2020க்கான விஷ்ணுபுரம் விருது சுரேஷ்குமார இந்திரஜித்துக்கு வழங்கப்படுகிறது.
விஷ்ணுபுரம் விருது பெறுவது இன்றைய தமிழ் சூழலில் எழுத்தாளனுக்குப் பெரிய கௌரவம். தேர்வுக்குழுவினர் தங்கள் தேர்வுகளால் விருதுக்கும் கௌரவம் பெற்றுத் தருகிறார்கள் என்பதுதான் அதற்கு முக்கியக் காரணம்.
ஜெயமோகன் தனது seminal சிறுகதைகள் பட்டியலில் இவரது விரித்த கூந்தல் மற்றும் பிம்பங்கள் சிறுகதைகளை தேர்வு செய்திருக்கிறார். எஸ்ரா பட்டியலில் மறைந்து திரியும் கிழவன். பாவண்ணன் அவரது ஒரு சிறுகதையை – அலையும் சிறகுகள் – இங்கே விலாவாரியாக அலசுகிறார்.
நான் இந்திரஜித்தின் எழுத்துக்களை படித்ததில்லை. விருது பற்றிய செய்தி தெரிந்ததும் அழியாச்சுடர்களில் தேடினேன். விரித்த கூந்தல், மறைந்து திரியும் கிழவன், சிறுமியும் வண்ணத்துப்பூச்சிகளும் என்று மூன்று சிறுகதைகள் கிடைத்தன. இந்த மாதிரி magical realism எல்லாம் எனக்கு அபூர்வமாகவே செட்டாகிறது.
சில சமயம் அப்படித்தான். காஃப்காவின் Metamorphosis-உம், மௌனியின் சிறுகதைகளும் கூட எனக்கானவை அல்லதான். Metamorphosis-ஆவது பிறரை ஏன் ஈர்க்கிறது என்று புரிந்து கொள்ள முடிகிறது. மௌனி இப்போதும் எப்போதும் ததிங்கிணத்தோம்தான். இந்திரஜித்தின் சிறுகதைகள் ஏன் ரசிக்கப்படுகின்றன என்று கொஞ்சம் புரிகிறது, எனக்கு அதுவே அதிகம்.
சில சமயங்களில் விருது பெறுபவர்கள் எனக்கான எழுத்தாளர்களாக இல்லை. தேவதேவன் போன்ற கவிஞர்களின் கற்பூர வாசனை எனக்கு இன்னும் எட்டவில்லைதான். இந்திரஜித்தும் எனக்கான எழுத்தாளர் இல்லையோ என்று தோன்றுகிறது.
தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள்