாதா குறிப்பிடுகிறார். திடீரென்று கோணத்தை மாற்றுவதில் அவரது எழுத்துத்திறமை – craft – வெளிப்படுகிறது, ஆனால் இதை விட நல்ல சிறுகதைகளை சுஜாதா எழுதி இருக்கிறார்.


சுஜாதாவின் ஏழு சிறுகதைகளை ஜெயமோகன் தமிழின் சிறந்த சிறுகதைப் பட்டியலில் தேர்ந்தெடுத்திருக்கிறார். அவற்றில் இரண்டு ஸ்ரீரங்கத்துக் கதைகள்தான். குதிரை, மாஞ்சு, எல்டோராடோ ஆகியவற்றை நானும் மிகச் சிறந்த சிறுகதைகளாகக் கருதுகிறேன்.

நகரம் சிறுகதை அனேகமாக எல்லாராலும் சுஜாதாவின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒரு காலத்தில் நானும் இதை விதந்தோதி இருக்கிறேன். கிராமத்து பெண்மணி நகர மருத்துவமனையில் சாதாரணமாக பேசுவது புரியாமல் படும் அவதி மிகப் பிரமாதமாக வந்திருந்தது என்று கருதினேன், இன்னமும் கருதுகிறேன். ஆனால் இந்தப் பதிவுக்காக மீண்டும் படிக்கும்போது கொஞ்சம் மிகை உணர்ச்சிக் கதையாகத் தெரிந்தது. சுஜாதா நிகழ்வின் pathos-ஐ வலிந்து அடக்க முயற்சி செய்வதாகத் தெரிகிறது. நான் தமிழின் சிறந்த சிறுகதைகள் என்று தேர்ந்தெடுத்தால் அதில் வராது.

குதிரை சிறுகதையும் புகழ் பெற்றது. என் கண்ணிலும் அற்புதமான சிறுகதைதான். வாழ்வின் அபத்தத்தை மிகப் பிரமாதமாக காட்டிவிடுகிறது.

மாஞ்சுதான் ஜெயமோகனுக்கு மிகவும் பிடித்த சிறுகதை என்று நினைக்கிறேன். நான் இந்தச் சிறுகதையில் என்னை பாச்சாவின் நிலையில்தான் வைத்துப் படித்தேன். என் மனதுக்கு மிக நெருக்கமாக உணர்ந்த உறவினர் ஒருவருக்கு நான் பொருட்டே இல்லை என்று நான் உணர்ந்த தருணம் ஒன்றுண்டு. பாச்சாவின் குமுறலைப் படிக்கும்போது அதைத்தான் நான் உணர்ந்தேன். ஆண்டாளுக்கு முதலில் மாஞ்சு; அப்புறம் ஆராவமுது. அப்போது அவள் மனதில் பாச்சாவுக்கு என்னதான் இடம்? தன் உறவும் உதவியும் இல்லாமல் மாஞ்சுவால் வாழமுடியாது என்று மாஞ்சுவோடு பிணைப்பு, பாச்சா அவனே சமாளித்துக் கொள்வான் என்று புறக்கணிப்பா? சின்ன வயதில் என் தங்கைக்கு பஜ்ஜி பிடிக்காது. அதனால் என் அம்மா பஜ்ஜி போடும்போதெல்லாம் எங்களுக்கு அதைக் கொடுத்துவிட்டு அவளுக்கு தனியாக பக்கோடா போட்டுக் கொடுப்பாள். ஆனால் எனக்கு பஜ்ஜியை விட பக்கோடாதான் பிடிக்கும், எனக்கு கிடைக்காது. அப்போதெல்லாம் எனக்கு ஆங்காரம் பொத்துக் கொண்டு வரும். அதையேதான் இந்த சிறுகதையிலும் உணர்கிறேன். இந்தச் சிறுகதையை சுஜாதாவின் சாதனைகளில் ஒன்றாகக் கருதுகிறேன்.

ஓர் உத்தம தினம் நல்ல சிறுகதைதான். நுண்விவரங்கள்தான் – சாக்கில் தூங்கும் தேவதைக் குழந்தை – இந்தச் சிறுகதையை உயர்த்துகின்றன. ஆனால் என் சிறந்த சிறுகதைகள் பட்டியலில் வராது. இதே கருவை வைத்து சுஜாதா இன்னொரு சிறுகதை எழுதி இருக்கிறார் – புதிதாக கல்யாணம் ஆகி மகிழ்ச்சி ஆரம்பித்திருப்பவர்கள், கணவன் காவேரியில்? நீந்தச் செல்கிறான் – கதையின் பெயர் நினைவு வரமாட்டேன் என்கிறது ஒரே ஒரு மாலை.

நிபந்தனை இந்த சிறுகதை எனக்கு ஏனோ காதரின் மான்ஸ்ஃபீல்டின் Cup of Tea சிறுகதையை நினைவுபடுத்துகிறது. சுஜாதா அப்படி நினைத்துதான் இதை எழுதினாரா, இல்லை உண்மையிலேயே கருணைக்கு சில எல்லைகள் உண்டு, மனைவியின் எல்லை “களங்கமில்லாத” ஏழைக்கு மட்டுமே உதவி செய்வது, கணவனின் எல்லை மனைவி என்று மட்டுமே நினைத்து எழுதினாரா என்று தெரியாது. மனைவிக்கு அடிமனதில் ஏதாவது பயம் இருந்ததோ?

விலையை நான் நகரம் சிறுகதையை விட ஒரு மாற்று அதிகமாக எடை போடுவேன். இரண்டிலும் தான் பழகிய உலகத்துக்கு வெளியே உள்ள உலகத்தை புரிந்து கொள்ளாமல் பெரும் துயரத்துக்கு ஆளாகும் கருதான். ஆனால் இது எனக்கு இன்னும் இயற்கையாக இருக்கிறது.

எல்டொரோடா என் மனதுக்கு மிகவும் நெருக்கமான சிறுகதை. என் அப்பாவை என்னை நினைவு கூர வைக்கும் சிறுகதை. என் வாழ்க்கையின் முதல் நாயகனான என் அப்பாவோடு நெருக்கமாக உணர்ந்த தருணங்கள், அவரை பலவீனங்கள் நிறைந்த மனிதராகவே கண்டு அவரோடு எப்போதும் முரண்டிய பதின்ம வயதுக் காலம், நாயகன் என்ற பெரும் பாரம் நீங்கி அவரை பலங்களும் பலவீனங்களும் நிறைந்த மனிதனாக புரிந்து கொண்ட காலம், அவரது பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு அவரது பலவீனங்கள் பெரிதாகத் தெரியாமல் அவரை மீண்டும் நாயகனாகவே பார்த்த காலம். அன்பான வார்த்தைக்காக, பேச்சுத் துணைக்காக ஏங்கிய, தன் பிரச்சினைகள், குடும்பம் என்று விலகிச் சென்றுவிட்டாலும் அந்தப் பிள்ளைகள் வாழ்வின் மூலமே வாழ்ந்த காலம் எல்லாவற்றையும் நினைவு கூர வைக்கிறது.


எஸ்ரா நகரம் மற்றும் ஃபில்மோத்ஸவ் இரண்டு சிறுகதைகளையும் தன் பட்டியலில் சேர்க்கிறார். ஃபில்மோத்ஸவை பதின்ம வயதில் படித்தபோது நிஜப் பெண்ணை விட்டு போர்னோ படம் பார்க்கவும் ஒருவன் போவானா என்றுதான் தோன்றியது. ஏதோ perversion-ஐ வைத்து கிளுகிளுப்பு கதை எழுத முயற்சி என்று புறம் தள்ளிவிட்டேன். வயதான பிறகுதான் அதன் உண்மை புரிந்தது. கதையில் அவரது தொழில் திறமை தெரிகிறது, ஆனால் என் சிறந்த தமிழ் சிறுகதைகள் பட்டியலில் வராது.


சுஜாதாவின் மத்யமர் தொகுதி என் கண்ணில் நல்ல, ஆனால் வெற்றி பெறாத முயற்சி. அந்தத் தொகுப்பில் பரிசு, மற்றும் சாட்சி என்ற இரண்டு சிறுகதைகளைப் பரிந்துரைக்கிறேன். முன்னது எண்பதுகளில், ஏன் இன்று கூட நடக்கக் கூடிய ஒன்றுதான். பின்னது, அன்றும் சரி, இன்றும் சரி அபூர்வமாகத்தான் இருக்க வேண்டும்.

ஓர் அரேபிய இரவு சிறுகதை மெல்லிய புன்னகையை வரவழைக்கிறது, அதிலும் நானும் இந்த மாதிரி எல்லாம் ஒரு காலத்தில் பகல் கனவு கண்டிருக்கிறேன். அரங்கேற்றம் சிறுகதையில் எனக்கு ஒரு காலத்தில் ஒன்றுமில்லை. இன்று நான் படிக்க விரும்பியவற்றை என் பெண்கள் மூலம் நிறைவேற்றிக் கொள்ள விரும்பியது அம்மா பாத்திரத்தில் தெரிகிறது. மாதர்தம்மை சிறுகதை கச்சிதமாக எழுதப்பட்டிருக்கிறது.

அனுமதி அவரது நல்ல சிறுகதைகளில் ஒன்று. காலமெல்லாம் நேர்மையாக நடந்த அரசு அலுவலர். மகனுக்காக தவறுகிறார், மகன் அதை எப்படி எதிர்கொள்கிறான்? சில வித்தியாசங்கள் சிறுகதை மாதச் சம்பளக்காரனின் பணப் பற்றாக்குறையை நன்றாக விவரிக்கிறது.

வேறு சில சிறுகதைகளைப் பற்றி தனியாக எழுதுவதற்கில்லை. ஆட்டக்காரன் – பெண்டாட்டியை பணயம் வைக்கும் நவீன யுதிஷ்டிரன், நேற்று வருவேன் – வேறு கிரகத்திலிருந்து விசிட் அடிக்கும் “பெண்”, மோதிரம் – இன்னொரு வேற்று கிரக “தாத்தா” விசிட் கதை ஆகியவை ஆட்டக்காரன் என்ற தொகுதியில் உள்ள படிக்கக் கூடிய, சுமாரான சிறுகதைகள். நயாகரா, கால்கள், இளநீர், கொல்லாமலே போன்றவை டைம்பாஸ். ஓலைப்பட்டாசு சிறுகதைத் தொகுதி பற்றி இங்கே. 55 வார்த்தை சிறுகதைகள் வெறும் gimmicks. 1973-இல் எழுதிய காரணம் என்ற சிறுகதையில் ஓரினச்சேர்க்கை பற்றி குறிப்பிடுகிறார்!

அவரது ஒரு சிறுகதை – பொறுப்பு – இங்கே படிக்கலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம்