சாதத் ஹாசன் மாண்டோ

மாண்டோ முக்கியமான இந்திய எழுத்தாளர்களில் ஒருவர். இத்தனைக்கும் என் கண்ணில் அவர் எழுத்தில் கலை அம்சம் கொஞ்சம் குறைவுதான். ஆனால் அவரது எழுத்துகளில் இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் வலி, ஹிந்துவோ, முஸ்லிமோ, மனிதர்களில் குரூரமும் வேதனையும் வெளிப்படுவதில், சமூகத்தின் கட்டுக்கள் தளர்ந்துவிடும்போது எத்தனை கீழே இறங்க முடிகிறது என்று காட்டுவதில் உண்மை தெறிக்கிறது. என்னைப் பொறுத்த வரையில் அதுவே அவரது வெற்றி.

விடுதலைக்கு முன் ஹிந்தி சினிமா உலகில் ஓரளவு வெற்றி பெற்ற எழுத்தாளர். ஆபாசமான சிறுகதைகள் எழுதினார் என்று அவர் மீதும் இஸ்மத் சுக்டாய் மீதும் வழக்குகள் போடப்பட்டன. பிரிவினையின்போது ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களால் லாகூருக்குப் போய்விட்டார். அவருடைய நெருங்கிய நண்பரான அன்றைய பிரபல ஹீரோ நடிகர் ஷ்யாமே தனக்கு வேண்டியவர்கள் முஸ்லிம்களால் தாக்கப்பட்டார்கள் என்று தெரிந்த அந்த சில நிமிஷங்களில் ஏற்பட்ட கோபத்தில் மாண்டோவையே முஸ்லிம் என்ற காரணத்துக்காக கொல்ல வாய்ப்பிருக்கிறது என்று ஒத்துக்கொண்டார், அதை மாண்டோவால் ஜீரணிக்கவே முடியவில்லை. ஷ்யாமின் நட்பு அந்த் சில நிமிஷப் பிசிருக்கு பிறகு மாறவே இல்லை, பிற்காலத்தில் மாண்டோவுக்கு பண உதவி செய்தார் என்கிறார்கள்.

பாகிஸ்தானுக்கு – லாஹூருக்கு குடிபெயர்ந்தாலும் அவரது மனமும் வேர்களும் மும்பையில்தான் இருந்தன என்றே கணிக்கிறேன். பாகிஸ்தானில் குடியேறிய பிறகு கஷ்ட ஜீவனம்தான். மீண்டும் ஆபாச எழுத்தாளர் என்று வழக்குகளையும் சந்தித்தார். பாகிஸ்தானில் குடியேறி இருந்தாலும், என் கண்ணில் அவர் இந்திய எழுத்தாளர்தான், பாகிஸ்தானி எழுத்தாளர் அல்லர். பாகிஸ்தானி எழுத்து என்று ஒன்று இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை என்பதையும் வெளிப்படையாக சொல்லிவிடுகிறேன்.

அவருடைய பிரிவினைக் கதைகளில் தெரிவது ஷ்யாமுக்கு நேர்ந்த அந்த சில நிமிஷங்கள்தான், அதன் வெளிப்பாடுகளும் விளைவுகளும்தான். மீண்டும் மீண்டும் மனித மனத்தின் அடிப்படை குரூரம், அந்த சில நிமிஷங்கள்/நாட்கள் உண்மையாக வெளிப்படுகிறது.

சமீபத்தில் நவாசுதீன் சித்திகி நடித்து மாண்டோ என்று திரைப்படம் வந்தது. பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

டோபா டேக்சிங் அவரது புகழ் பெற்ற சிறுகதை. என்னைப் பொறுத்த வரையில் இதுவே அவரது சிறந்த சிறுகதை. நானே தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன்.

கோல் தோ எனக்குப் பிடித்த இன்னொரு சிறுகதை. அந்தப் பெண் தன் பைஜாமா நாடாவை அவிழ்க்கும் இடம் உண்மையிலேயே படிப்பவரின் ஆழத்தைத் தொடும்.

Assignment இன்னொரு நல்ல சிறுகதை. இதை எல்லாம் விவரிப்பது கஷ்டம். படித்துக் கொள்ளுங்கள்!

தண்டா கோஷ்ட் இன்னொரு புகழ் பெற்ற சிறுகதை. என்னைப் பொறுத்த வரை இதில் கலையம்சம் கொஞ்சம் குறைவு. வாசகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்க வேண்டும் என்ற விழைவு தெரிகிறது. ஆனால் உண்மையும் இருக்கிறது.

ஆக்ரி சல்யூட் இன்னொரு சிறப்பான சிறுகதை. இரண்டாம் உலகப்போரில் தோளோடு தோள் நின்று போராடிய ரூப் நவாசும் ராம்சிங்கும் இன்று காஷ்மீர் போரில் எதிர்முகாம்களில்.

Wages of Labor சிறப்பான denouement உள்ள சிறுகதை. படியுங்கள்!

A Tale of 1919 சிறுகதையில் கதைசொல்லி, கதை கேட்பவன் என்று இரு பாத்திரங்கள். சொல்லும் கதையில் வேசிகளின் தம்பி தைலா. 1919. ஜாலியன்வாலாபாக் அமிர்தசரஸ். ஏதோ சின்ன எதிர்ப்புக்காக ஆங்கிலேயர்களால் சுடப்பட்டு இறக்கிறான். அவன் அக்காக்களை ஆங்கிலேயர் நடன நிகழ்ச்சி நடத்தும்படி கட்டளை இடுகிறார்கள். நன்றாக அலங்கரித்துக் கொண்டு ஆடுபவர்கள் கடைசியில் எல்லா உடைகளையும் கழற்றி எறிகிறார்கள். வந்து அனுபவித்துக் கொள்ளுங்கள், ஆனால் அதற்கு முன் உங்கள் முகத்தில் துப்புவோம் என்கிறார்கள். இங்கே கதை முடிந்திருந்தால் சரி பரவாயில்லை என்று நினைத்திருப்பேன். கதை கேட்பவன் இது உன் மனக்கனவுதானே என்று கேட்கிறான், கதைசொல்லி ஆம் அவன் அக்காக்கள் அவன் நினைவை கேவலப்படுத்திவிட்டார்கள் என்று ஒத்துக் கொள்வதுடன் கதை முடிகிறது.

Mozelle என் கண்ணில் சுமாரான சிறுகதைதான்.

பிரிவினைக்கு முன்னும் சில பாலியல் references உள்ள கதைகள், விபசாரத்தைப் பற்றியும் “தவறான உறவுகள்” பற்றியும் எழுதி இருக்கிறார்தான். ஆனால் அவற்றில் கொஞ்சம் செயற்கைத்தன்மை, வாசகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்க வேண்டும் என்ற விழைவு தெரிகிறது. முற்போக்குக் கதை எழுத வேண்டும் என்ற விழைவுதான் என் கண்ணில் துருத்திக் கொண்டு நிற்கிறது.

Ten Rupees அவரது புகழ் பெற்ற சிறுகதைகளில் ஒன்று, இதற்கு சரியான எடுத்துக்காட்டு. பதின்ம வயதுப் பெண் விபச்சாரத்துக்கு அனுப்பப்படுகிறாள். அவளிடம் இன்னும் சிறுமித்தனம் பாக்கி இருக்கிறது. உண்மை இருக்கிறதுதான், ஆனால் முன்னமே சொன்ன மாதிரி முற்போக்குக் கதை எழுத வேண்டும் என்ற விழைவுதான் என் கண்ணில் துருத்திக் கொண்டு நிற்கிறது.

ஹடக் (Humiliation) மிகச் சிறப்பாக வந்திருக்கக் கூடிய சிறுகதை. விபச்சாரி இரவு இரண்டு மணிக்கு எழுப்பப்படுகிறாள். ஒரு வாடிக்கையாளர் வந்து போய்விட்டார். மதுவினால் தலைவலி வேறு. கீழே காரில் இன்னொரு வாடிக்கையாளர் காத்திருக்கிறார். வேண்டாவெறுப்பாக எழுந்து தன்னிடம் இருப்பதிலேயே சிறப்பான புடவையை அணிந்து, மேக்கப் போட்டுக்கொண்டு கீழே காருக்கு அருகே போகிறாள். காருக்குள் இருக்கும் சேட் இவள் மீது டார்ச்சை அடித்துப் பார்க்கிறார். முகம் சுளிக்கிறார், கார் உடனடியாக கிளம்பிப் போய்விடுகிறது. மிகவும் அருமையான கரு, மாண்டோவும் அருமையாக இந்தக் கணம் வரை கொண்டு வருகிறார். ஆனால் அதற்குப் பிறகு அவளது மன ஓட்டங்கள் என்று இரண்டு பக்கம் வருகிறது. இதையெல்லாம் சொல்லாமல் வாசகன் ஊகத்துக்கே விட்டுவிட வேண்டும். துருத்திக் கொண்டு நிற்கிறது. அதற்குப் பிறகு அவள் புற உலகத்தில் என்ன செய்கிறாள் என்பதை மட்டும் காட்டி இருந்தால் இந்தச் சிறுகதை எங்கோ போயிருக்கும்.

நான் படித்த வரையில் A Wet Afternoon சிறுகதை ஒன்றில்தான் இந்தத் துருத்தல் குறைவாக இருக்கிறது. சிறுவனுக்கு முதன்முதலாக பாலியல் உணர்வுகள் ஏற்படுவதை நன்றாக விவரித்திருப்பார்.

நான் மாண்டோவின் எல்லா சிறுகதைகளையும் படித்தவனில்லை. ஆனால் தண்டா கோஷ்ட், கோல் தோ, Assignment ஆகிய 3 புகழ் பெற்ற சிறுகதைகளிலும் முஸ்லிம்கள்தான் victims. தண்டா கோஷ்ட் மற்றும் Assignment சிறுகதைகளில் சீக்கியர்கள்தான் வில்லன்கள், கோல் தோவில் வில்லனே கிடையாது. எல்லா பிரிவினை சிறுகதைகளிலும் இப்படித்தானா என்று தெரியவில்லை. இது தற்செயலா இல்லை பாகிஸ்தானில் வாழ்ந்து கொண்டு முஸ்லிம்களை வில்லன்களாகக் காட்டுவது அபாயம் என்ற உணர்வா, இல்லை அவருக்கு blind spot-ஆ என்று தெரியவில்லை. தற்செயல்தான் போலிருக்கிறது, Mozelle சிறுகதையில் முஸ்லிம்கள்தான் வில்லன்கள்.

எப்படி இருந்தாலும் சரி, அவரது பிரிவினை சிறுகதைகளை படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். குறிப்பாக டோபா டேக்சிங், கோல் தோ, Assignment, Wages of Labor, ஆக்ரி சல்யூட் மற்றும் தண்டா கோஷ்ட். ஹடக், A Wet Afternoon இரண்டையும் கூடப் பரிந்துரைப்பேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: இந்திய இலக்கியம்