இந்திய விடுதலையின்போது இங்கிலாந்தின் பிரதமராக இருந்த அட்லி

க்ளமெண்ட் அட்லி 1945-1951 வரை இங்கிலாந்தின் பிரதமராக இருந்தவர். இங்கிலாந்தின் சிறந்த பிரதமர்களில் ஒருவர் என்று கருதப்படுகிறார். இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் துணைப் பிரதமராக இருந்தவர். அவர் லேபர் கட்சித் தலைவர், பொதுவாக லேபர் கட்சியினர் காலனிய ஆதிக்கம் தவறு என்று நினைப்பவர்கள். அட்லியும் அதற்கு விதிவிலக்கல்ல. இந்தியாவிற்கு விடுதலை தந்தே ஆக வேண்டும் என்று கருதினார் என்று எனக்கு ஒரு பிம்பம் இருந்தது. அவரது சுயசரிதை அதை ஓரளவு உறுதிப்படுத்துகிறது. To put it uncharitably, தான் பிரதமரானதும் இந்தியாவை எத்தனை சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரம் கைகழுவிவிட வேண்டும் என்று கருதினார் என்றும் சொல்லலாம்.

அட்லியின் சுயசரிதையைப் – As It Happened – படிக்கும்போது நான் வியந்த விஷயம், என் takeaway, ஒன்றுதான். இந்தியா ஆங்கிலேயருக்கு ஒரு பொருட்டே அல்ல என்று தெரிகிறது. 250-300 பக்க சுயசரிதையில் காந்தி ஒரு முறை மட்டுமே குறிப்பிடப்படுகிறார். இத்தனைக்கும் அட்லி 1920களிலிருந்து அரசியலில் ஈடுபட்டிருக்கிறார். 1927-இன் சைமன் கமிஷனின் உறுப்பினராக இந்தியா வந்திருக்கிறார். அவர் துணைப் பிரதமராக இருந்த காலகட்டத்தில், 1942-இன் Quit India இயக்கம், 1943-இன் பெரும் பஞ்சம் போன்றவை கூட அவர் கண்ணில் படவில்லை. நேரு அவர் கண்ணில் காமன்வெல்த் நாடு ஒன்றின் பிரதமராக ஆன பிறகுதான் அவருக்கு தென்பட்டிருக்கிறார். படித்த, மேல்தட்டு குடும்பத்தை சேர்ந்த, இடதுசாரி சார்புடைய, காலனிய ஆதிக்கத்தை தவறு என்று நினைக்கும், சைமன் கமிஷனுக்காக இந்தியாவிற்கு சுற்றிப் பார்க்க வந்த லேபர் கட்சி தலைவருக்கு துணைப்பிரதமராகவும் பிரதமராகவும் இருந்த காலத்தில் கூட இந்தியாவைப் பற்றிய பிரக்ஞை இவ்வளவுதான் என்றால் சாதாரண ஆங்கிலேயனுக்கு என்ன அக்கறை இருந்திருக்கும்?

அட்லி இளமையிலேயே இடதுசாரி சார்பு நிலை எடுத்திருக்கிறார். அப்போதுதான் ஆரம்பித்திருந்த லேபர் கட்சியில் சேர்ந்திருக்கிறார். மெதுமெதுவாக கட்சியில் வளர்ந்திருக்கிறார். கட்சி பலம் பெறுவதில் வழக்கமான பிரச்சினைகள். அவற்றை தாண்டி கட்சியின் தலைவராக பரிணமித்திருக்கிறார். சர்ச்சில் எல்லா கட்சிகளையும் சேர்த்து இரண்டாம் உலகப் போரில் தேசிய அரசை அமைத்தபோது துணைப் பிரதமராக இருந்திருக்கிறார். உலகப்போரிற்கு பிறகு நடந்த தேர்தலில் சர்ச்சிலை தோற்கடித்து பிரதமராகி இருக்கிறார். வெற்றிக்கு பெரும் விலை கொடுத்த இங்கிலாந்தை மீட்பதில் பெரும் பங்கு வகித்திருக்கிறார்.

சர்ச்சிலின் தலைமைப் பண்புகளை விதந்தோதுகிறார். போர்க்காலத்தில் அவரை விட சிறந்த தலைவர் இருந்திருக்க முடியாது என்று கருதுகிறார்.

இந்தப் புத்தகத்தை நான் எல்லாருக்கும் பரிந்துரைக்கமாட்டேன். ஆனால் காந்தியும் காங்கிரசும் ஆங்கிலேயர்களுக்க் பெரும் தலைவலியாக இருந்தார்கள் என்ற பிம்பத்தை இது உடைக்கிறது. எங்கேயோ தொலைதூரத்துப் பிரச்சினை என்றுதான் சராசரி ஆங்கிலேயன் கருதி இருப்பான் என்று தெளிவாகத் தெரிகிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: அபுனைவுகள்