கந்தசஷ்டி கவசம்

என் அம்மாவுக்கு பக்தி அதிகம். கோவிலுக்குப் போனால் ஆஹா அம்பாள் என்ன அழகு, முருகன் என்ன தேஜஸ் என்று கோவிலிலேயே உட்கார்ந்திருப்பாள், லேசில் கிளம்பமாட்டாள். பதின்ம வயதில் பிள்ளைகள் மூவரும் அய்யோ அய்யய்யோ என்று அலுத்துக் கொண்டிருந்திருக்கிறோம்.

தன் பக்திப் பரவசத்தை பிள்ளைகளுக்கும் சொல்லித்தர வேண்டும் என்று என் அம்மா எவ்வளவோ முயன்றாள். என் பதின்ம வயதில் எல்லாம் கந்தசஷ்டி கவசம் சொன்னால்தான் காலையில் காபி கிடைக்கும். கந்தர் அனுபூதி, விநாயகர் அகவல், சுப்ரமணிய புஜங்கம் என்று சொன்னால் போனஸ் புன்னகை நிச்சயமாக உண்டு. இன்றும் நினைவிருப்பது ஓரளவு நீண்ட பிரார்த்தனை கந்தசஷ்டி கவசம் ஒன்றே. (கவனிக்க, பிராமணக் குடும்பம், ஆனால் தமிழ் வழிபாட்டுப் பாடல்களுக்குத்தான் முக்கியத்துவம். நான் பார்த்த வரையில் என் உறவினர் குடும்பங்களிலும் அப்படித்தான்.)

ஆனால் பதின்மூன்று பதினான்கு வயதுப் பையனுக்கு

டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
விந்து விந்து முருகவேள் விந்து

என்று பாராயணம் செய்யும்போது என்னவெல்லாம் தோன்றக்கூடும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன். டிபிகல் பதின்ம வயதினன், அப்பா அம்மாவின் நம்பிக்கைகளை கேள்வி கேட்டு தன் சுய அடையாளத்தை காட்ட, புரட்சி செய்ய விரும்பும் வயது. சஷ்டி கவசமோ பட்டியல்தான்; வல்ல பூதம் வலாஷ்டிக பேய்கள் என்று பட்டியல் போடும்போது ஆண்களைத் தொடரும் பிரம்ம ராட்சசிகளைக் குறிப்பிட மறந்துவிட்டாரே, என்னை யார் காப்பாற்றுவார்கள் என்றெல்லாம் விதண்டாவாதக் கேள்விகள் தோன்றத்தான் செய்தன. வட்டக் குதத்தைக் கூட விட்டுவைக்கவில்லையே என்று இளக்காரச் சிரிப்பு எழத்தான் செய்தது.

இன்று வயதாகிவிட்டது. அவரவர் நம்பிக்கை அவரவருக்கு என்று தெரிகிறது. பாலன் தேவராயன் பகர விரும்பியது என்ன என்று ஓரளவு புரிகிறது. அதே நேரத்தில் இந்தக் கறுப்பர் கூட்டத்தின் மனநிலையையும் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்கள் இன்னும் விடலைப் பருவத்திலேயே இருக்கிறார்கள். அவர்களின் வெட்டிப் பேச்சை நான் சீரியசாக எடுத்துக் கொள்ள மாட்டேன். இதனால் உணர்வுபூர்வமாக பாதிக்கப்பட்டவர்களும் முட்டாள்தனம் தடை செய்யப்பட வேண்டியதல்ல என்பதை உணர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இது வெறும் bad taste மட்டுமே. Bad taste by definition is bad, but it is not a crime.

அடுத்தவர் மனம் புண்படுகிறது என்பதால் நீங்கள் அடக்கி வாசிப்பது நல்ல விஷயம். அது உங்கள் நற்பண்பைக் காட்டுகிறது. ஆனால் கறாராகப் பார்த்தால் அது வெறும் சபை நாகரீகம் மட்டுமே. ஆனால் அப்படி என் மனம் புண்படுவது உங்களை சட்டப்படி கட்டுப்படுத்த முடியாது. சஷ்டி கவசத்தைப் பற்றி இப்படி பேசுவதால் உங்கள் மனம் புண்படுகிறது, அதைத் தடை செய்ய வேண்டும் என்றால் தி.க.வினர் பிராமணர் பூணூல் அணிவது என் மனதைப் புண்படுத்துகிறது என்று கிளம்புவதை எப்படி எதிர்ப்பீர்கள்? அட தலித்கள் எங்கள் வீதிகளில் செருப்பணிந்து நடப்பது எங்கள் மனதைப் புண்படுத்துகிறது என்று யாராவது உளறினால் அதை எப்படி எதிர்கொள்வீர்கள்? இது எங்கேதான் நிற்கும்? Where do you draw the line?

உங்கள் மனம் இளம் பெண்கள் தொப்புளில் வளையம் போட்டால் புண்படலாம்; பெண்கள் மதுச்சாலைகளுக்குச் சென்று மது அருந்துவது உங்களுக்கு கலாச்சார சீரழிவு என்று தோன்றலாம், மனம் புண்படலாம். குட்டைப் பாவாடை அணிந்து சானியா மிர்சா டென்னிஸ் விளையாடுவது ஒரு முல்லாவின் மனதைப் புண்படுத்தலாம். பெருமாள் முருகனின் புத்தகம், எம்.எஃப். ஹுசேனின் ஓவியங்கள், சார்லி ஹெப்டோவின் கார்ட்டூன் எது வேண்டுமானாலும் நம் மனதைப் புண்படுத்தலாம். நாம் செய்யும் ஒவ்வொரு செயலும், பேசும் ஒவ்வொரு வார்த்தையும் ஒருவர் மனதைக் கூட புண்படுத்த்தாது என்று எப்படி உறுதிப்படுத்த முடியும்? மனம் புண்படுவது என்பது ஒரு subjective criterion, அது சட்டத்தின் அடிப்படையாக இருக்க முடியாது.

கவனியுங்கள், கறுப்பர் கூட்டத்தின் முட்டாள்தனமான பேச்சுகளை நீங்கள் ஏற்க வேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை. அவர்களின் முதிராத்தன்மையை (immaturity), மூர்க்கத்தனத்தை கண்டிப்பது உங்கள் உரிமை. நமக்குப் பிடிக்காத விஷயத்தை, நமக்குத் தவறாகத் தெரியும் விஷயத்தைக் கண்டிப்பது வேறு, எனக்குப் பிடிக்காததை நீ பேசுவது தடை செய்யப்பட வேண்டும் என்பது வேறு. வால்டேரோ யாரோ சொன்னது மாதிரி a demoracy should defend the right of people to say disagreeable things – you don’t have to accept them!

அதிலும் உணர்வுபூர்வமாக பாதிக்கப்பட்ட பக்தர்கள் பொங்குவதையாவது புரிந்து கொள்ள முடிகிறது. சல்மான் ரஷ்டிக்கு ஃபட்வா விதித்தது குற்றம், டாவின்சி கோடை தடை செய்யக் கூடாது, தஸ்லிமா நஸ் ரீனுக்கு அநீதி என்றெல்லாம் பொங்கிவிட்டு, சஷ்டி கவசத்தை இழிவாகப் பேசும் பாதகர்களை தண்டிக்க வேண்டும் என்றும் கொந்தளிப்பது கயமை. குறிப்பாக, இதைப் பற்றி குமுறும் ஹிந்துத்துவர்களுக்கு; மனம் புண்படுகிறது என்று போராடும், ஃபட்வா விதிக்கும், முல்லாக்களை உங்கள் ஆதர்சமாகக் கொள்ளாதீர்கள்! முல்லாக்களின் குறுகிய மனப்பான்மையை எதிர்க்கிறேன் என்று சொல்லிக் கொண்டே அவர்கள் போட்ட ரோடிலேயே நடப்பது உங்களுக்கே முரண்பாடாகத் தெரியவில்லையா?

நாலைந்து வருஷத்துக்கு முன் இதெல்லாம் நடந்திருந்தால் நான் வணங்கும் முருகனை இந்தக் கேனையன்களா கேவலப்படுத்த முடியும், முருகனை சாதாரண மனிதர்கள் இழிவுபடுத்திவிட்டார்கள் என்று நினைப்பவர்கள் முருகனைக் கடவுளாக வழிபடுபவர்களாக இருக்க முடியாது என்றெல்லாம் எழுதி இருப்பேன். இப்போதெல்லாம் எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா, இல்லை வெறும் பழக்கதோஷத்தால் ஆண்டவா பிள்ளையாரே என்கிறேனா என்று எனக்கே சரியாகத் தெரியவில்லை.

மீண்டும் சொல்கிறேன் – Bad taste is not a crime.

தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்