சுஜாதாவின் “என்றாவது ஒரு நாள்”

திறமையாக எழுதப்பட்ட கதை.

யோசித்தால் சுஜாதாவும் சில cliche-க்களை பயன்படுத்தி இருப்பது தெரிகிறது. குறிப்பாக புண்ணியகோடி/திலகத்தின் முன்கதை. ஆனால் அந்த cliche-க்களை வைத்து திறமையாக கதையை முன் நகர்த்தி இருக்கிறார்.

புண்ணியகோடி/நாராயணன் திருடன். சிறையிலிருந்து தப்பிக்க அவனுக்கு ஒரு யுக்தி இருக்கிறது. தப்பித்து தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருக்கிறான். வேலை செய்யும் இடத்தில் திலகத்தின் மீது ஒரு கண். அவனைத் தேடும் போலீஸ். திலகம் பாதுகாப்புக்காக ஆண் துணையைத் தேடுகிறாள். நாராயணனோடு தங்குகிறாள். நாராயணனுக்கு சிக்னல் கொடுத்தாலும் அவளுக்கு நாராயணனை மணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை. அவளுக்கு ஏற்கனவே ஆள் இருக்கிறது, ஆனால் ஜெயிலில். போலீஸ் நாராயணனை நெருங்குகிறது. நாராயணன் என்ன செய்யப் போகிறான்?

நாராயணனின் தலைமறைவு வாழ்க்கை; போலீஸ் அவனை நெருங்கும் விதம்; திலகம் வந்ததும் அவன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள்; denouement – எல்லாமே சிறப்பாக சித்தரிக்கப்படுகின்றன. இந்தக் கதையை உயர்த்துபவை அவைதான்.

கதை சுவாரசியமாகச் செல்கிறது. Cliche எல்லாம் படிக்கும்போது தெரிவதே இல்லை. சுஜாதாவின் சாதனை என்றெல்லாம் சொல்லமாட்டேன். ஆனால் அவருடைய டச் தெரிகிறது. படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம்