நாட்டுடமை ஆன எழுத்து 5: முன்னாள் நியூ காலேஜ் பேராசிரியர் பாலூர் கண்ணப்ப முதலியார்

பாலூர் கண்ணப்ப முதலியார் பேரை நான் முதன்முதலாக கேள்விப்பட்டது 2009-இல் அவரது நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டபோதுதான். மறைந்த சேதுராமன் வழக்கம் போல படாதபாடு பட்டு அவரைப் பற்றிய விவரங்களைத் தேடிப் பதித்தார். மறைந்த டோண்டு ராகவன் முதலியார் அவருக்கு பாடம் எடுத்திருக்கிறார் என்று சொன்னார். பள்ளி மாண்வர்களின் பாடப் புத்தகங்களை நிறைய எழுதி இருப்பார் என்று அவரது புத்தகப் பட்டியலிலிருந்து தோன்றுகிறது. அகராதி ஒன்றைத் தொகுத்திருக்கிறார். அகராதியில் தொகை அகராதி என்று ஒரு பகுதி – அரசர் கொடி என்றால் சேரர்களின் விற்கொடி, சோழர்களின் புலிக்கொடி, பாண்டியர்களின் மீன்கொடி – என்றை தொகுத்திருக்கிறார். அகத்தியத்தில் ஆரம்பித்து புத்தகங்களைப் பற்றி ஒரு பகுதி இருக்கிறது. என் கண்ணில் இது முக்கியப் பங்களிப்பு, இதற்காக மட்டுமே இவரது புத்தகங்களை நாட்டுடமை ஆக்கலாம்.

சேதுராமனின் பதிவில்

“இவரது எழுத்துகளை எல்லாம் அரசே பதிப்பித்தல் ஒழிய திரும்பி வருவது அபூர்வம்தான். பதித்தாலும் நான் படிக்கப் போவதில்லை என்பது அடுத்த விஷயம்.”

என்று கமெண்ட் அடித்திருந்தேன். அதிகமான், இலக்கிய தூதர்கள், கட்டுரைக் கதம்பம், கட்டுரைக் கொத்து, கவி பாடிய காவலர், கிரேக்க நாட்டு பழமைப் பண்புகள், குமுதவாசகம், புதுமை கண்ட பேரறிஞர், பொய்யடிமை இல்லாத புலவர் யார்?, தமிழ்ப்புலவர் அறுவர், தூது சென்ற தூயர், தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவஸ்தலங்கள், பாண்டி நாட்டுக் கோவில்கள் போன்ற நூல்களை புரட்டியும் பார்த்தேன். படிக்க முடியவில்லை என்பது உண்மையே. இருந்தாலும் என் கமெண்டை திரும்பிப் படிக்கும்போது உண்மையாக இருந்தாலும் அதை கொஞ்சம் பணிவாக சொல்லி இருக்கலாம் என்று தோன்றுகிறது. வயதாகிறது, எனக்கே தெரியாமல் எனக்கு கொஞ்சம் முதிர்ச்சி ஏற்பட்டுவிட்டதோ என்னவோ தெரியவில்லை.

என் கண்ணில் ஒரு அட்டவணைக்கு தேவை இருக்கிறது – பாடல் பெற்ற ஸ்தலம்-கோவில், பாடிய ஆழ்வார்/நாயனார், பாடல். பலரும் – கி.வா.ஜ., பாஸ்கரத் தொண்டைமான், கண்ணப்ப முதலியார் என்று தாங்கள் சென்ற கோவில்/பாடல் என்று எழுதி இருக்கிறார்கள். ஆனால் ஒரு அட்டவணை இருந்தால் மிக நன்றாக இருக்கும். ஏற்கனவே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது, யாருக்காவது தெரிந்தால் சுட்டி கொடுங்கள்!

சேதுராமனின் குறிப்புகள்:

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த பாலூரிலே, வேளாளர் குலத்திலே, 1908ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 14ம் தேதி பிறந்தவர். பெற்றோர்கள் துரைசாமி முதலியார், மாணிக்கம்மாள். துரைசாமி முதலியார் செந்தமிழ்ப் பற்றும், சிவபிரானிடத்திலே பேரன்புமுடையவர். தம்முடைய புதல்வருக்கும் இவை இனிதமைய வேண்டுமென்று பெரிதும் முயன்றவர்.

கண்ணப்பர், பள்ளிக் கல்வியைக் கற்று முடித்த பிறகு, செந்தமிழ்க் கல்வி கற்பதிலே சிந்தையைச் செலுத்தினார். சென்னை கலாநிலைய இதழாசிரியர் டி.என்.சேஷாசல ஐயர் இவருக்கு ஆங்கிலத்தையும் தமிழ் இலக்கண இலக்கியங்களையும் நன்கு கற்பித்தார். மேலும் மே.வீ. வேணுகோபால பிள்ளையிடம் நன்னூல் விருத்தி, தண்டியலங்காரம், திருவிளையாடற் புராணம், அஷ்டப் பிரபந்தம், சீவக சிந்தாமணி முதலிய நூல்களைப் பயின்றார். இலக்கண இலக்கிய தருக்க வேதாந்த போதகாசிரியரான கோ.வடிவேல் செட்டியாரிடம் திருக்குறள், திருவாசகமும், சூளை வைத்தியலிங்கம் என்பவரிடம் தேவாரத்தையும் இசையுடன் கற்றார். சித்தாந்த நூல்களை தாமே பயின்றார், வேண்டுமளவு சைவ சித்தாந்த நூலறிவையும் பெற்றுத் தம் அறிவைப் பெருக்கிச் சிறந்த தமிழறிஞரானார்.

நல்ல தமிழ்ப் புலமையை அடைந்த இவர், பின்னர் ஆசிரியத் தொழிலில் ஈடுபடலானார். புரசைவாக்கம் லூதெரன் மிஷன் உயர் நிலைப்பள்ளியில் துணைத் தமிழாசிரியராக எட்டாண்டுகள், முத்தியால்பேட்டை உயர் நிலைப்பள்ளியில் நான்காண்டுகள், திருவல்லிக்கேணி கெல்லட் உயர் நிலைப் பள்ளியில் பதினான்கு ஆண்டுகள் பணி புரிந்த பின்னர், இராயப்பேட்டை புதுக் கல்லூரியில்தொடக்க காலத்தில் இருந்து பதினாறாண்டுகள் வரை தமிழ்த்து ைத் தலைவராகவும், பேராசிரியராகவும் விளங்கினார்.

சென்னை சைவ சித்தாந்த சமாஜம், சென்னை எழுத்தாளர் சங்கம், செங்கை மாவட்ட எழுத்தாளர் சங்கம் போன்றவற்றில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு பல பணிகள் புரிந்தார். சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பாடத் திட்டக்குழுவிலும் சிறந்த முறையில் நற்பணியாற்றினார்.

தெய்வானையம்மையார் என்பவரை மணம் புரிந்து கொண்டு இல்வாழ்க்கையை நடத்தியவருக்கு ஏழு பெண்மக்கள் தோன்றினர். ஆசிரியராகப் பலருக்குக் கல்வி கற்பித்ததோடு நிற்காமல் பின் கண்ட பல நூல்களையும் எழுதியுள்ளார்.

 • அதிகமான்
 • அமலநாதன்
 • அறுசுவைக் கட்டுரைகள்
 • அன்புக் கதைகள்
 • இங்கிதமாலை உரை
 • இலக்கிய வாழ்வு
 • இலக்கியத் தூதர்கள்
 • இன்பக் கதைகள்
 • கட்டுரைக் கதம்பம்
 • கட்டுரைக் கொத்து
 • கந்தர் சஷ்டிச் சொற்பொழிவுகள்
 • கலை வல்லார்
 • கவி பாடிய காவலர்கள்
 • சங்க கால வள்ளல்கள்
 • சமரச சன்மார்க்க சத்திய சங்க விளக்கம்
 • சிறுவர் கதைக் களஞ்சியம்
 • சீவகன் வரலாறு
 • சேக்கிழார் பிள்ளைத் தமிழ் உரை
 • தமிழ் இலக்கிய அகராதி
 • தமிழ் நூல் வரலாறு
 • தமிழ் மந்திர உரை
 • தமிழ்த் தொண்டர்
 • தமிழ்ப் புதையல்
 • தமிழ்ப் புலவர் அறுவர்
 • தமிழர் போர் முறை
 • திருஈங்கோய் மலை எழுபது உரை
 • திருக்குறள் அறத்துப்பால் உரை நடை
 • திருமணம்
 • திருவருள் முறையீடு உரை
 • திருவெம்பாவை உரை
 • தொண்டை நாட்டுப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
 • தொழிலும் புலமையும்
 • நகைச்சுவையும் கவிச்சுவையும்
 • நானே படிக்கும் புத்தகம்
 • நீதி போதனைகள்
 • பல்சுவைப் பாமாலை குறிப்புரை
 • பழமை பாராட்டல்
 • பாண்டிய நாட்டுப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
 • புதுமை கண்ட பேரறிஞர்
 • பொய்யடிமையில்லாத புலவர் யார்?
 • மாண்புடைய மங்கையர்
 • வையம் போற்றும் வனிதையர்
 • வள்ளுவர் கண்ட அரசியல்
 • ஜான்சன் வாழ்க்கை வரலாறு
 • மாணவர் தமிழ்க் கட்டுரை
 • மாணவர் திருக்குறள் விளக்கம்
 • தொடக்கப் பள்ளி மாணவர் இலக்கண விளக்கம்
 • நடுநிலைப் பள்ளி மாணவர் இலக்கண விளக்கம்
 • உயர்நிலைப் பள்ளி மாணவர் இலக்கண விளக்கம்
 • பூந்தமிழ் இலக்கணம்
 • புதுமுறை இலக்கணமும் கட்டுரைகளும்
 • நடுநிலை வகுப்பு குமுத வாசகங்கள்
 • உயர்நிலை வகுப்பு செந்தமிழ்ச் சிலம்பு
 • உயர்நிலை வகுப்பு தமிழ்ப் புதையல்

கண்ணப்ப முதலியார் தம்முடைய இறுதிக் காலத்தில், சென்னை பல்கலைக் கழகத்தில் அப்பரடிகள் திருமுறை பற்றிய ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்பணி நிறைவேறு முன்னரே தமது அறுபத்திரண்டாம் வயதில் 1971ம் ஆண்டு மார்ச்சு 29ம் இறைவன் திருவடி நிழலை அடைந்தார்.

(தகவல் — “தமிழ்ப் புலவர் வரிசை” பத்தாம் பகுதி, இருபத்தியொன்பதாம் புத்தகம் — ஆசிரியர் திரு சு.அ.இராமசாமிப் புலவர் — வெளியிட்டோர் ‘திரு நெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட் – சென்னை 1973)

ஆர்வி: இவரது எழுத்துகளை எல்லாம் அரசே பதிப்பித்தல் ஒழிய திரும்பி வருவது அபூர்வம்தான். பதித்தாலும் நான் படிக்கப் போவதில்லை என்பது அடுத்த விஷயம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: நாட்டுடமை ஆன எழுத்து, தமிழறிஞர்கள்

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.