வண்ணநிலவன்

வண்ணநிலவன் எனக்கு அறிமுகமானது என் இருபத்து சொச்சம் வயதில் – கடல்புரத்தில் நாவல் மூலமாக. அன்று நாவல் மிகவும் பிடித்திருந்தது. இத்தனை அன்பு காட்டும் ஃபிலோமி போன்ற ஒரு பெண் கிடைப்பாளா என்று ஏக்கம் எழுந்தது. பல வருஷம் கழித்து மீண்டும் படித்தபோது எல்லாருக்கும் எப்போதும் பாசம் பொங்கி வழிந்து கொண்டே இருக்கிறது என்றால் கதாசிரியர் எந்த உலகத்தில் இருக்கிறார், அவர் கால் எப்போதுதான் மண்ணில் படப்போகிறது என்றுதான் தோன்றியது. எனக்கிருந்த பிம்பம் உடைந்துவிட்டாலும் கடல்புரத்தில் இலக்கியமே என்ற கணிப்பில் மாற்றமில்லை, என்ன மனதில் அது இரண்டாம், மூன்றாம் வரிசைக்குப் போய்விட்டது.

பிற்காலத்தில் வண்ணநிலவன் துக்ளக்கில் உதவி ஆசிரியராக இருந்தார், துர்வாசர் என்ற பேரில் எழுதினார் என்று தெரிந்தது. அவள் அப்படித்தான் திரைப்படத்தின் திரைக்கதையை எழுதியவர் (திருத்திய  சுந்தரராமன் சிந்தாமணிக்கு நன்றி!) என்றும் தெரிந்தது. அவள் அப்படித்தான் நல்ல திரைப்படம், எழுபதுகளுக்கு அபாரமான திரைப்படம். இவை எல்லாம் அவருக்கு இருந்த கவர்ச்சியை அதிகப்படுத்தின.

ஆனால் அன்றும் இன்றும் அனேகமாக என்றும் உயர்ந்த இடத்தில் இருக்கும் சிறுகதை எஸ்தர்.பஞ்சம் பிழைக்க ஊரை விட்டு போகும் குடும்பம்; வயதான பாட்டியை என்ன செய்வது? கதையை மேலும் விவரித்து உங்கள் வாசிப்பு அனுபவத்தை கெடுக்க விரும்பவில்லை, படிக்கவில்லை என்றால் அதிர்ஷ்டசாலிகள், படித்துக் கொள்ளுங்கள்!

ஆனால் பலரும் சிலாகிக்கும் மிருகம் சிறுகதை எனக்கு பெரிதாக அப்பீல் ஆகவில்லை. பஞ்சம் என்பதை நான் second-hand கூட அனுபவித்ததில்லை. அனுபவித்திருந்தால் ஒரு வேளை என் எண்ணம் மாறுமோ என்னவோ. ஆனால் நாயைக் கொல்ல முயலும் தருண சித்தரிப்பில், வீட்டுக்குள் ஒடுங்கி இருக்கும் சித்தரிப்பில் அவரது திறமை தெரிகிறது.

அதே போல பலாப்பழம் சிறுகதையையும் நான் பெரிதாக ரசிக்கவில்லை. ஒரு காலத்தில் கடைசி வரிகள் புரிய வேறு இல்லை, கணவன் மட்டும் பலாச்சுளையை சாப்பிட்டானோ என்றே தோன்றியது. இன்று படிக்கும்போது அந்த ஏக்கம் சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது, ஆனால் நிச்சயமாக என் டாப் தமிழ் சிறுகதைகளில் வராது.

துன்பக்கேணி சிறுகதையும் அப்படித்தான். கணவன் சிறையில் இருக்கும்போது கூலி கிடைக்குமே என்று சாராயம் கடத்த வரும் கர்ப்பிணிப் பெண்ணை சித்தரிக்கிறது. சாரதா சிறுகதையில் உலகம் அறியாத பெண் விபச்சாரக் கேஸில் மாட்டிக் கொள்ள ஒரு வேசி அவளை விடுவ்க்கிறாள். அவரது திறமை தெரிந்தாலும் ஒன்ற முடியவில்லை.

ஜெயமோகன் எஸ்தர், பலாப்பழம், மிருகம், துன்பக்கேணி ஆகிய சிறுகதைகளை தன் சிறந்த தமிழ் சிறுகதைகள் பட்டியலில் சேர்க்கிறார். எஸ்.ரா. பட்டியலில் எஸ்தர், பலாப்பழம், மிருகம் இடம் பெறுகின்றன.

வண்ணநிலவனின் சிறுகதைகள், நாவல்கள் அனேகமாக ஏழ்மை, அதிலும் ஐந்துக்கும் பத்துக்கும் – சில சமயம் உணவுக்கே – ஆலாகப் பறக்கும் ஏழ்மையைப் பின்புலமாக வைத்து அதில் அன்பையும் ஏழ்மையையும் சித்தரிக்கின்றன. சில சமயம் திகட்டிவிடுகிறது. அவர் இலக்கியம்தான் படைத்திருக்கிறார், ஆனால் என் கண்ணில் இரண்டாம், மூன்றாம் வரிசையில்தான் இருக்கிறார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: வண்ணநிலவன் பக்கம்