ராமநவமிக்காக: முஸ்லிம்களும் ராமநாமமும்

காந்தியின் ராமநாம பஜனைகளில் முஸ்லிம்கள் பங்கு பெறுவது பற்றி அன்றைய முஸ்லிம்களுக்கு தயக்கம் இருந்திருந்த்தால் வியப்பில்லை – “காஃபிர்களோடு” சேர்ந்து வழிபடுவதா என்று தயங்கி இருக்கலாம். அதுவும் பஜனைகளில் ராமனின் உருவப்படம் இருந்துவிட்டால் நிறையவே தயங்கி இருக்கலாம். ஆனால் சில ஹிந்துக்களும் ஆட்சேபித்திருக்கிறார்கள் போலிருக்கிறது. காந்தியின் பதில், ஏப்ரல் 28, 1946 ஹரிஜன் இதழில், ராஜாஜி மொழிபெயர்ப்பு.

ஹிந்துக்களுக்குத்தான் ராமனும் ராமநாமமும், முஸல்மான்களுக்கு அதில் ஏது இடம் என்று யாரேனும் ஆட்சேபிக்கும்போது எனக்கு சிரிப்பு வருகிறது. முஸல்மான்களுக்கு வேறு ஆண்டவன், நமக்கு வேறு ஆண்டவனா? முஸல்மான்களுக்கும் ஹிந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் பார்ஸியர்களுக்கும் அனைவருக்குமே ஒரே ஒரு ஆண்டவன், எங்கும் நிறைந்து சர்வ வல்லமையும் கொண்டுள்ள ஒரே ஈசனுக்கு பல நாமங்களிட்டு இறைஞ்சி வருகிறோம்.

நான் ‘ராமன்’ என்பது அயோத்தியில் ஆண்ட தசரதனுடைய குமாரனாகிய அந்த சரித்திர ராமன் அல்ல. காலத்துக்கு அப்பால், பிறப்பற்று, ஒரே பொருளாக எப்போதும் நிற்கும் கடவுளைத்தான் நான் ராமன் என்று அழைத்து வருகிறேன். அவனுடைய அருளைத்தான் நான் நாடி வருகிறேன். நீங்களும் அதைத்தான் நாட வேண்டும். ஆனபடியால் முஸல்மான்களாவது வேறு யாராவது என்னுடன் சேர்ந்து ராமனை வழிபடுவதில் என்ன குற்றம்? நான் ‘ராம்’ என்று சொல்லும்போது என்னுடைய முஸல்மான் சகோதரன் ‘அல்லா’ என்றும் ‘குதா’ என்றும் மனதுக்குள் சொல்லி தியானிக்கலாம். அதனால் என் பூஜையோ, பஜனையோ கெட்டுப் போகாது.

ராம் என்பது கடவுளை நான் அழைக்கும் பெயர், பஜனை என்பது கடவுள் வழிபாடு, கூட்டு பஜனை என்பது நாம் அனைவரும் நமக்குத் தெரிந்த வகையில் கடவுளை வழிபடுவது மட்டுமே, என் வழிபடுமுறையை உன் மேல் புகுத்துவதோ அல்லது உன் வழிபடுமுறையை என் மேல் புகுத்துவதோ அல்ல, கூட்டாக வழிபடும்போது மத நல்லிணக்கம் பெருகும் என்பதை இதை விட சிம்பிளாக சொல்லிவிட முடியாது.

தொகுக்கப்பட்ட பக்கம்: காந்தி பக்கம்