பிரபல திரைப்படங்களின் கதாசிரியர் ப்ரையன் கார்ஃபீல்ட்

ப்ரையன் கார்ஃபீல்ட் (Brian Garfield) எனக்குத் திரைப்படங்களின் மூலம்தான் அறிமுகம் ஆனார். Hopscotch மற்றும் Death Wish படங்களை நான் ஒரு காலத்தில் விரும்பிப் பார்த்திருக்கிறேன். பிற்காலத்தில் அந்தப் புத்தகங்களைத் தேடி எடுத்துப் படிக்கவும் செய்தேன். சுமாரான த்ரில்லர் எழுத்தாளர் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் திரைப்படமாக ஆக்கத் தேவையான டென்ஷன் மிகுந்த காட்சிகள், சிம்பிளான கதை ஓட்டம் இரண்டும் இருக்கிறது.

ஒரே ஒரு புத்தகம் படிக்க வேண்டுமென்றால் நான் பரிந்துரைப்பது Hopscotch (1975). நல்ல மசாலா புத்தகம். மைல்ஸ் கெண்டிக் சிஐஏவில் வேலை பார்த்தவன். இப்போது அவனுக்குப் பிடித்த மாதிரி களவேலை இல்லை, ஃபைல் பார் என்கிறார்கள். போரடிக்கிறது. திடீரென்று சிஐஏ, கேஜிபி உள்ளிட்ட ஒற்று வேலை நிறுவனங்கள் பற்றி ஒரு expose எழுதத் துவங்குகிறான். அதை சிஐஏவுக்கே அத்தியாயம் அத்தியாயமாக அனுப்புகிறான். அவனை இப்போது சிஐஏ துரத்த, கேஜிபியும் துரத்த ஜாலியாக திருடன் போலீஸ் விளையாட்டு மாதிரி விளையாடுகிறான்!

திரைப்படம் இன்றும் பார்க்கக் கூடியதே என்றுதான் கருதுகிறேன். மெல்லிய நகைச்சுவை. வால்டர் மத்தா மைல்ஸ் கெண்டிகாக நன்றாக நடித்திருப்பார்.

Deathwish (1972) Vigilante தீம். மனைவி கொல்லப்பட்டு மகளுக்கு பைத்தியம் பிடிக்கும் அளவுக்கு சில கிரிமினல்கள் நம் ஹீரோவின் வீடு புகுந்து தாக்குகிறார்கள். கிறுக்குப் பிடித்தாற்போல அலையும் ஹீரோ கடைசியில் திருடர்கள், சின்ன சின்னக் குற்றம் செய்பவர்களைத் தேடிப் பிடித்து வேட்டை ஆடுகிறார். சார்லஸ் ப்ரான்சன் நடித்து திரைப்படமாக வந்து நன்றாக ஓடிற்று. ப்ரூஸ் வில்லிஸ் நடித்து இன்னொரு வடிவமும் இரண்டு வருஷங்களுக்கு முன் வெளியாயிற்று.

Death Sentence (1975) Deathwish-இன் தொடர்ச்சி. இந்த முறை சிகாகோவில் வேட்டை ஆடும் நம் ஹீரோவைப் பார்த்து copycats கிளம்பிவிடுகிறார்கள்.

Recoil (1977) சுவாரசியமான கரு. மாஃபியா தலைவனுக்கு எதிராக சாட்சி சொல்லி அவனை சிறைக்கு அனுப்பும் மெர்லே. பழிவாங்கிவிடுவார்கள் என்று பயந்து பேரை மாற்றி ஊரை மாற்றி வாழ்ந்து கொண்டிருக்கிறான். சிறையிலிருந்து வெளிவந்து வில்லன் அவனை கண்டுபிடித்துவிடுகிறான், கொல்ல முயற்சிக்கிறான். எப்படி தப்பிப்பது? நிறைய பேசிக் கொண்டே இருக்கிறார்கள் என்றாலும் படிக்கக் கூடிய த்ரில்லர்.

Line of Succession (1972) போன்றவை டைம் பாஸ் புத்தகங்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: த்ரில்லர்கள்

தொடர்புள்ள சுட்டிகள்:
ப்ரையன் கார்ஃபீல்டின் தளம்
விக்கி குறிப்பு
IMDB தளத்தில் Hopscotch, Death Wish