ஜெயமோகனிடம் வியக்க வைக்கும் ஒரு குணம் உண்டு. எவ்வளவு முட்டாள்தனமான கேள்வி கேட்டாலும் உண்மையிலேயே தெரிந்து கொள்ளும் ஆர்வத்தோடு, முன்முடிவுகள் இல்லாமல் கேட்டால் பொறுமையாக, எரிச்சலின் சாயலே இல்லாமல் பதில் சொல்வார்.
அவருடைய நாவல் என்ற புத்தகத்தை நான் சில வருஷங்கள் முன்னால் படித்தேன். அதில் ஒரு நல்ல நாவலின் இலக்கணம் என்ன, சிறுகதை, குறுநாவல், நாவலுக்கு என்ன வித்தியாசம், தமிழில் நாவல்கள் என்று பொதுவாக சொல்லப்படுபவை நீண்ட சிறுகதைகள்/குறுநாவல்களே, அவற்றை நீள்கதை என்றே சொல்ல வேண்டும் என்று அவர் ஸ்டைலில் அடர்த்தியாக, நீளமாக நிறைய இருந்தது. என்னடா இப்படி அறுக்கிறாரே, இதையெல்லாம் வைத்துக் கொண்டு என்ன செய்வது, என்ன பயன் என்று நினைத்துக் கொண்டேன். நானெல்லாம் படிப்பது பிடிக்கிறதா இல்லையா என்ற சிம்பிள் இலக்கணத்தைத் தாண்டுவதில்லை. எது சிறுகதை, எது நாவல் என்பதை எத்தனை பக்கம் இருக்கிறது என்பதை வைத்து தீர்மானித்துக் கொள்ளலாம், அதற்கு மேல் சிக்கலான விதிகள் தேவையில்லை என்று நினைப்பவன். இலக்கணம் என்பது எளிதில் புரிந்து கொள்ளும்படி இருக்க வேண்டும், எல்லாருக்கும் யோசிக்காமல் சுலபமாக இலக்கணத்தை பயன்படுத்த வேண்டும் என்று எனக்கு எப்போதுமே ஒரு எண்ணம் உண்டு. அதுவும் மானேஜ்மென்ட் புத்தகங்கள் பலவும் விதிகள் சிக்கலாக ஆக அவற்றை apply செய்வது கடினம் என்று சொல்கின்றன, அது நம்ம நினைப்பது சரிதான் என்று என் கருத்தை மேலும் மேலும் பலப்படுத்தியது.
அவர் இங்கே வந்திருந்தபோது அவருடன் ஒரு டிரைவ் போயிருந்தோம். எனக்கு இந்த சபை நாகரீகம் என்பது கொஞ்சம் குறைவு. நான் சார் இப்படி என்னவோ வகைப்படுத்தறீங்களே, என்ன பயன், பிடிக்குது/பிடிக்கலை போதாதா, தி.ஜா. எழுதியது நீள்கதையா நாவலா என்று தெரிந்து கொள்வது மோகமுள்ளை நான் வாசிக்கும்போது ஏற்படும் உணர்வுகளை, அனுபவத்தை மாற்றவா போகிறது, இது எதற்கு வெட்டி ஆராய்ச்சி என்று கேட்டேன். அப்போதெல்லாம் அது கொஞ்சம் நாகரீகக் குறைவு என்பதே தெரியாது. ஜெயமோகன் சொல்வதை வைத்துப் பார்த்தால் நான் இந்த மாதிரி சுந்தர ராமசாமியை கேட்டிருந்தால் அவர் வீட்டில டிவி எத்தனை இன்ச் என்று பேச்சை மாற்றி இருப்பார் என்று நினைக்கிறேன். 🙂 அவர் உனக்கு பயன் இல்லாமல் இருக்கலாம், மற்றவர்களுக்கு பயன்படலாம் என்று சொன்னார்.
அவர் எப்பவுமே இப்படித்தான் என்று நினைக்கிறேன். நானெல்லாம் பிடிக்கிறது/பிடிக்கவில்லை என்பதைத் தாண்டுவது அபூர்வமே. அவர் ஆஹா இது பிடித்திருக்கிறது, இதுவும் பிடித்திருக்கிறது, இதெல்லாம் ஏன் பிடித்திருக்கிறது, இப்படி எனக்குப் பிடித்திருக்கும் நாவல்களின் பொதுவான குணாதிசயம் என்ன என்று யோசித்து ஒரு இலக்கணத்தை வகுத்துக் கொள்கிறார், அதை முன் வைக்கிறார், அதைப் பற்றி விவாதிக்க தயாராக இருக்கிறார் – எத்தனை சிறுபிள்ளைத்தனமான கேள்வி கேட்டாலும் சரி.
ஆனால் அவரது எண்ணங்களில் – வேறு பல உரையாடல்கள், கட்டுரைகள் மூலமாக நான் உணர்ந்து கொண்டது – எனக்கு மாற்றுக் கருத்து உண்டு. இலக்கணத்தை புரிந்து கொண்ட பின்னரே இலக்கியத்தை முழுமையாக உள்வாங்க முடியும், ரமணி சந்திரனை மட்டுமே படித்து வளர்பவன் நேராக அசோகமித்திரனுக்கு போய்விட முடியாது, நவீனத்துவம் என்றால் என்ன என்று புரிந்து கொண்டால் மட்டுமே அது இயலும் என்று அவர் கருதுகிறார். அப்படி எல்லாம் எதுவும் இல்லை என்பத்ற்கு நான் உட்பட பல உதாரணங்கள் உண்டு. அதுவும் அசோகமித்திரனின் புனைவையே படிக்க முடியாத ஒருவன் அதன் பின் இருக்கும் தியரியைப் படிப்பான் என்பது வீண் கனவு. அசோகமித்திரன் புனைவுகளைப் படித்த பின்னர் அந்த தியரியில் ஆர்வம் வர வாய்ப்பிருக்கிறது, படிப்பதற்கு முன்னால் அல்ல. அந்த தியரியைப் படித்த பின் அவனுடைய படிப்பு இன்னும் கூர்மை ஆகவும் வாய்ப்பிருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம். வகைப்படுத்துதல் சில சமயம் நமது எதிர்பார்ப்புகளை வழிநடத்தலாம். அவை மட்டுமே இந்த மாதிரி தியரிகளின் பயன் என்று நினைக்கிறேன். ஆனால் எனக்கு பொதுவாக தியரிகளை விட நேராக படித்துக் கொள்வதுதான் வொர்க் அவுட் ஆகிறது.
பல முறை சொன்னதுதான் – அவருடைய முறை அவருக்கு…
தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயமோகன் பக்கம்
எனக்கும் இது போன்ற விஷயங்கள் சரி வருவதில்லை. விதிகளை வைத்து கொண்டு படிப்பது எல்லாம் முடியாது. அசோகமித்திரனோ, தி.ஜாவோ, பாலகுமாரனோ அவர் என்ன சொல்ல வருகின்றார், அது நமக்கு எப்படி உள்ளே போகின்றது அவ்வளவுதான்.
LikeLike
ஆர் வீ அவர்களே நீங்கள் முற்போக்கு சிந்தனை உள்ளவர் என்பதால் இதை தைரியமாக எழுதுகிறேன். நீங்கள் எனது எழுத்தை படித்தீர்களா என்று தெரியவில்லை. ஆனால் சில நாட்களாக ஜெயமோகன் ஜெயமோகன் என்று கொஞ்சம் அளவுக்கு அதிகமாக தூபம் போடுகிறீர்களோ என்று தோன்றுகிறது. என்னை மன்னிக்கவும். நான் ஜெயமோகனை படித்தது இல்லை. அவர் திருவண்ணாமலை சித்தர் ஒருவரிடம் தப்பாக நடந்து கொண்டதாக படித்த நினைவு. அதற்கு பின்னர் அவர் கதைகளை படிக்கும் ஆர்வம் போய் விட்டது. நீங்கள் தான் விடாப்பிடியாக அவரைப்பற்றி மூச்சுக்கு முன்னூறு தடவை எழுதுகிறீர்கள். என்னை பொறுத்த வரை அவர் தமிழின் முதல் எழுத்தாளரும் அல்ல கடைசி எழுத்தாளரும் அல்ல. நானும் திருநெல்வேலியைச் சேர்ந்தவள் தான். ஜெயமோகன் நாகர்கோவில் காரர் என்று நினைவு. ஆனால் நான் ரா சு நல்லபெருமாள் அவர்களின் எழுத்தின் அடிமை. ஆனால் நீங்கள் அவருக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுப்பதாகத் தெரியவில்லை. உங்களுக்கு மாயாவி தெரியுமோ? கலைமகளில் அவர் க்ரிஹலக்ஷ்மி என்கிற அருமையான நாவலை எழுதி உள்ளார். உங்கள் சேவையை நான் பாராட்டுகிறேன். உங்கள் கலைச்சேவைக்கு தலை வணங்குகிறேன். ஆனால் இந்த நியோ-தமிழ் எழுத்தாளர்களுக்கு அளவுக்கு அதிகமாக முக்கியதுவம் தர வேண்டாமே ஆர் வீ . எனக்கு இதை சொல்ல உரிமையும் இல்லை அருகதையும் இல்லை. நான் உங்கள் கால் தூசுக்கு சமானம். நீங்களோ அமெரிக்காவில் வசிப்பவர். நானோ இந்தியாவில் வசிக்கும் ஒரு சாதாரண கிழட்டுப்பிரஜை. நான் கேட்டுக்கொள்வதெல்லாம் ஜெயமோகனுக்கு அளவுக்கு அதிமாக exposure வேண்டாமே என்று தான்.
அவர் எங்கள் ஊர்க்காரர் என்பதில் பெருமை. ஆனால் அவர் ஒரு பிராமண துவேஷி என்று படித்த பிறகு சீ என்றாகி விட்டது. எல்லா பிராமணர்களும் கெட்டவர்களா என்ன? தமிழ் நாட்டில் பிராமணர்களை குறை சொல்வதும் கேலி பண்ணுவதும் ஒரு வழக்கம் ஆகி விட்டது. சேவல் என்கிற படத்தில் பரத் என்கிற கூலி வேலை செய்யும் பையன் ப்ராஹ்மணப்பெண்ணை லவ்ஸ் விடுகிறான். ஒரு சண்டைக்காட்சியில் ப்ராஹ்மண பையன்களும் பரத்தும் சண்டை போட பரத் ஜெயிக்கிறார்.
பிராமணர்களை தூஷிப்பதில் தமிழ் சினிமா என்றுமே குறை வைத்தது இல்லை. அதனால் பிராமண துவேஷிகள் என்றால் இந்த சந்திராவுக்கு என்றுமே கடுப்பு தான்.
எனக்கு அசோகமித்திரனின் கதைகள் என்றால் உயிர். அவரது கதைகள் எங்கே கிடைக்கும் என்று சொன்னால் நான் நன்றி உள்ளவளாக இருப்பேன். ஆர் வீ ப்ளீஸ் ஆர் வீ எனக்கு அவரது கதைகளின் லிங்குகளை அனுப்புங்களேன்.
LikeLike
ரெங்கா, நானும் நீங்களும் ஒரே மாதிரி யோசிக்காவிட்டால்தான் ஆச்சரியம்.
சந்திரா, நான் எங்கோ உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்திருக்கிறேன் என்றெல்லாம் உண்மையாகவே நினைக்கிறீர்களா என்ன? என்ன கனவுலகத்தில் இருக்கிறீர்களா? உங்கள் ஆசி இருந்தால் ஒரு நாள் உச்சாணிக் கொம்பில் ஏறுவேனோ என்னவோ.
ஜெயமோகனோடு எனக்கு பழக்கமுண்டு. எல்லாரையும் போலத்தான் அவரும், மனிதர். சில சமயம் தவறுகள் நேரத்தான் செய்யும். என்ன, அசாதாரண மனிதர். அவர் பிராமணத் துவேஷி என்று உங்களுக்கு யார் சொன்னது? யார் சொன்னாலும் நம்பிவிடுவீர்களா என்ன? எனக்குத் தெரிந்து அவருக்கு யார் மேலும் துவேஷம் இல்லை.
ர.சு. நல்லபெருமாள் இறந்தபோது அவரைப் பற்றி ஏதோ எழுதினேன் என்று நினைவு. மாயாவியை எல்லாம் படித்து பல வருஷங்கள் ஆகிவிட்டன. என் கணிப்பில் இவர்கள் ஜெயமோகனின் அருகே நெருங்கக்கூட முடியாது. ஜெயமோகன் தமிழின் மூன்று மேதை நிலை எழுத்தாளர்களில் ஒருவர். அவர் திருவண்ணாமலை சித்தரிடம் என்ன பேசினாரோ நான்றியேன், ஆனால் அதற்கும் அவரது எழுத்துக்கும் என்ன சம்பந்தம்? படித்துப் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன். அவர் பிராமணத் துவேஷி என்ற உங்கள் எண்ணம் மாறாவிட்டாலும் கூட படித்துப் பாருங்கள்.
அசோகமித்திரனையும் தமிழின் மூன்று மேதை எழுத்தாளர்களில் ஒருவர் என்று மதிப்பிடுகிறேன். அழியாச்சுடர்கள் தளத்தில் பாருங்களேன்! சில அசோகமித்திரன் கதைகள் அங்கே கிடைக்கின்றன – https://azhiyasudargal.blogspot.com/search/label/அசோகமித்திரன்
LikeLike