பொன்னியின் செல்வனை முதன்முதலாகப் படிக்கும்போது 13 வயதிருக்கலாம். வாரப்பத்திரிகை பக்கங்களைக் கிழித்து பைண்ட் செய்த புத்தகங்கள். வைத்திருந்த் உறவினரோ தருவதற்கு ஒரே பிகு. கெஞ்சிக் கூத்தாடி வாங்கிப் படித்தேன். கீழே வைக்க முடியவில்லை. கதைப்பின்னல் அத்தனை சுவாரசியமாக இருந்தது. ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார் என்பதை பதில் இல்லாத கேள்வியாக இல்லை இல்லை எந்த பதிலிலும் ஓட்டை இருக்கும் கேள்வியாகப் படைத்தது அபாரமான உத்தி ஆகத் தெரிந்தது/தெரிகிறது. நந்தினியின் பாத்திரப் படைப்பு, ஆழ்வார்க்கடியானின் அலப்பறைகள், ஆதித்த கரிகாலனின் மனச்சிக்கல்கள், அருண்மொழிவர்மன், பெரிய பழுவேட்டரையர், பூங்குழலி, மந்தாகினி, குந்தவை ஏன் கந்தமாறனும் மணிமேகலையும் பினாகபாணியும் மதுராந்தனும் ரவிதாசன் தலைமையிலான ஆபத்துதவிகள் வரை மிகவும் அருமையான பாத்திரப் படைப்புகள். இன்று வரையில் தமிழில் இதை விடச் சிறந்த அரண்மனைச் சதி sub-genre சரித்திர நாவல் வந்ததில்லை. இதற்கு சமமான ஆகிருதி உள்ள சரித்திர நாவல் என்று எனக்குத் தெரிவது பிரபஞ்சனின் மானுடம் வெல்லும் ஒன்றுதான். அலெக்சாண்டர் டூமா மேலை உலகத்தில் கொண்டாடப்படுகிறார். அவர் எழுதிய எந்த நாவலையும் விட பொ. செல்வன் சிறப்பான கதைப்பின்னல் கொண்டது. வால்டர் ஸ்காட் எல்லாம் எங்கோ பின்னால்தான் நிற்க வேண்டும்.
இன்றும் கல்கி போட்ட ரோட்டில்தான் அனேகத் தமிழ் வரலாற்று நாவல் எழுத்தாளர்கள் வெறும் கோடு மட்டுமே போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் யாரும் அவரை நெருங்க முடியவில்லை. சாண்டில்யன் உட்பட.
ஆனால் இன்று 13 வயது இல்லை, நாலு கழுதை வயதாகிவிட்டது. அதனால் குறைகள் தெரிகின்றன. பொ. செல்வனைப் படிப்பவர்களுக்கு தமிழகத்தில் அன்று ஜாதி என்று ஒன்று இருந்ததா என்பது கூடத் தெரியாது. ராஜாவும் இளவரசர்களும் குறுநில மன்னர்களும் ஒற்றர்களும் அமைச்சர்களும்தான் சமூகமே. ஏதோ பேருக்கு அங்குமிங்கும் ஒரு ஜோதிடரும் வைத்தியரும் ஓடக்காரன்/ஓடக்காரியும் வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு அரண்மனையோடு நெருங்கிய உறவிருக்கிறது. சரித்திர நாவலின் வீச்சு என்பது மிகவும் குறைந்திவிடுகிறது. கதைப்பின்னல் மட்டுமே நாவலின் பெரும்பலமாக நிற்கிறது. பெரும் மானிட தரிசனம் என்று எதுவும் கிடைத்துவிடப் போவதில்லை. மனிதர்களில் இயல்புகளைத் தோலுரித்துக் காட்டிவிடும் படைப்பில்லை. சுவாரசியம் மட்டுமே இலக்காக வைத்து எழுதப்பட்ட நாவல். அதில் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. ஷெர்லக் ஹோம்ஸ் கதைகள் போல. அதனால் minor classic என்றுதான் வகைப்படுத்துவேன்.
பொ. செல்வனைப் படிக்காதவர்களுக்காக: பொ. செல்வன் என்று அழைக்கப்படுபவன் அருண்மொழிவர்மன் – பிற்காலத்தில் ராஜராஜ சோழன். அருண்மொழிவர்மனின் அண்ணனும் பட்டத்து இளவரசனும் ஆன ஆதித்தகரிகாலன் நந்தினியை விரும்புகிறான். நந்தினிக்கோ ஆதித்த கரிகாலனின் எதிரியான வீரபாண்டியனோடு உறவு. இது தெரிந்ததும் ஆதித்த கரிகாலன் வீரபாண்டியனைக் கொல்கிறான். நந்தினி ஆதித்த கரிகாலனை பழிவாங்க சோழ அரசின் முக்கியத் தூணான கிழவரான பெரிய பழுவேட்டரையரை மணக்கிறாள். பழுவேட்டரையர் அவள் சொல்படி ஆடுகிறார். ஆதித்த கரிகாலனுக்கு பதிலாக அவனது பெரியப்பாவின் மகனான “போலி” மதுராந்தகனை அரசனாக்க சதி செய்கிறாள். எதிர்தரப்பில் வந்தியத்தேவனும், இளவரசி குந்தவையும், அருண்மொழிவர்மனும். ஆதித்தகரிகாலன் கொல்லப்படுகிறான். அருண்மொழி அரசனாகாமல் உண்மையான மதுராந்தகனை அரசனாக்குவதுடன் கதை முடிகிறது.
வந்தியத்தேவன் தற்செயலாக சம்புவராயர் அரண்மனைக்கு வருவதும் அங்கே சதியோலாசனை ஒன்றை ஒட்டுக் கேட்பதிலும் ஆரம்பிக்கும் கதை அங்கிருந்தே கீழே வைக்க முடிவதில்லை. வந்தியத்தேவன் நந்தினியைச் சந்திப்பதும், கந்தமாறன் அவனை துரோகி என்று நினைப்பதும், குந்தவையின் ஓலை கொண்டு வந்தியத்தேவன் அருண்மொழியை சந்திக்க செல்வதும், பூங்குழலியின் உதவியோடு சந்திப்பதும், ஆபத்துதவிகள் சோழ மன்னர் பரம்பரையையே ஒழித்துக் கட்ட முயற்சிப்பதும் இரண்டு கொலை முயற்சிகள் தோற்பதும், ஒன்று வெல்வதும், பெரிய பழுவேட்டரையரின் மரணமும் ஒன்றன்பின் ஒன்றாக நம்மை வேறு உலகத்துக்கு கொண்டுபோய்விடுகின்றன. ஆழ்வார்க்கடியான், பூங்குழலி போன்றவர்கள் சிறப்பாக வடிக்கப்பட்ட பாத்திரங்கள்.
பதின்ம வயதில் நண்பர்கள் பல மணி நேரமாக ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார் என்று பேசி இருக்கிறோம். பெரிய பழுவேட்டரையர் தான்தான் கொன்றேன் என்று ஒத்துக் கொள்கிறார். ஆனால் அவர் இறக்கும்போது தான் கொலையாளி இல்லை என்று சொல்லிவிட்டு இறக்கிறார். ஆதித்தகரிகாலன் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று சொல்வதாக ஒரு வரி வரும், ஆனால் தற்கொலை இல்லை என்றும் கல்கி தெளிவுபடுத்திவிடுவார். நந்தினி கொல்லவில்லை. ஆபத்துதவியை பெரிய பழுவேட்டரையரே தாக்கிவிடுவார். பிறகு யார்தான் கொன்றது? பேசிக் கொண்டே இருந்திருக்கிறோம்.
இன்னொரு பொழுதுபோக்கு திரைப்படமாக எடுத்தால் யார் யார் நடிக்க வேண்டும் என்று பேசுவது. அன்றைய எங்கள் தேர்வு ரஜினி ஆதித்தகரிகாலனாக; சிவகுமார்தான் அருண்மொழிவர்மனுக்கு சிறந்த தேர்வு என்று தோன்றியது, அதனால் கமல் அவ்வள்வு பொருத்தம் இல்லை என்று தோன்றினாலௌம் கமலுக்கு வந்தியத்தேவன் ரோல். பெரிய பழுவேட்டரையராக சிவாஜி; தேங்காய் ஆழ்வார்க்கடியான். முத்துராமன் கந்தமாறன். விஜயகுமார் சேந்தன் அமுதன். வெண்ணிற ஆடை மூர்த்தி பினாகபாணி. மேஜர் சுந்தர சோழன். சுஜாதா மந்தாகினி. சரிதா அல்லது ராதா பூங்குழலி. லட்சுமி குந்தவை. மனோகர் சின்ன பழுவேட்டரையர். நம்பியார் ரவிதாசன். வானதி அம்பிகா. கடைசியில் நந்தினியாக நடிக்க யாரும் இல்லாததால் திரைப்படம் எடுக்கும் முயற்சியை கைகழுவிவிட்டோம்.
பொ. செல்வனை சுருக்க முடியாது. படியுங்கள் என்றுதான் சொல்ல முடியும். இதை சரியானபடி மொழிபெயர்த்தால் டூமாவின், ஸ்காட்டின் இடத்தில் கல்கி உட்கார வாய்ப்பிருக்கிறது.
தொகுக்கப்பட்ட பக்கம்: கல்கி பக்கம்
Wow. I never felt the interest in reading “Ponniyin Selvan”. But RV you have given a snapshot of the story. Kalki was truly a genius. A creative genius at that. So many characters …. spotless characterisation…. the way the plot has been woven… looks striking. Sad that Kalki passed away so early. Wish he had lived longer. I feel so bad for his family.
LikeLiked by 1 person
கல்கி எழுத்தை விட இதழியலில் அதிகம் சாதித்தார் என்று நினைக்கிறேன்.
LikeLike
எனக்கும் பதின் வயதில் மிகவும் பிடித்தது பொன்னியின் செல்வன்தான். . பொன்னியின் செல்வன் எனக்கு இன்றைக்கும் பிடிக்கும். ஒருவேளை நான் வளரவே இல்லையோ? ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொருவர் என்னை ஆகர்ஷித்திருக்கிறார்கள் இருபதுகளில் வந்தியத்தேவன் அட்டகாசமான கதாநாயகன். முப்பதில் பொன்னியின் செல்வன் . நாற்பதுகளில் ஆதித்ய கரிகாலன். ஐம்பதில் பழுவேட்டரையர். அறுபதில் சுந்தரசோழன்.
அது காலம் செய்யும் மாயம்.
2013 இல் மணிரத்னம் இதை எடுக்கப்போகிறார் என்றதும் என கற்பனை விரிந்தது.
மணிரத்னத்தின் படம் வெளிவந்துவிட்டது என்று கற்பனை செய்து அதை விமர்சனம் செய்திருந்தேன்.
அதன் காணொளி இங்கே : https://youtu.be/AQXlzm9AEfg
LikeLiked by 1 person
சுந்தரராஜன் சார், உங்களுக்கு ரொம்ப குறும்பு!
LikeLiked by 2 people