கிரஹாம் க்ரீன் எழுதிய Our Man in Havana

Our Man in Havana (1958) க்ரீனின் புகழ் பெற்ற நாவல்களில் ஒன்று. நாவல் வெளியான அடுத்த வருஷமே அலெக் கின்னஸ் நடித்து திரைப்படமாகவும் வந்தது.

நாவல் பிரமாதமாக ஆரம்பிக்கிறது. காஸ்ட்ரோவுக்கு முந்தைய க்யூபா. படிஸ்டா ஆட்சி. ஆங்கிலேய உளவுத்துறைக்கு அங்கே யாராவது ஒற்றன் இருந்தால் நல்லது. ஜேம்ஸ் வொர்மோல்ட் என்ற சிறுதொழில் அதிபரைப் பிடிக்கிறார்கள். ஜேம்ஸுக்கு பிசினஸ் – vaccum cleaner-களை விற்பது – கொஞ்சம் டல்லாக இருக்கிறது. பதின்ம வயது மகள் வேறு குதிரை வாங்குகிறேன் என்று அதீத செலவு வைக்கிறாள். சரி ஏதோ பணம் வருமே என்று ஜேம்ஸ் ஒத்துக் கொள்கிறார். அவரை வேலைக்கு அமர்த்தியவன் ஜேம்ஸுக்கு மேலிடத்தில் பெரிய பில்டப் கொடுக்கிறார். இப்படி ஒரு influential உளவாளி ஹவானாவில் இருக்கிறான் என்பதை எல்லாரும் நம்ப விரும்புகிறார்கள், ஏற்றுக் கொள்கிறார்கள். உதாரணமாக சிறுதொழில் அதிபர் ஜேம்ஸ் மேலிடத்தில் வெற்றிகளை ஈட்டும் பெரிய தொழிலதிபர் என்று அறியப்படுகிறார். ஜேம்ஸுக்கு எந்தத் தொடர்பும் இல்லை, மேலிடத்துக்கு அனுப்ப எந்தத் தகவலும் இல்லை. என்ன செய்வது? நாலு பேரை என்னுடைய நெட்வொர்க்கில் சேர்த்துவிட்டேன் என்று சொல்லிவிடுகிறார். நாலு பேரும் உண்மை நபர்களே, ஆனால் அவர்களுக்கும் இவருக்கும் ஸ்நானப் பிராப்தி கூட கிடையாது. ஒரு vaccum cleaner-இன் பகுதிகளை பெரிய அளவில் புகைப்படம் எடுத்து (magnified) க்யூபாவின் ரகசிய ராணுவ ஆராய்ச்சி என்று அனுப்பிவிடுகிறார்.

மேலிடம் மிகவும் impress ஆகிறது. இவருக்கு உதவியாக – இவரிடம் சொல்லாமலே – ஒரு செகரட்டரி, ஒரு ரேடியோ ஆபரேட்டரை அனுப்புகிறது. இவரது தகவல்கள் “எதிரி” முகாமுக்கும் போகிறது. அவர்கள் இவரது ஏஜெண்டுகளை கொல்ல ஆரம்பிக்கிறார்கள். ஜேம்ஸ் மீதும் கொலை முயற்சி நடக்கிறது. தான் அடித்த டுமீல் எல்லாம் உண்மையாவது, வந்திருக்கும் செகரெட்டரி, பதின்மவயது மகள், அந்த மகளை விரும்பும் க்யூபாவின் உளவுத்துறை அதிகாரி என்று கதை போகிறது. வுட்ஹவுஸ், க்ரேசி மோகன் ஆள் மாறாட்டப் புனைவுகளையே சில இடங்களில் மிஞ்சிவிட்டார்.

இரண்டாம் பகுதியில் இப்படியும் நடக்குமா என்று சில இடங்களில் தோன்றிவிடுகிறது. ஆனால் ஏறக்குறைய வொர்மோல்ட் மாதிரியே ஒரு உளவாளி – கார்போ – செய்திருக்கிறானாம்.

எனக்கு மிகவும் பிடித்த பகுதி – ஏஜெண்டுகள் மீது கொலை முயற்சி என்று தெரிந்ததும் வொர்மோல்ட் தன் ஏஜென்ட் என்று பொய்யாகச் சொன்ன ஒரு ப்ரொஃபசரை எச்சரிக்கப் போகிறார். அந்தப் ப்ரொஃபசருடன் கூட இருக்கும் பெண், ப்ரொஃபசரின் மனைவிதான் வொர்மோல்டை அனுப்பி இருக்கிறாள் என்று நினைத்துக் கொண்டு அவர்கள் பேசிக் கொள்ளும் காட்சி பிரமாதம்!

கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

இரண்டு சிறுகதைகளையும் பற்றி இங்கேயே எழுதிவிடுகிறேன். I Spy: சிறப்பான சிறுகதை. அப்பா அயல் நாட்டு உளவாளி. சிறுவன் கண்ணில் அப்பா கைது செய்யப்படும் தருணம் சிறுகதையாக சித்தரிக்கப்படுகிறது.

Hint of an Explanation: இந்த சிறுகதை புரிவதற்கு எனக்கு நேரம் பிடித்தது. கத்தோலிக்க mass சமயத்தில் கொடுக்கப்படும் பிரசாதம் மாதிரியான wafers-இன் முக்கியத்துவம் என்ன என்றெல்லாம் தெரிந்தால்தான் இதைப் புரிந்து கொள்வது சுலபமாக இருக்கும். அந்த wafer ஏசுவின் உடலையே குறிப்பதாம். அந்த wafer-ஐ கொண்டு வந்து தரும்படி கட்டாயப்படுத்தும் ப்ளாக்கர் ஒரு முன்னாள் priest என்று தெரிய வரும் இடத்தில் இந்த ஆள் முன்னாள் கத்தோலிக்கனோ, எப்படியாவது அந்த பிரசாதத்தை அடைய வேண்டும் என்று துடிக்கிறானோ இல்லை அந்த பிரசாதத்தை இழிவு செய்து கத்தோலிக்க மதத்தையே இழிவு செய்யும் நோக்கமா என்று புரியவில்லை. இப்போதும் புரிந்துவிட்டது என்று சொல்வதற்கில்லை. ஆனால் எழுத்தில் நல்ல தொழில் நுட்பம் (craft) தெரிகிறது. கத்தோலிக்க மதப் பின்புலம் உள்ள சிறுகதைகளில் இது சிறந்த ஒன்றாகக் கருதப்படுகிறதாம். யாருக்காவது நன்றாகப் புரிந்தால் விளக்குங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: உலக இலக்கியம்