பத்ரகிரியார் பாடல்கள்

பத்ரகிரியார் பட்டினத்தாரின் சீடராம். அவரது தொன்மக்கதை சுவாரசியமானது. பிச்சை எடுக்க திருவோடு வைத்திருந்தாராம். கிடைக்கும் உணவை ஒரு நாய்க்கும் பங்குண்டாம். பட்டினத்தார் ஒரு நாள் அவரை குடும்பஸ்தர் என்று குறிப்பிட, திருவோட்டை வீசி எறிந்து ஞானம் அடைந்தாராம்.

பர்த்ருஹரியும் இவரும் ஒன்றேதான் என்று நினைத்திருந்தேன், தவறு. பர்த்ருஹரி சமஸ்கிருதத்தில் எழுதி இருக்கிறார், காலமும் வேறு. பெயர் ஒற்றுமையால் பர்த்ருஹரியின் தொன்மக் கதைகளும் இவரோடு வந்து ஒட்டிக் கொண்டுவிட்டன என்று தோன்றுகிறது.

மெய்ஞானப் புலம்பல் என்ற கவிதையை பத்ரகிரி எழுதி இருக்கிறார். கண்ணி வகைக் கவிதை.

ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத்
தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம்?

என்ற இரு வரிகளைப் படித்ததும் – அதுவும் ‘தூங்காமல் தூங்கி’ என்று படித்ததும் ஆஹா! என்று தோன்றியது.அவரது பாடல்கள் ப்ராஜெக்ட் மதுரை தளத்தில் கிடைத்தன.அதுவும்

மனதை ஒரு வில்லாக்கி வாலறிவை நாணாக்கி
எனதறிவை அம்பாக்கி எய்வதினி எக்காலம்?

என்ற வரிகள் பிரமாதம்.

ஊமை கனாக் கண்டு உரைக்க அறியா இன்பம் அதை
நாம் அறிந்து கொள்வதற்கு நாள் வருவது எக்காலம்?

விளங்குகின்ற தாரகையை வெய்யோன் மறைத்தாற்போல்
களங்கமற உன் காட்சி கண்டறிவதெக்காலம்?

ஊமை கனவில் கண்ட இன்பம், நட்சத்திரங்களை சூரியனுக்கு களங்கம் என்று குறிப்பிடுவது – ஆஹா! இது கவிதை.

எனக்குப் பிடித்த வேறு சில கண்ணிகள் கீழே.

சேயாய் சமைந்து செவிட்டூமை போல் திரிந்து
பேய் போலிருந்து உன் பிரமை கொள்வதெக்காலம்?

நின்ற நிலை பேராமல் நினைவில் ஒன்றும் சாராமல்
சென்ற நிலை முத்தி என்று சேர்ந்தறிவதெக்காலம்?

கஞ்சா அபினியுடன் கள்ளுண்டு வாழாமல்
பஞ்சாமிர்தம் பருகுவதும் எக்காலம்?

அன்பை உருக்கி அறிவை அதன் மேல் புகட்டி
துன்ப வலைப் பாசத் தொடக்கறுப்பதெக்காலம்?

சாத்திரத்தைச் சுட்டு சதுர்மறையைப் பொய்யாக்கி
சூத்திரத்தைக் கண்டு துயர் அறுப்பது எக்காலம்?

 

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்

மெக்சிகோ நாட்டு சிறுகதை – ஹுவான் ருல்ஃபோ எழுதிய “Macario”

ஹுவான் ருல்ஃபோ (Juan Rulfo – ஸ்பானிஷ் மொழியில் J எழுத்தை H மாதிரிதான் உச்சரிப்பார்கள்.) மெக்சிகோ நாட்டு எழுத்தாளர். கேப்ரியல் கார்சியா மார்க்வெஸின் மனம் கவர்ந்த எழுத்தாளராம்.

தற்செயலாக அவரது 3 சிறுகதைகள் கண்ணில் பட்டன. Remember சிறுகதையை என் கண்ணில் மறந்துவிடலாம். Tell Them Not to Kill Me! நன்றாக எழுதப்பட்ட சிறுகதை, படிக்கலாம். ஆனால் இந்தப் பதிவை எழுத Macario சிறுகதைதான் காரணம் உண்மையிலேயே disturbing சிறுகதை. சின்ன சிறுகதை, விளக்கும் நேரத்தில் படித்துவிடலாம். படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

3 சிறுகதைகளை மட்டும் வைத்துக்கொண்டு சொல்லிவிட முடியாது. கருணையே அற்ற விவரிப்புதான் ருல்ஃபோவின் speciality-யோ என்று தோன்றுகிறது. நீங்கள் யாராவது படித்திருக்கிறீர்களா? படித்திருந்தால் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்! குறைந்தபட்சம் Macario பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்றாவது சொல்லுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: உலக இலக்கியம்

இந்திய ஓவியர்கள்/சிற்பிகள்

இந்திய ஓவியர்களில் எனக்கு மிகவும் பிடித்தவர் ஜாமினி ராய். அடுத்தபடியாக அம்ரிதா ஷெர்-கில். சிற்பிகளில் ராம்கிங்கர் பைஜ். எம்.எஃப். ஹுசேன் ஓவியங்களை அங்கும் இங்கும் பார்த்திருந்தாலும் அப்படி ஒன்றும் பிரமாதமான ஓவியர் இல்லை என்பதுதான் என் கணிப்பு. ஆனால் எனக்கு இந்திய ஓவியர்கள்/சிற்பிகளைப் பற்றி அதிகம் தெரியாது என்பதுதான் உண்மை.

ஜாமினி ராயின் ஓவியங்களில் நாட்டார் கலைகளின் கூறுகளைக் காண்கிறேன். குறிப்பாக வங்காள, ஒரியாப் பகுதிகளின் கலைகளை. ஓவியங்களை விவரிப்பதில் பயனே இல்லை. சாம்பிளுக்கு ஒரு ஓவியம் கீழே.

ஷெர்-கில்லுக்கும் ஒரு சாம்பிள் கீழே.

தற்செயலாக Contemporary Indian Painters என்ற சிறு புத்தகம் கண்ணில் பட்டது. எனக்கு வி.எஸ். கூர்ஜரின் Anglers ஓவியம், என்.எஸ். பென்ட்ரேயின் Kumbhar Women ஓவியம், கே.கே. ஹெப்பாரின் ஓவியம் பிடித்திருந்தன. ப்ரூகலின் ஓவியங்களை நினைவுபடுத்தின, ஆனால் இந்திய ஓவியங்கள் என்பது தெள்ளத்தெளிவு. உங்களுக்கு வேறு ஏதாவது பிடிக்கலாம், கட்டாயம் புரட்டிப் பாருங்கள்!

இந்தப் புத்தகம் ஏற்படுத்திய ஆர்வத்தில் தேடியதில் நந்தலால் போஸின் சில ஓவியங்கள் கிடைத்தன. பாருங்கள்! எனக்கு மிகவும் பிடித்த ஓவியம் கீழே.

ராய் சௌத்ரியை அறியாத தமிழன் இருக்க முடியாது. உழைப்பாளர் சிலை அவர் செதுக்கியதுதான். ஓவியரும் கூட. ஒரு ஓவியம் கீழே.

எஸ்.ஜி. தாகூர் சிங்கின் சில ஓவியங்கள் டர்னரின் ஓவியங்களை நினைவுபடுத்தின.

தொகுக்கப்பட்ட பக்கம்: கலைகள்

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வனை முதன்முதலாகப் படிக்கும்போது 13 வயதிருக்கலாம். வாரப்பத்திரிகை பக்கங்களைக் கிழித்து பைண்ட் செய்த புத்தகங்கள். வைத்திருந்த் உறவினரோ தருவதற்கு ஒரே பிகு. கெஞ்சிக் கூத்தாடி வாங்கிப் படித்தேன். கீழே வைக்க முடியவில்லை. கதைப்பின்னல் அத்தனை சுவாரசியமாக இருந்தது. ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார் என்பதை பதில் இல்லாத கேள்வியாக இல்லை இல்லை எந்த பதிலிலும் ஓட்டை இருக்கும் கேள்வியாகப் படைத்தது அபாரமான உத்தி ஆகத் தெரிந்தது/தெரிகிறது. நந்தினியின் பாத்திரப் படைப்பு, ஆழ்வார்க்கடியானின் அலப்பறைகள், ஆதித்த கரிகாலனின் மனச்சிக்கல்கள், அருண்மொழிவர்மன், பெரிய பழுவேட்டரையர், பூங்குழலி, மந்தாகினி, குந்தவை ஏன் கந்தமாறனும் மணிமேகலையும் பினாகபாணியும் மதுராந்தனும் ரவிதாசன் தலைமையிலான ஆபத்துதவிகள் வரை மிகவும் அருமையான பாத்திரப் படைப்புகள். இன்று வரையில் தமிழில் இதை விடச் சிறந்த அரண்மனைச் சதி sub-genre சரித்திர நாவல் வந்ததில்லை. இதற்கு சமமான ஆகிருதி உள்ள சரித்திர நாவல் என்று எனக்குத் தெரிவது பிரபஞ்சனின் மானுடம் வெல்லும் ஒன்றுதான். அலெக்சாண்டர் டூமா மேலை உலகத்தில் கொண்டாடப்படுகிறார். அவர் எழுதிய எந்த நாவலையும் விட பொ. செல்வன் சிறப்பான கதைப்பின்னல் கொண்டது. வால்டர் ஸ்காட் எல்லாம் எங்கோ பின்னால்தான் நிற்க வேண்டும்.

இன்றும் கல்கி போட்ட ரோட்டில்தான் அனேகத் தமிழ் வரலாற்று நாவல் எழுத்தாளர்கள் வெறும் கோடு மட்டுமே போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் யாரும் அவரை நெருங்க முடியவில்லை. சாண்டில்யன் உட்பட.

ஆனால் இன்று 13 வயது இல்லை, நாலு கழுதை வயதாகிவிட்டது. அதனால் குறைகள் தெரிகின்றன. பொ. செல்வனைப் படிப்பவர்களுக்கு தமிழகத்தில் அன்று ஜாதி என்று ஒன்று இருந்ததா என்பது கூடத் தெரியாது. ராஜாவும் இளவரசர்களும் குறுநில மன்னர்களும் ஒற்றர்களும் அமைச்சர்களும்தான் சமூகமே. ஏதோ பேருக்கு அங்குமிங்கும் ஒரு ஜோதிடரும் வைத்தியரும் ஓடக்காரன்/ஓடக்காரியும் வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு அரண்மனையோடு நெருங்கிய உறவிருக்கிறது. சரித்திர நாவலின் வீச்சு என்பது மிகவும் குறைந்திவிடுகிறது. கதைப்பின்னல் மட்டுமே நாவலின் பெரும்பலமாக நிற்கிறது. பெரும் மானிட தரிசனம் என்று எதுவும் கிடைத்துவிடப் போவதில்லை. மனிதர்களில் இயல்புகளைத் தோலுரித்துக் காட்டிவிடும் படைப்பில்லை. சுவாரசியம் மட்டுமே இலக்காக வைத்து எழுதப்பட்ட நாவல். அதில் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. ஷெர்லக் ஹோம்ஸ் கதைகள் போல. அதனால் minor classic என்றுதான் வகைப்படுத்துவேன்.

பொ. செல்வனைப் படிக்காதவர்களுக்காக: பொ. செல்வன் என்று அழைக்கப்படுபவன் அருண்மொழிவர்மன் – பிற்காலத்தில் ராஜராஜ சோழன். அருண்மொழிவர்மனின் அண்ணனும் பட்டத்து இளவரசனும் ஆன ஆதித்தகரிகாலன் நந்தினியை விரும்புகிறான். நந்தினிக்கோ ஆதித்த கரிகாலனின் எதிரியான வீரபாண்டியனோடு உறவு. இது தெரிந்ததும் ஆதித்த கரிகாலன் வீரபாண்டியனைக் கொல்கிறான். நந்தினி ஆதித்த கரிகாலனை பழிவாங்க சோழ அரசின் முக்கியத் தூணான கிழவரான பெரிய பழுவேட்டரையரை மணக்கிறாள். பழுவேட்டரையர் அவள் சொல்படி ஆடுகிறார். ஆதித்த கரிகாலனுக்கு பதிலாக அவனது பெரியப்பாவின் மகனான “போலி” மதுராந்தகனை அரசனாக்க சதி செய்கிறாள். எதிர்தரப்பில் வந்தியத்தேவனும், இளவரசி குந்தவையும், அருண்மொழிவர்மனும். ஆதித்தகரிகாலன் கொல்லப்படுகிறான். அருண்மொழி அரசனாகாமல் உண்மையான மதுராந்தகனை அரசனாக்குவதுடன் கதை முடிகிறது.

வந்தியத்தேவன் தற்செயலாக சம்புவராயர் அரண்மனைக்கு வருவதும் அங்கே சதியோலாசனை ஒன்றை ஒட்டுக் கேட்பதிலும் ஆரம்பிக்கும் கதை அங்கிருந்தே கீழே வைக்க முடிவதில்லை. வந்தியத்தேவன் நந்தினியைச் சந்திப்பதும், கந்தமாறன் அவனை துரோகி என்று நினைப்பதும், குந்தவையின் ஓலை கொண்டு வந்தியத்தேவன் அருண்மொழியை சந்திக்க செல்வதும், பூங்குழலியின் உதவியோடு சந்திப்பதும், ஆபத்துதவிகள் சோழ மன்னர் பரம்பரையையே ஒழித்துக் கட்ட முயற்சிப்பதும் இரண்டு கொலை முயற்சிகள் தோற்பதும், ஒன்று வெல்வதும், பெரிய பழுவேட்டரையரின் மரணமும் ஒன்றன்பின் ஒன்றாக நம்மை வேறு உலகத்துக்கு கொண்டுபோய்விடுகின்றன. ஆழ்வார்க்கடியான், பூங்குழலி போன்றவர்கள் சிறப்பாக வடிக்கப்பட்ட பாத்திரங்கள்.

பதின்ம வயதில் நண்பர்கள் பல மணி நேரமாக ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார் என்று பேசி இருக்கிறோம். பெரிய பழுவேட்டரையர் தான்தான் கொன்றேன் என்று ஒத்துக் கொள்கிறார். ஆனால் அவர் இறக்கும்போது தான் கொலையாளி இல்லை என்று சொல்லிவிட்டு இறக்கிறார். ஆதித்தகரிகாலன் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று சொல்வதாக ஒரு வரி வரும், ஆனால் தற்கொலை இல்லை என்றும் கல்கி தெளிவுபடுத்திவிடுவார். நந்தினி கொல்லவில்லை. ஆபத்துதவியை பெரிய பழுவேட்டரையரே தாக்கிவிடுவார். பிறகு யார்தான் கொன்றது? பேசிக் கொண்டே இருந்திருக்கிறோம்.

இன்னொரு பொழுதுபோக்கு திரைப்படமாக எடுத்தால் யார் யார் நடிக்க வேண்டும் என்று பேசுவது. அன்றைய எங்கள் தேர்வு ரஜினி ஆதித்தகரிகாலனாக; சிவகுமார்தான் அருண்மொழிவர்மனுக்கு சிறந்த தேர்வு என்று தோன்றியது, அதனால் கமல் அவ்வள்வு பொருத்தம் இல்லை என்று தோன்றினாலௌம் கமலுக்கு வந்தியத்தேவன் ரோல். பெரிய பழுவேட்டரையராக சிவாஜி; தேங்காய் ஆழ்வார்க்கடியான். முத்துராமன் கந்தமாறன். விஜயகுமார் சேந்தன் அமுதன். வெண்ணிற ஆடை மூர்த்தி பினாகபாணி. மேஜர் சுந்தர சோழன். சுஜாதா மந்தாகினி. சரிதா அல்லது ராதா பூங்குழலி. லட்சுமி குந்தவை. மனோகர் சின்ன பழுவேட்டரையர். நம்பியார் ரவிதாசன். வானதி அம்பிகா. கடைசியில் நந்தினியாக நடிக்க யாரும் இல்லாததால் திரைப்படம் எடுக்கும் முயற்சியை கைகழுவிவிட்டோம்.

பொ. செல்வனை சுருக்க முடியாது. படியுங்கள் என்றுதான் சொல்ல முடியும். இதை சரியானபடி மொழிபெயர்த்தால் டூமாவின், ஸ்காட்டின் இடத்தில் கல்கி உட்கார வாய்ப்பிருக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: கல்கி பக்கம்

Shawshank Redemption

மனம் நிறைவடையச் செய்யும் வெகு சில படைப்புகளில் ஒன்று Shawshank Redemption திரைப்படம். பல நாட்களாக அதன் மூலக்கதையை படிக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

மூலக்கதையை எழுதியவர் புகழ் பெற்ற எழுத்தாளரான ஸ்டீஃப்ன் கிங். மூலக்கதையின் பேர் “Rita Hayworth and Shawshank Redemption” (1982). கதைச்சுருக்கம் எல்லாம் நான் எழுதப் போவதில்லை, தேவை என்றால் முழுக்கதையையும் இங்கே படித்துக் கொள்ளுங்கள்.

குறுநாவல் நன்றாகவே இருந்தது. ஆனால் திரைப்படத்தைப் பார்க்காமல் இதைப் படித்திருந்தால் இந்த அளவுக்கு ரசித்திருப்பேனா என்று தெரியவில்லை. படிக்கும்போது அங்கங்கே திரைப்படத்தில் இந்த வசனம் வரும் இடம், இந்தக் காட்சி திரைப்படமாக்கப்பட்ட விதம் எல்லாம் மனதில் ஓடிக் கொண்டே இருந்தன.

குறுநாவலுக்கும் திரைப்படத்துக்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை. அப்படி இருக்கும் சின்னச் சின்ன வித்தியாசங்களும் நகாசு வேலைகள் என்றுதான் சொல்ல வேண்டும். உதாரணமாக வார்டனின் பணமே கொள்ளை போவது என்று மூலக்கதையில் இல்லை, ஆனால் வார்டனுக்கு அப்படி ஒரு comeuppance கிடைப்பது திரைப்படத்தை இன்னும் உயர்த்துகிறது.

Shawshank திரைப்படம் வெளியானபோது அவ்வளவு கவனம் பெறவில்லை. நான் அப்போது அமெரிக்காவில்தான் இருந்தேன். Pulp Fiction மற்றும் Forrest Gump திரைப்படங்களின் வெற்றி Shawshank-ஐ அமுக்கிவிட்டன. மார்கன் ஃப்ரீமனுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தபிறகுதான் இது என்னடா படம் என்று தேடிப் பிடித்துப் பார்த்தோம். அந்த வருஷம் வெளியான திரைப்படங்களில் இன்றும் என் ஃபேவரிட் Pulp Fiction-தான், ஆனால் Shawshank அன்றும் இன்றும் என் மனம் கவர்ந்த திரைப்படங்களில் ஒன்று. மார்கன் ஃப்ரீமன், டிம் ராபின்ஸ், வார்டனாக நடிப்பவர், சிறையை விட்டு வெளியே செல்ல அஞ்சும் ப்ரூக்ஸ் ஹாட்லெனாக நடிப்பவர் – எல்லாருமே கலக்கி இருப்பார்கள்.

திரைப்படத்தை பார்க்கவில்லை என்றால் குறுநாவலை இணைத்திருக்கிறேன், படித்துவிட்டு அப்புறம் பாருங்கள்! பார்த்துவிட்டீர்கள் என்றால் குறுநாவலை படித்துப் பாருங்கள்! (காப்பிரைட் பிரச்சினை வந்தால் எடுத்துவிடுவேன்)

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள்

லூயி லமூரின் “கௌபாய்” நாவல்கள்

Louis_L'AmourWestern genre எழுத்தாளர்களில் லமூர்தான் மிகவும் பிரபலமானவர் என்று நினைக்கிறேன். அனேகமாக எல்லா புத்தகங்களும் டைம்பாஸ், பதின்ம வயதில் படிக்க ஏற்ற புத்தகங்கள்தான். வேகமாக துப்பாக்கியை எடுத்து சுடுவது பெரிய சாகசமாகத் தெரிந்த காலம். மேலும் அவரது கதைகளின் நாயகன் எப்போதும் மக்கள் அதிகமாக இல்லாத இடத்தில் – காடு, மலை, குகை போன்ற இடங்களில் தனியாகவோ இல்லை மனைவி குடும்பத்தோடோ, இல்லை வெகு சில கௌபாய்களோடோ வாழ விரும்புபவன். அப்படிப்பட்ட இடங்கள் கான்க்ரீட் காடுகளில் வாழ்ந்த பதின்ம பருவங்களில் – காடும் மலையும் சில மைல் தூரத்தில் இருந்தாலும் சுலபமாகப் போய் வர முடியாத காலங்கள் – படிக்கும் ஆவலைத் தூண்டின.

எல்லாம் டைம் பாஸ்தான் என்றாலும் விதிவிலக்கு Sackett Brand (1965). ஸாக்கெட் பெருகுடும்பம் (clan) அவரது நாவல்களில் மீண்டும் மீண்டும் வரும் ஒரு motif. ஒரு ஸாக்கெட்டுக்கு பிரச்சினை என்று தெரிந்தால் அந்தப் பேர் உள்ள மற்றவர்கள் அவனுக்கு உதவி செய்ய கிளம்பி வந்துவிடுவார்கள். இந்த நாவலில் அந்தப் பெருகுடும்பத்து பந்தம் வாசகனை திருப்திப்படுத்தும் வகையில் வெளிப்படுகிறது.

இன்னொன்றைப் படிக்க வேண்டுமென்றால் Hondo. திரைப்படமாகவும் வந்தது.

லமூரின் வேறு புத்தகங்களும் திரைப்படமாக வந்திருக்க வெண்டும். எவை என்று தெரியவில்லை.

Ride the Dark Trail (1972) நாவலில் லோகன் சாக்கெட் தன் அத்தை எமிலி டாலனை அவளது மாட்டு மேய்ச்சல் நிலங்களிலிருந்து துரத்தும் வில்லன்களை முறியடிக்கிறான்.

North to the Rails நாவலில் அன்றைய அமெரிக்காவின் சட்டம் ஒழுங்கு நிறைந்த இடங்களில் வளரும் நாயகன் டாம் சாண்ட்ரி வேறுவித விழுமியங்கள் உள்ள வெஸ்டர்ன் பகுதிகளி எப்படி சமாளிக்கிறான் என்று போகும் கதை.

இதைத் தவிர பத்து பதினைந்து ஸாக்கெட் நாவல்கள், சான்ட்ரி பெருகுடும்பத்து நாவல்கள் இருக்கின்றன. அனேகமாக எதையும் படிக்க வேண்டியதில்லை. கிட்டத்தட்ட நூறு நாவல்களை எழுதி இருக்கிறார். நான் விவரிக்கப் போவதில்லை.

ஒரு சுவாரசியமான விஷயம் – அவரே அவரது சில நாவல்களை குப்பை என்று ஒதுக்கிவிடுகிறார். அவர் ஹாப்பலாங் காசிடி நாவல்கள் (Rustlers of the West Fork) சிலவற்றையும் எழுதி இருக்கிறார். ஆனால் அவை ‘கூலிக்கு’ எழுதப்பட்ட குப்பை என்று பிற்காலத்தில் அவற்றை வெறுத்து ஒதுக்கி இருக்கிறார். அவருடைய எழுத்தாளன் என்ற பெருமிதம் நிறைந்த சுயபிம்பத்துக்கு ஒத்து வரவில்லை!

லமூரின் நாவல்களை நம்மில் பலரும் குப்பை என்று ஒதுக்கலாம். Sackett Brand தவிர மற்றவற்றை நான் அப்படித்தான் ஒதுக்குகிறேன். ஆனால் என் பதின்ம பருவத்தின் கனவுலகத்தில் கௌபாய் என்றால் மாடுகளை மேய்ப்பவன் அல்ல; தலையில் தொப்பி, இடைக்கு கீழே பெல்ட், அவற்றில் இரு துப்பாக்கிகள், அந்த துப்பாக்கிகளால் வேகமாகச் சுடும், குதிரைகளில் பெரிய புல்வெளிகள், மலைகள், ஏன் பாலைவனங்களைக் கூட கடக்கும் நாயகர்களுக்கு இடமிருந்தது. அந்த கனவுக்கு தீனி போட்டவர்களில் லமூரும் ஒருவர். அதற்காக அவருக்கு ஒரு ஜே!

தொகுக்கப்பட்ட பக்கம்: சாகச நாவல்கள்

துப்பறியும் கதைகள்: சூ க்ராஃப்டன்

sue_graftonக்ராஃப்டன் பிரபல துப்பறியும் கதை எழுத்தாளர். ஆனால் என் கண்ணில் இவரது கதைகளில் சுவாரசியம் குறைவு. முடிச்சு, முடிச்சு அவிழும் விதம் எல்லாம் பிரமாதமாக இருப்பதில்லை. திடீர் திடீரென்று வாழ்க்கையின் mundane விவரங்களைப் பற்றி – சாப்பிட்டது, ஜாகிங் போனது எல்லாம் வரும். குறிப்பிட வேண்டிய கதை என்று எனக்கு எதுவும் தெரியவில்லை, என் கண்ணில் தவிர்க்கப்பட வேண்டியவரே. ஆனால் துப்பறியும் கதைகளை விரும்பிப் படிப்பவர்களுக்கு பிடிக்க நிறைய வாய்ப்புண்டு. “A” is for Alibi என்று ஆரம்பித்து “Y” Is for Yesterday வரை வந்திருக்கிறார். இதோ Z வந்துவிடும், அப்புறம் என்ன செய்வாரோ தெரியவில்லை. “Z” is for Zero என்ற புத்தகத்தோடு இதை முடித்துவிடத் திட்டமிட்டிருந்தாராம், ஆனால் அதை ஆரம்பிப்பதற்கு முன்பே இறந்துவிட்டார். அதனால் பிரச்சினையே இல்லை.

க்ராஃப்டனின் புத்தகங்கள் மிகவும் பிரபலமாக இருந்தாலும் அவர் அவற்றை திரைப்படமாக்க சம்மதிக்கவே இல்லை. இத்தனைக்கும் அவரே பல திரைக்கதைகளை எழுதி இருக்கிறார்.

முதல் புத்தகம் A is for Alibi (1982). 32 வயது துப்பறிபவர் – கின்சி மில்ஹோன் – அறிமுகம் ஆகிறார். கணவனைக் கொன்ற குற்றத்துக்காக ஜெயிலுக்குப் போன நிக்கி பரோலில் வெளியே வருகிறாள். தான் கொல்லவில்லை, யார் கொன்றது என்று கண்டுபிடிக்க கின்சியை அணுகுகிறார். விறுவிறுவென்று போகிறது. எனக்கு ஒரு விஷயம் புரிவதில்லை. எல்லாரும் கின்சியிடம் பேசுகிறார்கள், விவரங்கள் தருகிறார்கள். என்னிடம் யாராவது பேசினால் நான் பேச மறுப்பேன். நான் விதிவிலக்கா, இல்லை க்ராஃப்டன் எடுத்துக் கொள்ளும் literary license-ஆ?

B is for Burglar (1985): எனக்கு பல loose ends தெரிகின்றன. சகோதரியைக் காணவில்லை என் பெவர்லி டான்சிகர் கின்சியை அணுகிறாள். பஸ்ஸில் படிக்கலாம்.

C Is for Corpse (1986) ஓரளவு பரவாயில்லை. பாபி காலஹன் பெரிய விபத்திலிருந்து தப்பித்திருக்கிறான். பல விஷயங்கள் நினைவில்லை. தன்னை யாரோ கொல்ல முயற்சி செய்கிறார்கள் என்று கின்சியை அணுகுகிறான், இரண்டு நாளில் இறந்தும் போகிறான். கின்சி மர்மத்தைத் துப்பறிகிறாள்.

D Is for Deadbeat (1987) டைம் பாஸ் புத்தகம். குடிகார டாகெட் குடித்துவிட்டு காரை ஓட்டும்போது ஐந்து பேர் இறந்துவிடுகிறார்கள், ஜெயிலுக்குப் போகிறான். பரோலில் திரும்பி வரும்போது இறந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த பள்ளி மாணவன் கெஹனுக்கு நஷ்ட ஈடாக கொஞ்சம் பணம் தர முயற்சிக்கிறான். கெஹன் எங்கே என்று தெரியவில்லை, அதனால் கின்சியை அணுகுகிறான். நாலைந்து நாளில் இறந்தும் போகிறான். கின்சி மர்மத்தைத் துப்பறிகிறாள்.

Kinsey and Me (2013): பல சிறுகதைகளின் தொகுப்பு. எதுவும் என்னைக் கவரவில்லை.

எனக்கு ஒரு அசட்டுப் பழக்கம் உண்டு. ஒரு சீரிசை ஆரம்பித்துவிட்டால் முழுவதுமாக படித்துவிட வேண்டும். இந்த வருஷமாவது இதை நிறுத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். க்ராஃப்டனிலிருந்தே ஆரம்பிக்கிறேன்! இதற்கு மேல் எதுவும் படிப்பதாக இல்லை. துப்பறியும் கதை விரும்பிகள் தவிர மற்றவர்கள் தவிர்த்துவிடலாம். ஒரே ஒரு புத்தகம் படிக்க வேண்டுமென்றால் A is for Alibi படித்துப் பாருங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: த்ரில்லர்கள்

நாஞ்சில் நாடனின் “சதுரங்க குதிரை”

நாஞ்சில் எடுத்துக் கொண்டிருக்கும் கதைக்களன் நான் என் சொந்த அனுபவத்தில் நன்கறிந்தது. அவர் விவரிக்கும் ஒவ்வொரு சம்பவத்தையும் என் வாழ்க்கையோடு என்னால் தொடர்புபடுத்திப் பார்க்க முடிகிறது. நம்பகத்தன்மை அதிகம் உள்ள சித்தரிப்பு. இந்த நாவலை என்னால் சீர்தூக்கிப் பார்த்து நாலு வார்த்தை எழுதிவிட முடியும் என்று எனக்கு நம்பிக்கையே இல்லை.

நாயகன் ஏழ்மையிலிருந்து தப்பிக்க மும்பைக்கு வேலை தேடி வருகிறான். (நான் பற்றாக்குறையிலிருந்து தப்பிக்க வேலை தேடி அமெரிக்கா வந்தவன்.) வேலையில் திறமைக்காரன், ஆனால் வேலையைத் தவிர மும்பையில் வேறு பிடிப்பு இல்லை. வெறுமை நிறைந்த வாழ்க்கை. சொந்த ஊர், உறவுகளோடு உள்ள பந்தம் பலவீனம் அடைந்து கொண்டே போகிறது. (அதே வெறுமை, பலவீனமாகிக் கொண்டிருக்கும் உறவுகளைக் கண்டு எனக்கு ஒரு காலத்தில் அச்சம் இருந்தது.) நாற்பத்து சொச்சம் வயதான நாயகன், திருமணம் செய்துகொள்ளவில்லை. இன்று திருமணத்தைக் கண்டும் பயம், மனைவி, குழந்தைகள், குடும்பம் எதுவும் இல்லாத எதிர்காலத்தைக் கண்டும் பயம். எனக்கு அவ்வளவுதான் takeaway.

நாவலின் பலம் நம்பகத்தன்மை. மிகப் பிரமாதமான சித்தரிப்புகள். மாமாவோடு உள்ள உறவாகட்டும், இன்று திருமணமான மாமா பெண்ணிடம் உன்னைக் கட்டிக் கொள்ளும்படி கேட்டிருந்தால் கட்டி இருப்பேன் என்று சொல்லும் இடமாகட்டும், அலுவலகத்தின் weak friendships ஆகட்டும், உறவுகளோடு வெடிக்கும் சண்டை ஆகட்டும், வேலையில் வரும் சிக்கல்கள் ஆகட்டும், அந்த சிக்கல்களை கடக்கும் விதம் ஆகட்டும் எல்லாமே மிகப் பிரமாதமாக சித்தரிக்கப்படுகின்றன. வாழ்க்கை பொருளிழந்து கொண்டிருப்பது மிக அருமையாக வந்திருக்கிறது. சிறப்பான “எதார்த்தவாத” நாவல்.

என்னைப் பொறுத்த வரையில் பலவீனமும் அதன் எதார்த்தவாத அணுகுமுறைதான். ஆமாம், வாழ்க்கையின் வெறுமை அதிகரித்துக் கொண்டே போகிறது. ஆனால் நாராயணனின் வாழ்க்கை வெறுமை அடைந்தால் வாசகனுக்கு என்ன போச்சு? So what? என்ற கேள்விக்கு பதிலே இல்லை. மாஸ்லோவின் theory of needs-தான். சோற்றுக்கு அல்லாடும்போது வேலை தேவைப்பட்டது. இப்போது வேலை ஸ்திரமாக இருக்கிறது, வாழ்க்கையின் வெறுமை என்று அடுத்த தேடல். அவ்வளவுதானே?

இரண்டு இடங்களை குறிப்பிட்டு சொல்ல வேண்டும். நாராயணனிடம் எத்தனை பாண்ட், எத்தனை சட்டை, எத்தனை ஜட்டி இருக்கிறது, ஜட்டிக்கு இன்னும் எத்தனை நாள் ஆயுள் இருக்கிறது என்று கணிக்கும் இடம். நாராயணனின் வாழ்வின் பொருளின்மையை நாலு வரியில் உணர வைத்துவிடுகிறார். இன்னொன்று பயணம் போன இடத்தில் வெள்ளம் வந்து ரோடுகள் துண்டிக்கப்பட்டு நாராயணன் அல்லாடி திண்டாடி மும்பை திரும்பும் இடம். (இந்த மாதிரி அனுபவம் எல்லாம் எனக்கும் இருக்கிறது.) பயண சித்தரிப்புகள் எல்லாமே பிரமாதமாக வந்து விழுந்திருக்கின்றன.

சதுரங்க குதிரை நாவலை ஜெயமோகன் தன் இரண்டாம் பட்டியலில் வைக்கிறார்.

கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: நாஞ்சில் பக்கம்

சாஹித்ய அகடமி விருது பெற்ற புத்தகம்: கி.வா.ஜ.வின் “வீரர் உலகம்”

1967-இல் தமிழுக்கான சாஹித்ய அகடமி விருது பெற்ற புத்தகம்.

புத்தகம் தமிழரின் போர் சம்பிரதாயங்களை சிறப்பாக விளக்குகிறது.

வெட்சி நிரைகவர்தல்; மீட்டல் கரந்தையாம்;
வட்கார்மேற் செல்வது வஞ்சியாம்; உட்காது
எதிரூன்றல் காஞ்சி; எயில் காத்தல் நொச்சி;
அது வளைத்தல் ஆகும் உழிஞை – அதிரப்
பொருவது தும்பையாம்; போர்க்களத்து மிக்கோர்
செரு வென்றது வாகையாம்

என்ற செய்யுளின் நீட்சிதான் இந்தப் புத்தகம். அந்தக் காலத்தில் போர் புரிவதற்கு ஒரு சம்பிரதாயம், ஒழுங்குமுறை இருந்திருக்கிறதாம். போரின் ஒவ்வொரு கட்டத்துக்கும் வேறு வேறு மலர்கள் அணிந்து வந்து போரிடுவார்களாம். ஒரு வேளை சூடி இருக்கும் மலரை வைத்துத்தான் இவன் நம்மவன், இவன் எதிரி என்று அடையாளம் கண்டுகொண்டார்களோ என்னவோ. போரை ஆரம்பிக்கும் மன்னன் வெட்சிப்பூ அணிந்த வீரர்களை அனுப்பி எதிரி நாட்டின் ஆடுமாடுகளை கவர்ந்து வரச் செய்ய வேண்டும். அவர்களைத் தடுக்க வருபவர்கள் கரந்தைப் பூ அணிந்து வந்து தடுக்க வேண்டும். பிறகு அடுத்த கட்டமாக படையெடுத்த் செல்ல வேண்டும், அப்போது வஞ்சிப்பூ அணிந்திருக்க வேண்டும். அதை தடுத்து நிறுத்துபவர்கள் காஞ்சிப்பூ. எயிலை – அதாவது கோட்டையைக் காப்பவர்கள் நொச்சிப்பூ அணிந்திருக்க வேண்டும், முற்றுகை இடுபவர்களுக்கு உழிஞைப்பூ. இரு படைகளும் நேருக்கு நேர் நின்று சண்டை இடும்போது இரண்டு பேருக்கும் தும்பைப்பூவாம் (எதிரி, நம்மவன் என்று அடையாளம் கண்டுகொள்வது சிரமம் ஆயிற்றே!) வென்றவர் வாகைப்பூ அணியலாம்.

தும்பைப்பூவைத் தவிர் மிச்சப் பூக்கள் எப்படி இருக்கும் என்று கூடத் இதை எழுத ஆரம்பிக்கும்போது தெரியாது. இந்தப் பதிவுக்காக கூகிளில் தேடியபோது கிடைத்த படங்கள் கீழே. வஞ்சிப்பூவுக்கான படம் கிடைக்கவில்லை. பிறவற்றில் வெட்சி, கரந்தை, உழிஞை ஆகியவற்றைப் பார்த்திருக்கிறேன். யாருக்காவது தெரியுமா?

போர் நடவடிக்கை பூவின் பெயர் பூ ஆங்கிலப் பெயர்
எதிரி நாட்டின் கால்நடைகளைக் கவர்தல் வெட்சிப்பூ West Indian Jasmine
கால்நடைகளை மீட்டல் கரந்தைப்பூ ஆங்கிலப் பெயர் தெரியவில்லை
எதிரி நாட்டின் மீது படையெடுத்து செல்லுதல் வஞ்சிப்பூ Rattan
படையெடுத்து வருபவர்களை எதிர்த்தல் காஞ்சிப்பூ ஆங்கிலப் பெயர் தெரியவில்லை
கோட்டையை முற்றுகையிடல் நொச்சிப்பூ Chinese Chaste Tree
கோட்டையை காத்து நிற்றல் உழிஞைப்பூ Baloon Vine
நேருக்கு நேர் போர் தும்பைப்பூ Thumba
வெற்றி வாகைப்பூ Siris

எல்லாத்துக்கும் ஒரு சம்பிரதாயமா, இதெல்லாம் எப்படி ஆரம்பித்திருக்கும், ஏன் நிலை பெற்றிருக்கும், இந்தப் பூ எல்லாம் எப்போதும் பூக்குமா, பூக்காத காலத்தில் போரே நடக்காதா என்று பல கேள்விகள் எழுகின்றன. இதில் ஒவ்வொரு கட்டத்தையும் சங்கக் கவிதைகளையும் பிற்காலக் கவிதைகளையும் உதாரணமாக வைத்து சிறப்பாக கி.வா.ஜ. விளக்கி இருக்கிறார். அவரைப் போன்ற பண்டிதரின் பெருமை இந்தப் புத்தகத்தில் சரியாக வெளிப்படுகிறது.

ஆனால் இதற்கெல்லாம் சாஹித்ய அகடமி விருதா? நல்ல தமிழாசிரியர் கல்லூரியில், மேல்நிலைப் பள்ளியில் கொடுக்கக் கூடிய விளக்கம் மட்டுமே இது. கோனார் நோட்சுக்கு கொஞ்சம் மேலே. நல்ல அறிமுகப் புத்தகம், அவ்வளவுதான். கி.வா.ஜ.வுக்கு கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்துவிட்டார்கள், இருப்பதில் எது பெஸ்ட் என்று பார்த்திருக்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது. கி.வா.ஜ.வுக்கு எதற்கு சாஹித்ய அகடமி பரிசு என்றுதான் தோன்றுகிறது. அடுத்தபடி என்ன, கோனார் நோட்சுக்கு சாஹித்ய அகடமி விருது கொடுத்துவிடலாமா?

தொகுக்கப்பட்ட பக்கம்: சாஹித்ய அகடமி விருது

நாட்டுடமை

ஒரு கேள்வியோடு ஆரம்பிக்கிறேன். தமிழகத்தில் முதன்முதலாக நாட்டுடமை ஆன எழுத்து யாருடையது என்று தெரியுமா? உங்கள் ஊகத்தையாவது எழுதுங்கள்! வசதிக்காக ஒரு ஷார்ட் லிஸ்ட் கீழே.

வள்ளியம்மாள் பள்ளி நிறுவனரும் பச்சையப்பா கல்லூரி பேராசிரியருமான அ.மு. பரமசிவானந்தம் பற்றி எழுதும்போது தோன்றிய எண்ணங்கள் கீழே.

ஒருவரது எழுத்துகள் நாட்டுடமை ஆக்கப்படுவது ஒரு பெரிய கௌரவம் என்று எனக்கு ஒரு நினைப்பு. குறிப்பிட வேண்டிய அளவுக்கு தமிழ், தமிழர் பற்றி ஆராய்ச்சி செய்தவர்கள்(வையாபுரிப் பிள்ளை மாதிரி), ஒரு கால கட்டத்தின் முக்கியமான ஆகிருதிகள் (மு.வ. மாதிரி), இல்லை மிக தரமான எழுத்தாளர்கள்(சுந்தர ராமசாமி மாதிரி) ஆகியவர்களை கௌரவிப்பது ஒரு அரசு செய்யும் சில நல்ல விஷயங்களில் ஒன்று. அப்படிப்பட்டவர்களின் வாரிசுகளுக்கு பண உதவி என்ற ஒரு சிறு பயனாவது இதிலிருந்து வருவது என்னை பொறுத்த வரை நல்ல விஷயமே.

வெறும் உதவித்தொகையோடு நின்றுவிடக் கூடாது. அரசு இவர்களது புத்தகங்களுக்கு செம்பதிப்பு கொண்டு வர வேண்டும். அதெல்லாம் வெகுதூரம், ஆனால் குறைந்தபட்ச முயற்சியாக இவர்களின் அனேகரது புத்தகங்கள் இங்கே மின்பிரதிகளாக கிடைக்கின்றன.

பத்து வருஷத்துக்கு முன்னால் – 2009-இல் – 27 தமிழறிஞர்கள்/எழுத்தாளர்களின் படைப்புகள் நாட்டுடமை ஆக்கப்பட்டன. அப்போதுதான் எனக்கு நாட்டுடமை ஆக்கப்படுவது பற்றி பிரக்ஞையே ஏற்பட்டது. மறைந்த சேதுராமன் தயவால் அந்த் வருஷம் இந்த கௌரவம் கிடைத்த ஒவ்வொருவரைப் பற்றியும் தகவல் கிடைத்தது.

ஆனால் பல முறை இந்த கௌரவம் கலைமாமணி விருது போலத்தான் சகட்டுமேனிக்கு வழங்கப்படுகிறது. அதுவும் ஏதோ பிச்சை போடும் மனநிலையோடு – குறைந்தபட்சம் நான் புரவலன், இந்த எழுத்தாளர்/தமிழறிஞர் எல்லாம் இரவலர் என்ற மேட்டிமை மனப்பான்மையோடு வழங்கப்படுகிறது. அதுவும் உனக்கு இரண்டு லட்சம், அவனுக்கு 3 லட்சம், இவளுக்கு 4 லட்சம் என்று உதவித்தொகை குருட்டாம்போக்கில் நிர்ணயிக்கப்படுகிறது. 2009-இல் எழுத்தாளர் லட்சுமியின் குடும்பத்தினர் அந்த கௌரவத்தை நிராகரித்தனர். அன்றும் அவர் புத்தகங்களை விற்று வருகிற ராயல்டி இந்த உதவித்தொகையை விட அதிகமாக இருந்திருக்க வேண்டும். ஒரு வார்த்தை கேட்கமாட்டார்கள்? இத்தனை உதவித்தொகை கொடுக்கலாம் என்றிருக்கிறோம், இது உங்களுக்கு சம்மதம்தானா, ராயல்டி இன்னும் வருகிறதா எதுவுமா கேட்கமாட்டார்கள்? இரவலன் புரவலன் மேட்டிமைத்தனம்தான்.

சின்ன விஷயம், 2009-இல் 27 பேர்கள் தேர்வு என்று செய்தி வந்தது. அதில் நா.ரா. நாச்சியப்பனின் பெயர் இல்லை. சேதுராமன் இவரைப் பற்றிய தகவல்களை அனுப்பியபோது, இவர் பேர் பட்டியலில் இல்லையே என்று கேட்டேன். அவர் அன்றைய தமிழக நிதி அமைச்சர் அன்பழகனின் பட்ஜெட் உரையை அனுப்பினார். அதில் 28 பேர்கள் என்று தெளிவாக சொல்லி இருக்கிறது! (கூத்து என்னவென்றால் எண்ணிப் பார்த்தால் 29 பேர் இருக்கிறது. சேதுராமன் திருக்குறள் மணி என்பது அ.க. நவநீதகிருஷ்ணனின் பட்டப் பெயராக இருக்கும் என்று நினைக்கிறார்.) அது எப்படி ஒரு பத்திரிகை விடாமல் எல்லாரும் 27 பேர் என்று எழுதினார்கள்? ஒருவர் கூட என்ன ஏது என்று பார்க்கவில்லையா? முதலில் எழுதியவர் கைத்தவறுதலாக 27 என்று அடித்துவிட்டால் பின் வருபவர் எல்லாரும் அதையே சொல்லிக் கொண்டிருக்கிறார்களா? இதை எல்லாம் கருணாநிதியும் அன்பழகனுமே அன்று கண்டுகொள்ளவில்லை என்றால் இதில் யாருக்கும் பெரிதாக அக்கறை இல்லை என்று தெளிவாகத் தெரிகிறது.

கருணாநிதி காலத்தில் மேட்டிமைத்தனம் இருந்தாலும், (என் கண்ணில்) சில சமயம் தகுதி அற்றவர்களுக்கு இந்த கௌரவம் வழங்கப்பட்டாலும், 27-ஆ, 28-ஆ என்ற சிறு விஷயங்களைப் பற்றிக் கூட கவலைப்படாத ஒரு மேம்போக்க்குதனம் இருந்தாலும் இப்படிப்பட்டவர்களை கௌரவிக்க வேண்டும் என்ற ஒரு எண்ணமாவது இருந்தது. தமிழறிஞர்கள் பற்றிய பிரக்ஞையாவது இருந்தது. அதிமுக ஆட்சியில் சுத்தம். (நாளைக்கு ஸ்டாலின் தலைமையில் ஆட்சி ஏற்பட்டாலும் இதே லெவலில்தான் இருப்பார் என்று நினைக்கிறேன்.)

2009-இன் பட்டியலில் ஜே.ஆர். ரங்கராஜு, வடுவூர் துரைசாமி ஐயங்கார் ஆகியோர் பேர்கள் கண்ணில் பட்டன. இவர்கள் அந்த காலத்து ராஜேஷ்குமார் மாதிரி. ராஜேஷ்குமாரால் தமிழ் படிப்பு வளர்ந்திருப்பது உண்மைதான். ஆனால் அவரது எழுத்துகள் தமிழில் நிற்க வேண்டும் என்று யாரும் முயற்சி செய்யப் போவதில்லை, கூடாது. இவர்களை சின்ன வயதில் கருணாநிதி படித்து த்ரில் ஆகி இருக்கலாம். அதற்காக அவர்களது படைப்புகளை நாட்டுடமை ஆக்க நினைப்பது தவறு என்று தோன்றியது.

முழுப் பட்டியலையும் பார்த்தேன். எனக்கு தமிழோடு ஓரளவு பரிச்சயம் உண்டு என்ற எண்ணமும் உடனே காலி ஆகிவிட்டது. முக்கால்வாசி பேர் யாரென்று தெரியவில்லை. சில தெரிந்த பேர்கள் இருந்தாலும் அவர்கள் என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை – புலியூர் கேசிகன் மாதிரி.

நமக்கு தெரிந்த வரை நம் தளத்தை படிக்கும் மாபெரும் கூட்டமான 30-40 பேருக்கு இவர்களை அறிமுகம் செய்து வைப்போம் என்று ஒரு பதிவு எழுதினேன். அதில் பலருடைய பங்களிப்பு என்னவென்றே தெரியவில்லை என்று சொல்லி இருந்தேன்.

சேதுராமன் வசமாக மாட்டினார். என்னடா உனக்கு ஒன்றும் தெரியவில்லையே என்று அவர் ஒரு மறுமொழி எழுத, உங்களுக்கு தெரிந்தால் நீங்கள் ஒரு guest போஸ்ட் எழுதுங்களேன் என்று அவரை கேட்டுக் கொண்டேன். அவரும் விடாமல் எழுதினார். பல முறை இந்தப் பட்டியலில் இருந்த தமிழறிஞர்கள்/எழுத்தாளர்கள் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு தகவல்கள் சேகரித்தார். அவரது உழைப்பை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

இதில் எல்லாம் பலருக்கும் பெரிதாக அக்கறை இருக்கப் போவதில்லை. ஆனால் எனக்கு என்னவோ இந்த கௌரவம் கிடைத்த ஒவ்வொருவரையும் – தகுதி உள்ளவர்களோ இல்லையோ – பற்றி ஒரு சிறு குறிப்பாவது இருக்க வேண்டும் என்று ஒரு ஆசை. அவ்வப்போது நானும் பிறரைப் பற்றியும் எழுதி இருக்கிறேன். இருந்தாலும் எந்த வரிசைப்படியும் எழுதவில்லை. அப்படி ஒரு சீரிசை ஆரம்பிக்கலாம் என்று நினைத்திருக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: நாட்டுடமை ஆன எழுத்து