ஆஸ்டரிக்ஸ்-ஓபலிக்ஸ் (ஓவியர் உடர்சோவுக்கு அஞ்சலி)

ஒரு காலத்தில் சித்திரங்களை மட்டும் வரைந்தவரும் காசினியின் மறைவுக்குப் பிறகு எழுதவும் செய்தவருமான உடர்சோவும் மறைந்தார். அஞ்சலியாக இதை மீள்பதித்திருக்கிறேன்.

asterixஎனக்குப் பிடித்த காமிக்ஸ்களில் ஆஸ்டரிக்சுக்கு முக்கியமான இடம் உண்டு. அருமையான சித்திரங்கள்; ஜாலியான ஃபார்முலா; சிறப்பான வார்த்தை விளையாட்டு. கதைகளை காசின்னி என்பவர் எழுத சித்திரங்களை உடர்சோ வரைந்திருக்கிறார். Asterix in Belgium புத்தகத்தை எழுதும்போது காசின்னி இறந்துவிட, அதற்குப் பிறகு உடர்சோவே கதைகளையும் எழுதத் தொடங்கினார். இருவரும் சேர்ந்து படைத்த புத்தகங்கள் என் கண்ணில் சிறந்தவை. உடர்சோ மட்டுமே எழுதி சித்திரமும் வரைந்த பல பிற்கால புத்தகங்களைத் (How Obelix Fell into the Magic Potion When He Was a Little Boy, Asterix and the Vikings, Asterix and Obelix’s Birthday: The Golden Book) தவிர்க்கலாம். இப்போது ஃபெர்ரி-கான்ராட் இணைந்து ஒரு புத்தகத்தை இரண்டு புத்தகங்களை எழுதி இருக்கின்றனர். (Asterix and the Picts, Asterix and the Missing Scroll).

டெரக் ஹாக்ரிட்ஜ் மற்றும் அந்தீயா பெல்லின் ஆங்கில மொழிபெயர்ப்பைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். பல முறை இந்த வார்த்தை சிலேடைகள் எல்லாம் ஃப்ரெஞ்சு மொழியில் உள்ளவைதானா, அல்லது இவரது சொந்தச் சரக்கா என்று வியக்க வைக்கிறார்.

ஆஸ்டரிக்ஸ் சீரிசின் பின்புலம் சிம்பிளானது. ஒரு கஷாயத்தைக் குடித்தால் எல்லாருக்கும் அசுர பலம் வந்துவிடும், அதனால் காலைக் (Gaul) கைப்பற்றிய ஜூலியஸ் சீசரால் ஆஸ்டரிக்ஸும் அவனது நண்பர்களும் வாழும் இந்த கிராமத்தை மட்டும் வெல்ல முடிவதில்லை, ஆஸ்டரிக்சின் நெருங்கிய நண்பன் ஓபலிக்ஸ் மட்டும் இந்தக் கஷாயத்தைக் குடிக்கக் கூடாது, ஏனென்றால் அவன் சிறுவனாக இருக்கும்போது மருந்து அண்டாவிலேயே விழுந்துவிட்டான் என்ற சிம்பிளான ஃபார்முலாவை வைத்துக் கொண்டு ஒரு கலக்கு கலக்கி இருக்கிறார்கள். கிராமத் தலைவன் வைட்டல்ஸ்டாடிஸ்டிக்ஸ், மந்திரவாதி கெட்டஃபிக்ஸ், சகிக்க முடியாமல் பாடும் காகஃபோனிக்ஸ், கடல் கொள்ளையர்கள் என்று சின்ன சின்ன பாத்திரங்களும் சிறப்பாக இருக்கும். ஐரோப்பிய நாடுகளைப் பற்றி பரவலாக இருக்கும் எண்ணங்களை வைத்து கிண்டல் அடிப்பார்கள். உதாரணமாக கார்சிகாவில் பழி வாங்குவார்கள், வைகிங்குகள் எதற்கும் பயப்படுவதில்லை, ஆங்கிலேய சமையல் சகிக்காது, சுவிட்சர்லாந்துக்காரர்கள் பணத்தில் கெட்டி இந்த மாதிரி.

பல பல சின்ன சின்ன பாத்திரங்கள் மீண்டும் மீண்டும் வருவதாலேயே சிரிப்பை வரவழைக்கிறார்கள். இவர்கள் கடலில் போகும்போதெல்லாம் கடற்கொள்ளையர் கப்பல் ஒன்று எதிர்ப்படும். ஆஸ்டரிக்ஸ்-ஓபலிக்ஸ் கப்பலை ஒவ்வொரு முறையும் உடைப்பதால் இரண்டு மூன்று முறைக்குப் பின் இந்த இருவரும் கண்ணில் பட்டால் போதும், கடற்கொள்ளையர்கள் தப்பிக்க முயற்சி செய்வார்கள். ஒவ்வொரு முறையும் வேறு ஏதாவது நடக்கும், கப்பல் உடையும். காகஃபோனிக்ஸ் பாட்டு பாடினால் கடவுளராலேயே தாங்க முடியாது, மீன் விற்கும் அன்ஹைஜீனிக்ஸ் கடையில் உள்ள மீன் எப்போதுமே வீச்சம் அடிக்கும் பழைய மீன் என்று சில standard motifs உண்டு.

ஆஸ்டரிக்ஸ்-ஓபலிக்ஸ் கதாபாத்திரங்கள் 3 Musketeers புத்தகத்தை ரோல் மாடலாக வைத்து உருவாக்கப்பட்டவையோ என்று எனக்கு ஒரு சந்தேகம் உண்டு. அராமிஸ்-ஆஸ்டரிக்ஸ், போர்த்தோஸ்-ஓபலிக்ஸ், கெடஃபிக்ஸ்-அதோஸ்?

எனக்கு மிகவும் பிடித்த புத்தகங்கள் Asterix and the Goths (1963), Asterix the Gladiator (1964), Asterix and the Banquet (1965), Asterix the Legionary (1967), Asterix and the Chieftain’s Shield (1968), Asterix and the Olympic Games (1968), Asterix and the Cauldron (1969), Asterix and the Roman Agent (1970), Asterix and the Laurel Wreath (1972), Asterix and the Soothsayer (1972), மற்றும் Obelix and Co. (1976). ஒரே ஒரு புத்தகம் படிக்க வேண்டுமென்றால் நான் பரிந்துரைப்பது Legionary. இதில் சீசரின் படையில் ஆஸ்டரிக்சும் ஓபலிக்சும் சேருவார்கள். அவர்களுடன் படையில் இருக்கும் ஒருவனுக்கு கடைசி வரை தான் படைவீரன் என்று தெரியவே தெரியாது, ஏதோ உல்லாசப் பயணம் என்று நினைத்துக் கொண்டிருப்பான்.

மிச்சம் இருப்பவற்றில் நல்ல புத்தகங்கள் என்று நான் கருதுபவை: Asterix and the Golden Sickle (1962), Asterix and Cleopatra (1965), Asterix and the Big Fight (1966), Asterix in Britain (1966), Mansions of the Gods (1971), Asterix and the Caesar’s Gift (1974), Asterix and the Great Crossing (1975), Asterix in Belgium (1979), Asterix and the Great Divide (1980), மற்றும் Asterix and the Black Gold (1981)

எல்லா புத்தகங்களைப் பற்றியும் சிறு குறிப்புகள் கீழே.

முதல் புத்தகம் Asterix the Gaul (1961) இதில் ஓபலிக்சின் உருவம் இன்னும் முழுதாக உருவாகவில்லை. அப்போது கெடஃபிக்ஸ்தான் ஆஸ்டரிக்சோடு இணைநாயகனாக இருக்கிறார்.

Asterix and the Golden Sickle (1962) புத்தகத்தில் ஓபலிக்ஸ் முழுதாக உருவாகிவிட்டான். அவனுடைய உருவம் இன்று பார்க்கும் உருவமாக இருக்கிறது. ஆஸ்டரிக்ஸ், ஓபலிக்ஸ் இருவரும் கிராமத்தை விட்டு வெளியே போய் பிற நாடு நகரங்களை பார்க்கும் ஃபார்முலாவும் ஆரம்பம் ஆகிவிட்டது. இதில் லுடேஷியா (இன்றைய பாரிஸ்) போகிறார்கள்.

Asterix and the Goths (1963) புத்தகத்தில் ஃபார்முலா கனகச்சிதமாக அமையத் தொடங்கிவிட்டது. இன்றைய ஜெர்மனி, அன்றைய barbarian-களின் நாடு. சிலேடைகள் (எலெக்ட்ரிக் என்கிற barbarian சொல்கிறான் – I will become a general! General Electric!), Goths பேசும்போது gothic font பயன்படுத்தப்படுவது என்று சின்ன சின்ன முத்திரைகள்.

Asterix the Gladiator (1964) பிரமாதமான புத்தகம். எப்போதும் இவர்களைக் கண்டதும் ஓடிவிட முயற்சித்து தோற்கும் கடற்கொள்ளையர்கள் இதில்தான் முதலில் வருகிறார்கள் என்று நினைக்கிறேன். கர்ணகடூரமாகப் பாடும் காகஃபோனிக்சை ரோமுக்குக் கடத்த இவர்கள் இருவரும் அங்கே கொலிசியத்தில் அடிக்கும் லூட்டி ஜாலியாக இருக்கும்.

Asterix and the Banquet (1965) இன்னுமொரு சிறப்பான புத்தகம். ஃப்ரான்சின் பல ஊர்களுக்குச் சென்று அங்கங்கே என்ன உணவு ஸ்பெஷலோ அதை வாங்கி வருவார்கள்.

Asterix and Cleopatra (1965) புத்தகத்தில் கிளியோபாட்ராவுக்கும் ஜூலியஸ் சீசருக்கும் ஒரு சின்ன பந்தயம். மூன்று மாதத்திற்குள் ஒரு பெரிய மாளிகையை எகிப்தியர்களால் கட்ட முடியும் என்று கிளியோபாட்ரா பந்தயம் வைக்கிறாள். ஆஸ்டரிக்ஸ்-ஓபலிக்ஸ் உதவியால் வெல்கிறாள். கிளியோபாட்ராவின் மூக்கைப் பற்றி ஒரு inside joke போய்க்கொண்டே இருக்கும்.

Asterix and the Big Fight (1966) இன்னுமொரு நல்ல கதை. கெடஃபிக்சுக்கு அடிபட்டு கஷாயம் எப்படி செய்வது என்பது மறந்துவிடுகிறது…

Asterix in Britain (1966) தங்கள் மந்திரக் கஷாயத்தை பிரிட்டனுக்கு கொண்டுபோக முயற்சிக்கிறார்கள், ஆனால் கஷாயம் தேம்சில் கொட்டிவிடுகிறது. ஆஸ்டரிக்ஸ் அப்போது பிரிட்டனுக்கு அறிமுகப்படுத்தும் பானம் – தேனீர்! மயங்கிக் கிடக்கும் ஓபலிக்சை டவர் ஆஃப் லண்டனில் சிறைவைக்க, அவனை விடுவிக்க கீழிருந்து மேலே ஆஸ்டரிக்ஸ் போவதும், மயக்கம் தெளிந்த ஓபலிக்ஸ் கீழே வருவதும் சிறப்பான காட்சி.

Asterix and the Normans (1966) புத்தகத்தில் நார்வேகாரர்களுக்கு பயம் என்றால் என்னவென்றே தெரியாது. அதைத் தெரிந்து கொள்ள இவர்கள் ஊருக்கு வருகிறார்கள். காகஃபோனிக்ஸ் பாட்டு அவர்களையும் பயப்படுத்துகிறது.

Asterix the Legionary (1967) என்னுடைய ஃபேவரிட் இதுதான். சீசரின் படையில் ஆஸ்டரிக்சும் ஓபலிக்சும் சேருகிறார்கள். படையின் நியதிகளை இவர்கள் கையாளும் விதம் பிரமாதம்!

Asterix and the Chieftain’s Shield (1968) இன்னுமொரு க்ளாசிக். தோற்ற கால் (Gaul) அரசனின் கேடயத்தைத் தேடிப் போகிறார்கள்.

Asterix and the Olympic Games (1968) புத்தகத்தில் ஒலிம்பிக்ஸில் கலந்து கொள்கிறார்கள். ஆனால் அவர்களின் ஸ்பெஷல் மருந்து performance enhancing drug ஆயிற்றே! என்ன நடக்கிறது என்பதுதான் கதை.

Asterix and the Cauldron (1969) இன்னொரு பிரமாதமான கதை. பணம் சம்பாதிக்க ஆஸ்டரிக்சும் ஓபலிக்சும் அடிக்கும் லூட்டிகள் – சந்தையில் வாய்க்கு வந்த விலைக்கு மாமிசம் விற்பது, பாங்க் கொள்ளை, வித்தை காட்டுவது என்று கலக்குவார்கள். ஒரு காட்சியில் ரோமன் ராணுவ முகாமுக்கு சென்று பணம் பணம் என்று அலறுவார்கள். சம்பளம்தான் வந்துவிட்டது என்று வீரர்கள் அலைமோத, பணம் எங்கே என்று இவர்கள் கேட்க, ராணுவத்தில் சேர பணம் நாங்கள் தர வேண்டுமா என்று வீரர்கள் அலுத்துக் கொள்வது அபாரம்!

Asterix in Spain (1969) சுமார்தான். ஸ்பெயினில் சீசரை எதிர்க்கும் ஒரு தலைவனின் குழந்தையை சீசரின் வீரர்கள் கடத்திவிடுகிறார்கள். ஆஸ்டரிக்சும் ஓபலிக்சும் குழந்தையைத் திருப்பிக் கொண்டு வந்துவிடுகிறார்கள்.

Asterix and the Roman Agent (1970) – மிகச் சிறந்த புத்தகங்களில் ஒன்று. ரோமானிய ஒற்றன் ஆஸ்டரிக்சின் கிராமத்தில் பொறாமையை கிளப்புகிறான்.

Asterix in Switzerland (1970) – இந்த முறை ஒரு பூவை – edelweiss – பறிக்க ஸ்விட்சர்லாந்து வரை போகிறார்கள். சுமார்தான்.

Mansions of the Gods (1971) புத்தகத்தில் இவர்கள் வாழும் காட்டை அழித்து அங்கே ஒரு பல மாடிக் குடியிருப்பைக் கட்ட முயற்சிக்கிறார்கள்.

Asterix and the Laurel Wreath (1972) எனக்குப் பிடித்த இன்னொரு புத்தகம். சீசர் தன் தலையில் அணியும் லாரல் மலர் வளையத்தைக் கொண்டு வர ரோம் செல்கிறார்கள். அங்கே சீசரின் மாளிகையில் வேலை செய்ய தங்களை அடிமைகளாக விற்றுக் கொள்கிறார்கள், நீதிமன்றத்தில் வாதாடி கொலிசியத்தில் மிருகங்களோடு போரிட்டு மடிவதற்கான தண்டனையைப் பெற்றுக் கொள்கிறார்கள்…

Asterix and the Soothsayer (1972) மிகச் சிறப்பான புத்தகம். போலி நிமித்திகன் தான் போலிதான் என்பதை நிறுவ படாதபாடு படுகிறான்!

Asterix in Corsica (1973) – கார்சிகாவில் பெருகுடும்பங்களுக்கு (clan) இடையே மாறாத பழிவாங்கல் (vendetta) என்பதை மட்டும் வைத்து ஒரு புத்தகம். சிறப்பான அம்சம் கடற்கொள்ளையர்கள்தான்.

Asterix and the Caesar’s Gift (1974) சீசரின் குசும்புத்தனம் – தன் வசம் இல்லாத இவர்கள் கிராமத்தை ஒரு குடிகார வீரனுக்கு பரிசாக அளிக்கிறார். கிராமத் தலைவனுக்கு எதிராக வேறு போட்டியாளர்கள் கிளம்புகிறார்கள்.

Asterix and the Great Crossing (1975) இந்த முறை வழி தவறி அமெரிக்காவுக்குப் போய்விடுகிறார்கள். அங்கே வரும் ஒரு வைக்கிங் கப்பலோடு திரும்புகிறார்கள்.

Obelix and Co. (1976) இன்னுமொரு சிறப்பான புத்தகம். ஓபலிக்ஸ் உருவாக்கும் பெரிய பாறை மென்ஹிர்களுக்கு செயற்கையான demand-ஐ ஏற்படுத்தி கிராமத்தைப் பிரிக்க ஒரு ரோமன் பொருளாதார நிபுணர் எடுக்கும் முயற்சிகள்தான் நாவல். நவீன பொருளாதார தத்துவங்களை – Supply and Demand, Market Economics, Division of Labor, பணவீக்கம், விளம்பரங்கள் மூலம் உருவாக்கப்படும் சந்தை – சகட்டுமேனிக்கு கிண்டல் அடிப்பார்கள்.

Asterix in Belgium (1979) – பெல்ஜிய நாட்டவர்கள்தான் தான் போரிட்டவர்களில் பெரிய வீரர்கள் என்று ஜுலியஸ் சீசர் சொன்னாராம். தாங்கள் யார்க்கும் சளைத்தவர்கள் இல்லை என்று கிராமத் தலைவர் வைடல்ஸ்டாடிஸ்டிக்ஸ் கிளம்புகிறார். இதை எழுதும்போது காசின்னி இறந்துவிட உடர்சோ மிச்ச புத்தகத்தை முடித்திருக்கிறார்.

Asterix and the Great Divide (1980) இடது வலதுசாரி கட்சிகளைப் பற்றி நக்கல்கள், ரோமியோ ஜூலியட் motif, என்று ஜாலியாகப் போகும்.

Asterix and the Black Gold (1981) புத்தகத்தில் பெட்ரோலியம் தேடப் போகும் இவர்கள் பல யூதர்களை (இன்றைய இஸ்ரேல்) சந்திக்கிறார்கள். ஜாலியாகப் போகும்.

Asterix and Son (1983) இந்த முறை சீசரின் மகனை ஆஸ்டரிக்சும் ஓபலிக்சும் பாதுகாக்கிறார்கள்!

Asterix and the Magic Carpet (1987) – இந்திய விஜயம்! இந்தியாவைப் பற்றி இத்தனை cliches இருப்பதைப் பார்க்கும்போதுதான் பிற நாடுகளைப் பற்றி எழுதி இருப்பதில் எத்தனை cliche-க்களோ என்று தோன்றுகிறது. சுமார்.

How Obelix Fell into the Magic Potion When He Was a Little Boy (1989) – தவிர்க்கலாம்.

Asterix and the Secret Weapon (1991) ஜாலியாகப் போகும் இன்னொரு புத்தகம். பெண்கள் புரட்சி!

Asterix and Obelix All at Sea (1996) சுமார்தான். ஸ்பார்டகஸ், அட்லாண்டிஸ் தீவு எல்லாம் வருகிறது. இதில் ஓபலிக்ஸ் கடைசியாக தன் நீண்ட நாள் ஆசையான கஷாயத்தைக் குடிக்கிறான். குடிப்பவர்கள் உடலை கல் போல உறுதியாக்கும் கஷாயம் இவன் உடலை கல்லாகவே ஆக்கிவிடுகிறது!

Asterix and the Actress (2001) எல்லாம் சுமார்தான். ஓபலிக்ஸ் காதலிக்கும் பானசியாவாக ஒரு நடிகை நடிக்கிறாள்.

Asterix and the Class Act (2003) பல சின்னச் சின்னக் கதைகளின் தொகுப்பு. தவிர்க்கலாம்.

Asterix and the Falling Sky (2005) சுமார். வேற்று கிரகவாசிகள் கஷாயத்தைத் தேடி வருகிறார்கள். தவிர்க்கலாம்.

Asterix and the Vikings (2006) – தவிர்க்கலாம்.

Asterix and Obelix’s Birthday: The Golden Book (2009) – தவிர்க்கலாம்.

Asterix and the Picts (2013) – இந்த முறை ஸ்காட்லாண்ட், லோக் நெஸ் மான்ஸ்டர்…

Asterix and the Missing Scroll (2015) புதிய டீம் ஒன்று எழுதி இருக்கிறது. ஃபெர்ரி எழுதி, கான்ராட் சித்திரம் வரைந்திருக்கிறார். பரவாயில்லை…

பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். (ஆனால் என் பெண்கள் அவ்வளவு ரசிக்கவில்லை…)

தொகுக்கப்பட்ட பக்கம்: காமிக்ஸ்