வீழ்ச்சி

வினவு தளம் ஆரம்பித்த காலத்தில் நான் அங்கே செயலாக இருந்தேன். அவர்கள் ஆரம்பித்த ஒரு வருஷத்தில் தொகுத்துப் போட்ட புத்தகத்தில் என் பங்களிப்பும் உண்டாம். அவர்களுடைய வார்த்தைகளில்:

வினவின் விவாதங்களில் சண்டாமிருதம் செய்யும் அண்ணன் ஆர்.வியின் வாதங்களெல்லாம் மும்பை நூலில் இருப்பது அவருக்கு தெரியுமா என்பது தெரியாது.

ஆனால் ஹிந்துக்கள் – குறிப்பாக பார்ப்பனர்கள் பற்றிய வினவு தளத்தின் இரட்டை நிலை கசப்பை அதிகப்படுத்திக் கொண்டே போனது. முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்றால் பொங்கி எழுபவர்கள் பார்ப்பனர்கள் எல்லாரும் அயோக்கியர்கள் என்று எப்படி எழுதுகிறார்கள், வெறும் அரசியல் நிலையும் இயக்க சார்பும் கண்ணை இப்படியும் மறைக்குமா என்று புரிந்து கொள்ளவே முடியவில்லை. இப்போது எப்படியோ தெரியாது, அப்போதெல்லாம் “பார்ப்பன” என்ற அடைமொழி இல்லாமல் அவர்களால் ஃபாசிசம் என்ற வாரத்தையை எழுதவே முடியாது.  முசோலினியின் ஃபாசிச இயக்கத்தைப் பற்றி எழுத வேண்டுமென்றால் கூட பார்ப்பன ஃபாசிசம் என்றுதான் எழுதுவார்கள். அணுகுமுறையில் இருக்கும் முரண்பாடுகளை சுட்டிக் காட்டினால் பதில் வராது, ஊரைச் சுற்றுவார்கள், தனி மனிதத் தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டே இருந்தன. ஒரு கட்டத்தில் தலைமுழுகிவிட்டேன்.

அந்த காலகட்டத்தில்தான் தீவிர ஹிந்துத்துவர்களான ஜடாயு மற்றும் அரவிந்தன் நீலகண்டன் அறிமுகமானார்கள். அரசியல் நம்பிக்கைகள் வேறாக இருந்தன, ஆனால் தெளிவாகத் தங்கள் கருத்துக்களை முன்வைத்தார்கள். கருத்து வேறுபாடுகள் இருந்தன, ஆனால் ஒருவர் நிலையை மற்றவரால் புரிந்து கொள்ள முடிந்தது. வினவு தளத்தில் பல அரை வேக்காட்டு பதில்களை சந்தித்த எனக்கு தர்க்கபூர்வமாக சிந்திக்கக் கூடியவர்களிடம், நாகரீகமான மொழியில் பேசக் கூடியவர்களிடம் பேசுவது பெரிய relief ஆக இருந்தது. எங்கே இசைவு இருந்தது, எங்கே என்ன பேசினாலும் இசைவு வராது என்றெல்லாம் தெளிவாகப் புரிந்தது.

ஜடாயுவின் கம்ப ராமாயணம் பற்றிய பேச்சும் எழுத்தும் கவிதை என்றால் ஓடும் எனக்கே கொஞ்சம் ஆர்வத்தை ஏற்படுத்தின. சிறந்த வாசகர்கள் என்று தெரிந்தது. ஜடாயு ஆசிரியராக இருந்த (இருக்கும்?) தமிழ் ஹிந்து தளத்தில் நானும் அவ்வப்போது எழுதினேன். என் மஹாபாரதக் கதைகள் அனேகமாக அந்தத் தளத்தில்தான் பதிக்கப்பட்டன. அரவிந்தன் அமெரிக்கா வந்தபோது என் வீட்டில் நண்பர்களுடன் அவருடைய கலந்துரையாடல் நடந்தது என்று நினைவு. (ஒரு வேளை ஜடாயு மட்டும்தானோ, சரியாக நினைவில்லை.)

இன்று அரசியல் நிலை அவர்களை எத்தனை மாற்றி இருக்கிறது என்பது கொஞ்சம் வருத்தப்பட வைக்கிறது. ஜடாயு போன்ற ஒரு சிறந்த வாசகர் மோடிக்கு எதிரான அறிக்கையில் கையெழுத்திட்ட கி. ராஜநாராயணனுக்கு இந்திய அரசு என்ன மயிருக்கு (அவருடைய வார்த்தைப் பிரயோகம்) பத்மஸ்ரீ விருது வழங்க வேண்டும் என்று கேட்டார். மோடிக்கு எதிரான அரசியல் நிலைக்கும் கி.ரா.வின் இலக்கிய சாதனைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால், கி.ரா. மோடியை எதிர்க்கவில்லை, வெறுக்கிறார் என்று அடுத்த கட்டத்துக்கு தாவினார். எதிர்ப்பு என்பது வெறுப்பு அல்ல, அப்படி வெறுப்பாகவே இருந்தாலும் சரி, அதற்கும் கி.ரா.வின் இலக்கிய சாதனைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டதற்கு கி.ரா.வுக்கு மோடி மீதல்ல, ஹிந்து மதத்தின் மீதே, இந்தியப் பண்பாட்டின் மீதே வெறுப்பு என்று முடித்துக கொண்டார். யாருக்கு ஹிந்து மதத்தின் மீது வெறுப்பு? முஸ்லிம் அடக்குமுறைக்கு பயந்து ஊர்விட்டு ஊர் வந்த நாயக்கர் வாய்மொழி வரலாற்றை கோபல்ல கிராமத்தில் பதிவு செய்த கி.ரா.வுக்கு! மோடிக்கு எதிராக வாக்களித்த நாற்பத்து சொச்சம் கோடி இந்தியர்களும் தேசத் துரோகிகள் என்பதில் தெளிவாக இருக்கிறார். (அரவிந்தன் கி.ரா.வுக்கு தகுதி இருந்தால், இலக்கிய சாதனையாளர் என்றால் விருது வழங்குவதில் தவறில்லை என்றார். பாவம், கி.ரா. இலக்கியத்தில் சாதனை புரிந்திருக்கிறாரா இல்லையா என்று அவருக்குத் தெரியவில்லை.)

அரவிந்தன் நிலையோ இதை விட மோசம். வினவு தளத்துக்கு பார்ப்பன ஃபாசிசம் என்றால் இவருக்கு “நேருவிய” அடைமொழி இல்லாமல் ஃபாசிசம் என்று எழுதவே முடிவதில்லை. வாயுத் தொந்தரவு ஏற்பட்டால் அதற்கும் காரணம் நேற்று சாப்பிட்ட பருப்பு வடை அல்ல, நேருவிய ஃபாசிசமே  என்ற நிலைக்கு வந்துவிட்டார்.

சவர்க்கார் அந்தமானில் பட்ட துன்பங்களை நேரு படவில்லை, அவரது சிறைவாசம் சொகுசானது என்றெல்லாம் எழுதுகிறார். விட்டால் திலகர் சிறையில் செக்கிழுக்கவில்லை, அதனால் அவரது தியாகம் வ.உ.சி.யை விடக் குறைவானது என்று சொல்லுவார் போல. இவர் இப்படி எழுதினால் இன்னொரு பிராந்தன் அப்பா மோதிலால் வக்கீல் தொழிலை விட்டு பல ஆண்டுகளுக்குப் பிறகும் விடுமுறைக்கு ஐரோப்பா செல்லக் கூடிய பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் தன் உல்லாச வாழ்க்கையை தியாகம் செய்து சிறை சென்றார், சவர்க்கார் தன் சாதாரண (ஒரு வேளை ஏழையோ?) வாழ்க்கையைத்தானே தியாகம் செய்தார் அதனால் நேருவின் தியாகமே உயர்ந்தது என்று எழுதுவான். சரி அப்படி சிறையில் எத்தனை கஷ்டம் என்பதுதான் பங்களிப்பை தீர்மானிக்கும் அளவுகோல் என்றால் ஆர்.எஸ்.எஸ்ஸை மிகக் கவனமாக ஆங்கில அரசை எதிர்க்காமல் பார்த்துக் கொண்ட, சிறை இருந்த பக்கம் கூட செல்லாத கோல்வால்கரை ஏன் ஹிந்துத்துவர்கள் உயர்த்திப் பிடிக்கிறீர்கள்? கோல்வால்கர் நேருவை விடத் “தாழ்ந்தவர்” என்றும் ஒத்துக் கொள்வாரா?

அரவிந்தனை மறுத்து கருத்து சொன்னால் அவர் முன் வைக்கும் வாதம் ஒன்றே ஒன்றுதான் – என் கருத்தை மறுப்பவனுக்கு மூளையில்லை! அவரது மொழியோ – சிங்கம், சிறுமதி, பருப்பு, கொட்டை என்று திராவிடக் கட்சிகளின் வாரிசாக மாறிக் கொண்டிருக்கிறார். காளிமுத்து கெட்டார்! சாம்பிளுக்கு ஒன்று.

நேருவிடம் கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் கேட்கிறது இந்த சிறுமதி… இந்த லட்சணத்தில் என்னிடம் வந்து இண்டக்ரிட்டி பருப்புவிதை பட்டாணி விதை பூசணி விதை என கொட்டை பிரச்சனை வேறு செய்கிறது இந்த ஆபாசம்.

அரவிந்தன் JNU-வில் மாணவர்களை அடித்தவர்கள் கத்தி கம்போடு அல்ல, எந்திரத் துப்பாக்கிகளோடு போயிருக்க வேண்டும் என்ற ஒரு பதிவை தன் timeline-இல் பகிர்ந்துகொண்டார். உண்மையிலேயே சுட்டுத் தள்ளி படுகொலை செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா என்று அதிர்ச்சியோடு நான் கேட்டபோது நான் வன்முறையை ஆதரிக்கவில்லை, ஆனால் JNU எப்படி பணியாற்றுகிறது என்பது விசாரிக்கப்பட வேண்டிய விஷயம் என்றார். வன்முறையை எதிர்ப்பவர் விடுதியில் இருக்கும் மாணவர்களை தாக்கியவர்களை கண்டித்தால் புரிந்து கொள்ளலாம். கத்தி கபடா பத்தாது, துப்பாக்கி கொண்டு போயிருந்திருக்க வேண்டும் என்று பகிர்ந்தது புரியவில்லை. சரி ஏதோ இந்த அளவுக்காவது சொல்கிறாரே, JNU மேல் உள்ள கோபம் அப்படி வெளிப்பட்டிருக்கிறது, யோசிக்காமல் பகிர்ந்திருப்பார் என்று நினைத்துக் கொண்டேன். அடுத்த படியாக சட்டத்துக்கு விரோதமாக துப்பாக்கி தூக்குபவராக பரிணமிக்காமல் இருக்க கடவுளைப் பிரார்த்திக்கிறேன்.

சுதாகர் கஸ்தூரி முஸ்லிம்கள் கற்பழிக்க வந்தால் ஹிந்துப் பெண்கள் பேசாமல் படுத்துக்கொள்ள வேண்டும் என்று காந்தி சொன்னதாக ஒரு பதிவு போட்டார். உடனே பலரும் காந்தியைப் போன்ற ஒரு காதகன் கிடையாது என்று ஜிங்குஜிங்கென்று குதித்தார்கள். சுதாகர் காந்தி “மாமா” என்று – அதாவது pimp என்று அழைக்கப்பட வேண்டும் என்றெல்லாம் எழுதினார். அது தவறான மேற்கோள், பயன்படுத்தப்பட்ட தரவு வேண்டுமென்றே இல்லாத ஒன்றைச் சொல்கிறது என்று தெளிவாக நிரூபிக்கப்பட்ட பிறகும் தன் பதிவை மாற்ற அவருக்கு நேரம் பிடித்தது. வேண்டுமென்றேதான் போட்டேன், ஆனால் எனக்கு உள்நோக்கமில்லை என்கிறார். குத்துமதிப்பாக அவருடைய வார்த்தைகளில் – It was deliberate, but I had no ulterior motive. உள்நோக்கமில்லை என்றால் என்ன வெளிநோக்கத்தோடு போட்டார் என்று எனக்குப் புரியவில்லை. ஜிங்குஜிங்கென்று குதித்தவர்கள் ஒருவராவது – சுதாகர் உட்பட – அடடா தவறாகப் புரிந்து கொண்டுவிட்டோம், தவறான மேற்கோளை அடிப்படையாக வைத்து எதிர்வினை புரிந்துவிட்டோம் என்று சொல்ல வேண்டுமே!  குறைந்தபட்சம் காந்தியை மாமா என்று சொன்னது தவறு என்றாவது சொல்ல வேண்டுமே!  அதுதான் கிடையாது. அடிப்படை நேர்மை இல்லாத கூட்டம்.

சுதாகர் இன்னமும் காந்தி அப்படி சொல்லி இருக்கலாம், அப்படி காந்தி சொல்லவில்லை என்று நிரூபிக்கப்படும் வரைக்கும் இப்படி தவறான குற்றச்சாட்டை வைத்தவர்களுக்கு சந்தேகத்தின் பலன் அளிக்கப்பட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். குற்றம் சாட்டுபவர் அல்லவா தரவு தர வேண்டும்? சுதாகர் தன் பக்கத்து வீட்டுக்காரன் கையை வெட்ட வேண்டும் என்று வியாழக்கிழமை மாதுங்காவில் தமிழ் மன்றக் கூட்டத்தில் தன் உரையில் சொன்னார் என்று நான் சொன்னால்; மாதுங்கா தமிழ் மன்றக் கூட்டத்தில் சுதாகர் உரையாற்றவே இல்லை என்று நிரூபிக்கப்பட்டால்; சுதாகர் இது வரை போட்ட நூற்றுக்கணக்கான ஃபேஸ்புக் பதிவுகள், ஆற்றிய சில பல உரைகள் எல்லாவற்றையும் ஆராய்ந்து அவர் எந்த உரையிலும், எந்த பதிவிலும், அப்படி சொல்லவில்லை என்று நிரூபிக்கப்படும் வரைக்கும் எனக்கு அவர் சந்தேகத்தின் பலனை அளித்துவிடுவாராக்கும்! நானும் ரௌடிதான், கையை வெட்டச் சொன்னாலும் சொல்லி இருப்பேன் என்பாராக்கும்!

ஏதோ தவறான மேற்கோள் என்று அம்பை பல முறை சொன்ன பிறகாவது ஆமாம் தவறான மேற்கோள் என்று பதிவை மாற்றினாரே, அந்த வரைக்கும் சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

ஹிந்துத்துவ “அறிவுஜீவிகளே” வினவு தளம் ரேஞ்சில்தான் யோசிக்கிறார்கள், வெறும் பிரச்சார நோக்கத்துக்காக, ஒருவரை ஒருவர் சொரிந்து கொள்வதற்காக மட்டும்தான் பேசுகிறார்கள்/எழுதுகிறார்கள் என்றால் இவர்கள் முன் வைக்கும் அரசியல் ஹிந்துத்துவத்தில் ஒரு சுக்கும் இல்லை என்று தெளிவாகப் புரிகிறது…