மோதியும் விளக்கும்

சாதாரணமாக நான் அரசியலைப் பற்றி எல்லாம் எழுதமாட்டேன். இருக்கிற வெட்டிவேலை போதாதா என்ன?

ஆனால் ஃபேஸ்புக்கில், வாட்ஸப் குழுமங்களில் மோதி விளக்கேற்றச் சொன்னதைப் பற்றி மிகக் கீழ்த்தரமான எதிர்வினைகளைப் (உதாரணம்: தரப் போவதில்லை) பார்க்கிறேன். முட்டாள் நண்பர்கள் சிலர் எங்கே எல்லார் கண்ணிலும் படாமல் போய்விடப் போகிறதே என்று இதை ஃபார்வர்ட் செய்துகொண்டும் அவர்களுக்கு எதிர்வினை ஆற்றிக் கொண்டும் இருக்கிறார்கள். நண்பர்களுக்கு ஒரே ஒரு ஆலோசனைதான் – எத்தனை எரிச்சல் வந்தாலும் எந்த கீழ்த்தரமான எதிர்வினையையும் பகிராதீர்கள், பகிர்ந்துகொண்டு அதற்கு எதிர்வினை ஆற்றாதீர்கள். அடிமுட்டாள்கள் திருந்தப் போவதில்லை, அவர்கள் மேல் வெளிச்சமாவது அடிக்காமல் இருங்கள்.

என்ன பிரச்சினை உங்களுக்கு? இது ஒரு symbolic gesture. எல்லா ஊரிலும், எல்லா நாட்டிலும், எல்லா அமைப்புகளிலும் நடப்பதுதான். கழக உறுப்பினர்கள் ஏன் கரை வேட்டி அணிகிறார்கள்? வீரமணி ஏன் கறுப்பு சட்டை போடுகிறார்? எதற்காக புது வருஷம் அன்று கோவிலுக்குப் போகிறோம்? தீபாவளி அன்று புதுத்துணி எதற்கு? காது கிழியுமாறு மைக் வைத்து கூவினால்தான் தொழுகைக்கு வருவார்களா? ஈ.வே.ரா. சிலைக்கு மாலை போடுபவர்கள் எதற்கு முருகன் சிலைக்கு அர்ச்சனை செய்வதைப் பற்றி வாயைத் திறக்கிறீர்கள்? காந்தி ஜயந்தி அன்று மதுக்கடைகளை மூடுவது போன்ற போலித்தனம் உண்டா? எல்லாம் ஒரு தளத்தில் வெறும் gesture மட்டுமே.

இது உங்களுக்கு பயனற்ற செய்கையாக, empty gesture ஆகத் தெரிகிறதா? நகர்ந்துவிடுங்கள். எதிர்க்கருத்து இருக்கிறதா? தாராளமாகப் பதிவு செய்யுங்கள். நீங்கள் விளக்கை ஏற்றப் போவதில்லையா? மோதி உட்பட யாரும் உங்கள் மேல் பாயப் போவதில்லை. கேலி செய்ய வேண்டுமா? உங்கள் உரிமை. ஆனால் அதற்கும் சில எல்லைகள் இருக்க வேண்டும். மோதி மீது எனக்கு பல விமர்சனங்கள் உண்டு. ஆனால் எந்த ஒரு அமைப்பின் தலைவருக்கும் – அதுவும் சிக்கலான தருணங்களில் – அமைப்பு தன் மீது நம்பிக்கையுடன் இருக்கிறதா, சிக்கலை அவிழ்த்துவிடலாம் என்று நினைக்கிறதா – என்று தெரிந்து கொள்ள விரும்புவார். அது அவருக்கு மேலும் ஆற்றலை, உத்வேகத்தை அளிக்கும்.

இது போன்ற ஒரு காலம் இது வரை வந்ததில்லை. இந்தியாவின் பஞ்சங்களும் ப்ளேக் போன்ற கொடிய நோய்களும், சுனாமிகளும், பூகம்பங்களும் கூட மாகாண அளவில், மாவட்ட அளவில்தான் பாதித்திருக்கின்றன. ஆக்கபூர்வமான யோசனைகள் இருந்தால் பகிருங்கள். இல்லாவிட்டால் வாயை மூடிக்கொண்டாவது இருங்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: அரசியல்