திலீப்குமார் குறைவாகவே எழுதி இருக்கிறார். இன்னும் நிறைய எழுதக் கூடாதா என்று நினைக்க வைப்பவர்களில் ஒருவர்.
ஒரு சிறுகதையில் அவரே தன்னை கிண்டல் செய்துகொள்கிறார் – “ஜெயமோகன் நான் வருஷத்துக்கு அரைக்கதைதான் எழுதறேன்பார்.”
திலீப்குமாரின் கதைகள் அனேகமாக சென்னையின் ஒரு மத்திய தர வர்க்க குஜராத்தி காலனியில் நடைபெறுபவை. அவற்றில் ஒரு பாட்டி தென்பட்டால் கதை சும்மா கலக்கிவிடுகிறது. பல கதைகளில் மெல்லிய நகைச்சுவை. சின்னதாக புன்னகை வரும், வாய்விட்டு சிரித்துவிட மாட்டோம். மிகக் கூரிய அவதானிப்புகள். நாம் நம்மிடமும் பிறரிடம் நடிக்கும் நடிப்புகள், காட்டும் தோரணைகள், ஆகியவற்றை அருமையாகக் காட்டிவிடுவார்.
திலீப்குமாரை ஒரு விதத்தில் அசோகமித்திரன் பாணி எழுத்தாளர் என்று சொல்லலாம். அவரை வேறுபடுத்துவது அசோகமித்திரனின் கசப்பும் குரூரமும் இல்லாமல் மனிதர்களை அவர்களது பலவீனங்களோடு ஏற்பது. மெல்லிய நகைச்சுவை. அசோகமித்திரனின் கதைகளில் எழுத்தாளன் இருக்கமாட்டான்தான், ஆனால் எழுத்தாளன் இருக்கக் கூடாது என்று முனைப்பு தெரியும். திலீப்குமாரின் கதைகளிலோ கதைசொல்லி என்று ஒரு பாத்திரமே இருந்தாலும் எழுத்தாளனின் சுவடே தெரிவதில்லை. புற உலகத்தை இன்னும் துல்லியமாக சித்தரிப்பார். ஆனால் அசோகமித்திரன் போன்று பெரும் மானுட தரிசனங்களுக்கு திலீப்குமார் முனைவதே இல்லை. இன்னொரு விதமாகச் சொன்னால் திலீப்குமார் அசோகமித்திரன் போட்ட ரோட்டில் கோடு மட்டுமே போடுகிறார்.
அவருடைய கடிதம், மூங்கில் குருத்து சிறுகதைகள்தான் எப்போதும் பேசப்படுகின்றன. ஆனால் என்னை மிகவும் கவர்ந்த சிறுகதை கடவு. அடுத்தபடியாக தீர்வு. பிறகுதான் மிச்சம் எல்லாம்.
கடவு சிறுகதையை ஜெயமோகன் கூட எழுதி இருக்கலாம். பாட்டி இன்று அவற்றைப் பற்றி காலனியின் மனைவிமார்களிடம், இளம் பெண்களிடம் சுலபமாக, சின்ன புன்னகை வரும் நகைச்சுவையுடன் பேசும் பாட்டி முன்னால் என்றால் அவள் அனுபவித்த பாலியல் கொடுமைகள் பின்புலம். மிகப் பிரமாதமான சித்தரிப்பு. அவருடைய எழுத்திலேயே இதுதான் கொஞ்சம் ஆர்ப்பாட்டமானது என்று நினைக்கிறேன். அதனால்தானோ என்னவோ, இதுதான் எனக்கு மிகவும் பிடித்த சிறுகதை. முழுக்கதையும் இங்கே.
காலனியின் ஒரே கிணற்றில் பூனை விழுந்து அசுத்தமாகிவிட்டது. என்னதான் தீர்வு? மிகப் பிரமாதமான சிறுகதை. பல முறை அப்படித்தான், நம்மை சமாதானப்படுத்திக் கொள்ள, நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ள, நமக்கு ஏதாவது face-saving தீர்வு தேவைப்படுகிறது. முழுக்கதையும் இங்கே.
இந்த இரண்டு சிறுகதைகளுமாவது சுலபமாகப் புரிந்துவிடுகின்றன, ஏன் பிடித்திருக்கின்றன என்று மண்டையைப் போட்டு குழப்பிக் கொள்ளாமல் சொல்லிவிட முடிகிறது. ஆனால் கடிதமும் மூங்கில் குருத்தும் ஏன் பிடித்திருக்கின்றன என்ற தெளிவாக சொல்ல முடிந்ததே இல்லை. கடிதம் சிறுகதையில் ஒரு குஜராத்தி ஏழைக் கிழவர், குடும்பத்தில் ஆதரவில்லாதவர், தன் பணக்கார உறவினருக்கு எழுதும் கடிதம், அவருக்கு பண உதவி வேண்டும், ஆனால் கேட்பதில் கௌரவப் பிரச்சினைகள் உண்டு. இதில் என்ன இருக்கிறது, ஏன் பிடித்திருக்கிறது, மெல்லிய நகைச்சுவையாலா? (கிழவருக்கு கதைசொல்லிதான் கடிதம் எழுதித் தருகிறான், கிழவர் “என் கண்ணில் கண்ணீர் ததும்புகிறது” என்று எழுது என்று சொன்னவுடன் கதைசொல்லி அவர் கண்ணைப் பார்க்கிறான்). Black Humor-ஆலா? (அவர் கடிதம் எழுதினால் பணக்கார உறவினர் இறந்தே போகிறார்.) மூங்கில் குருத்திலோ ஏழ்மையின், பற்றாக்குறையின் இரக்கமற்ற சித்தரிப்பு. ஆனால் அதையும் மீறி அதில் என்னவோ இருக்கிறது.
மிச்சத்தில் ஒன்று அக்ரஹாரத்தில் பூனை. சாதாரண சிறுகதையாகப் போய்க் கொண்டே இருக்கும். திடீரென்று கடைசி ஓரிரு பாராக்களில் மாறுகிறது!
இன்னொரு குறிப்பிட வேண்டிய சிறுகதை கண்ணாடி. கணவன், மனைவி, குழந்தை, சண்டை, சமாதானம் என்று சிறப்பான சித்தரிப்போடு போகும் கதை, விலகிப் படுக்கும் மனைவியோடு முடியும்போது வேறு தளத்துக்குப் போய்விடுகிறது.
தடம் இன்னொரு நல்ல சிறுகதை. போலீஸ் சித்திரவதையிலிருந்து விடுபட மரணத்தை ஏற்க மனரீதியாக தன்னை தயார்படுத்திக்கொள்பவன் என்று கதையைச் சுருக்கலாம். ஆனால் அது கதையின் வீரியத்தை விவரிக்கவில்லை.
ஜெயமோகன் கடிதம், மூங்கில் குருத்து, அக்ரஹாரத்தில் பூனை, தீர்வு ஆகிய சிறுகதைகளை பரிந்துரைக்கிறார். எஸ்ராவுக்கு கடிதம், மூங்கில் குருத்து இரண்டு மட்டும். மூங்கில் குருத்து விட்டல்ராவ் தொகுத்த “இந்த நூற்றாண்டு சிறுகதைகள்” தொகுப்பிலும் இடம் பெறுகிறது.
ரமாவும் உமாவும் சிறுகதைத் தொகுப்பு பற்றி இங்கே.
அழியாச்சுடர்கள் தளத்தில் கானல் என்ற சிறுகதையும் இணையத்தில் கிடைக்கிறது. சுமார்தான்.
திலீப்குமாரை சந்தித்ததும் மறக்க முடியாத அனுபவம். நானும் புத்தகங்களும் பதிவிலிருந்து:
நான் அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்தபோது கையில் ஓரளவு காசு புரண்டது. புஸ்தகங்களை வாங்கி குவிக்க வேண்டும் என்ற வெறியை தீர்த்துக்கொள்ள நல்ல சந்தர்ப்பம். ஆனால் எங்கே புஸ்தகங்கள்? எனக்குத் அப்போதெல்லாம் தெரிந்த ஒரே புத்தகக் கடை ஹிக்கின்பாதம்ஸ்தான். சில புஸ்தகங்கள் கிடைத்தன. அப்புறம் லாண்ட்மார்க் பற்றி கேள்விப்பட்டு அங்கே போனேன், இன்னும் சில கிடைத்தன. ஆனால் நான் தேடிக்கொண்டிருந்த புஸ்தகங்கள் – வாடிவாசல், நித்யகன்னி மாதிரி – எதுவும் கிடைக்கவில்லை. கடைசியில் அல்லையன்ஸ் பதிப்பகம் போனேன். அங்கே சில தேவன் புத்தகங்களை வாங்கினேன். பிறகு வாடிவாசல் கிடைக்குமா என்று கேட்டேன். விற்பனையாளர் அந்தப் பேரையே கேட்டதில்லை. கடைசியில் அவர் சொன்னார் “இதே ஆர்.கே. மட் ரோட்லே போங்கோ. பி.எஸ். ஹைஸ்கூல் முன்னாலே, இந்தியன் பாங்க் மாடிலே திலீப்குமார்னு ஒருத்தர் சின்னக் கடை நடத்தறார், அவரைப் கேட்டு பாருங்கோ” – சரி இதுதான் கடைசி என்று அங்கே போனேன். என் பல வருஷ தேடல் அங்கே ஒரு நொடியில் முடிந்தது. நான் அதற்கப்புறம் சென்னைக்கு போய் என் உறவினர்கள், நண்பர்களை பார்க்காமல் வந்திருக்கிறேன்.
திலீப்குமாரை பார்க்காமல் வந்ததில்லை. அவர் கை காட்டும் புஸ்தகங்களை வாங்குவேன். மெதுவாகத்தான் படிப்பேன். (விஷ்ணுபுரம் படிக்க 4 வருஷம் ஆயிற்று.)
ஒரு பத்து வருஷமாவது சென்னையில் அவரது புத்தகக் கடை எனக்கு ஒவ்வொரு முறை இந்தியா செல்லும்போதும் தரிசிக்க வேண்டிய புண்ணிய ஸ்தலமாக இருந்தது. சொந்த வாழ்க்கையில் பட்ட அடிகளால் எல்லாம் கொஞ்சம் நிலைகுலைந்து போய்விட்டன. இன்று அவருக்கு என்னை நினைவிருக்குமா என்று கூட தெரியவில்லை. நினைவில்லை என்றால் பரவாயில்லை, அடுத்த முறை சென்னை செல்லும்போது மீண்டும் அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்!
தொகுக்கப்பட்ட பக்கம்: திலீப்குமார் பக்கம்
தொடர்புடைய சுட்டிகள்: