சாண்டில்யனின் “ராஜமுத்திரை”

சாண்டில்யனின் ராஜமுத்திரை சிறு வயதில் (எட்டு, ஒன்பது வயதில்) என்னைக் கவர்ந்த நாவல். செண்டாயுதத்தின் விவரிப்பு இன்றும் நினைவிருக்கிறது. இப்போதும் படிக்கக் கூடிய பொழுதுபோக்கு நாவலே. தமிழுக்கு நல்ல சரித்திர நாவல். வணிக நாவல்களின், வாரப்பத்திரிகை தொடர்கதைகளின் பொற்காலத்தில் எழுதப்பட்ட நாவல். குமுதத்தில் தொடராக வந்தது.

சாண்டில்யனை விரும்பிப் படித்த தலைமுறைக்கு வயதாகிவிட்டது என்பதால் கதை (ரத்தினச்) சுருக்கம்: சேர மன்னன் உதயரவி மீண்டெழுந்து வரும் ஜடாவர்மன் சுந்தரபாண்டியனின் பாண்டிய நாட்டை ஒடுக்க முத்துக்களை களவாடுகிறான். அது அப்படியே சுதி ஏறி இளவரசி முத்துக்குமரியையும் சிறைப்பிடிக்கிறான். சுந்தரபாண்டியனின் தம்பி வீரபாண்டியனின் தலைமையில் அவன் காதலி இளநங்கை, நட்பு நாட்டு இளவரசன் இந்திரபானு முத்தையும் இளவரசியையும் மீட்கின்றனர், வீரரவி போரில் இறக்கிறான். வீரரவியின் களவுச் செயலை கண்டிக்கும் சேரநாட்டு குருநாதர் பரதபட்டன் என்று ஒரு பாத்திரம், பட்டன் போரில் முழு மனதாக ஈடுபடாதது சேரர்களை பலவீனப்படுத்திவிடுகிறது.

மீள்வாசிப்பில் வழக்கமான பலங்களும் பலவீனங்களும் தெரிகின்றன. திடுக்கிடும் திருப்பங்களைத் தர வேண்டும் என்ற விழைவு பல இடங்களில் செயற்கையாக முடிகிறது. உதாரணமாக சேரநாட்டு கோட்டை அதிபன் மகள் குறிஞ்சி பாண்டியருக்காக உளவறிகிறாள், பாண்டியர் படையில் உபதளபதியாகவே ஆகிறாள். ஏன்? வீரபாண்டியன் கண்ணில் மட்டும் கரெக்டாக பாதையில் கிடக்கும் கோடரி தென்படுகிறது. இந்திரபானு நினைத்தால் எதிரி அரண்மனைக்குப் போய்விடமுடிகிறது. ஸ்பீட்ப்ரேக்கர் போல காதல்/காம வர்ணனைகள் அவ்வப்போது எரிச்சலையே மூட்டுகின்றன. அதே நேரத்தில் மிகச் சரளமாக செல்லும் கதை ஓட்டம். நல்ல சாகசக் கதை. பதின்ம வயதில் படிக்க ஏற்றது. உண்மையைச் சொல்லப் போனால் சாண்டில்யன் மூலம் தெரிந்து கொண்ட வரலாறுதான் பள்ளிக் காலத்தில் தேர்வுகளுக்குப் பிறகும் நினைவிருந்தது. இதைப் படித்துத்தான் முத்துதான் பாண்டியரின் சொத்து, அதை வாங்க அன்றைய ரோமானியர் பெரும் பணம் கொடுத்தனர், சோழ அரசு பலவீனமானபோது ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் பாண்டிய அரசை மீண்டும் வலிமைப்படுத்தினான் என்று தெரிந்துகொண்டேன்.

ஜெயமோகன் இதை சரித்திர வணிக நாவல்களின் இரண்டாம் வரிசையில் வைக்கிறார். நானும் அதில்தான் வைப்பேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் வரலாற்று நாவல்கள்

5 thoughts on “சாண்டில்யனின் “ராஜமுத்திரை”

 1. சாண்டில்யன் கதைகளில் ஆச்சர்யம் என்னவென்றால் அவை தொடர்கதைக்கென்றே (அத்தியாயக் கடைசியில் வரும் திருப்பத்துக்காகவே) எழுதப்பட்டவை. நாவலுக்கான கட்டுக்கோப்பு இல்லாமல் எங்கெங்கோ அலையும் கதையமைப்பு உள்ளவை. ஆனால் நாவல் வடிவிலும் அவை பெரு வெற்றி பெற்றன (நானும் என் பதின்ம வயதுகளில் பைத்தியமாக வாசித்தேன். இப்போது அவ்வளவு ஈர்ப்பு இல்லை). அந்த மர்மம் தான் எனக்கு விளங்கவில்லை.

  Like

 2. ப்ருந்தாபன், சின்ன வயதில் இருக்கும் ஈர்ப்பு பல சமயங்களில் நாஸ்டால்ஜியாவாக மட்டும்தான் மிஞ்சுகிறது. ரெங்கா, ஏழெட்டு வயதுக்குப் பிறகெல்லாம் சாண்டில்யனைப் படிக்க முடியாது, போரடிக்கும் 🙂

  Like

 3. சாண்டில்யனின் கதைகள் என்னை சிறுவயதில் மிகவும் ஈர்த்தன என்பது உண்மை. அவருடைய பெரும்பாலான கதைகளையும் படித்திருக்கிறேன்.

  யவனராணி வரும்போது பள்ளிப் பருவம். வீர தீர சாகச சரச நாயகர்களைப் படைப்பார் அவர்.
  இளஞ்செழியன், கரிகாலன், ஹிப்பலாஸ், டைபீரியஸ், இருங்கோவேள், பிரும்மானந்தர் , யவனராணி, பூவழகி,அல்லி , அலீமா, இழி ஆஸூ ,யவன மருத்துவன், போன்ற கதா பாத்திரங்களை ( முழ நீள வர்ணணைகளை அப்போது ஒதுக்கிவிட்டு மேலே படிப்பேன்) இன்றைக்கும் மறக்க முடியாது.

  இதனுடைய தாக்கத்தில்தான் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வந்ததாக நினைப்பு எனக்கு.

  பின்னர் கடல்புறா குமுதத்தையே ஆறுலட்சம் அளவிற்குத் தூக்கிச் சென்றது. கல்லூரிப் பருவத்தில் அதைப் படிக்கப் போட்டியே நடக்கும். இளையபல்லவனின் புத்திசாலித்தனம் எனக்கு மிகவும் பிடிக்கும். அப்போது வர்ணனைகளை விட்டுவிடாமல் படிப்பேன்.

  இவை இரண்டுக்கும் முன்னால் வந்த மன்னன் மகள் கதையும் எனக்குப் பிடிக்கும்.

  இந்த மூன்று நாவல்களைத் தவிர மற்ற எல்லாமே சுமார் ரகமாகத்தான் எனக்கு இன்றும் தோன்றுகிறது.

  கன்னிமாடம், மலைவாசல், ராஜமுத்திரை, மூங்கில்கோட்டை , ஜலதீபம் போன்றவை படிக்கலாம்.

  மற்றவை படிக்கமுடியாதவை.

  ஆனால் பொன்னியின் செல்வனுக்கு அப்புறம்தான் சாண்டில்யன்.

  கல்கியின் மற்ற சரித்திர நாவல்கள் – சிவகாமியின் சபதம் , பார்த்திபன் கனவு எல்லாம் சாண்டில்யனுக்குப் பின்னாடிதான்.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.